2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!

காவி - கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, இந்தியாவில் காவி பயங்கரவாதிகளின் மீதான அனைத்து கலவர வழக்குகளையும் ரத்து செய்து, தனது இந்துமதவெறி பாசிசத்தை அரங்கேற்ற எத்தனித்து வருகிறது.

0

கஸ்ட் 30, 2022 அன்று, குஜராத்தில் கோத்ரா கலவரத்திற்குப் பிந்தைய கலவர வழக்குகளில் 2002 முதல் நிலுவையில் இருந்த 11 மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறிள்ளது.

எஸ்ஐடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த 9 வழக்குகளில் 8 வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்களால் முடிந்துவிட்டதாக கூறினார். நரோடா கோன் வழக்கில் மட்டுமே விசாரணை நிலுவையில் உள்ளது என்றும், அது இறுதிக்கட்ட வாதத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“எல்லா விஷயங்களும் இப்போது பயனற்றதாகிவிட்டதால், இந்த மனுக்களை இனிமேல் விசாரிக்க வேண்டியதில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. பயனற்றதாக மாறியதால் அகற்றப்பட்டது” என்று பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும், நரோடா கோன் வழக்கின் விசாரணையை சட்டப்படி முடிக்க வேண்டும் என்றும், இதற்கு எஸ்ஐடி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

***

முன்னதாக, 2002 குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் போலி ஆதாரங்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு மும்பையைச் சேர்ந்த ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கடந்த ஜூன் 26, 2022 அன்று கைது செய்யப்பட்டார்.

படிக்க : தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!

குஜராத் அரசு, உச்ச நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில், “இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுடன் சேர்ந்து, சதித்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசியல், நிதி மற்றும் பிற பொருள் ஆதாயங்களைப் பெறுவதற்காகவும், பல்வேறு கிரிமினல் கமிஷன் செயல்களைச் செய்ததாகவும் குறிப்பிடும் முதல் தகவல் அறிக்கையின் உள்ளடக்கங்களை நிரூபிக்க மறுக்க முடியாத தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

குஜராத் அரசு சாட்சிகளின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி, ஒரு அரசியல் கட்சியின் மூத்த தலைவரின்” உத்தரவின் பேரில், செதல்வாட் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொய்யான ஆதாரங்களை உருவாக்கும் சதியில் ஈடுபட்டதாகக் கூறியது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த குஜராத் அதிகாரிகளுக்கு எதிராக, முன்னாள் காங்கிரஸ் எம்.பி.எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி சுமத்திய “பெரிய சதி” குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 24, 2022 அன்று தள்ளுபடி செய்தது. 2002 குஜராத் கலவரத்தின் போது அம்மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஒரு நாள் கழித்து, செதல்வாட், குஜராத் முன்னாள் போலீசுத்துறை இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்திய போலீசுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் “கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் பணம் வசூலித்தனர் என்றும், பல்வேறு சர்வதேச அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் உரிமத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும்” போலீசுத்துறை குற்றம் சாட்டியது.

படிக்க : குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கீழ் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த மறுநாள், ஜூன் 25 அன்று குஜராத் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் செதல்வாட் கைது செய்யப்பட்டார்.

***

மோடி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு எதற்கு இத்தனை வழக்கு என்று ஊத்தி மூட முடிவெடுத்துள்ளது உச்ச(அ)நீதிமன்றம். கலவரம் தொடர்பான காவி பயங்கரவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா உள்ளிட்டோர் போலி ஆவணங்களை தயாரித்தார்கள் என்ற பொய் குற்றம் சாட்டி கைது செய்துள்ளது மோடி அரசு. இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை போல, குஜராத் படுகொலை வழக்கிலும் முஸ்லீம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, இந்தியாவில் காவி பயங்கரவாதிகளின் மீதான அனைத்து கலவர வழக்குகளையும் ரத்து செய்து, தனது இந்துமதவெறி பாசிசத்தை அரங்கேற்ற எத்தனித்து வருகிறது. எனவே, பரவி வரும் பாசிசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்துவதே நமது உடனடி பணி.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க