தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் மறுப்பு – செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் நீதிமன்றம்!

சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம்.

0

2002 குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் போலி சாட்சியங்கள் தயாரித்ததாக ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் மற்றும் முன்னாள் போலீசு இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோருக்கு அகமதாபாத் நீதிமன்றம் ஜூலை 30 அன்று ஜாமீன் மறுத்துள்ளது. இந்த உத்தரவை பலமுறை ஒத்திவைத்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி டிடி தக்கர், ஓய்வு பெறும் நாளில் தீர்ப்பை வழங்கினார்.

“சாட்சிகளின் வாக்குமூலத்தைப் பார்க்கும்போது, ​​இந்த விண்ணப்பதாரர்களும் மற்றவர்களும் அப்போதைய முதல்வர் [நரேந்திர மோடி] மற்றும் அமைச்சர்கள், போலீசுத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான சதியில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது” என்று நீதிமன்றம் கூறியது.

செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியை, மோடிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தியதாக போலீசு சமர்ப்பித்த ஆவணங்கள் கூறுகிறது என்றது நீதிமன்றம்.


படிக்க : தீஸ்தா செதல்வாட் கைது : பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்! | வீடியோ


பிப்ரவரி 28, 2002 அன்று குஜராத்தில் கல்வரம் நடத்தி வீடுகளுக்குத் தீ வைத்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ எஹ்சான் ஜாஃப்ரி காவி குண்டர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கலவரத்திற்குப் பிறகு, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதற்காக நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் என்ற அமைப்பை செதல்வாட் நிறுவினார். இந்த அமைப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்குகளைத் தாக்கல் செய்வதில் உதவியது; நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர நிதி ஏற்பாடு செய்தது; சாட்சிகளுக்குப் பாதுகாப்பை வழங்கியது. ஆனால், ஜூலை 30 அன்று பிறப்பிக்கப்பட்ட தனது உத்தரவில், “நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்த” மற்றும் பிற நாடுகளிடமிருந்து பண பலன்களைப் பெறுவதற்காக செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நீதிபதி குற்றம் சாட்டினார்.

ஜூலை 15 அன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 2002 கலவரத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை சீர்குலைக்க, ஸ்ரீகுமார் மற்றும் முன்னாள் இந்திய போலீசுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோருடன் சேர்ந்து செதல்வாட் ஒரு பெரிய சதியில் ஈடுபட்டதாக குஜராத் போலீசுத்துறை குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் இருவரும் எதிர்த்துள்ளனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்றும் சட்டப்படி பராமரிக்க முடியாது என்றும் செதல்வாட் கூறியுள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை என்றும் ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

ஜூன் 24 அன்று, கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி மற்றும் செதல்வாட் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மோடி உள்ளிட்ட பலரை குஜராத் படுகொலை வழக்கும் நிரபராதிகள் என்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். தீர்ப்புக்கு ஒரு நாள் கழித்து, குஜராத் போலீசுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் செதல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக கலவரம் குறித்த ஆதாரமற்ற தகவல்களை போலீசுத்துறைக்கு செதல்வாட் அளித்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.


படிக்க : குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ


சமூக செயல்பாட்டாளர்களையும், முற்போக்காளர்களையும் தொடர்ந்து ஒடுக்கிவரும் நீதிமன்றங்கள்; தற்போது குஜராத் கலவரத்தை தொடந்து அம்பலப்படுத்தி வந்த திஸ்தா உள்ளிட்ட நபர்களை சித்திரவதை செய்ய முடிவு செய்துவிட்டது என்பதே நிதர்சனம். திஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஆகியோர் அகமதாபாத் நீதிமன்றம் ஜாமீனை மறுத்துள்ளது. தொடந்து இவர்களையும் பாசிச மோடி அரசு ஒடுக்கும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை. எனவே ஒடுக்குமுறை வெறியாட்டம் போடும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை களமிறங்கி வெல்வதே நம் அனைவரின் முதன்மைப் பணியாகும்.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க