சில ஆண்டுகளாக இசுலாமிய மக்களை திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொரோனா வைரஸ் பீதியை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டிருக்கிறது. அவலத்திலும் ஆதாயம் தேடும் இந்து சனாதன சித்தாந்தத்தின் உண்மை முகம் இதுதான்.

***

டந்த சில ஆண்டுகளாக பசுக் கொலைகள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைப் பறித்தது, பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவைகளைத் தொடர்ந்து தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. மேலும் அரசாங்கம், இராணுவம், போலீசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பரிவார கும்பல்கள், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களால் வெறுப்புப் பிரச்சாரங்கள், சமூக ஒதுக்குதல்கள், தாக்குதல்கள், கொலைகள், இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்த இசுலாமிய மக்களை மேலும் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு கொரொனா வைரஸ் பீதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.

கொரோனா வைரஸ் பீதியை முன்னிறுத்தி திடீரென எந்த அவகாசமும் முன்னறிவிப்பும் இன்றி சில மணிநேர இடைவெளியில் அறிவிக்கப்பட்டு முடிவின்றி தொடரும் ஊரடங்கினால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இச்சூழலிலும் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் நடத்திவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள், தாக்குதல்களை ஜனநாயக உணர்வும் சமத்துவ உணர்வும் கொண்ட அனைவரும் எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது அவசியக் கடமைகளில் ஒன்றாகும்.

படிக்க:
♦ ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

***

கொரோனா பீதி தொடங்கியவுடனே அது இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதலாக அமைந்துவிடவில்லை. கொரோனா பீதியை இசுலாமியர்களுக்கு எதிராக எப்படி மடைமாற்றுவது என்று காத்திருந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன கும்பல், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு விசயத்தை வைத்து பீதியையும் பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பத் தொடங்கினர்.

“கொரோனா ஜிகாதி”, “கொரோனா தப்லிக் குண்டுகள்”, “முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள்”, “தாலிபான் குற்றவாளிகள்” என்று பலவாறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. டெல்லியில் முசுலீம்கள் அதிகம் வசிக்கும் நிஜாமுதின் பகுதியில் இசுலாமியர்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்படுவதைப் போல பொய்யான, எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டன. சிங்கப்பூரில் இசுலாமியர்கள் உணவை நக்குவது போன்ற பழைய வீடியோக்களை டெல்லியில் தற்போது நடந்தது போல வதந்திகளைப் பரப்பி இவை தப்லிக் மாநாட்டில் நடந்ததாகப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறான ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பரப்பியதன் மூலம் கொரோனா பீதியை, இசுலாமியர் வெறுப்பு பீதியாக மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

ஹரியானா பா.ஜ.க. பிரமுகரும் குத்துச்சண்டை வீராங்கனையுமான பபிதா போகாட், உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மகேந்திர பட், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கபில் மிஷ்ரா, மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற பல பா.ஜ.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தையும் இசுலாமியர்களுக்கு எதிரான பீதியையும் முன்னின்று பரப்பினர்.

அதனைத் தொடர்ந்து இசுலாமிய மக்கள் மீது நடந்த தாக்குதல்களின் வேகமும் வடிவங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடியதாக அமைந்திருந்தன. இது காங்கிரசு – பா.ஜக. ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடு இன்றி இசுலாமிய வெறுப்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் காட்டுத்தீ போல பரவியது.

வடமாநிலங்கள் பலவற்றில் முசுலீம் மக்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காய்கறி வாங்கச் சென்ற ஒரு இசுலாமிய முதியவர் தன்னுடைய ஆதார் கார்டை காட்டச் சொல்லி மிரட்டப்பட்டார்.

முசுலீம்கள் தான் கொரோனாவைப் பரப்புகிறர்கள் என்று சொல்லி கர்நாடகா, உத்தர்காண்ட் மாநிலங்களின் பல பகுதிகளில் இசுலாமியர்களின் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர். அருணாச்சலப்பிரதேசத்தில் பால் விற்பனை செய்யும் குஜ்ஜார் இசுலாமிய குடும்பத்தினர் மீது சமூகப் புறக்கணிப்பை விதித்துள்ளனர் இந்துமதவெறி குண்டர்கள். இதனை மீறி பாலை எடுத்துச் சென்று விற்க முயன்றதால், அவர்களது கால்நடைகளை அடித்து விரட்டியும் கொட்டகைகளைப் பிரித்துப் போட்டும் தாக்கியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் ஒரு மசூதி இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மோடி விளக்குகளை அணைக்கச் சொன்ன ஏப்ரல் 5-ம் தேதியன்று அன்று கர்நாடகாவில் இரண்டு மசூதிகளில் விளக்கெரிந்ததற்காக மசூதிகள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று டெல்லி, ஹரியானாவிலும் பல மாவட்டங்களில் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் இராம்நகரில் உள்ள கைலஞ்சா கிராமத்தில் முசுலீம்களை ஊருக்குள் விடக்கூடாது என தண்டோரா அடித்து எச்சரித்துள்ளனர். அந்த ஊரில் ஏழைகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கியதற்காக இரண்டு இசுலாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மசூதிகளுக்குள் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்ட இசுலாமியர்களை மறைத்து வைத்துள்ளதாக பரப்பப்பட்ட புரளியை முகாந்திரமாக்கி பல நூற்றுக்கணக்கான மசூதிகளில் அடைக்கலம் புகுந்திருந்த ஏழை முசுலீம் மக்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 5-ம் தேதி விளக்குகளை அணைக்கவில்லை என்பதற்காக கர்நாடகா மற்றும் பல வடமாநிலங்களில் இசுலாமிய மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குஜராத், உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இசுலாமிய மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு மருத்துவமனைகளில் கூட மருத்துவம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான் கானின் மனைவிக்குப் பிரசவம் பார்க்க மறுத்து அவரை வெளியே விரட்டியுள்ளனர். உத்திரப்பிரதேசத்திலும் பல இடங்களில் இசுலாமியர்களை மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

பார்ப்பனப் பாசிஸ்டுகள், அவர்களது எடுபிடிகளாக இருக்கும் அரசு அதிகாரிகள், ஊடகங்களின் இருட்டடிப்புகளைத் தாண்டி வெளியே கசிந்தவைதான் மேற்கண்ட சம்பவங்கள். இவை கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை மட்டுமே. உண்மை நிலைமை இதனைவிட கொடியதாகவும், கோரமானதாகவும் இருக்கின்றன. அன்றாடம் இந்தமாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம்பேர் இசுலாமியர்கள் எனவும் அவர்கள் மூலமாக நோய் பரவுவதாகவும் ஊடகங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளும் பிரச்சாரம் செய்தன. அகில இந்திய அளவிலும் கொரோனா நோயினால் இறந்தவர்களில் இசுலாமியர்கள் அதிகமானவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் தப்லீக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று பிரச்சாரம் செய்வதிலேயே அரசு அதிக முக்கியத்துவம் காட்டுகிறது.

***

சுலாமிய மக்களை கொரோனா வரைஸ் பரப்புபவர்களாகக் காட்டி, தாக்கி – அடக்கி ஒடுக்கும்  ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் நோக்கம் என்ன? கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோடான கோடி உழைக்கும் மக்களுக்கு இந்த அரசு செய்ய மறுக்கும் கடமைகளை மக்கள் உணர்ந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வதைத் தடுக்கவும், தனது பார்ப்பன இந்துராஷ்டிரக் கனவை நோக்கி மக்களை அணிதிரட்டவுமான தந்திரமாக இசுலாமிய வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இவற்றை நாம் அனுமதிக்கப் போகிறோமா? என்பதுதான் நம்முன்னே உள்ள கேள்வி.

– புதியவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க