Tuesday, December 3, 2024
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளிவந்துள்ள தோழர்களின், அனுபவப் பகிர்வு. படியுங்கள்... பகிருங்கள்...

-

மிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்றன. ராணிப்பேட்டை அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையின்முன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோழர் மோகன் மற்றும் அவரின் தந்தையான தோழர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து நட்கள் கழித்து வெளிவந்துள்ளனர். அவர்களோடு ஒரு உரையாடல்….

என் பேரு மோகன் விவசாயக்கூலியாக வேலை செய்யறேன். மாசம் 8000 ருவா வரும் அத வச்சுக்கிடுதான் குடும்பத்தை ஓட்டுரேன். வீட்டுக்கு தேவைங்குற பொருளெல்லாம் வாங்கிப்போடுவேன். அதால இந்தக்காசு போதும். ஆடம்பரமா செலவு பண்றதில்ல. போதும் இதுவே.

அன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லுங்க?

ஏழாம் தேதி காலைல வீட்டுக்கு 8 மணிக்கு போலீஸ் வந்துருச்சு. இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியும் வந்தாரு 2 ஜீப் 6 போலீசுக்காரங்க இருந்தாங்க. ஏரியாவயை விட்டு இன்ஸ்பெக்டர் என்னை வெளியே அழைச்சுக்கிட்டு வந்து பேசினாரு. அப்போ மற்ற போலீஸ் எல்லாம் “ஓ மோகனா….” எனக்கு தெரியுமே சொன்னாங்க.

எத்தனை மணிக்கு போராட்டம் பண்ணப் போறீங்கன்னு மேல இருந்து கேக்குறாங்கன்னு இன்ஸ்பெக்டர் கேட்டாரு. நான், பத்து மணிக்கு வந்து முழக்கம் போட போறேன்னு சொன்னேன்.

எத்தனை பேர் வருவீங்கன்னு கேட்டாரு. நாங்க மூணு பேரும்னு சொல்லி அப்பாவையும் அண்ணனையும் காட்டுனேன். அவங்க யாருன்னு கேட்டாரு. அவங்க மக்கள் அதிகாகரம் உறுப்பினர்னேன்.

திமுக எல்லாம் வீட்ல தானே பண்றாங்க நீங்களும் அப்படியே பண்ணலாம் இல்ல அப்படின்னு கேட்டாரு.

அது அவங்க கொள்கை பிரச்சனை. நான் என்ன பண்ண முடியும் அவங்ககிட்ட கேளுங்க. மக்கள் பார்வையில முழக்கம்போட்டாத்தான் தான் மக்களுக்கு தெரியும் சொன்னேன். அப்புறம் என் வீட்டுக்கு வெளியே போலீச நிறுத்திட்டு அவர் போய்ட்டாரு.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொடர்ச்சியா பல இடங்கள்ல இருந்தும் போன். எப்போ வரீங்க எப்போ வரீங்கன்னு. பத்துமணிக்கு நான், அப்பா வெங்கடேசன், அண்ணன் எழில் மூணு பேரும் போனோம். எழில் போட்டோ எடுத்தார். நானும் அப்பாவும் கொஞ்சநேரம் முழக்கம் போட்டோம். போலீசு வந்து சுத்தி சுத்தி ரெண்டு பேரையும் போட்டோ எடுத்தாங்க.
அப்போ ஒரு போலீசுகாரர் வந்து நீ என்ன ஜாதின்னு அப்பாவை பார்த்து கேட்டாரு, எதுக்கு கேக்குறீங்க , அதெல்லாம் சொல்ல முடியாது -ன்னு சொன்னேன். உளவுத்துறை போலீசு வந்து அது மோகனோட அப்பா என்று சொன்னார்.

மேல இருந்து எந்த உத்தரவும் வரவில்லைன்னு சொல்லி வண்டியில் கூட்டிக்க்கிட்டு போய். அவலூர் காவல்நிலையத்தில் உட்கார வைத்தார்கள். மாலை வரைக்கும் ஆனது. என்ன செய்ய போறீங்கன்னு லட்சுமி இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன். எனக்கு மேலிடத்து உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.

அப்புறம் கூப்பிட்டு ரிமாண்ட் செய்யப்போறோம்னாரு. தமிழ்நாடு முழுக்க போராடுன எல்லோரையும் விடுதலை செஞ்சுட்டாங்க. எங்கள விட வேண்டியதுதானே என கேட்டேன். நீ உன்னோட கொள்கையில உறுதியா இருக்கும் போது நான் என் டியூட்டியில உறுதியா இருக்க வேண்டாமா , மேலிடத்து உத்தரவு நான் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொன்னாரு.

போலீசுகாரர் ஒருவர் மீண்டும் நீ என்ன ஜாதி என்று கேட்டார். எனக்கு ஜாதின்னா என்னன்னு தெரியாது என்று சொன்னேன் . அவர் உன் ஜாதி ஜாதி என்னன்னு தெரியும் என்று கூறினார்.

படிக்க:
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

நான் சாதி இல்லாத அமைப்பு என்னால் எதுவும் சொல்ல முடியாது. உனக்கு தெரிஞ்ச நீ வைச்சுக்கோங்க என்ன ஏன் கேக்குறீங்க அப்படீன்னு சொன்னேன்.

வாலாஜா கோர்ட்டுக்கு கூட்டிட்டுபோனாங்க. மேஜிஸ்ட்ரேட் அம்மா வந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டாங்க. நான் கொரோனா பிரச்சனையில ஆயிரக்கணக்கான ஜனம் திண்டாடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் டாஸ்மாக் கடை தொறந்தது தப்புன்னு நாங்க ரெண்டு பேரும் முழக்கம்போட்டோம்னு சொன்னேன். எங்கள உடனே ஜாமீன்ல விடுங்க நீங்க சொல்லும் போது ஆஜராக தயார்ன்னு சொன்னோம். தோழர்கள் தயாரித்துக் கொடுத்த மனுவை கொடுத்தேன். நீங்கள் வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். இன்ஸ்பெக்டரை கூப்பிட்டுட்டு என்ன பேசினாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்ட மாஜிஸ்திரேட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் என்று சொன்னாங்க.

ஜெயில்ல ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவும் பையனும் டாஸ்மாக் போராட்ட கேஸ்ல வந்ததா சொன்ன வுடனே நல்ல மரியாதை. நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கறோம்னாங்க.

சிறை அனுபவம் எப்படி இருந்தது? தோழர் வெங்கடேசனிடம் கேட்டேன்.

அமைப்பு போராட்டம்னு இதுவரைக்கும் பத்து முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் ஒண்ணும் பெருசா பிரச்சினையில்லை. தன்னோட கழனியில குடிச்சுட்டு சண்டை போட்டவங்களை விலக்கி விட்டதுக்காக ஜெயிலுக்கு வந்தவங்க. கள்ளச்சாராயம் குடிக்கப்போய் 30 லிட்டர் சாராயம் காய்ச்சுனதா உள்ள வந்தவங்க, லாரி லாரிய மணல் அடிச்சவனை விட்டுட்டு மாட்டு வண்டியில மணல் எடுத்ததுக்கு கைதாகி உள்ள வந்தவங்கன்னு பலரை பார்த்தோம். டாஸ்மாக்கை எதிர்த்து வந்தீங்களான்னு மரியாதையா நடந்துக்குறாங்க. ஜெயிலுக்கு போன உடனே சோப்பு, பத்திரிக்கைன்னு வாங்கிக்கிட்டோம். ஜெயில்ல சோப்பு தருகிற விசயமே மற்றவங்களுக்கு அப்பத்தான் தெரியும்.

ரெண்டு பேர் மட்டும் போய் என்ன ஆகப்போவுதுன்னு கேட்டா என்ன சொல்வீங்க?

தோழர் ராஜூ வீட்டிலிருந்து முழக்கம் போட்டா வேலைக்காகாது சொன்னாரு. சொன்னது சரிதானே. நாங்கள் ரோட்டுக்கு போனோம். ஆளு கம்மியா இருக்குதுன்னு விட்டு போக முடியுமா? ஆள் இல்லைன்னு சொல்லிட்டு அப்படி எல்லாம் இருக்க முடியாது. இந்த அமைப்புல இரண்டு பேராவது உறுதியாக நின்று போராட்டம் நடத்தினார்கள் என்று தெரியணும்.

வயசான காலத்துல எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு யாராவது ஜெயிலுக்கு போயிட்டுவந்த உடனே கேட்டாங்களா?

ஜனமெல்லாம் கொரோனாவுல சாவுது, பசியிலே லோல் படுது. எல்லோரும் சொந்த வேலையை பாத்தா ஆவுமா என்னா?அப்போ எதுவும் நடக்காது. யாராச்சும் வயசான காலத்துல ஏன் கஷ்டபடுறீங்கன்னு கேட்டா. சின்னப்பயன் தான… நீ போக வேண்டியதுதானேன்னு கேப்பேன்.

வேலூர் மாவட்டத்துல போராட்டம் எதுவும் நடக்குலன்னு பேர் வந்தா நமக்குத்தானே கவுரவக்குறைச்சல். யார் வந்த என்ன ? எப்பவும் சாவு வரப்போறதுதான். உணர்வுதான முக்கியம்.

உண்மைதான் உணர்வுதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது…

தகவல் :
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க