TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு ! மக்கள் போராட்டத்தால் மாறிய தீர்ப்பு !!

கொரோன நோய்த் தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது, மக்கள் அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு, வேலை – தொழில் இல்லை, உணவு தவிர்த்த அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு கூட அரசு தடை விதித்திருந்தது.

பெறுபான்மையான மக்கள் வருமானம் இல்லாத இந்த சூழலில், அதிக அளவில் கூட்டம் சேரும்மென்ற அடிப்படையில் ஏற்கனவே டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது. வருமானம் ஈட்டுவதற்காக டாஸ்மாக்கை திறப்பார்களேயெனில் கோயம்பேடு போல நோய் தொற்று பரவும் இடமாக டாஸ்மார்க் மாறும் என்று 06.05.2020 அன்று மக்கள் அதிகாரம், மக்கள் ஆயம் சார்பாக நாம் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். நமது சார்பாக மூத்த வழக்கறிஞர் வைகை மற்றும் பாலன் ஹரிதாஸ் அவர்கள் வாதாடினார்.

நமது தரப்பில் பல்வேறு வாதங்களை முன்வைத்தாலும், அவற்றிற்கு எந்தவித பதில்களையும் எடுத்துரைக்காமல் மதுபானக்கடைகள் மூடலால் ஒரு நாளைக்கு 90 கோடி இழப்பு ஏற்பட்டு வருவது, உட்பட சில விசயங்களை அரசு தரப்பில் முன் வைத்தனர். நீதிமன்றமும் டாஸ்மார்க்கை திறக்க தடைகோரிய வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல் சில ஆகாத கட்டுப்பாடுகளை விதித்து திறக்க அனுமதி அளித்தது.

ஆனால், நேற்றைய ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பெண்கள், வீதியில் இறங்கி ஆவேசத்துடன் போராடினர். சில இடங்களில் கடையை மூடவும் வைத்தனர். அமைப்புகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நீதிமன்றமும் மக்களின் விமர்சனத்திலிருந்து தப்பவில்லை.

இப்படி இருக்கக்கூடிய சூழலில் மீண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பாக மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஏற்கனவே மனு தாக்கல் செய்து வழக்கு நடத்திய வழக்கறிஞர் G.ராஜேஷ் இணையவழியில் விற்பனை செய்வதை அரசு தொடங்கவில்லை. அதுவரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று ஒரு இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த இடைக்கால மனுவுடன் நாம் தாக்கல் செய்த வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லாக் டவுன் முடியும் வரை டாஸ்மாக் நேரடி விற்பனைக்கு தடை விதித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யபோவதாக அறிந்தோம். உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

40 நாட்கள் தந்த இடைவெளியை பயன்படுத்தி டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் என்பதே தமிழக மக்களின் – பெண்களின் கோரிக்கை.

தற்போது கொரானா காலத்திலாவது மூட வேண்டும் என்பதே வழக்கு. மக்களின் கோப ஆவேசத்தை பார்த்துதான் உயர்நீதிமன்றம் தீர்ப்பை மாற்றி டாஸ்மாக்கை மூடியுள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்ய துடிக்கிறது குடி கெடிக்கும் அரசு.

உச்ச நீதிமன்றத்திலும் நமது சட்டப் போராட்டத்தை தொடர்வோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அரசுக்கு சாதகமாக அமையலாம். ஆனால் டாஸ்மாக் கொடுமைக்கு பலியான மக்களின் போராட்டம் அதற்கு எதிராகவும் பொங்கி எழும் என்பது நிச்சயம். மக்களின் வேதனை, வலியின் உணர்வோடு வழக்கை நடத்தி டாஸ்மாக்கை மூடும் உத்தரவை பெற நாமும் சட்டப் போராட்டத்தை நடத்திடுவோம்.

தோழமையுடன்,
சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
வழக்கறிஞர்
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்.

தகவல் :
மக்கள்‌ உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க