கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கோ மீட்பு நடவடிக்கைக்கோ ஆர்வம் காட்டாத தமிழக அரசு, நீதிமன்றத்தில் போராடி டாஸ்மாக்கை மீண்டும் திறந்திருக்கிறது. இந்த அநியாயத்துக்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அச்செய்திகளின் தொகுப்பு…
***
சென்னை வேளச்சேரி, முகப்பேர் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில், டாஸ்மாக் சாராய கடைகள் திறப்பதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! பெருவளப்பூர் மக்கள் ஆவேசம் !
கொரானா தொற்றின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளதை அன்றாட செய்திகள் அறிவிக்கின்றன. கொரானா சமூகப் பரவலாகியுள்ளதை கோயம்பேடு சந்தை பறைசாற்றியுள்ளது. மக்கள் முன் எச்சரிக்கை மற்றும் திட்டமில்லாத தான்தோன்றித்தனமான ஊரடங்கில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சாராய ஆலை அதிபர்களை கட்சி வேறுபாடு இன்றி பாதுகாக்கவும், கொள்ளையடிக்கவும் வசதியாக கஜானாவை நிரப்பிக் கொள்ளவும் டாஸ்மாக் கடையை திறப்பதென பாஜக அடிமை எடப்பாடி அரசு அவசர முடிவெடுத்துள்ளது.
கொரானா பாதிப்பு அதிகமாகி இருக்கும் இந்தநேரத்திலும் 07-05-2020 முதல் டாஸ்மாக் விற்பனை ஆயத்த பணிகள் தொடங்கிய உடனேயே ஆங்காங்கு மக்கள் எதிர்ப்பு வலுப்பெற தொடங்கியது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு வெளிவந்த உடனேயே முற்றுகை போராட்டத்தை பெருவளப்பூர் மக்கள் அறிவித்தனர்.
முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில்,
மக்களின் கோபத்தை உணர்ந்த காவல்துறை தண்டோரா மூலமாக காலை 8.30 மணிஅளவில் கடையை திறக்க மாட்டோம் என அறிவித்தது. போராட்டத்திற்க்கு ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பல்வேறு கட்சியினரும், சாதி, மத வேறுபாடின்றி அணி திரண்டிருந்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அரசுதரப்பின் அறிவிப்பின் உண்மை தன்மையை அறிய கடை திறக்கும் நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். என்னதான் இருந்தாலும் காவல்துறையின் பேச்சை நம்ப முடியாது அல்லவா ! கடை உண்மையில் திறக்கப் போவது இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மக்கள் நம்பிக்கை பெற்றனர். போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களான பெருவை மணி, இராசேந்திரன் மற்றும் திமுக சார்பில் TKR மோகன் அவர்களும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளின் முன்னணியாளர்களும் மீண்டும் கடையை திறந்தால் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளும் போராட்டம் நடைபெறும் என்பதை எச்சரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் இருக்குமிடத்தில் தனி மனித இடைவெளியுடன் கூடி ஆர்ப்பாட்டம் மூலம் எச்சரித்தனர்.
தற்போது காவல்துறை கடையை திறக்க மாட்டோம் என்று கூறியிருப்பது தற்காலிக வெற்றிதான். என்ன இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் அரசாங்கம் அதிக அளவில் போலீசாரை கொண்டு வந்து கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே ஊர் பொது மக்கள் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி டாஸ்மாக் கடையை அரசாங்கம் எப்போது திறந்தாலும் இழுத்து மூட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் இன்னும் அதிக அளவில் மக்கள் பங்கு பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்
அது மட்டுமின்றி டாஸ்மாக் சரக்கை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள் சில நபர்கள் அதை கண்டிக்கும் வகையில் இனி பிளாக்கில் விற்றாலோ அல்லது கடையை திறந்தாலோ பாட்டில்களை உடைப்போம் என மக்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
***
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில், டாஸ்மாக் சாராய கடை திறக்க கூடாது என எதிர்த்து போராடிய தோழர்களை ஆவலூர் காவல் துறை கைது செய்துள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பில் 07.05.2020 அன்று காலை 10 மணிக்கு சித்திரப் பட்டு கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஒருங்கிணைந்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று ஆர்பாட்டம் நடத்தினர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
***
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் காரப்பட்டு, பொய்கை அரசூர் பகுதியில் எடப்பாடி அரசு டாஸ்மார்க் திறப்பதை கண்டித்து கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பொய்கை அரசூரில் தோழர் ஞானஒலி தலைமையிலும் காரப்பட்டில் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது, கொரோனாவில் மக்களை பாதுகாக்காத அரசு டாஸ்மாக்கை திறந்து மக்களை கொல்ல கேவலமாக நடந்து கொள்வதை அம்பலப்படுத்தி தோழர் மாயவனும், தோழர் அம்பேத்கரும் உரையாற்றினார்கள்.
மேலும் மத்திய மாநில அரசுகளை அம்பலப்படுத்தி போர் குணமான முழக்கம் போடப்பட்டது. 144 தடை உத்தரவு இருந்தும் அதை மீறி ஒவ்வொரு பகுதியிலும் தலா 50 பேர் கூடினர் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கொரோனோ வைரஸ் பரவுதலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. இந்த 40 நாள் ஊரடங்கில் பெருந்திரளான பொதுமக்களுக்கு அரசு கொடுத்த நிவாரண தொகை வெறும் 1000 ரூபாய் ஆனால் வெறும் 50 முதல் 60 வரை உள்ள முதலாளிகளுக்கு அதுவும் வங்கியே திவாலாக காரணமாக இருந்த முதலாளி உட்பட அவர்களுக்கு 60000 கோடி அதாவது ஒரு முதலாளிக்கு தலா 2000 கோடி வரை தள்ளுபடி செய்து இருக்கிறது இந்திய அரசு.
இதை கேள்வி கேட்க கூட திராணி இல்லாமல் நிற்கிறது எடப்பாடி அரசு. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு தரவேண்டிய GST பணம் பல கோடிகள் இன்னும் வரவில்லை. இதை கேட்க வாய் வராமல் எடப்பாடி அரசு கோமாவில் விழுந்து விட்டது. இப்படிப்பட்ட நேரங்களில் ஒருசில தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு பண உதவியும் உணவு பொருளும் கிடைத்தது.
இக் காலகட்டத்தில் மக்களுக்கு போதிய நிவாரண நிதி மற்றும் மருத்துவ வசதி, இரவும் பகலும் கொரோனோவுடன் போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் காவலர்கள் போன்றோர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் சிறப்பு சம்பளத் தொகை இவையேதும் செய்யாமல் ஏற்கனவே அழிவின் விழும்பில் இருக்கும் குடும்பங்களை படுகுழியில் தள்ளும்விதமாக டாஸ்மாக்கை திறந்திருக்கிறது தமிழக அரசு.
குழந்தைக்கு பால் வாங்க பிஸ்கட் வாங்க பணம் இல்லாமல் மணலைத் தின்று இறந்த குழந்தைகள், குழந்தையுடன் கிணற்றில் விழுந்த குடும்பங்கள், குழந்தையுடன் தூக்கில் தொங்கிய குடும்பம் என்று வறுமை நிலை இப்படி இருக்க ஆனால் இந்த வெக்கங்கட்ட அரசு டாஸ்மாக்கை திறந்து மீதமுள்ள குடும்பங்களையும் அழிக்க திட்டமிட்டுள்ளது.
இதனை கண்டித்து “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பெண்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மக்களை காப்பாற்ற வக்கில்லாத அரசை வீதியில் வைத்து கேள்வி கேட்க வேண்டும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கோவையில் டாஸ்மாக்கை திறக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
திருப்பூரில் கொரானா-வில் மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் போது டாஸ்மாக்கை திறந்து, மக்களை மரண குழியில் தள்ளும் எடப்பாடி அடிமை அரசை கண்டித்து, மூடு டாஸ்மாக்கை, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் வி. சி. க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
தருமபுரி மாவட்டத்தில், உள்ள கள்ளிபுரம், கரியம் பட்டி மற்றும் கரியம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் டாஸ்மாக்கை திறக்காதே, தமிழக பெண்களின் தாலியை அறுக்காதே, என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.