கொரோனா பெருந்தொற்று சமயத்தில் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளை சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் மோடி அரசு பறித்துக் கொண்டிருந்த சமயத்தில் சூழல் கருதி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 2-5 தேதிகளில் தெலங்கானா மாநிலம் கோதாவரி ஹானியில் நடந்த சர்வதேச சுரங்கத் தொழிலாளர்களின் இரண்டாவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கம் கடந்த ஜூலை மாதம் வினவு தளத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.

அன்றைய சூழலுக்கு அவசியமான அரசியல் முக்கியத்துவமிக்க இந்தக் கட்டுரை அச்சமயத்தில் முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டிருந்தது. அதனை இப்போது இரண்டு பகுதியாக வெளியிடுகிறோம் ! அரசியல் முக்கியத்துவமிக்க இந்தக் கட்டுரையின் முதல் பகுதி, தொழிலாளி வர்க்கம் எப்படிப்பட்ட பண்பாட்டு சிக்கலில் சிக்கியுள்ளது என்பதை பற்றியும் அதிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் ஆக்கபூர்வமான வழிமுறைகளை முன் வைக்கிறது. இதன் இரண்டாவது பகுதி தொழிலாளிவர்க்கத்தை பிளவுபடுத்தும் பிரதானமான பிரச்சினைகளான சாதியவாதம் மற்றும் தேசியவாதப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறது !

 • வினவு

0 0 0

தொழிற்சங்க இயக்கமும் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்தும் மதவெறி, தேசிய வெறியைக் கையாள்வது பற்றியும்!

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்துவது பற்றிய சிக்கல்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பானதுமாகும். ஆனால் சில சிக்கல்கள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானதாயிருக்கும். அதாவது சக தொழிலாளர்களை அன்னியர்களாக, போட்டியாளராக, தன்னுடைய வாழ்வாதாரத்தைப் பறிப்பவராக, எதிரியாக, தன்னை விடக் கீழானவராக…. இப்படிப்பட்ட சில சிக்கல்கள் இருக்கின்றன. இவை மதவெறி, தேசிய வெறி, இனவெறி, அன்னிய நாடு வெறுப்பு, பிராந்திய வாதம், மத அடிப்படை வாதம், சாதி வெறி, மொழி வெறி, ஆணாதிக்கப் போக்கு, பெண்ணியவாதம், இசுலாமிய வெறுப்பு…  என பல காரணங்களால் இந்த வெறுப்பு உருவாகிறது. தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எல்லா துயரங்களுக்கும் அடிப்படையானது முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டல்தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிந்தாலும் மேற்கூறிய பிளவுபடுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் போக்குகளால்  சக தொழிலாளிதான் இந்தத் துயரங்களுக்குக் காரணம் என தொழிலாளி வர்க்கத்தை நம்ப வைக்கிறார்கள்.

வலது சந்தர்ப்பவாதமும், இடது தீவிரவாதமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். வலது சந்தர்ப்பவாதம் எதிரியைப் பற்றி மிகை மதிப்பீடு செய்யும் போது இடது சந்தர்ப்பவாதமோ எதிரிகளைப் பற்றி மிக எளிதானதாக அற்பமானதாக மதிப்பீடு செய்கிறது. ஆக, இந்த வலது மற்றும் இடது சந்தர்ப்பவாதங்கள் தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழி நடத்துவதில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன. வலது சந்தர்ப்பவாதம் சமரசவாதம், திரிபுவாதம், சீர்திருத்தவாதம் மற்றும் பாராளுமன்றவாதப் பாதையில் தொழிலாளர்களை இழுத்துச் சென்று தொழிற்சங்கவாதத்திற்குள் தள்ளி கேடு கெட்ட பொருளாதாரவாதம், பிழைப்புவாதம் மற்றும் சந்தர்ப்பவாத சகதிக்குள் மூழ்கடிக்கிறது.

படிக்க :
♦ தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை !
♦ தொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் !

வலது சந்தர்ப்பவாத்த்தின் கள்ளக் குழந்தைதான் திரிபுவாதம். ‘21-ம் நூற்றாண்டின் சோசலிசம்’, ’மற்றொரு உலகம் சாத்தியமே’, ’பின் நவீனத்துவம்’, ’அனைத்து அதிகாரத்தையும் எதிர்ப்போம்’ என கவர்ச்சிகர முழக்கங்களின் கீழ் வரும் இது தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழி நடத்தி மூலதனத்தின் நலனுக்கு சேவை செய்கிறது. இவையெல்லாம் கூலியடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கு தடைகளாக உள்ளன. இந்தக் குறுகிய கண்ணோட்டங்கள் மட்டுமின்றி அடையாள அரசியல் போன்ற வேறு சில அரசியல் கோட்பாடுகளும் தொழிலாளர்களை பிரித்து, திசை திருப்பி, தவறாக வழி நடத்துகின்றன. இந்த அடையாள அரசியல் தொழிலாளிகளைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு தொழிலாளியையும் தனித்துவம் மிக்கவர் என அடையாளப்படுத்தி வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கிறது.

முகநூல் குழுக்கள், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) குழுக்கள் உட்பட சமூக ஊடகக் குழுக்களால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகவாதம் என்பது மற்றொரு அபாயம். ஒரேயொரு விவாதம் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டுகின்ற ஆற்றல் இந்த சமூக ஊடகங்களுக்கு உண்டு. எந்த ஒரு சிக்கலுக்கு அணி திரட்டுவதென்றாலும் இவை ஈர்க்கும்படியான முழக்கங்களை முன்வைக்கும். அந்த சிக்கல் தீர்ந்ததும் அணிதிரண்டவர்களை மிக கவனமாக இக்குழுக்கள் கலைத்து விடும். “அரசியல் இல்லை; அமைப்பு வடிவம் இல்லை; மையப்படுத்தப்பட்ட அமைப்பு கிடையாது; ஜனநாயக உணர்வு கிடையாது!” என மக்களிடம் இக்குழுக்கள் பிரச்சாரம் செய்கின்றன.

அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மிக மிக ஆபத்தானவை. சுற்றுச் சூழல் மாசு, குழந்தைத் தொழிலாளர்கள், பழங்குடிகளை முன்னேற்றுவது போன்ற பல விசயங்களைக் கையிலெடுத்து ‘இணை அரசாங்கத்தை’ இந்த என்.ஜி.ஓ.-க்கள் நடத்துகின்றன. இந்த அமைப்புகள் அரசு எந்திரத்துடன் அதன் கையாட்களாக செயல்பட்டுக் கொண்டே மறுபுறம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டும் வேலைகளையும் செய்வார்கள். “அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்” என்ற போர்வையில் உழைக்கும் மக்கள் வர்க்கமாக தமக்குரிய ’வர்க்க அமைப்பு’களில் அமைப்பாகத் திரள்வதைத் தடை செய்கின்றன இந்த என்.ஜி.ஓ.-க்கள். சிறிய, பகுதிக் கோரிக்கைகளுக்குள்ளாக தொழிலாளி வர்க்கத்தை முடக்குகின்ற வேலைகளை இந்நிறுவனங்கள் செய்கின்றன.

குறிப்பான சிக்கலை ஒட்டி போராட்டங்களை கட்டமைக்கும் இந்நிறுவனங்கள் பரந்துபட்ட மக்களை அணிதிரட்டும் அரசியல் இயக்கங்களை ஒருபோதும் முன்னெடுப்பதில்லை. ஆற்றல்மிக்க எஃகுறுதிமிக்க அமைப்புகளைக் கட்டுவதற்கு பதிலாக தொளதொளப்பான அமைப்பு வடிவங்களையே என்.ஜி.ஓ.-க்கள் பிரச்சாரம் செய்கின்றன. இந்த அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுப்பதிலும் உறுதியான போராட்டங்களுக்கு பதிலாக மிக தாராளவாதமாகவும் விழாக்கால கொண்டாட்ட மனநிலையிலும் மக்களைத் திரட்டுகின்றன. இந்த வகையான அழிவுத் தன்மையுடன் செயல்படும் இந்த என்.ஜி.ஓ. நிறுவனங்கள் தொழிலாளி வர்க்கத்தை தவறாக வழிநடத்தி, அவர்களுக்கு துரோகமிழைப்பதில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன.

இடது தீவிரவாதமோ சாகசவாதம், பயங்கரவாதம், எதிரி பற்றிய குறைவான மதிப்பீடு, அகநிலை மற்றும் புற நிலைமைகளைப் பற்றி மிகையான கற்பனையான மதிப்பீடுகளுக்கு இட்டுச் சென்று தொழிலாளி வர்க்கத்தின் எஃகுறுதிமிக்க அமைப்பு ஒற்றுமைக்கு பதிலாக குறுகிய குழுவாதத்திற்கு தொழிலாளர்களைக் கொண்டு செல்கின்றன. இடது விலகள் தவிர்க்கவியலாமல் தொழிலாளி வர்க்க இயக்கத்தை பேரழிவுகளுக்குத் தள்ளுகின்றன. இவ்வகையான குழுக்கள் நிலவுகின்ற அரசியல் நிலைமைகளை மதிப்பீடு செய்வதிலும் அதற்குப் பொருத்தமான மக்கள் திரள் அரசியல் இயக்கத்தை வடிவமைப்பதிலும் தோல்வியுறுகின்றன. இயந்திரகதியான, இயக்கமறுப்பியல் தன்மை கொண்ட இவ்வகையான குழுக்கள் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை பேரழிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

மூலதனத்தின் கையிலுள்ள மற்றொரு பேரழிவு ஆயுதம் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான பண்பாட்டுத் தாக்குதல்களாகும். தொழிலாளர்களின் ஓய்வு நேரத்தில் ஓய்வின்றி இடையறாது தாக்குதல்களை நடத்தி பண்பாட்டு ரீதியாக அவர்களை சீரழிக்கின்றன. “வரம்பற்ற சுதந்திரம்; வரம்பற்ற நுகர்வு” என்ற முழக்கங்களை முன்வைத்து தொழிலாளர்களை சிந்தனை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சீரழித்து வருகின்றன. நுகர்வியமானது கண்ணில் கண்ட அனைத்துப் பொருட்களையும் அடைய வேண்டும் என்ற பேராசையை தொழிலாளிக்கு ஊட்டி, அதை அடைவதற்கு எந்தக் கொடூரங்களையும் புரியலாம் என்ற மனநிலைக்குத் தள்ளுகின்றன. தமது நுகர்வு மோகத்திற்கு குறுக்கே எந்த விதமான தடைகள் வந்தாலும் அவற்றைக் கடப்பதற்கு எல்லா விதமான நீதிநெறிகள், நன்நெறிகள், ஒழுக்கம் மற்றும் தன்மானத்தை உதிர்த்து விடுவது என்பதை இந்தப் பண்பாடு தொழிலாளிகளுக்குக் கற்பிக்கிறது. இந்தப் பண்பாட்டுச் சீரழிவுகள் தொழிலாளிகளை தனது நுகர்வியத்திற்காக எந்தவிதமான கிரிமினல் நடவடிக்கைகளையும் செய்வதற்கு இட்டுச் செல்கிறது.

போதைப் பழக்கத்திற்கு அடிமைப்படுவது மற்றொரு பண்பாட்டுச் சீரழிவு. இது தொழிலாளி வர்க்கத்தை சாவுக்கு இட்டுச் செல்லுகிற ஒரு பொறி. கோகெய்ன் முதல் பான்பராக் வரை எண்ணற்ற போதைப் பழக்கங்கள் தொழிலாளர்களைச் சுண்டியிழுத்து சவக்குழிக்கு அனுப்புகிறது. சர்வதேச அளவிலான போதை வியாபாரத்தின் மதிப்பு கோடானு கோடி ரூபாயாகும். சில வகை போதைப் பொருட்கள் நார்கோடிக் என வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பான்பராக் போன்ற சில பொருட்கள் இந்தியா உட்பட சில நாடுகளில் சட்டப்படியே விற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. மார்வாரி, பனியா சாதிகளைச் சேர்ந்த பகாசுர போதைப் பொருள் விற்பனையாளர்கள் சர்வதேச அளவில் வலைப்பின்னலைக் கொண்டிருப்பதோடல்லாமல் அரசு எந்திரத்தின் ஆதரவையும் கொண்டுள்ளனர். உண்மையில், ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இந்த “போதை லார்ட்”டுகள் நிதியை வாரி வழங்குகிறார்கள். இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் பாதி மிருகங்களாக மாற்றப்பட்டுவிடுகிறார்கள்!

இந்த போதைப் பழக்கம் மட்டுமின்றி மற்றொரு பண்பாட்டுச் சீரழிவாக வலைதள போதை உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான நன்நெறிப் பண்புகளை வெட்டி வீசுகிறது இந்த வலைதள போதை. இந்த வலைதள மோகமானது தொழிலாளர்களை நுகர்வு மோகத்திற்கும் நீதிநெறியற்ற நடவடிக்கைகளுக்கும் இழுத்துச் செல்கிறது. ஆபாச, நிர்வாணப் படங்களைப் பார்ப்பது மிகமிக மோசமான, சீரழிவான மற்றும் அழிவுகரமான ஒன்று. இந்த வலைதள மோகமானது தொழிலாளகளின் சமூக உணர்வை மழுங்கடிப்பதோடல்லாமல் அவர்களின் சுயமரியாதை உணர்வுகளையும் மழுங்கடிக்கிறது. இத்தோடு வீடியோ விளையாட்டுகள், செல்பி மோகம், வலைதளத்தில் அளவளாவுவது மற்றும் பல்வேறு வலைதள நிகழ்வுகள் தொழிலாளர்களை திசைதிருப்புவதோடல்லாமல் அவர்களின் அன்றாட வர்க்க நடவடிக்கைகளையும் ஒழித்துக் கட்டுகிறது.

இந்தப் பண்பாட்டுத் தாக்குதல்கள் தொழிலாளி வர்க்கத்தை கொத்துக் கொத்தாக பிழைப்புவாதிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் மாற்றி இவை பற்றி எந்தக் குற்ற உணர்வுமற்றவர்களாக அவர்களைச் சீரழிக்கிறது. இது அவர்களை தான், தனது என்கிற மிகக் குறுகிய தனிநபர் முன்னேற்றம் என்பதில் தள்ளி சுயநலப் பிண்டங்களாக மாற்றிவிடுகிறது. இந்தத் தனிநபர்வாதமானது மிகமிக உறுதியானதாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வருகின்ற இந்த தொழிற் பாதுகாப்பாயிருக்கட்டும், ஜனநாயக உரிமைகளாகட்டும் இவையனைத்தும் பல ஆண்டுகளாக தொழிலாளர்கள் தமது ஒன்றுபட்ட கூட்டுப் போராட்டங்களாலும் போராட்டக் களத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்தும் பெற்றவை என்ற உண்மைகளைக் கூட உணராத அளவுக்கு உள்ளது. தனிநபர் வாதமானது ஒருவரின் ஜனநாயக உரிமைகளைப் பற்றிய உணர்வையே உணரச் செய்யாத அளவிலிருப்பதால் மற்றவர்களுடைய உரிமைகளையும் மறுக்கிறது.

மாறிவரும் உலக நிலைமைகளில் முதலாளித்துவ பயங்கரவாதமானது அதனுடைய கொடூரச் சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் மாற்றிக் கொள்கிறது. மிகச் சமீபத்திய ஒரு சுரண்டலின் வடிவம் ஒப்பந்த மயமாக்கமாகும். ஒப்பந்தமயமாக்கல் தொழிலாளி வர்க்கத்தை பொருளாதார ரீதியாக மட்டும் சுரண்டுவதோடன்றி, மேலும் அவர்களை நிரந்தரத் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி என இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிளவுபடுத்துகிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையினிடத்தில் பெரும் பிளவை உருவாக்குகிறது. பல்வேறு ஒப்பந்தமயமாக்கல்களும் துணை ஒப்பந்தமயமாக்கல்களும் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மத்தியிலேயே பிளவையும் பகைமையையும் ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

காரியவாதக் கண்ணோட்டம் கொண்ட தொழிலாளர்கள் எதை அடைய நிணைக்கிறார்களோ அதை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராயுள்ளனர். தமக்கான தனிப்பட்ட சிறிய இழப்புகளையோ தியாகத்தையோ மிக மோசமாக வெறுக்கும் இந்தத் தொழிலாளி தான், தான் விரும்புவதைப் பெறுவதற்காக சக தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கத் தயாராகிறார்கள்; தனது எஜமானர்களின் காலை நக்கிப் பிழைக்கத் தயாராகிறார்கள்; ஒட்டு மொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் முதுகில் குத்தத் தயாராகிறார்கள். தமக்கான வேலைகளை வேறு யாராவது செய்து தர வேண்டும் என காத்திருக்கிறார்கள். சுருக்கமாக, பாட்டாளி வர்க்கத்தின் உயர்வான மதிப்பீடுகளை, உன்னதப் பண்புகளை முதலாளித்துவம் முற்றாக அழித்தொழித்துவிட்டது. ஒருவர் தமது உழைப்பால் உழைத்து வாழ வேண்டும் என்பதை மாற்றி, குறுக்கு வழியில் பணத்தையும் வெற்றியையும் அடையலாம் என்றாக்கி விட்டது. இந்தப் பண்புகளுக்கு பலியாகின்ற தொழிலாளர்கள் வர்க்க உணர்வை இழந்து, தனி நபர்களாக தனிமைப்பட்டு வர்க்க ஒற்றுமைக்கு உலைவைக்கிறார்கள்.

மேலே கூறப்பட்டவைகளின் புரிதலிலிருந்து, சாதியவாதமும், தேசிய வெறியும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பி, தவறாக வழிநடத்தும் இரு பெரும் பிரச்சினைகள் என மதிப்பிடுகிறோம்.

(தொடரும்)

புஜதொமு
தமிழ்நாடு – புதுவை

3 மறுமொழிகள்

 1. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 முதல் 5 ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலம் கோதாவரி ஹானியில் நடந்த சர்வதேச சுரங்க தொழிலாளர் மாநாட்டில் எமது சங்கம் சார்பாக வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை 2020 ஜூலை 16ஆம் தேதி எமது சங்கம் சார்பாக தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தோம்.அதனை தற்போது வெளியிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ‌ ‌
  இவண்
  த.பழனிசாமி.
  தலைமை குழு ‌
  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
  தமிழ்நாடு – புதுச்சேரி

  • உடனடியாக வெளியிடப்படாமைக்கு காரணமானவர் மீதான கண்டனம் துளியும் இல்லாமல், வெளியிட்டதற்கு வாழ்த்து மட்டும் சொல்லுகிறீர்கள். இதிலிருந்தே உங்களது ஆப்த நண்பர் மீதான பாசம் விளங்குகிறது. வாழ்க உங்கள் கோஷ்டி பாசம்…

 2. இறுதியில் …. ” மேலே கூறப்பட்டவைகளின் புரிதலிலிருந்து, சாதியவாதமும், தேசிய வெறியும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பி, தவறாக வழிநடத்தும் இரு பெரும் பிரச்சினைகள் என மதிப்பிடுகிறோம்”…… என்று சொல்வது தவறாக தெரிகிறதே. பண்பாட்டு சீரழிவு பற்றிதானே சொன்னீங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க