“ஏதாவது ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எங்களோடு பேச்சு நடத்த மத்தியக் குழுவுக்கு நிர்ப்பந்தம் வரும்; அதன்மூலம், எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்” – என்கிறார் காமனேவ்; தோ…ழர்… காமனேவ்.
“கிரேவை நான் சுடும்போது என்ன நினைத்தேன் என்றால், சோவியத் கட்சிக்கும் சோவியத் அரசுக்கும் எதிரான புரட்சிக்கு – எழுச்சிக்கு எனது தோட்டா ஒரு சமிக்ஞையாக இருக்க வேண்டும் என்பதுதான்” என திமிர்த்தனமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான், நிக்கோலயேவ்.
காமனேவ் ஒரு புரட்சியாளனைப் போல பேசுகிறார் அல்லவா? நிக்கோலயேவின் பேச்சு சோவியத் கட்சியும் சோவியத் அரசும் பரந்துபட்ட மக்களுக்கு எதிரான ஒரு பிற்போக்கானது என்ற தோற்றத்தைக் கொடுக்கிறதல்லவா? உண்மையில் இவர்கள் இருவரும் ஒரு தேர்ந்த சதிகாரர்கள். ‘ஏதாவது ஒரு சூழ்நிலை என்று காமனேவ் கூறுவது கொலையைக் குறிக்கிறது. கொலைகாரனின் பெயர் நிக்கோலயேவ். ஜினோவியவாதிகளின் எதிர்ப்புரட்சி ரகசிய குழுவின் உறுப்பினன்.
ஒரு தோழனைப் போல வேடமிட்டு, தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய கொலைகாரன் நிக்கோலயேவ்; சுட்டது செர்கி கிரேவ் என்ற தோழரை… தோழர் செர்கி கிரேவ், கட்சியின் லெனின்கிராட் பகுதி செயலரும் கட்சியின் தீவிரப் பற்றாளரும் ஆவார். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்திலேயே இந்தக் கொலை நடக்கிறது. காரணம், கட்சியை சீர்குலைக்கும் சதிகாரர்களையும் கட்சியில் நாசவேலையில் ஈடுபடுபவர்களையும் தோழர் கிரேவ் கண்டறிந்தார் என்பதற்காக …
நிக்கோலயேவ் போன்ற கொலைகாரர்களை நேரில் பலரும் பார்த்திருக்கக் கூடும்.. கண்ணுக்கு முன்னே தென்படும் சக தோழர்களாக இருப்பார்கள்; கையும் களவுமாகப் பிடிபட்டு அம்பலப்பட்டு நிற்பார்கள். இவர்கள்தான் சதியை நடத்தி முடிக்கும் தளபதிகள். ஆனால், சதிக்கு மூளையாக செயல்படுபவர்களை – சதிக் கும்பலின் தலைவர்களை அவ்வளவு எளிதாக காண முடியாது. அவர்கள் தங்களது சதி செயல்பாடுகளை மறைத்து, ‘தகுதி’ மற்றும் ‘திறமை’க்குள் ஒளிந்துகொள்கிறார்கள்; பிரச்சினை வரும்போது அதை எதிர்கொண்டு மோதத் திராணியின்றி ‘பங்கருக்குள்’ பதுங்கியும் கொள்வார்கள் !
இதுவரை நல்ல நண்பர்களாக, உற்ற தோழர்களாக, மக்களை நேசிப்பவர்களாக, சிறந்த போராட்டக்காரர்களாக, சொல்லாடல் மிக்க எழுத்தாளர்களாக, தர்க்கத்தில் வென்று நிற்கும் பேச்சாளர்களாக, இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர்களாக, கவிஞர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் திடீரென எப்படி சதிகாரர்களாக மாறுகிறார்கள்? ஒரு புரட்சிகர கட்சியில் இயங்கும் சீர்குலைவுவாதிகளும் சதிகாரர்களும் திடீரென அவ்வாறு மாறிவிடுவதில்லை; மார்க்சிய – லெனினிய அரசியல் எனும் நேர்க்கோட்டிலிருந்து அவ்வப்போது சமநிலை வழுவி இடதிலோ வலதிலோ சரிந்து விழுந்திருப்பார்கள். அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை நோக்கிச் செல்லும் இயங்கியல் போக்கில்தான் இந்தத் திடீர் மாற்றம் நடக்கிறது.
சதிகாரர்களும் சதிச் செயலும் எப்படி உருவாகிறது என்பதை ரஷ்ய உதாரணத்திலிருந்து பார்ப்போம்.
சோவியத் ரசியாவில் 1925-ல் நடைபெற்ற 14-வது கட்சிக் காங்கிரசில் மத்தியக் குழுவிற்கெதிராக ஜினோவியேவ், காமனேவ் போன்ற சீர்குலைவுவாதிகளின் நடவடிக்கைகளை முறியடித்து, நாட்டை சோசலிச பாணியிலான தொழில்மயமாக்கலை விரிவுபடுத்துவதற்கான தீவிரப் போராட்டத்தை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் அரசு தொடங்கியது. தொழில்மயமும் சீரான முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருந்தது. காங்கிரசின் தீர்மான முடிவுகளை பல்வேறு பிரிவு மக்கள் மத்தியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரமாக எடுத்துச் செல்லுகின்றனர். இது, தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் அமோக ஆதரவையும் பெறுகிறது.
கட்சியின் இத்தகைய விளக்கக்கூட்ட பிரச்சாரத்திற்கு எதிராக மென்ஷ்விக்குகள் தங்கள் விசக் கொடுக்குகளை நீட்டுகின்றனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், லெனின்கிராடில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் கட்சிக் காங்கிரசின் தீர்மான முடிவுகளைக் கண்டித்து ஜினோவியேவ் பேசுகிறார்; கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. சோவியத் ரஷ்யாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் தோழர் ஸ்டாலினின் திட்டத்தை காங்கிரசில் ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள், அதற்கு நேரெதிராக உரையாற்றும் ஜினோவியேவின் வஞ்சகப் பேச்சைக் கேட்டு கடும் கோபத்திற்கு ஆளாகிறார்கள்; கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். ஜினோவியேவ் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு ஓடவேண்டியதாயிற்று.
இதில் ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் மாநாடு நடத்தி, தங்கள் பிரதிநிதிகளை காங்கிரசுக்கு தேர்ந்தெடுத்து அனுப்புவது வழக்கம். அதேபோல, 14-வது காங்கிரசுக்கு அனுப்புவதற்காக, கட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மாநாடு லெனின்கிராடில் நடக்கிறது. அந்த மாநாட்டில் மத்தியக் குழுவிற்கெதிராக ஜினோவியேவ் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகிறார். அதில் தங்கள் ஆதரவு பெற்ற பிரதிநிதிகளை லெனின்கிராட் சார்பாக தேர்ந்தெடுத்து காங்கிரசுக்கு அனுப்பி வைக்கிறார்; அந்த லெனின் கிராட்தான் ஜினோவியேவை ஓடஓட விரட்டியடித்தது.
இதே காலத்தில், 14-வது கட்சிக் காங்கிரசின் முடிவுகள் மீது தங்களுக்கு உடன்பாடு இல்லாதிருந்தபோதிலும், டிராட்ஸ்கியவாதிகள், அதை ‘விசுவாசத்தோடு’ ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கட்சியின் நன்மதிப்பைப் பெற்ற அதே சமயம், கட்சிக்கு எதிரான ஏனைய சீர்குலைவுவாதிகளுடன் கூட்டுச் சேரும் கட்சிப் பிளவுவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தருணங்களில் கட்சியில் ‘போர்க்கொடி’ தூக்கிய காமனேவும் ஜினோவியேவும் டிராட்ஸ்கியும் கட்சிக்கெதிராக எந்தப் புள்ளியில் இணைகிறார்கள்? அதன் சூக்குமம் என்ன? கட்சி பலவீனமான இடங்களில் ஏறி மிதிப்பது; பலமான இடங்களில் அதீத விசுவாசங்காட்டி, ‘சுயவிமர்சனம்’ ஏற்று பணிந்து பதுங்கிக் கொள்வது. அதாவது, தாராளவாத முதலாளித்துவக் கருத்தை கட்சிக்குள் புகுத்த சாம, பேத, தான, தண்டம் எனும் புள்ளியில் ஒருங்கிணைந்து சதியை அரங்கேற்றுகிறார்கள்.
இவர்களுக்கிடையே ஒரு கீழ்த்தரமான ஒப்பந்தமும் ஏற்படுகிறது. ஓட்டுக்கட்சி அரசியலில், எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்களே, அதைவிட கேவலமாக நடக்கிறது. கட்சியின் மீது வெவ்வேறு பிரச்சினைகளை முன்வைத்தவர்கள், தங்களுக்கிடையிலான பிரச்சினைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு கட்சிக்கு எதிராக ஒன்று திரளுகிறார்கள். அதாவது, ஜினோவியேவ் – காமனேவ் – புகாரின் – டிராட்ஸ்கி இவர்கள் அனைவரும் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்பவர்கள்; ஆனால், கட்சியை எதிர்ப்பதில் ஒத்த கருத்துடையவர்கள். இந்தத் தருணத்தில் ஜினோவியேவைப் பற்றிய தனது விமர்சனங்களையெல்லாம் டிராட்ஸ்கி வாபஸ் பெறுகிறார்; அதற்கு கைமாறாக, “கட்சியில் அதிகாரத்துவப் போக்கு” இருக்கிறது என்ற டிராட்ஸ்கியின் வாதத்தில் நியாயம் இருப்பதாக ஜினோவியேவ் ஏற்றுக்கொள்கிறார். இது “வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாத, கொள்கையற்ற பேரம்” என்று கண்டித்து கிண்டலடிக்கிறார் ஸ்டாலின்.
கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டுவரும் இத்தகையவர்களை பலமுறை நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்கிறது கட்சி. ஆனாலும், ‘பூரண’ சுயவிமர்சனத்தின் மூலம் – பரமபிதாவிடம் மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்பது போல் கட்சியிடம் கேட்பதன் மூலம் – தங்களை கட்சியுடன் இணைத்துக் கொண்டு மீண்டும் அதே சீர்குலைவு வேலைகளை செய்து வந்தனர், முன்னைவிட பலமாக !
டிராட்ஸ்கியின் பொய் பிரச்சாரம் ஒரு கட்டத்தில் எல்லை மீறுகிறது. இனிமேலும் பொறுத்துக்கொண்டு டிராட்ஸ்கியை கட்சியில் வைத்திருப்பதானது கட்சியை உடைப்பதற்கு சமம் – கட்சிக்கு செய்யும் துரோகம் என்று அவரை நாடு கடத்துகிறது சோவியத் அரசு.
படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் விசுவாசமும் கூட்டுத் தலைமையும் !
முதலாளிகள் தங்கள் பிரதிநிதியை சும்மா இருக்க விடுவார்களா? ஒரு ‘டைட்டான’ வேலைத்திட்டத்தைக் கொடுக்கிறார்கள். நாடு கடத்தப்பட்ட டிராட்ஸ்கி துருக்கிக்கு வரவழைக்கப்படுகிறார்; துருக்கி அரசு அவருக்கு பாதுகாப்பும் கொடுக்கிறது. அவரது வருகையை ‘சிவப்பு நெப்போலியன்’ என்று கொண்டாடி வரவேற்கின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள். டிராட்ஸ்கியின் துதிபாடிகளும் சோவியத்துகளுக்கு எதிரானவர்களும் ஓரணியில் திரண்டு வரவேற்று மகிழ்கின்றனர். அதிதீவிர இடதுசாரி மற்றும் பலாத்கார ‘முற்போக்குக்’ கருத்துக்களை ஒலிக்கும் எண்ணற்ற கட்டுரைகளிலும், புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் தனது எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரத்தை முற்போக்கான புரட்சிகர சோவியத் அரசுக்கு எதிராக தாம் வைப்பதாக ட்ராட்ஸ்கி கருதவில்லை. அவரைப் பொறுத்தவரையில், அவரது எதிர்ப்பு எல்லாம், சோவியத் அரசு “எதிர்ப்புரட்சி தன்மையுடையது” “பிற்போக்கானது” என்பதற்காகத் தான். அதாவது ட்ராட்ஸ்கியின் வாதப்படி “புரட்சியின் நலனுக்காகத்” தான் இந்த சதித் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
“எனது வாழ்க்கை” எனும் சுயசரிதையை டிராட்ஸ்கி எழுதுகிறார். ‘நான்’, ‘எனது’ என்று தனது சுயபுராணத்தைப் பாடுகிறார். இதுதான் ட்ராட்ஸ்கியின் சோவியத் விரோத நிலைப்பாட்டை, சர்வதேச எதிர்ப்புரட்சி கும்பலுக்கு அறிமுகப்படுத்திய முதல் நூல். இது ஸ்டாலின் எதிர்ப்புப் பிரச்சாரம் மட்டுமல்ல, சோவியத் யூனியனையும் இழிவுபடுத்துவதுதான் இதன் நோக்கம். சோவியத் எதிர்ப்பு உளவு நிறுவனங்களுக்கு டிராட்ஸ்கியின் நூல்களை பாடப்புத்தகமாகவே வைத்து விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவரது கட்டுரைகளும் பிரசுரங்களும் மக்களைக் கவரும்வண்ணம் வடிவமைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. “ஏமாற்றப்பட்ட புரட்சி, அபாயத்தில் சோவியத் பொருளாதாரம், ஐந்தாண்டு திட்டத்தின் தோல்வி, ஸ்டாலினும் சீனப் புரட்சியும், ஸ்டாலினின் மோசடி சிந்தனை” போன்ற கவர்ச்சிகரமான தலைப்புகளில் வெளிவருகிறது.
இன்றும் பலர் இதுபோன்ற வார்த்தை ஜாலங்களில் தங்களது உண்மையான வர்க்கத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதைச் சொல்ல வேண்டும்; யாரிடம் சொல்ல வேண்டும்; எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் இந்தச் சதிகாரர்கள் வல்லவர்கள். சதுரங்க விளையாட்டின் சகல காய்களுக்கும் ஒரு இலக்கை முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கும் ‘திறமை’சாலிகள். இவர்களின் கம்யூனிச முகமூடி அவ்வப்போது கிழிந்து சந்தர்ப்பவாதிகளாக, திரிபுவாதிகளாக, அல்லது அதிதீவிர இடதுசாரிகளாக, அராஜகவாதிகளாக தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். அதேசமயம், ஒரு பொதுவுடைமைக் கட்சிக்கு எந்த விதத்திலெல்லாம் நெருக்கடிகளைக் கொடுக்க முடியுமோ அப்படியொரு தொடர் நெருக்கடிகளை இடைவெளியின்றி கொடுத்து தாக்கி அழிப்பதில் அவ்வளவு மும்முரம் காட்டுகிறார்கள் ! இறுதியில் முதலாளித்துவ சகதியில் புதைந்து செவ்வாடையைக் களையவும் துணிந்து, அம்மணமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
00o00
தாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று கட்சிக்குள்ளேயே முதலாளித்துவ சிந்தனையைப் புகுத்தி, தோழர்களைக் கொலை செய்து, கட்சியை உடைத்து சீரழிக்கும் சதிகாரர்களை மேலே பார்த்தோம்; சோவியத்திலெயே நடந்த இன்னொரு வகையான சதியின் வடிவத்தையும் பாருங்கள். இங்கு, முதலாளிகள் தங்களது கைக்கூலிகளை நேரடியாக கூலிக்கு அமர்த்தி சதித்தனத்தில் ஈடுபட்டு உற்பத்தியை சீர்குலைக்கின்றனர்.
புரட்சிக்குப் பிறகு, கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகள் முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் வருகிறது. இந்தச் சூழலில் (1928) நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலையில் முதலாளித்துவ சார்பு நிபுணர்களைக் கொண்ட நாசகரப் பெருங்கூட்டம் ஒன்று செயல்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்கள், நிலக்கரி உற்பத்தியைக் குறைக்கின்றனர். கொதிகலன்களை வெடிக்கச் செய்கின்றனர். சுழலிகளை சேதப்படுத்துகின்றனர். சுரங்கக் குழிகளுக்கும், திட்டப் பகுதிகளுக்கும் மின்சார நிலையங்களுக்கும் தீயிடுகின்றனர். தொழிலாளர்கள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாமல் திட்டமிட்டு தடுத்து நிறுத்துகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பு சட்டவிதிகளை மீறுகின்றனர். வேண்டுமென்றே செய்யப்படும் தவறான நிர்வாகத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலக்கரி சுரங்கப் படுகையை சீர்குலையச் செய்தது முதலாளிகள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்? ஆம், இதைச் செய்தது மேலை நாடுகளைச் சேர்ந்த சோவியத் எதிர்ப்பு முதலாளிகள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் சுரங்க உரிமையாளர்கள் தான். இவர்கள் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுரங்கத்தை மீண்டும் எடுத்துக்கொள்ள எத்தனிக்கிறார்கள். ஒரு நிறுவனத்தை தொழிலாளிகள் நிர்வகித்தால், இப்படித்தான் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற கருத்தைப் பரப்பி சோவியத் மீது கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆதலால், தங்கள் பணத்தை வாரியிறைத்து இந்த நாசவேலைகளை நடத்தி முடிக்கிறார்கள். இந்தச் சீர்குலைவு வேலையைக் கண்டுபிடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
இவை நமக்கு உணர்த்துவது என்ன? ஒருபுறம், கட்சிக்கு வெளியில் உள்ள முதலாளிகள், மறுபுறம், கட்சிக்குள்ளேயே இருக்கும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் – இவர்கள் கட்சியை உடைப்பதற்கு தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று இவர்களுக்கு புரட்சியின் மீது நம்பிக்கை இல்லை; அல்லது புரட்சியை தங்களுக்கு எதிரானதாகப் பார்த்து வன்மத்தோடு அரங்கேற்றுகிறார்கள்.
சுரங்கத் தொழிற்சாலையில் நடைபெற்ற சதிச் செயல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” என்பதை வலியுறுத்துகிறார். “சுயவிமர்சனம் இல்லாமல் கட்சி முன்னேற முடியாது; நமது இழிகுணங்களை வெளிப்படுத்த முடியாது; நமது குறைகளைக் களைய முடியாது – நம்மிடம் குறைகள் நிறையவே உள்ளன” என்கிறார். மேலும், சுயவிமர்சனம் இருந்தால்தான் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகவும் முழுமையாகவும் சமாளிக்க கட்சியால் இயலும்” என்கிறார்.
படிக்க :
♦ கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் || தோழர் ஸ்டாலின்
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !
புரட்சி நடந்து முடிந்த ரஷ்யாவிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில் ? கலைப்புவாதிகள், அராஜகவாதிகள், திரிபுவாதிகள், சீர்குலைவுவாதிகள் உருவாகுவதற்கான சாதகமான புறநிலைமையும், அகநிலைமையும் இங்கு பிரகாசமாக இருக்கின்றன.
‘மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடி படாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள் என இந்தப் பட்டியல் இன்னமும் நீளும்.
இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பட்டியலில் நம் கண் முன்னே இருக்கும் ‘மதிப்புமிக்க தோழர்’களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ’தோழர்களிடம்’ இருந்துதான் சதிகாரர்களும், சீர்குலைவுவாதிகளும், கலைப்புவாதிகளும் ‘திடீரென’ வெளிப்பட்டிருக்கின்றனர். இன்னும் பண்பு மாற்றமெடுத்து வெளிப்படாத நிலையிலுள்ள ‘தோழர்களும்’ இருக்கின்றனர்.
விமர்சன, சுயவிமர்சனத்தை விட்டொழிப்பது, வர்க்கப் பார்வையை விடுத்து புற உலகின் எதார்த்தத்தோடு கரைந்து விடுவது, சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தவறுவது ஆகியவைதான் தோழர்களாக இருக்கும் நாம் மேற்கண்ட ‘தோழர்களாக’ சரிந்துபோகும் நிகழ்ச்சிப் போக்கின் துவக்கப் புள்ளி!
வேலன்
தரவுகள் :
சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு
வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்

4 மறுமொழிகள்

  1. இந்த வார்த்தை ஒரு ஆர்எஸ்எஸ் காரன் பயன்படுத்து மொழியாக இருக்கிறதுஇருக்கிறது

  2. ‘மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடி படாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள்
    யாரு யாருக்குச் சொல்றாங்கண்ணே தெரியல…

  3. கட்டுரையாளர் வேலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்..பூமிப்பந்தின் எப்பகுதி கம்யூனிசக்கட்சிக்கும் பொருத்திப் போதும் கட்டுரை…இந்திய டிராஸ்க்கிகள் தங்களை “டிராஸ்கி”களாக மாற்றிக்கொண்டு அம்பலப்படும்போது கொஞ்சமும் சமரசமின்றி அவர்களை நாடுகடத்தும் “ஸ்டாலினாக” கட்சி இருந்துவிட்டால்..அக்கட்சி புரட்சி என்ற வினையாற்றும் வரை வெற்றிகரமாகவே பயணிக்கும்…உண்மைதானே..? இடைவெளிகளை எதிர்கொள்ளாமல் புரட்சி ஏது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க