டந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் வயது வந்தோர்களில் பருமனானவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை கூறுகிறது.

அதாவது கடந்த 2012-ம் ஆண்டில் 2.41 கோடியாக இருந்த பருமனானவர்களின் எண்ணிக்கை, 2016-ம் ஆண்டில்  3.28 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் நான்கில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. ஆனால் இது 12 ஆண்டுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, அது நான்கே ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 2004-06-ம் ஆண்டில் 25.39 கோடியாக இருந்த ஊட்டச் சத்துக் குறைபாடுள்ளோரின் எண்ணிக்கை 2016-18-ல் 19.44 கோடியாக குறைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் இந்தப் புதிய அறிக்கை கூறுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள, உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையில் உலகளவில், 2018-ம் ஆண்டில், 82 கோடி மக்களுக்கு சாப்பிடப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று மதிப்பிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81.1 கோடியாக இருந்தது. அதாவது போதுமான உணவு கிடைக்காதோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அனைத்துப் பகுதிகளிலும் அதிக பருமன் கொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவிலும் இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை மீதான அதன் விளைவு குறித்த ஒரு பகுதியும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 1990 மற்றும் 2017-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முறையே 8.6 சதவீதம் மற்றும் 4.5 சதவீதமாக இருந்தன என்று உலக வங்கியின் புள்ளி விவரங்களை மேற்கோளிட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

படிக்க :
♦ உடற்பருமன் ஏன் ? புதிய ஆய்வுகளும் கேள்விகளும் !
♦ ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை

இரு நாடுகளிலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு வறுமைக் குறைப்பில் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. சீனாவின் வறுமை விகிதம் 1981-ல் 88 விழுக்காட்டிலிருந்து 2015-ல் 0.7 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இந்தியாவின் வறுமைக் குறைப்பு சீனாவை ஒப்பிடுகையில் மிகவும் மிதமானதாக இருக்கிறது. இந்தியாவில் 1987 -ல் 48.9 விழுக்காட்டிலிருந்து 2011 -ல் 21.2 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும், 2015-ல் 13.4 விழுக்காடாக குறைந்ததாக மற்றொரு உலக வங்கியின் தரவை அடிப்படையாக குறிப்பிடுகிறது அந்த அறிக்கை.

***

மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒட்டுமொத்த மக்கள் எண்ணிக்கையால் வகுத்து சராசரி நாள் கூலியை முதலாளித்துவ அறிஞர்கள் கணக்கீடு செய்கிறார்கள். கடந்த 2015-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 1.9 டாலர் கூலி பெற்றாலே அவர் ஏழை கிடையாது என்ற உலக வங்கியின் புதிய ‘கண்டுப்பிடிப்பினால்’ ஒரே நாளில் உலகின் வறுமை தாறுமாறாகக் குறைந்து விட்டது. இவர்களது இத்தகைய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒருவர் ஆண்டொன்றிற்குப் பெறும் ஒவ்வொரு ரூ. 50,000 ஊதிய உயர்வின் மூலமாக ஒரு சக இந்தியர் வறுமையிலிருந்து மீள்கிறார்.

எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் கடந்த  2018 மார்ச் மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின்படி, மும்பைப் பங்குச்சந்தையின் முதல் 500 நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு 12.1% அதாவது 2017-18 நிதியாண்டில் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 9.8 கோடி ரூபாய் ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. அதே போல 2019, மே 17-ம் தேதி இந்து பிசினஸ் வெளியிட்ட செய்தியின் படி டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் இராஜேஷ் கோபிநாதனுக்கு 2017-18 -ல் ரூ. 12.43 கோடியாக இருந்த ஆண்டு வருமானம்  28 விழுக்காடு உயர்த்தப்பட்டு ரூ.16 கோடியானது. இந்திய மேட்டுக்குடி பெருமக்களின் இந்த ஊதிய உயர்வுகள் மூலம் சில ஆயிரம் (லட்சம்??) இந்திய மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்டு விட்டதாக நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.


– சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க