பானை வயிறுகள் இப்போது சாதாரணமாக காணக் கூடியவைகளாகியுள்ளன. காலை நடைப் பயிற்சியின் போது எதிர்வரும் பத்தில் ஒன்பது பேர் அதிக பருமன் பிரிவில் இருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் உடல் நலம் – அதிலும் குறிப்பாக உடல் எடைக் குறைப்பு – மிகப் பெரிய வணிகச் சந்தையாக இருக்கும் என பலரும் சொல்கின்றனர்.

முன்பெல்லாம் பணக்காரர்களின் பிரச்சினை என்று கருதப்பட்ட அதிக உடல் எடை மற்றும் அதீத உடற்பருமன் நோய் இன்று பரவலாகியிருப்பதற்கு என்ன காரணம்? எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா? இல்லை. உடல் உழைப்பு செலுத்தும் பிரிவினரான நடுத்தர வர்க்க, கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கூட தொப்பையும் தொந்தியுமாக மாறி வருவதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இன்மை, சோம்பேறித்தனம், அளவுக்கதிகமாக தின்பது, சரிவிகித உணவு உட்கொள்ளாதது என இதுவரை உடற் பருமன் பிரச்சினைக்கு தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளே காரணமாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தன. எனினும், புதிய ஆராய்ச்சி முடிவுகள் உடற் பருமன் பிரச்சினைக்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என முன்வைக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த உடற்புள்ளியியல் நிபுணர் (biostatistician) டேவிட் பி அலிசன் உள்ளிட்டோர் 2010-ம் ஆண்டில் அலபாமா பல்கலைக்கழத்தில் முன்வைத்த ஒரு ஆய்வறிக்கையின் படி கடந்த இருபது ஆண்டுகளில் சராசரி அமெரிக்கர்களின் உடல் எடை வேகமாக அதிகரித்துள்ளது. மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய் மற்றும் வீட்டு எலிகளின் சராசரி உடல் எடையும் அதிகரித்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வந்த மர்மோசெட் என்கிற ஒரு வகைக் குரங்குகளும் சிம்பன்சி மற்றும் மக்காவ் இனக் குரங்குகளும் உடல் எடை கூடியுள்ளது. பரிசோதனைக் கூடத்தில் வளர்க்கப்படுபவை என்பதால் இம்மிருகங்களுக்கு மிக நுணுக்கமாக கண்காணிக்கப்பட்டு தேவைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ அல்லாமல் சரியான அளவு உணவு மட்டுமே அளித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடற்பருமன் பிரச்சினை குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரிடையேயும் மிக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக உணவை உட்கொள்வது மற்றும் குறைந்த உடல் உழைப்பு மட்டுமே உடல் எடை அதிகரிக்க காரணம் என்கிற கண்ணோட்டத்தையும் புதிய ஆய்வு முடிவுகள் மறுப்பதாக அமைந்துள்ளன. ஒரே வகை உணவை ஒரே அளவில் எடுத்துக் கொள்ளும் வெவ்வேறு நபர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொருவரின் உடலும் அந்த உணவைக் கொழுப்பாக மாற்றும் தன்மையில் வேறுபடுவது தெரியவந்துள்ளது.

அதே போல் வெவ்வேறு உணவுகளின் மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் ஆற்றல் (கலோரி) ஒரே தன்மையிலானது அல்ல என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் பேராசிரியர் ஜொனாதன் வெல்ஸ் சுமார் 68 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு, ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பருமன் பிரச்சினை இருமடங்காக இருப்பதாக தெரிவிக்கிறது. மேலும் “எல்லா கலோரிகளும், சமமானவை அல்ல” என்று குறிப்பிடுகிறார் ஜொனாதன் வெல்ஸ். அதாவது இறைச்சி, கொழுப்பு, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அளவு என்கிற முறையில் ஒன்றாக இருந்தாலும், அது உடலுக்குள் ஆற்றும் வினை என்கிற அளவில் மாறுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

அதீத கொழுப்போ சர்க்கரையோ அவற்றில் உள்ள அதிக கலோரிகளால் மட்டும் சிக்கலை தோற்றுவிப்பதில்லை. மாறாக, அவை கொழுப்பு சக்தியை நமது உடல் சேமித்து செலவழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது; கொழுப்பு செலவழிக்கப்படுவதற்கு பதில் அதிகம் சேமிக்கப்படுகின்றது. மாறுபக்க கொழுப்பு (trans-fats), சர்க்கரை மற்றும் ஆல்கஹால் உள்ளிட்டவை நமது உடலில் நுழைந்த பின் ஒருவகையான இன்சுலின் சமிக்ஞையை எழுப்புவதாகச் சொல்கிறார் ஜொனாதன் வெல்ஸ். இதன் விளைவாக மாவுச்சத்துக்களை (carbohydrates) உடல் கையாளும் முறை மாற்றத்துக்குள்ளாகிறது. இப்புதிய ஆய்வுகள் நாம் உண்ணும் உணவின் அளவை விட எந்த உணவை உண்கிறோம் என்பதே உடற்பருமன் பிரச்சினையும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நமது உடல் கொழுப்பு மற்றும் மாவுச்சத்துக்களை கையாளும் விதம் உணவுப் பழக்கத்தால் மட்டும் மாற்றமடையவில்லை. இதற்கு வேறு பல சூழலியல் காரணங்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை நமது உடலில் சுரக்கும் லெப்டின் என்கிற ஹார்மோனின் அளவை பாதிக்கின்றது. லெப்டின் ஹார்மோன் தான் நாம் போதுமான உணவை உட்கொண்டிருக்கிறோம் என்கிற முடிவை மூளை எடுப்பதற்கு தூண்டுகின்றது. இது பாதிப்புக்கு உள்ளாகும் போது ஒருவர் தேவையின்றி அதிக உணவை உட்கொள்ளத் துவங்குகின்றார்.

சூழலியல் பாதிப்புகள் இத்தோடு நிற்கவில்லை. சிலவகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், தொழிற்சாலை இரசாயனங்கள் உள்ளிட்டவைகளும் நமது உடலின் அணுக்கள் ஆற்றலைக் கையாளும் (சேமித்தல் – செலவழித்தல்) முறைகள் மாற்றமடைந்ததற்கு காரணங்களாக இருக்கக் கூடுமென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படிக்க:
சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
தொப்பை வயிறு, சப்பை மூளை, குப்பை உணவு!

மிசௌரி பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் நடத்திய ஆராய்ச்சிகளின் படி, நாம் வீடுகளில் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களில் காணப்படும் பிஸ்ஃபெனோல்-A (bisphenol-A or BPA) என்கிற மூலக்கூறானது உயிரணுக்கள் கொழுப்பைக் கையாளும் விதத்தை பாதிப்பது தெரிய வந்துள்ளது. பேராசிரியர் ஃப்ரெட்ரிக் வோம் சால் தனது சோதனைகளை பரிசோதனைக் கூட எலிகளின் மேல் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதையடுத்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த லியனோர்டோ ட்ரான்சாண்டே, 2838 அமெரிக்க குழந்தைகளின் சிறுநீரைப் பரிசோதித்ததில் உடற்பருமன் இருப்பவர்களிடம் அதிக அளவு பிஸ்ஃபெனோல்-A இருப்பது தெரியவந்தது.

வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர்களின் சிறுநீரில் பிஸ்ஃபெனோல் இருப்பது தெரியவந்துள்ளது. என்றாலும், உடற்பருமனுக்கு பிஸ்ஃபெனோல் மட்டுமே ஒரே வில்லன் என்கிற முடிவுக்கு வருவதும் சரியாக இருக்காது. ஏனெனில், 2004-ம் ஆண்டு பிறந்த பத்து குழந்தைகளின் தொப்புள் கொடிகளை ஆராய்ச்சி செய்து பார்த்த போது அதில் சுமார் 287 வகையான தொழிற்சாலை இரசாயனக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பிரசவகாலத்தில் தாய்மார்கள் உட்கொண்ட உணவின் மூலம் குழந்தைகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியை பியேட்ரிஸ் கோலோம்ப் உடலின் ஆற்றல் செலவழிக்கும் முறையை பாதிப்புக்குள்ளாக்கும் இரசாயனங்கள் என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த இரசாயனங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், குளியல் சோப்பு போன்ற பொருட்களில் கலந்துள்ளன.

குழந்தைகள் கருவில் இருக்கும் போது மட்டுமல்ல, கருவுறும் போதே கூட ஆபத்தான இரசாயனங்களின் தாக்கங்களுக்கும் இன்னபிற சுற்றுச்சூழல் மற்றும் புறநிலைக் காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாக கூடும் என்பதை புரூஸ் புளூம்பெர்க், டேவிட் ஜே.பி பார்க்கர் உள்ளிட்ட பேராசிரியர்கள் நடத்திய தனித்தனி ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகின்றன. புறநிலை பாதிப்புகள் என்பவை தாய் உட்கொள்ளும் உணவின் மூலமாகவோ அல்லது அவளது மனநிலை பாதிப்புகளின் விளைவாகவோ கூட ஏற்பட முடியு என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறான பாதிப்புகள் பின்னர் அந்தக் குழந்தை வளரும் போது அதனுடைய உடலின் உயிரணுக்கள் கொழுப்பை செலவழிக்கும் முறைகளை மாற்றியமைக்கின்றன.

இவை தவிர சில வகை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களும் உடற்பருமனுக்கு காரணம் என்கின்றன வேறு சில ஆய்வுகள். கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் ஏடி-36 (Ad-36) என்கிற ஒரு வைரஸ், பரிசோதனைக் கூடங்களில் குரங்குகள் மற்றும் எலிகளின் மேல் சோதிக்கப்பட்ட போது அவைகளின் உடல் எடை அதிகரித்துள்ளது. அதே போல் அதீத உடற்பருமன் நோய் கொண்டவர்களின் இரத்தத்தை சோதித்த போதும் அதில் இதே வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உடல் எடை கூடுகின்றது என்பது இன்னும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. இன்னும், அதீத செயற்கை ஒளி, அதிகளவில் குளிரூட்டும் சாதனங்கள் பயன்படுத்துவது போன்றவைகளுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்குமான தொடர்புகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

♦ ♦ ♦

டல் எடை அதிகரிப்பிற்கு தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் மட்டுமின்றி ஏராளமான சமூக காரணங்களும் இருப்பதை மேலே உள்ள விவரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதுவரை உடல் எடை, ஆரோக்கியம் போன்றவை குறிப்பிட்ட தனிநபர்களின் வாழ்க்கைத் தெரிவுகளின் நேரடி விளைவு என்கிற கண்ணோட்டத்தை இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெருமளவிற்கு கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

மருத்துவ விஞ்ஞானம் உடற்பருமன் பிரச்சினைக்கு இன்னது மட்டுமே காரணம் என முடிந்த முடிவாக ஒரு பட்டியலை உறுதியாக ஒரே குரலில் ஏற்கவில்லை. அகநிலை மற்றும் புறநிலைக் காரணங்கள் இணைந்து ஒருவரின் உடல் எடையின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்கிற அளவுக்கு இந்த ஆராய்ச்சி முடிவுகளை நாம் புரிந்து கொள்ளலாம். அகநிலையான காரணங்களை நமது பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம். உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு, சரிவிகித சத்தான உணவு, சரியான ஓய்வு என்பவை ஒருவரின் தனிப்பட்ட தெரிவாக இருந்தாலும் இவற்றை சாத்தியப்படுத்தும் சமூகப் பொருளாதார சூழலை அடைவதற்கு புறநிலையோடு போராடித்தான் ஆக வேண்டும்.

முறைப்படுத்தப்பட்ட தொழில்கள் அனைத்தும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருபக்கம் மனரீதியான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். இன்னொருபுறம் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள ஆரோக்கியத்தைப் பணயம் வைத்து உழைக்க வேண்டியுள்ளது. எனில், உடற்பருமன் பிரச்சினைக்கு அகநிலையான தீர்வுகளை அமல்படுத்த வேண்டும் என்றாலே புறநிலையோடு மோதுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.

அதே போல் உடற்பருமனுக்கு கராணம் என புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள புறநிலையானவைகள் அனைத்துமே நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் துணை விளைவுகள். எனில், இவையனைத்தையும் துறந்து விட்டு காடுகளுக்கு ஓடி விடலாமா? அல்லது நம்மாழ்வார் போன்ற “வில்லேஜ் விஞ்ஞானிகள்” சொல்வது போல் உடல் முழுவதும் சாணியை அப்பிக் கொண்டு “காஸ்மிக் கதிர்களின் பாதிப்பை” எதிர்க்க முனையலாமா?

முதலில், இந்த முறையில் சிந்திப்பதே அடி முட்டாள்தனம். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொடர்ந்து வந்த தொழிற்புரட்சிகளும், அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் ஏராளம். உடற் பருமன் பிரச்சினை மட்டுமின்றி இன்னும் ஏராளமான புதிய நோய்கள் உருவான அதே காலகட்டத்தில்தான் அதற்கான தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சக்கரம் முன்னோக்கிச் சுழலுமே தவிர மீண்டும் ராம ராஜ்ஜியம் சாத்தியமில்லை. எனவே மாறிய சூழல் உருவாக்கியுள்ள சிக்கல்களை நவீன விஞ்ஞானத்தின் துணை கொண்டு எதிர்ப்பதும், மறுபுறம் சூழலியல் பாதிப்புகளைத் தவிர்த்த முன்னேற்றத்தை விஞ்ஞானப்பூர்வமாக சாதிப்பதுமே தீர்வு.

சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க