கேள்வி 1: இப்போது என் உறவினர் வருகிறார், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி முடித்து பின் ஸ்டெண்ட் வைக்கப்பட்டது. அவர்கள் கேட்கிறார்கள் இந்த ஸ்டென்ட்டின் ஆயுட்காலம் எவ்வளவு என்று.

விடை : ஆஞ்சியோ பிளாஸ்டி முடிந்தபின் அந்த ஸ்டென்டின் வேலையும் முடிந்து ஆயிற்று. அந்த ஸ்டென்டின் மீது மீண்டும் கொழுப்பானது வந்து அடைபட்டால் என்ன ஆகும்? அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். அதுவும் சிறிது காலத்திற்குள் வேலை செய்யாமல் போய்விடும். இந்த ஆஞ்சியோபிளாஸ்டியை அடைப்பை நீக்குவதற்குத்தான் செய்கிறோம்.

நீக்கிய பின் மேலும் அடைப்பானது வருமா என்பது நோயாளியின் உடலை பொருத்தே அமையும். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு என அடைப்பை ஏற்படுத்தக் கூடிய காரணி என்னவோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் மீண்டும் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. எந்த நோய் அடைப்பை ஏற்படுத்தும் காரணியாக விளங்கியதோ, அதை நாம் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருந்தால் மீண்டும் மாரடைப்பு  நேரிடும்.

இப்போது உங்களுக்கு மூன்று ஸ்டென்ட் வைத்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் மீண்டும் புகைப்பிடிப்பதையும் அல்லது நீரிழிவு நோய்க்கான காரணிகளையும் தொடர்கிறீர்கள் என்றால், மீண்டும் உங்களுக்கு அடைப்பு வரலாம். ஏற்கனவே வைக்கப்பட்ட ஸ்டெண்ட்டின் மேலேயும் வரலாம். எனவே, ஸ்டென்ட் எத்தனை நாள் வேலை செய்யும் என்ற கேள்வி அபத்தமான கேள்வி. உள்ளிருக்கும் அடைப்பை நீக்கிய உடன் ஸ்டென்ட்டின் வேலையானது முடிந்தது. இதற்குப் பிறகு அடைப்பு வருமா வராதா என்பது நம் உடலில் உள்ள நோயைப் பொறுத்தது.

கேள்வி 2: சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் அடுத்த பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் ஆனால், ஆஞ்சியோபிளாஸ்டி செய்தால் அவ்வாறு இல்லை என்றும் சிலபேர் கூறுகிறார்கள். இதற்கு நாம் என்ன விடை கூற வேண்டும்?

விடை : எனது நோயாளிகளில் சிலர் ஆஞ்சியோ பிளாஸ்டியும், மேற்கொண்டுள்ளனர் பைபாஸ் சர்ஜரியும் மேற்கொண்டுள்ளனர். பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள் மருத்துவர்களின் அறிவுரையை முறையாக பின்தொடராமல் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு வந்துள்ளார். அவர்களுக்கு நாங்கள் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி செய்துள்ளோம். அதேபோல் ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்ட நோயாளிகளும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வந்து பைபாஸ் சர்ஜரியும் செய்துள்ளனர்.

ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறோம் என்றால், சில பேர் பைபாஸ் சர்ஜரி செய்தால் பத்து வருடத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று மேம்போக்காகக் கூறுகின்றனர். அப்படி எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மருத்துவத்தைப் பொறுத்தவரை நாம் நம் உடலை எப்படி வைத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே உத்தரவாதம் கொடுக்க முடியுமேயன்றி, வேறுவழியில் ஏதும் கொடுக்க முடியாது.

ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொண்ட பின்பு எத்தனைக் காலம் மாத்திரை உண்ண வேண்டும் என்று கேட்கிறார்கள். நோயாளியின் தன்மைக்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். இருதயம் சீராக இயங்குவதற்கும், ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டதற்கும் மருந்துகளானது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு மாத்திரைகள் அதிகமாக இருக்கும், ஒரு வருடத்திற்கு பின்பு மாத்திரைகள் அளவில் குறைந்து விடும்.

நான் முன்னமே கூறியது போல, நம் உடம்பில் உள்ள நோயை கட்டுப்படுத்துவதற்கு தான் மாத்திரைகள் வழங்குகிறோம். நோய் வராமல் இருக்க நாம் மேற்கொண்டு முயற்சிக்க வேண்டும். இந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்ட பிறகு ஒரு வருடத்திற்கு மேல் சிறப்பாக இயங்குவார்கள். ஆனால், பிரச்சினை என்னவென்றால் மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். இதுதான் மிகவும் தவறு. உடலானது நன்றாகிவிட்டது என நாம் எண்ணக்கூடாது.

நோயை நாம் கட்டுப்படுத்திதான் வைத்துள்ளோம். அது மீண்டும் வராமல் இருக்க நாம் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.  முடிந்த அளவு நாம் பழைய நிலைமைக்குப் போகாமல் இருக்க வேண்டும். புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை அறவே ஒழிக்கவேண்டும். ஆனால், மற்றபடி நாம் ஓடலாம், ஆடலாம், பாடலாம் இயல்பாக இருந்து கொள்ளலாம்.

படிக்க :
♦ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த சிறுவனைத் தாக்கிய காவி குண்டர்கள் !
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

கேள்வி 3 : நிறைய பேர் கேட்கத் தயங்கும் கேள்வி. இயல்பாக இருக்கலாம் என்றால், மாரடைப்பு வந்த பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாமா என்பதுதான்?

விடை : ஒருவர் இரண்டு மாடி ஏற முடிகிறது என்றால் அவர் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், வயாகரா போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. காரணம் இருதய நோய் வந்து போனவர்களுக்கு,  நைட்ரைட் என்னும் மாத்திரை கொடுப்பார்கள்.  இதை உட்கொள்ளும் போது வயாகரா உட்கொள்ளக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. அப்படித் தேவைப்படும் பட்சத்தில் உங்களது மருத்துவரை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், முன்னமே நாம் கூறியது போல் ஒருவர் இரண்டு மாடி மூச்சு வாங்காமல் ஏறமுடிகிறது என்றால், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம்.

கேள்வி 4 : பல பேர் கூறுகிறார்கள் ஆண்களுக்குத்தான் அதிகமாக மாரடைப்பு வரும் என்று. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படாதா?, அப்படி ஏற்படுவதற்கு என்னென்ன காரணிகள் அவர்களுக்கு உண்டு.

விடை : பெண்களுக்கும் மாரடைப்பானது வரும். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடம்பில் நல்ல ஹார்மோன்கள் சுரக்கிறது. அது அவர்களை மாரடைப்பில் இருந்து பாதுகாக்கிறது.  அதை ஈஸ்ட்ரோஜன் என அழைப்பார்கள். எனவே ஒரு 45 அல்லது 50 வயதைத் தாண்டிவிட்டார்கள் என்றால். அவர்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் வந்து விடுகிறது.

எனவே அவர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் 35, 40 வயதிலேயே பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் நீரிழிவு நோய். நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றால், அந்த ஹார்மோன்களினால் ஏற்படக்கூடிய நன்மைகளை இது நீர்த்துப் போகச் செய்கிறது. நாம் என்ன மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 35 வயதில் ஒரு ஆணுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்றால். அவரை விட அதே 35 வயதில் உள்ள பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே சிறிய வயதில் நீரிழிவு நோய் வருகிறது என்றால். அதை நாம் கவனமாக கையாள வேண்டும். பெண்களின் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், பி.சி.ஓ.டி முதலியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்களைப் போலவே பெண்களும் இப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களுடைய வாழ்க்கைப் போக்கையே இவர்களும் தொடர்கிறார்கள். உடல் உழைப்பின்மை போன்றவற்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளில் இனியும் வேறுபாடு பெரிதாகக் காண  முடியாது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்க்கரையானது கூடி பின் குறைந்திருக்கும். அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகள் உண்டு. நாம் முன்னரே கூறியது போல் உணவு முறைகளை மாற்றி, மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து நோய்க்குத் தேவையான மருந்துகளை உட்கொண்டு, உடற்பயிற்சியோடு வாழ்ந்து வந்தால், நாம் மாரடைப்பை பெரிதும் தவிர்க்கலாம்.

கேள்வி 6 : பொதுவாக எழக்கூடிய கேள்வி, மாரடைப்பு வந்து சென்றபின், ஈ.சி.ஜி பரிசோதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும், கொலஸ்ட்ரால் பரிசோதனை எப்போது மேற்கொள்ள வேண்டும், எக்கோ எப்போது மேற்கொள்ள வேண்டும் ?

விடை : 6, 12, 18 மாதங்களுக்கு நாம் எக்கோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இ.சி.ஜி நாம் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். கொலஸ்ட்ரால் நாம் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதும். ஏனென்றால், நோயாளி மருந்துகளை உட்கொண்டு கொண்டிருப்பார். எனவே வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்தால் போதுமானது.

கேள்வி 7 : கீலேசன் தெரப்பி (Chelation Therapy), என்ற மருந்து ஊசியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எடுப்பதன் மூலம் பைபாஸ் சர்ஜரி செய்யாமலேயே கொழுப்புகளை கரைக்க முடியும் என நம்ப வைக்கப்படுகிறார்கள் நோயாளிகள். அப்படி ஊசிகள் மூலம் கொழுப்புகளைக் கரைக்க முடியுமா? அது தவறு எனில் எவ்வாறு என்பதை விளக்கவும்.

விடை : இதற்கு பதில் முடியாது என்பதே. அடைப்புகளில் சில பேருக்கு கொழுப்புகள்  படிந்திருக்கும். அதே சில பேருக்கு கொழுப்புகள் சேர்ந்து கால்சியமும் படிந்திருக்கும். இந்த கால்சியத்தை நம்மால் சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது.

இவர்கள் ஊசி மூலம் இந்தக் கால்சியத்தை கரைப்பதாக கூறுகிறார்கள் அல்லவா.  அது கொழுப்பின் மேல் படிந்திருக்கும் கால்சியம் அல்ல மாறாக ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தைத்தான் இவர்கள் ஊசி மூலம் வெளியேற்றுகிறார்கள். இது கொழுப்பையோ அல்லது கொழுப்புகள் மேல் படிந்துள்ள கால்சியத்தையோ எதையும் நீக்காது. மாறாக, ரத்தத்தில் கலந்துள்ள கால்சியத்தை வெளியேற்றும்.

எனவே 80 ஆயிரம், 90 ஆயிரம் என செலவழித்து, இந்த ஊசியையும் அல்லது சில மருந்துகளை உட்கொண்டு விட்டு நோயினால் திரும்பி வந்த நோயாளிகள்தான் அதிகம். இது ஒரு தவறான நம்பிக்கையை கொடுக்கிறது. நீங்கள் இந்த ஊசி செலுத்திய பிறகு எனது கொழுப்பு அடைப்பு நீங்கியது என யாராவது கூறி நேரில் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாக பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் நான் அந்த ஊசி செலுத்தும் மருத்துவர்களிடமே கேட்டு இருக்கிறேன். அப்படி யாராவது இருந்தால் அனுப்புங்கள் என்று. இன்றுவரை அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை.

அப்படி என்றால் இந்த ஊசி செலுத்துவது முற்றிலும் தவறா என்றால்? நாம் அப்படிக் கூறிவிட முடியாது. ஏனென்றால், ஒரு ஆய்வு கூறுகிறது இப்படி ஊசி செலுத்துவதனால் நோயாளிக்கு ஏற்படும் வலியானது குறைகிறது என்று. ஆனால் இதை வைத்துக் கொண்டு, நாம் நடைமுறையில் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை உட்கொண்டு குணப்படுத்தும் முறைக்கு நிகராக இதை நாம் பாவிக்கக் கூடாது.

அப்படி யாராவது இந்த ஊசியை செலுத்துங்கள் என கூறினால் அவர்களிடம் நாம் நேராக கேட்க வேண்டும். “எனக்கு உள்ள அடைப்பை ஊசி செலுத்துவதற்கு முன்பு பரிசோதித்துவிட்டு, ஊசி செலுத்திய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கழித்து நான் பரிசோதித்துப் பார்த்தால் அது நீங்கி இருக்குமா?” என்று வினவுங்கள். அவர் ஆமாம், நீங்கும் என்றால் நீங்கள் என்னிடம் வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனவே இதற்கு பதில் இதுதான். ஏனென்றால், விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையைத்தான் நாம் பின்பற்ற முடியும்.

படிக்க :
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ?

இதற்கு இணையாக மற்றுமொரு சிகிச்சை உள்ளது. ஈ.ஈ.சி.பி எனக் கூறுவார்கள். இது என்னவென்றால் நம் கையில் இரத்தக் கொதிப்பை பரிசோதிக்கக் கட்டப்படும் துணியால், காலையும், தொடையையும் இறுக்க கட்டிக்கொண்டு இரத்தக் கொதிப்பை ஏறவும், இறங்கவும் செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்கள் வலியானது குறையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. வயது முதிர்ந்தவர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரியும் இனி மேற்கொள்ள முடியாது என்றால், இதை நாம் பின்பற்றலாம்.  ஆனால் இதுவுமே கொழுப்பைக் கரைக்க உதவாது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  எனவே இவற்றை வைத்து கொழுப்பை நீக்கி விடுவேன் என யாரேனும் கூறினால் நம்ப வேண்டாம். ஆனால், ஈ.ஈ.சி.பி-யை வைத்து வலியை குறைத்து விடுவேன் என யாரேனும் கூறினால் பரிசோதித்து பார்க்கலாம்.

கேள்வி 8: நான் அனைத்து விதமான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டேன் எல்லாம் எனக்கு நார்மலாக உள்ளது. எனக்கு மாரடைப்பு வராது அல்லவா ?

விடை : எல்லாவிதமான பரிசோதனையிலும் நார்மலா வந்தது என்பது நல்ல விஷயம்தான். ஆனால், அது இன்றைய நிலைமை. இதை வைத்துக் கொண்டு நமக்கு மாரடைப்பானது ஏற்படாது என நம்மால் பிற்காலத்தை உறுதியாக சொல்ல முடியாது. எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதுதான். ரத்தக்கொதிப்பை நார்மலாக வைத்துக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள், நீரிழிவு நோயை கட்டுக்குள் வையுங்கள், புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

ஒருவர் டிரெட்மில் டெஸ்ட் எடுத்து இருந்து அதில் நார்மலாக காட்டியிருந்தாலும் ஒருவாரம் கழித்து அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உண்டு. நாம் முன்னர் கூறிய வீடியோவை போலத்தான் 30 சதவீதம் அடைப்புள்ளவருக்கு அந்த டெஸ்டில் நார்மலாகத்தான் காட்டும். அதுவே ஜவ்வு கிழிந்து இரத்தக் கட்டி போய் அடைத்தால் அது மாரடைப்பாக மாறும். எனவே நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது நம் வாழ்க்கை முறையை மாற்றுங்கள் என்பதுதான்.

இந்த மாரடைப்பு சம்பந்தமான இரண்டு வீடியோக்களும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம் நன்றி வணக்கம்.


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க