மருத்துவர் கண்ணன்ன்று நாம் பார்க்க இருப்பது மாரடைப்பைப் பற்றி. உலக அளவில் பெரும்பாலான மக்கள் என்ன காரணத்தால் இறக்கிறார்கள் ? உங்களுக்கு நான் 4 விடைகள் தருகிறேன். சிந்தித்துப் பதில் அளியுங்கள்.

  • முதலாவது சாலை விபத்து அல்லது வன்முறை சம்பந்தமான இறப்புகள்.
  • இரண்டாவது கேன்சர்.
  • மூன்றாவது இருதயம் சம்பந்தமான நோய்கள்.
  • நான்காவது நுரையீரல் மற்றும் கிட்னி சம்பந்தமான நோய்கள்.

உங்களில் அதிகம் பேர் நினைக்கக் கூடியது சரியே. இருதயம் சம்பந்தமான நோய்கள் தான் சரியான விடை, அதிலும் குறிப்பாக மாரடைப்பு.

இது பெரும்பாலும் தடுக்கக் கூடியது. மாரடைப்பு, என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். உடலில் எந்த பாகமும் உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்றால் அதற்கு போதுமான ரத்தம் தேவை.

உதாரணத்திற்கு உங்கள் கையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இறுக்க மூடி மணிக்கட்டில் இன்னொரு கையை வைத்து அழுத்துங்கள். இப்படி செய்யும்போது அந்த விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் தேவையான ரத்தம் செல்லாது. இப்போது மூடிய அந்தக் கையை விரித்து பார்ப்போமானால் அது வெளிறிப் போய் இருக்கும்.

நீங்கள் அவ்வாறே இறுக்கிப் பிடித்தது போல் இரண்டு நிமிடம் இருந்தீர்களானால், உங்களால் கையை அசைக்க முடியாது. அதுவே ஒரு மணி நேரம் கழித்து பார்த்தீர்கள் என்றால் உங்கள் கைகளில் நீலம் படர்ந்திருக்கும். அதுவே ஒன்றரை மணி நேரம் கழித்து பார்ப்போமானால், உங்கள் கைகளில் உள்ள ஒவ்வொரு செல்களும் இறந்திருக்கும். அவ்வாறு செல்கள் இறக்கும் முன் நீங்கள் இறுகப் பற்றி இருந்த கையை விட்டீர்கள் என்றால் உங்கள் உள்ளங்கைகளுக்குள் மீண்டும் ரத்தம் ஓட ஆரம்பித்துவிடும், கையானது சிவப்பு வண்ணத்திற்கு மீண்டும் மாறி உயிர் பிழைத்து விடும்.

உடம்பில் உள்ள அனைத்துப் பாகங்களும் ரத்தத்தினால்தான் உயிர் வாழ்கின்றன. ரத்தம் இல்லை என்றால் அந்தப் பாகத்திற்கு உயிர் இருக்காது. உடல் முழுவதும் ரத்தத்தை அனுப்புவது இதயம்தான். ஆனால் இதய தசைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அந்த இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வதற்காகவே சில ரத்தக்குழாய்கள் இருக்கிறது. நரம்பு என்பதன் பொருள் நரம்பு மண்டலம். எனவே நாம் அந்த வார்த்தையை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ரத்தம் கொண்டு வரும் ரத்தக் குழாய்களை நாம் தமனி எனக் கூறுவோம். இந்த தமனி என்ற ரத்தக் குழாய்தான் உடல் முழுக்க ரத்தத்தைக் கொண்டு செல்கிறது. இந்த இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுவரும் தமனி அடைபடுவதால் உண்டாவதுதான் ஹார்ட் அட்டாக். அதாவது மாரடைப்பு.

படிக்க :
♦ பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ அமெரிக்கா : குண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் !

இருதயம் துடிக்கும்போது, இருதயத்தின் மேல் உள்ள அந்த மகா தமனி மூலமாய் ரத்தம் உடல் முழுக்க பாய்கிறது. இந்த மகா தமனியில் இருந்தே இரண்டு குழாய்கள் இருதயத்துக்கு வருகிறது. ஒன்று வலது பக்கத்திலும் மற்றொன்று இடது பக்கத்திலும் வருகிறது. இடது பக்கத்தில் வரும் அந்த ரத்த குழாய் இரண்டாகப் பிரிகிறது ஒன்று முன்புறமும், மற்றொன்று பின்புறமும் வருகிறது. இந்த மூன்றும்தான் இதயத்துக்கு ரத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது இந்த ரத்தக்குழாயின் இறுதி பாகம் பாதிக்கப்பட்டால், அந்த ரத்தக்குழாயைச் சுற்றியுள்ள பாகங்களுக்கு ரத்தம் பரவாது. அதனால் அந்தத் தசைகள் பாதிக்கப்படும். இதுவே ரத்தக்குழாய் நடுவில் பாதிக்கப்பட்டால் அந்த ரத்தக்குழாயை சுற்றி உள்ள பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்படும். இதுவே அந்த ரத்தக்குழாய் தொடக்கத்திலேயே அடைபடுமானால், அந்த ரத்தக்குழாயை சுற்றியுள்ள முழுமைமான தசைகளும் பாதிக்கப்படும். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ரத்தக்குழாய் அடைப்பு இடத்தைப் பொறுத்து இந்த பாதிப்பானது மாறுபடும்.

ஒரு தமனியின் இறுதியில் அடைப்பு ஏற்படுமானால் அப்போது பாதிப்பு குறைவாக இருக்கும் அதுவே ஆரம்பத்தில் அடைபடுமானால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இன்னும் சில பேருக்கு இந்த இந்த தமனிகளை சுற்றியுள்ள அதன் கிளைகளில் அடைப்பு ஏற்படும். அப்படி கிளைகளில் அடைப்பு ஏற்படும்போது அந்த கிளைகளை சுற்றியுள்ள தசைகள் மட்டுமே பாதிக்கப்படும். எந்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது அந்தக் குழாய் எந்த அளவிலான தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்துதான் நாம் சிறிய அளவிலான அடைப்பு அல்லது பெரிய அளவிலான மாரடைப்பு என்று கூறுகிறோம். அதுவும் முழுவதுமாக சரி கிடையாது, அதை நாம் பின்னர் பார்ப்போம்.

ரத்தக்குழாயின் இறுதி இடங்களில், அடைப்பு இருந்தால் ஒருவர் எளிதில் பிழைத்துக் கொள்வார். ஆனால், அந்தத் தசைகள் மட்டும் செயலிழந்து போகும். அவருக்கு அதிக வலியைக் கொடுக்கும். அதுவே நாம் மாற்று மருந்து கொடுக்கும்போது அவர் உடல் நலம் தேறி விடுவார். இதுவே ரத்தக்குழாயின் ஆரம்ப இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்குமாயின், அவர் இறக்கும் வாய்ப்பு அதிகம். பெரிய அளவிலான தசைகள் பாதிக்கப்பட்டதால், அவர் வாழ்நாள் முழுக்க மாத்திரை மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும்.

எனவே நாம் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது, அது எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதை பொறுத்து மாரடைப்பின் தன்மையானது மாறுபடும்.

இப்போது நாம் மூன்று நபர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதல் நபருக்கு ஏற்கனவே ரத்த குழாயில் 30% அடைப்பு உள்ளது. இரண்டாம் நபருக்கு 70% அடைப்பு உள்ளது. மூன்றாம் நபருக்கு 90% அடைப்பு உள்ளது என வைத்துக் கொள்வோம்.

நாம் முதலில் எடுத்துக் கொண்ட 30% அடைப்புள்ள நபருக்கு எந்த விதமான பாதிப்பும் தென்படாது. அவர் இயல்பான மனிதரைப் போல் ஓடி, ஆடி தனது அன்றாடப் பணிகளை செய்த வண்ணம் இருப்பார்.

இதுவே 70% அடைப்பு உடைய நபர் மாடிப்படி ஏறும்போது அல்லது கடினமான வேலைகள் செய்யும் போது, அவருக்கு சிறிது களைப்பு ஏற்படும். ஆனால், சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு திரும்பி அவர் தன் பணிகளைத் தொடர்வார். எனவே இவரது அன்றாடப் பணிகளிலும் பெரிய அளவிலான மாறுபாடுகள் எதுவும் தென்படாது.

90% அடைப்புள்ள நபருக்கும் மாறுபாடுகள் தென்படும். ஆனாலும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்து அல்லது அதைப் பொருட்படுத்தாது தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டவாறு இருப்பார். இதற்குக் காரணம் இந்த மூன்று நபர்களுக்கும் ரத்த ஓட்டம் அடைபடாமல் பாய்ந்து கொண்டுதான் உள்ளது.

ரத்த ஓட்டம் தடைபடாமல் உள்ளதால், எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நாம் ECG மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தோமேயானால், அதில் எந்தவித குறைபாடும் தென்படாது. ஒரு விதமான ஜவ்வு இருக்கும். அதுதான் ரத்தத்தையும் அடைப்பையும் பிரிக்கிறது. இந்த ஜவ்வில் ஏதேனும் விரிசல் அல்லது கிழிசல் ஏற்படுமாயின் ரத்தமானது அதில் படரப்பார்க்கும்.

உதாரணத்திற்கு, நமது கையில் அடிபட்ட இடத்தில் ரத்தம் கசிகிறது என்றால், நாம் கையை வைத்து அந்த ரத்தத்தை அடைக்கப் பார்ப்போம். அவ்வாறு கையை வைத்து மூடும்போது ஏன் ரத்தம் வருவது நிற்கிறது என்றால், நமது உடலில் எப்போதெல்லாம் இவ்வாறு ஜவ்வு அல்லது சதைகள் பாதிப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அந்த இடங்களில் ரத்தமானது சிறிய சிறிய இரத்த கட்டிகளாக மாறி படர்ந்து நிற்கும் இவ்வாறு நிற்கும்போது ரத்தமானது வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இதுதான் இயற்கை.

இதேபோல் நமது ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பின் மீதும் படர்ந்துள்ள ஜவ்வானது கிழியும் போது, அதில் நமது ரத்தமானது படர்ந்து அந்தக் கிழிஞ்சல்களை அடைக்க பார்க்கும். இவ்வாறு ரத்த கட்டியானது மேலும் படர்ந்து படர்ந்து முழு அடைப்பை உண்டாக்கிவிடும். எனவே நாம் முதலில் பார்த்த 30% மட்டுமே அடைப்புள்ள நபர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜவ்வானது கிழியும்போது ரத்தமானது படர்ந்து அடைப்பு ஏற்பட்டு முழு விதமான அடைப்புக்கு வழி செய்து, பெரிய அளவிலான மாரடைப்பின் விளைவுக்கு வந்து நிற்கிறார். இந்த வகையான பாதிப்பானது மூன்று நபர்களுக்கும் பொதுவான ஒன்று. அதேபோல் மாரடைப்பும் இந்த மூன்று நபர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

எனவே மாரடைப்பு ஏற்படும் முன்பு அவருக்கு 30, 60, 90 என எந்த சதவீதத்திலும் அடைப்பானது இருந்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் அவருக்கு மாரடைப்பு ஏற்படாது. எப்போது மாரடைப்பு ஏற்படும் என்றால், அது 100% எட்டும்போது தான்.

இதை எப்படித் தடுப்பது ? இந்த மூன்று நபர்களுக்கும் பொதுவான பாதிப்பு என்பது ரத்தக்கட்டிகள் ஏற்படுத்தியதுதான். இந்த ரத்தக் கட்டிகளை நாம் கரைத்து விட்டோமேயானால், இரத்தமானது இயல்பாகப் பாய ஆரம்பித்துவிடும். மறுபடியும் அவர்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள்.

ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. இந்த ரத்தக் கட்டிகள் ஆரம்பத்தில் உருவாகும்போது மிகவும் மெல்லியதாக இருக்கும். பின்னர் கடினமானதாக மாறும். அதுவே 3 மணி நேரம் கழித்துப் பார்ப்போமானால் மிகவும் கடினமானதாக மாறிவிடும். எனவே இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது, எவ்வளவு விரைவாக நாம் ரத்தக் கட்டிகளை கரைக்க மருந்துகளை உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவு விரைவாக இந்த ரத்தக் கட்டிகள் எளிதாகக் கரையும். இப்போது ஒரு நோயாளி ரத்தக்கட்டிகள் உருவாகிய ஒரு மணி நேரத்துக்குள் வருகிறார் என்றால், உடனடியாக அவருக்கு நாங்கள் சிகிச்சை அளிப்போம். அவர் அரை மணி நேரத்திற்குள் சரியாகி விடுவார்.

இதுவே அவர் இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வருகிறார் என்றால், இந்த ரத்தக் கட்டிகளை கரைக்க நாம் சிரமப்படவேண்டியிருக்கும். ஆகவேதான் வலி ஏற்படும்போது உடனடியாக நாம் வரவேண்டும் எனக் கூறுகிறோம். அதைப்பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.

இதற்குத் தேவையான மருந்தானது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் உண்டு. ஒரு பத்து அல்லது இருபது படுக்கையில் மட்டுமே கொண்ட தனியார் மருத்துவமனைகளிலும் கூட நாம் இந்த மருந்தைக் காண முடியும். எனவே நெஞ்சு வலியோடு வருபவர் மாரடைப்பு உள்ளதா என்று பார்க்க ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டு, இந்த ரத்தக் கட்டிகளைக் கரைக்க சரியான, முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மருந்துகளிலும் இரண்டு முதல் மூன்று வகையான மருந்துகள் உள்ளன. இந்த இரத்தக் கட்டிகளை கரைக்கும் மருந்தானது, 100 பேருக்கு செலுத்தினால் 50 முதல் 70 பேருக்குத்தான் இது சரியாக வேலை செய்யும். மீதி உள்ள நபர்களுக்கு நாம் மருந்தை செலுத்தி இருப்போம். ஆனால், இந்த ரத்த கட்டியானது அதில் கரையாமல் இருக்கும். அப்படி கரையாமல் இருக்கும் பொழுது, இருதயமானது சரியாக இயங்க வாய்ப்பில்லை. அந்த நபர்களுக்கு இவ்வாறு மருந்தை செலுத்தி சரியாகவில்லை என்று தெரிந்தபின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்வோம்.

படிக்க :
♦ மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு
♦ இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?

எனது துறையில் உள்ள மருத்துவர்கள், இத்தகைய ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்பு எனத் தெரிந்த பின் இன்ஜெக்சன் செலுத்தாமல், நேரடியாகத் அந்த ரத்தக் கட்டிகளை உறிந்து எடுத்து ரத்தம் மீண்டும் சரியாக இயங்க வழி அமைத்துக் கொடுத்து விடுவோம். உங்களுக்கு ஒரு நோயாளியை அறிமுகப்படுத்துகிறேன். ஒரு நோயாளி ரத்தக்கட்டு ஏற்பட்ட 4 மணி நேரம் கழித்து வந்தார். இவருடைய நாடித் துடிப்பானது 30 என கீழிறங்கியது. உள்ளே சென்று பார்த்தோமேயானால் வலது பக்கம் உள்ள தமனி முழுவதுமாக அடைபட்டிருந்தது. அங்கு இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்த பின் அவருடைய நாடித் துடிப்பானது 70 என அங்கேயே அதிகமானது. அவர் இயல்பான நிலைக்கு திரும்பி விட்டார்.

ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த பாதிப்பை சரி செய்யக் கூடிய அளவிலான மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனை அருகில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் இதை சரி செய்ய முடியும். எனவே நாம் செய்யவேண்டியதெல்லாம் இதற்கான மருந்தை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு சரிசெய்வதற்கு பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லலாம். ஆனால், உடனடியாக அந்த மருந்தை செலுத்த வேண்டியது அவசியம். இதுதான் மாரடைப்புக்கான வைத்தியம்.

இப்போது மாரடைப்பு என்றால் என்ன? அதற்கு உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொண்டோம். நான் உங்களை இன்னொரு கேள்வி கேட்கிறேன்.

மாரடைப்பு வந்தால் எத்தனை பேர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்கிறார்கள்? ஒரு நூறு பேருக்கு மாரடைப்பு வருகிறது என்றால், எத்தனை பேர் மருத்துவமனையை வந்தடைகிறார்கள் ? விடை வெறும் ஐந்து சதவீதம் பேர்தான். மீதி உள்ள 40 முதல் 50 சதவீதம் பேர் வழியிலேயே இறந்து விடுகிறார்கள். அல்லது வீட்டிலேயே இறந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.

நமது உடலில் இருதயமானது எந்த பக்கம் உள்ளது என்று கேட்டால். அதிகம் பேர் இடது பக்கம் தான் உள்ளது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நமது இதயத்திற்கு நேரே மூன்று கோடை போட்டால், அது மூன்று பாகங்களாக பிரிக்கும். இடப்பக்கம் சிறிது அளவு அதிகமாக இருக்குமே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. எனவே இருதயமானது எங்கு உள்ளது என்று கேட்டால், அது இடப்பக்கமும் அல்ல, வலப்பக்கமும் அல்ல… மாறாக, நடுவில் உள்ளது என நாம் கூற வேண்டும்.

இதையே நாம் இங்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றால் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் அதன் அறிகுறிகளாக நடுப்பக்கத்தில் தான் வலியை ஏற்படுத்தும். ஆனால் மக்கள் இதை வாய்வு என தவறாக புரிந்து கொள்கின்றன.

மாரடைப்புக்கு உண்டான அறிகுறிகள் எவ்வாறு எல்லாம் தென்படலாம்? அனைவரும் கூறுவது போல வலியாக தென்படுவது வெறும் 50 சதவீதம்தான். பல பேருக்கு ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு இருக்கும். அதை வெளிப்படுத்த இயலாது. இன்னும் நிறைய பேருக்கு அந்த இடத்தில் அமுக்குவது போலவும், பிசைவது போலவும் இருக்கும். சில பேருக்கு வெறும் வாந்தி வரும் உணர்வாகத்தான் இருக்கும். சில பேருக்கு இதுவும் இருக்காது. உடலில் வியர்வை மட்டும் அதிகமாக வரும். இப்படி பல அறிகுறிகள் இருப்பதால் இப்படி வந்தால்தான் மாரடைப்பு என நாம் குறிப்பிட்டு கூற இயலாது. இந்த மாதிரி அறிகுறிகள் எங்கெல்லாம் தென்படலாம் என்றால். தாடைக்கு கீழும், வயிற்றுப் பகுதிக்கு மேலும் முன் அல்லது பின் எங்கேனும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்புக்கானதாக இருக்கலாம்.

இப்படிக் கூறுவதால் பலபேருக்கு பல இடங்களில் வலியானது உண்டாகிக் கொண்டுதான் இருக்கும். அதுவெல்லாம் மாரடைப்புக்கான அறிகுறிதானா? என கேள்வி எழலாம். இதற்கு விடை இல்லை. காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என்றால் வலியானது குறைந்தது 15 அல்லது 20 நிமிடம் நம்மை வாட்டி எடுக்கும். இவ்வாறு இல்லாமல் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடத்தில் வலியானது வந்து செல்கிறது என்றால், அது மாரடைப்புக்கானதாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் நாம் மேற்கூறிய இடங்களில் வலி ஏற்பட்டால் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. யாருக்கெல்லாம் மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதோ, அவர்கள்தான் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு ஒருவர் புகை பிடிக்கிறார் என்றால், அவருக்கு நெஞ்சுக்கரிப்பு அதிக நேரம் ஒரு 40 நிமிடம் உள்ளது என்றால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அதை அவர் எளிதில் கடந்து போக இயலாது. எனது நண்பர் ஒருவர் ஓடும் போதும் அல்லது நடை பயணம் மேற்கொள்ளும்போதும் சிறிது ஏப்பம் வரும். ஒரு ஐந்து பத்து நிமிடம் உட்கார்ந்தால் சரியாகிவிடும் என கூறினார். நான் அவரை ஒரு ஈஸிஜி(பரிசோதனை) எடுக்க சொன்னேன். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே சில நேரம் இவ்வாறு ஏப்பம் வருவது கூட மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் அல்லது மாரடைப்புக்கான முன்னறிவிப்பாகவும் இருக்கலாம்.

ஏன் மாரடைப்பு வரும்போது 50 % பேர்தான் மருத்துவமனைக்கு வந்து சேர்கின்றனர்? இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. நாம் முன்னர் கூறியது போல கையை இறுகப் பற்றிக் கொள்ளும் போது கையானது ரத்த ஓட்டம் இல்லாமல் மஞ்சள் நிறத்தில் மாறுகிறது. அதேபோல் இருதயத்தில் நாம் முன்னர் விளக்கியது போல பெரும்பகுதியான தசைகள் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் போது உடனடியாக மரணம் சம்பவிக்கும். இருதயத்தின் தசைகள் பலவீனம் ஆகிய உடன் இந்த நிகழ்வானது நிகழும். நாங்கள் அதை வீ.டி.வி.எஃப் என கூறுவோம். இதுவே மைனர் அட்டாக். அதாவது சிறிய அளவிலான மாரடைப்பு.

நாம் மேலே விளக்கியது போல சிறிய அளவிலான தசைகள்தான் இருதயத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதயமானது சீராக இயங்காமல் வேகமாகத் துடித்து இரத்த ஓட்டத்தை கீழேயும் மேலேயும் செல்ல விடாமல் செய்து விடும். இதனாலும் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு ஒரு காரணம். மாரடைப்பானது நிகழ்ந்து வீட்டிலேயே மரணிப்பது. இரண்டாவது காரணம் மாரடைப்புக்கான அறிகுறி என உணராமல், அதை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பின் இறுதிக் கட்ட நிலையில் மருத்துவமனையை வந்து சேர்வது அல்லது வராமல் பாதியிலேயே மரணிப்பது.

அதிக பேர் கசாயம் குடிப்பது அல்லது உஷ்ணம் எனக் காரணம் காட்டி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடிப்பது, என மருத்துவமனைக்கு வராமல் காலத்தை கடத்துகின்றனர். இதற்காகத்தான் இந்தப் பதிவில் நாம் சுட்டிக்காட்டுகிறோம். இருதயமானது நடுவில் உள்ளது. இடப்பக்கமும் வலப்பக்கமும் அல்ல. மாரடைப்புக்கான அறிகுறி என்றால் அது நடுவில் ஏற்படும். அப்படியினில் எல்லோரும் பயந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில்.

மாரடைப்பானது அனைவருக்கும் வரும்தான். ஆனால், எல்லோருக்கும் வரும் எனக் கூற முடியாது. மாரடைப்பானது யாருக்கெல்லாம் வரும் என நாம் ஒரு லிஸ்ட் போடுவோமா?

  • முதலில் பீடி அல்லது சிகரெட் புகைப்பவர்களுக்கு. இதில் புகையிலையை வாயில் வைத்து மெல்பவர்கள் அல்லது வேறு விதமாக பயன்படுத்துபவர்கள் எல்லோரும் அடக்கம்.
  • இரண்டாவது, சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
  • மூன்றாவது, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்.
  • நான்காவது, அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்.
  • அடுத்தது, வீட்டில் ரத்த உறவுகள் அண்ணன், தம்பி, அப்பா அல்லது தாய் யாருக்கேனும் மாரடைப்பு வந்தது என்றால் அது நமக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • அடுத்தது உடல் பருமன் அதிகம் உள்ள நண்பர்களும், அடிக்கடி டென்சன் ஆகும் நபர்களுக்கும், உடல் உழைப்பு மிகவும் குறைவாக உள்ள நபர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உள்ளது.

நாம் மேலே கூறிய காரணங்களைத் தகர்த்தால், அதாவது சர்க்கரை நோயாளி என்றால் சரியான உணவுமுறை எடுத்துக்கொள்வது, நடை பயணம் செல்வது; அதேபோல், உடல் உழைப்பு இல்லாதவர்கள் என்றால் உடல் உழைப்பில் ஈடுபடுவது, அதிக நேரம் ஒரே இடத்தில் இருப்பதைத் தவிர்ப்பது போன்ற காரணங்களால் நாம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம்.

மேலும், நாம் சிரமம் ஏற்படாமல் இருக்க, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஒரு ஈசிஜி அதாவது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நாம் மருத்துவமனைக்குச் சென்றால், அவர்கள் ஈசிஜி பிறகு பிளட் டெஸ்ட் ஏதேனும் எடுப்பார்கள். அதனால் நமக்கு சிறிது செலவு ஏற்படத்தான் செய்யும். இந்தச் செலவுக்கு பயந்து, நாம் வீட்டிலேயே இருந்தோமானால், அது நம் உயிருக்கான விலையைத் தந்துவிடும். எனவே நாம் செய்ய வேண்டியது இரண்டுதான். மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் நம்மிடம் இருக்கும் என்றால் அந்த காரணங்களைக் கலைவது.

இரண்டாவது, ஏதேனும் சிறிய அறிகுறி தென்பட்டாலும், நாம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, அதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வது. நாம் இந்த விஷயத்தில் மிகவும் ரிஸ்க் எடுப்பது சரியானதல்ல. இந்த சிறிய வீடியோவில் மாரடைப்புக்கான அனைத்து விஷயங்களையும் நாம் உள்ளடக்குவது எளிதானதல்ல. மக்களிடம் மாரடைப்பு சம்பந்தமான எழும் கேள்விகளுக்கு அடுத்த காணொளியில் விரிவாக விடையளிக்கிறோம்.. நன்றி.

மருத்துவர் கண்ணன்

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க