அல்சர் மற்றும் கேஸ் பிரச்சினை என்றால் என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம்மில் பலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலி ஆகியவற்றுக்கு காரணம், அல்சர் அல்லது கேஸ் பிரச்சினை எனக் கூறுகிறோம். அதைப் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.

ணக்கம், நான் இப்போது உங்களுக்கு ஒரு சவால் விடப் போகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தார் அல்லது உறவினர் யாருடனேனும், இரண்டு நிமிடங்கள் பேசுங்கள் அதில் ஆங்கில வார்த்தையே வரக்கூடாது. நிச்சயமாக அவர்களால் அப்படி ஆங்கில வார்த்தையே கலக்காமல் பேச முடியாது. “நான் தமிழ் பற்றுள்ளவன் தமிழன்” என வெளியில் கூறிக் கொள்கிறோமே ஒழிய, நாம் தமிழை சரியாக பேசுவதேயில்லை.  என்னடா, அறிவியல் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் இப்படி தமிழைப் பற்றிப் பேசுகிறாரே என எண்ணுகிறீர்களா?

அல்சர் மற்றும் கேஸ் ஆகிய வார்த்தைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, இது இரண்டும் ஆங்கில சொற்கள். இந்த இரண்டு சொற்களும் பலபேர் வாழ்க்கையில் அதீதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய ஒரு காணொளிதான் இது.

நான்கு நாட்களுக்கு முன்பு, ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி என்னிடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொண்டிருக்கும்போது, சார் எனக்கு அதிகம் மருந்துகள் கொடுக்காதீர்கள். எனக்கு வயிற்றுப் புண் அதாவது அல்சர் உள்ளது எனக் கூறினார்.

நான் அவரை நோக்கி அப்படியா? உங்களுக்கு என்ன செய்கிறது எனக் கேட்டேன், அதற்கு அவர் எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கும் எனக் கூறினார். அப்படியென்றால், நீங்கள் ‘எனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்றுதானே கூற வேண்டும். ஏன், அல்சர் என கூறுகிறீர்கள் என வினவினேன். அதற்கு அவர் ‘எரிச்சலாகவும், அடிக்கடி ஏப்பம் வருவது போலவும் இருந்தால் அது அல்சராக இருக்கலாம்’ என, எனது மருத்துவர் கூறியுள்ளார் என்றார்.

உங்களது மருத்துவர், அது அல்சர் ஆக இருக்கலாம் என்றுதானே கூறி உள்ளார். அல்சர்தான் என நீங்கள் எப்படி உறுதியாக கூறினீர்கள், என நான் மறுபடியும் அவரைக் கேட்டேன்.

உங்களுக்கு உங்களது வாய் வழியாக டியூபை செலுத்தி பரிசோதிக்கப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என கேட்டேன்.

அதற்கு அவர் இல்லை எனக் கூறினார்.

அப்படி பரிசோதித்துப் பார்த்தால்தான் உண்மையில் அல்சர் உள்ளதா, இல்லையா என தெரிய வரும். பரிசோதிக்காமலேயே எப்படி உங்களுக்கு அல்சர் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள், எனக் கேள்வி எழுப்பிய பின்னர்தான் அவர் தெளிவடைந்தார்.

உண்மையில் எனக்கு கேஸ் பிரச்சினை உள்ளது, அல்சர் பிரச்சினை உள்ளது, வயிற்று வலி உள்ளது என பல பேர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. அவர்களை எண்டோஸ்கோபி செய்து பார்த்தால் உண்மையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் தென்படாது. அவர்களது வயிற்றில் சுரக்கும் அமிலமும் இயல்பாகத்தான் இருக்கும், அவர்களுக்கு அல்சர் பிரச்சினையும் இருக்காது. இதன் பொருள் இல்லாத ஒரு நோய் தனக்கு இருப்பதாக பலபேர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

பலபேர் தனக்கு அல்சர் இருப்பதை பெருமையாகவும், பரம்பரை சொத்து போலவும் வெளியில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மை கிடையாது, இப்படி ஒரு நோயும் கிடையாது. இதை நாங்கள் ஆங்கிலத்தில் functional dyspepsia எனக் கூறுவோம். இதன் பொருள் வயிற்றில் ஏப்பம் வருவது போலவும், வயிறு வலிப்பது போலவும் நமக்குத் தென்படும். இது ஒரு விதமான மன நோய். நமக்கு இந்த பிரச்சினை இருக்கிறது, என நாம் திரும்பத் திரும்ப எண்ணுவதாலேயே, இந்த பிரச்சினை நமக்கு நீடிக்கிறது. இந்த அசிடிட்டி பிரச்சினை மனநோய் என்பதை நாம் உணர்ந்து கொண்டோமேயானால், நாம் மாத்திரைகள் சாப்பிடாமலேயே இருக்கலாம்.

உண்மையிலேயே ஒருவருக்கு அல்சர் இருக்கிறது, அவருக்கு எத்தனை நாட்கள் மருத்துவம் தேவைப்படும் என்றால்? குறைந்தது நான்கு வாரம், அதிகபட்சம் ஒரு ஐந்து, ஆறு வாரங்கள் தேவைப்படும். அல்சர் என்பதன் பொருள் குடல்புண் அல்லவா? ஒருவருக்கு கை அல்லது கால்களில் புண் ஏற்படுகிறது என்றால், அது எத்தனை நாட்களில் சரியாகும்? குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அதிகபட்சம் ஒரு மாதம். ஆனால், எப்படியும் அது சரியாகிவிடும்தானே. ஐந்து வருடமாக இந்த புண் இருக்கிறது என யாரேனும் கூறி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிடையாதல்லவா.

படிக்க :
♦ உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்

அதே போல்தான் நம் குடலிலும் புண்ணானது ஏற்பட்டால், அது சரியாகித்தான் தீரும் என்பதே இயற்கையின் விதி, குணமாகாத புண் என ஒன்று கிடையாது. உங்களில் பலபேர் பல வருடங்களாக, அசிடிட்டி மாத்திரை எடுத்துக்கொண்டுதான் வருகிறீர்கள் அல்லவா? ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? அசிடிட்டி அல்லது அல்சர் என்பது பிறவி நோயா? இல்லை அல்லவா. போன வருடம் எனக்கு அல்சர் இருந்தது. இரண்டு மாதங்கள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். குணமாகி விட்டது என்றால், அது சரியான வாதம்.

இதற்கு மாறாக அதை பிறவிநோய் போல் எண்ணுவது தவறு. ஒருவருக்கு அல்சர் என்றால் அதற்கான மருத்துவம் சிலருக்கு ஒருவாரம் தேவைப்படும், இன்னும் சிலருக்கு இரண்டு வாரங்கள் அதிகபட்சம் நான்கு மாதங்களைத் தாண்டி தேவைப்படாது.

ஆனால், உங்களில் பலபேர் பல வருடங்களாக இந்த மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் அல்லவா? இது ஒரு மன நோயாக மாறி, நீங்கள் அதைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்றால் அல்சர், அதிகப்படியான பொதுவான நோய் கிடையாதா எனக் கேட்டால் கிடையாது.

நான் ஒரு இருதய நோய் மருத்துவர். எனது நோயாளிகளுக்கு நான் தேவையான மருந்து, மாத்திரைகளை எழுதுவேன். ஆனால், பல மருத்துவர்கள் மருந்து மாத்திரைகள் எழுதும்போது, இந்த அசிடிட்டி மாத்திரையும் சேர்த்து எழுதுகிறார்கள். அது தவறு, இது தேவையான ஒன்றே கிடையாது. மிகவும் குறைவான நபர்களுக்குதான், இந்த மாத்திரைகள் உண்டால் அசிடிட்டி ஏற்படும். என்னுடைய நோயாளிகளின்  மருந்து சீட்டுகளை வாங்கி பார்த்தீர்களென்றால், பல பேருடைய சீட்டுகளில் இந்த ஆசிடிட்டி மாத்திரைகள் இருக்காது. அப்படியும் சில பேர் அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டு வந்தார்கள் என்றால்.? அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு மாத்திரைகள் எழுதித் தருவேன். அது ஏற்படாமலிருக்க மாத்திரைகளை நான் ஒருபோதும் நிரந்தரமாக பரிந்துரைக்க மாட்டேன்.

சரி இந்த மாத்திரைகள் சாப்பிடுவது தேவையற்றது என்றாலும், அதை நான் உட்கொண்டு கொள்கிறேன். இதனால் என்ன பாதிப்பு வந்துவிடப் போகிறது என நீங்கள் கேட்டீர்கள் என்றால், அது தவறு.

இந்த மாத்திரைகளினால் பாதிப்பு உண்டா? என்றால் உண்டு. நம் உடலில் தாதுப்பொருட்களையும், வைட்டமின்களையும் உள்ளிழுக்கும் தன்மையை இந்த அசிடிட்டி மாத்திரைகள் குறைக்கிறது. இதனால் பல பேருக்கு எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள் பல பேருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கு காரணம், அவர்கள் பல வருடங்களாக இந்த அசிடிட்டி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டதுதான். அடுத்ததாக இந்த மாத்திரைகள் உட்கொள்வதால் பல பேருக்கு நெஞ்சில் சளி பிடிக்கிறது. நிமோனியா என நாம் கூறுவோம். இன்னும் பெரிய தீங்கு என்னவென்றால் இதனால் நமது கிட்னியும் பாதிப்படைகிறது, உப்புச் சத்தை அதிகமாக ஏற்படுத்தி, நமது கிட்னி பாதிப்படையச் செய்கிறது.

இப்படி பிரச்சினைகள் இருக்கும்போது, இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவது என்பது நல்ல வழிமுறை கிடையாது. தேவைப்பட்டால் உட்கொள்ள வேண்டும். குணமடைந்தவுடன் குறிப்பிட்ட காலவரைக்குள், அதை நாம் நிறுத்தவும் வேண்டும். ஆனால், பலபேர் மனரீதியாக இந்த மாத்திரையை நிறுத்தினால், எனக்கு அசிடிட்டி ஏற்படும் என நம்புகிறீர்கள். இப்படி நம்புவது மனநோய் என்பதைத்தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். சரி இது அல்சர் இல்லை, அசிடிட்டி இல்லை எனில், படுத்தால் அடிக்கடி ஏப்பம் வருவதும், நெஞ்சு எரிச்சலாக இருப்பதும் எதனால் ?

அதற்கான விடையை இப்போது பார்ப்போம். உணவுக்குழாய் வழியாக செல்கிறோம் உணவு இரைப்பையில் தங்கி சிறிது சிறிதாக  குடலுக்குள் தள்ளப்படும். இரைப்பையில் தான் அமிலம் இருக்கிறது, சுரக்கிறது இரைப்பையில் அமிலம் இருக்கிறது என்பது உண்மை. எனக்கு அமிலம் அதிகமாக சுரக்கிறது என்பது உண்மை கிடையாது. மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டோர்க்கு தான் இவ்வாறு சுரக்கும். உணவானது உணவுக் குழாய் வழியாக, இரைப்பையை நோக்கித்தான் வரும் ஆனால் கீழிருந்து மேல் ஏறாது. உணவுக் குழாய்க்கும், இரைப்பைக்கும் நடுவில் வால்வு போன்ற ஒரு செயல்பாடு இருக்கும். நாம் தலைகீழாக நின்றாலும், உணவானது இரைப்பையிலிருந்து மேல் சென்று மீண்டும் இரைப்பைக்கு வந்து தங்கிவிடும்.

நான் மேலே குறிப்பிட்ட அந்த வால்வு செயல்பாடு சரியாக இல்லை என்றால். இரைப்பையில் சுரக்கும் அமிலம் ஆனது, உணவுக் குழாய்க்கு மேலெழும்பி, நமக்கு நெஞ்சில் ஒரு வகையான எரிச்சலை ஏற்படுத்தும். இதனால்தான் ஒருவருக்கு அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்றும் கூறலாம். இந்த உணவுக் குழாய், இருதயத்துக்கு பின்னால் உள்ளது. இருதயம் பாதிப்பு அடைந்தால் வரும் எரிச்சலும், இந்த உணவுக் குழாயில் ஏற்படும் எரிச்சலும் ஒரே மாதிரியாக இருக்கும். இது இருதய பாதிப்பினாலும் வரலாம் என மக்கள் எண்ணுவதே இல்லை. எனக்கு அசிடிட்டி உள்ளது கேஸ் பிரச்சினை உள்ளது என்றுதான் பல பேரும் எண்ணிக் கொள்கிறார்கள். இதை உணராத பட்சம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்றாக இது போய் முடியும்.

இயல்பான நெஞ்செரிச்சலை, நாம் ஜி.இ.ஆர்.டி என அழைப்போம். இதன் பொருள் நமது வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் எழுவதனால் ஏற்படும் எரிச்சல் எனலாம். அல்சரை விட, இதுதான் மிகவும் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சினை. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நமக்குத் தெரிந்ததுதான்.

முதலாவதாக, நாம் வயிறு முட்ட சாப்பிடுகிறோம் என்றால் இரைப்பை நிரம்பி அமிலம் மேலே வரும். எனவே அரைவயிறு உண்ண வேண்டும். இரண்டாவதாக, நாம் முன்பு கூறியது போல இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் இருக்கக் கூடிய வால்வின் செயல்பாடை தடுப்பது, புகைப்பிடிக்கும் பழக்கம்தான். எனவே புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக,  மதுப் பழக்கமும் இந்த வேல்வின் செயல்பாட்டைத் தடுக்கும், அமிலத்தையும் அதிகமாக சுரக்கச் செய்யும். அதேபோல் உணவு உண்டவுடன் உடனே படுக்க கூடாது, நம் படுப்பதினால் அந்த வேல்வின் செயல்பாடு குறைவாக இருந்தால் அமிலம்  மேலே வரும். எனவே உணவு உண்ட உடன் குறைந்தது ஒரு மணி நேரம் நேராக உட்கார வேண்டும்.

எந்த மாதிரியான உணவு உட்கொண்டால், இந்த அசிடிட்டி பிரச்சினை அதிகமாகிறது அல்லது குறைகிறது என்பதை நாமே, நம் அனுபவத்தின் மூலம் யூகிக்க முடியும்.   ஆனால், முக்கியமானது என்னவென்றால் அரிசி அதாவது கார்போஹைட்ரேட்டை நாம் தவிர்க்க வேண்டும். நாம் மூன்று வேளையும் அரிசியே உட்கொண்டு வருகிறோம். இந்த அரிசி அசிடிட்டியை கூட்டுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே நான் முந்தைய வீடியோக்களில் கூறியுள்ளது போல அரிசி உணவைத் தவிர்த்து சரிவிகித உணவுக்கு மாறுங்கள்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஏப்பம்  நெஞ்செரிச்சல்  வருவதைத்தான் அஜீரணம்  என பல பேர் கூறுகிறார்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்றால் அரை வயிறு உணவு உண்ண வேண்டும். அதேபோல், மது பழக்கம், புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை மட்டுமே நாம் உணவாக அடுத்த 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை அரிசி, கோதுமை உணவுகளை அதிகம் குறைத்துக் கொள்ளலாம்.

வயிற்றில் வலி ஏற்படும் போதெல்லாம் கட்டித் தயிரை அதிகம் சேர்க்கலாம். இதை செய்தால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் இந்த பிரச்சினை முழுவதுமாக சரியாகிவிடும். அப்படி இல்லையென்றால் மருத்துவரை அணுகலாம். அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து நீங்கள் மருந்து மாத்திரையும் உட்கொண்டும் மாதக்கணக்கிற்கு மேல், இது குணமடையாமல் அப்படியே உள்ளது என்றால், நீங்கள் வயிறு மற்றும் குடல் நிபுணரான மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

சரிவிகித உணவுக்கு மாறுவதால் நீரிழிவு நோய் குறைகிறது, ரத்தக் கொதிப்பு குறைகிறது, இது எல்லாவற்றுக்கும் முதலாக இந்த நெஞ்செரிச்சல் குறைகிறது. இதன் மூலம் நான் கூற வருவது, எனக்கு அல்சர் பிரச்சனை உள்ளது என தேவையில்லாமல் நாம் கூற வேண்டாம். அதேபோல் சார் எனக்கு அங்கங்க கேஸ் பிடிக்கும், குத்தி விட்டால் உடனே ஏப்பம் வந்து சரியாகிவிடும், என கூறுவதெல்லாம் நாமாகக் கற்பனை செய்து கொண்டதுதான். கேஸ் என்றால் உணவுக் குழாயில் இருக்கும் அல்லது நுரையீரலில் இருக்கும் வேறு எங்கும் இருக்காது. நாம் இறந்து போனால் மட்டுமே உடலின் மற்ற பாகங்களில் கேஸ் உருவாகும்.

எனவே கேஸ், அல்சர் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதோ, அதை அப்படியே தமிழில் கூறிப் பாருங்கள். உங்களுக்கு பாதி நோய்  இல்லாமல் போய்விடும், இருந்தாலும் வைத்தியம் பார்ப்பதற்கு அது எளிதாக இருக்கும்.

அல்சர் என்பது மிகவும் குறைவான நபருக்குத்தான் இருக்கும். அப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள், அதிகபட்சம் ஒரு மாதங்களில் குணப்படுத்தக்கூடிய ஒன்று. நமக்கு இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம். சரிவிகித உணவுக்கு மாறுவதன் மூலமும் இதை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எனவே இந்த மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதினால், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் நமக்கு ஏற்படும் என்பதை உணர்ந்து நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நன்றி வணக்கம்.


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

1 மறுமொழி

  1. சார் எனக்கு 3மாதங்கள் இதயத்தில் நடுப்பகுதியில் வலிக்கிறது ஏன் என்று தெரியவில்லை மருத்துவமனையில் சென்றேன் அல்சர் என்றனர் நான் என்ன உணவு எடுக்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க