புகை பிடிப்பது தீங்கானதா ?

ணக்கம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், திருமணமாகாத இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்தார் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

“பொதுவாக மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு, அவர்களது முந்தைய பரிசோதனைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா ?” எனப் பார்ப்போம். ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்  என ஏதாவது பிரச்சினை உள்ளதா என பரிசீலிப்போம்.  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா எனவும் பார்த்தால், அதுவும் இல்லை என பரிசோதனையில் தெரிவித்துள்ளார்.

சிறிதுநேரம் கழித்து அவரே என்னை அழைத்து, “சார் எனக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது” எனத் தெரிவித்தார். “உங்களை இங்கு அட்மிட் செய்யும்போது புகைப் பழக்கம் இல்லை என தெரிவித்து உள்ளீர்களே ஏன்?” என வினவினேன். “அப்போது என் பெற்றோர்கள் உடன் இருந்தார்கள்” எனக் கூறினார்.  எனவே, சிறிய வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கியமான காரணியாகும்.

அதேபோல் இரண்டு வாரத்திற்கு முன்பு 35, 36 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வருகிறார். இவருக்கு ஐந்து வருடத்திற்கு முன்பே தீவிர மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் ஸ்டெண்ட் வைத்து, சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.  சமீபகாலமாக மருந்து மாத்திரைகளை நிறுத்திவிட்டு புகைப் பழக்கத்தையும் தொடர்ந்துள்ளார். இப்போது மறுபடியும் இரண்டாம் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இப்போது மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர், “நான் புகைப்பிடிப்பதனால்தான் எனக்கு மாரடைப்பு வந்தது என என்னால் நம்ப முடியவில்லை. எனது பல நண்பர்கள் புகைபிடிக்கிறார்கள், எனக்கு வேறு காரணம் உள்ளது. நீங்கள் கூறாமல் இருக்கிறீர்கள்” என வாதிடுகிறார்.

புகைபிடிப்பது என்றால் நமக்கு பிற்காலத்தில் புற்றுநோய் ஏற்படும். எனவே, பிற்காலத்தில் எப்போதாவது புற்றுநோய் ஏற்பட்டுதான் சாகப் போகிறோம். வேறு எந்த பிரச்சினையும் இருக்காது என அலட்சியமாக இருக்கிறார்கள். இது தவறு, புகைப்பிடிப்பதனால் பல்வேறு பிரச்சினைகள் நம் உடலுக்கு ஏற்படும். அதில் மூன்று முக்கியமானவற்றை நாம் பார்க்கலாம்.

முதலாவது புற்றுநோய், மற்றொன்று மாரடைப்பு, மூன்றாவது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்.  இந்த நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயை சி.ஓ.பி.டி அல்லது சி.ஓ.எல்.டி எனக் கூறுவர். புற்று நோய் வந்து இறப்பதற்கு முன்பே மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார்கள். இவற்றில் இருந்து தப்பித்தாலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த சி.ஓ.பி.டி. பிரச்சினை நுரையீரலை தாக்கி அடிக்கடி நம்மை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல், வீட்டிலேயே சுவாசிக்க சுவாசக் குழாய் உபயோகப்படுத்துமாறு செய்துவிடும். வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் நாம் சிக்கிக் கொள்வோம்.  இவ்வாறெல்லாம் இருக்கிறது என்று பலபேருக்குத் தெரிவதில்லை.

புகைபிடிப்பதனால் ஏற்படும் மரணம் பற்றி நான் ஐம்பதுக்கு ஐம்பது உறுதி கூறுகிறேன். சாதாரண மக்கள் எப்படி இறக்கிறார்கள்? இயற்கையாக வயது முதிர்ந்து இறக்கிறார்கள். அல்லது ஏதேனும் விபத்தின் மூலம் இறக்கிறார்கள். இல்லையென்றால் இனம்புரியாத நோயினால் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் புகை பிடிப்பவர்கள் புகை பிடிப்பதினால் வரும் தீங்கினால் மட்டுமே 50% இருக்கிறார்கள்.

படிக்க :
♦ பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
♦ மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் என்று பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல புகை பிடிப்பதினால் 12 விதமான புற்று நோய்கள் ஏற்படுகின்றன.  தலையிலிருந்து ஆரம்பித்து வயிற்று பாகத்துக்கும் கீழ்வரை எல்லா பாகங்களிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு புகைபிடிப்பதில் உள்ளது. புற்றுநோயால் இறப்பவர்களில் சரிபாதி, புகைபிடிப்பவர்களாக உள்ளார்கள். அப்படி என்றால் இது தீங்கானதுதானே. இதை நாம் விட்டு விட வேண்டும்தானே!

சில பேர் பள்ளிப்பருவத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்களுக்கு நான் இதைக் குறிப்பாக வலியுறுத்துகிறேன். இந்தப் பழக்கம் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற பின்பும் தொடர்கிறது. இவர்களுக்கு நான் இரண்டு  அறிவுரைகளை வழங்குகிறேன்.

ஒன்று நீங்கள் புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லை என்றால் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், அது தனி மனித சுதந்திரம். உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கும் உள்ளது. சல்மான்கான், யோகி ஆதித்யநாத்,  வாஜ்பாய் போன்ற பலபேர் திருமணமாகாமலேயே பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார்கள் இல்லையா? அவர்களைப் போல் நீங்களும் முயற்சியுங்கள்.

இப்படி இருக்க முடியாது. நான் எல்லாரையும் போல் குடும்பம், குழந்தை என வாழ வேண்டும் என்றால் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் முடிவு எடுக்கலாம். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையையும் நீங்கள் தீர்மானிக்கக்கூடாது இல்லையா.

அதேபோல் நீங்கள் திருமண வயதில் இருக்கக்கூடிய பெண் என்றால். உங்களுக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்க வேண்டும் எனப் பல நிபந்தனைகள் வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் நீங்கள் முக்கியமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது உங்களது வருங்காலக் கணவர் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதுதான். உங்களது வருங்கால கணவர் அல்லது காதலரை புகைப்பிடிக்கிறார் எனத் தெரிந்தும் நீங்கள் திருமணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு மவுண்ட்ரோட்டில் நடப்பதற்கு சமம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் ரோட்டை கடந்து மறுபுறத்திற்கு செல்வீர்கள். இல்லையென்றால் என்ன நடக்கும் என நாம் கூற முடியாது.

நமக்குத் தெரியும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று. நீரிழிவு நோய் உள்ளவருக்கு 5 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றால், புகை பிடிப்பவருக்கும்  மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5% உண்டு. அதுவே அவர் நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருந்து புகைப்பிடிப்பவராகவும் இருந்தால். அவருக்கு 5 X 5 = 25 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

படிக்க :
♦ பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்
♦ அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

யாரெல்லாம் புகைப்பிடித்து, நீரிழிவு நோய் உள்ளவராகவும் இருக்கிறார்களோ அவர்கள் 60 வயதைத் தாண்டுவதே கடினமாக இருக்கும். நாம் முன்னர் கூறியதுபோல நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஆனால், புகை பிடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  ஒருவர் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்து நீரிழிவு நோயும் உள்ளவராகவும் இருந்து எழுபது எழுபத்தைந்து வயதை தாண்டி வாழ்கிறார் என்றால்? அது அவரது அதிர்ஷ்டம்தான் என நாம் கூற வேண்டும்.

நீங்கள் நீரிழிவு நோயும் இருந்து, புகைபிடிப்பவராகவும் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் மூலம் உங்களது வாழ்நாளை நீங்கள் அதிகரித்துக் கொள்கிறீர்கள் என்பதில் ஐயமில்லை. அதேபோல் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலபேர், நான் புகை பிடிப்பதில்லை. ஆனால், புகையிலையை வாயில் வைத்துக் கொள்வேன் எனக் கூறுகிறார்கள். இது தவறு. புகையிலை எந்த வடிவில் இருந்தாலும், அதை நாம் தவிர்க்க வேண்டும்.  இல்லையென்றால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் உண்டு.

“என்ன சார் இப்படி கூறுகிறீர்கள். எனது பக்கத்து வீட்டுக்காரர் 75 வயது கடந்தவர். 40 வருடங்களாக புகை பிடிக்கிறார். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என குதர்க்கமாக கேள்விகள் கேட்பார்கள். அதற்கான விடையை நாம் அடுத்த காணொளியில் காணலாம்.

இந்த கட்டுரையின் மூலக் காணொளி :

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க