தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்திற்காக (National Tobacco Control Programme) 2016-ம் ஆண்டு இறுதிவரை 400 முழுநேர ஊழியர்களை இந்திய அரசு நியமித்துள்ளது. மேலும் 2015-ம் ஆண்டு அவர்களுக்காக ரூ.40 கோடி செலவிட்டிருக்கிறது.

பீடி புகைப்பதால் ஏற்பட்ட அகால மரணங்களாலும் உடல்நல குறைபாட்டினாலும் இந்தியா கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் ரூ.80,000 கோடியை இழந்திருக்கிறது என்பதை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள். கொச்சியில் இயங்கும் ‘பொது கொள்கைக்கான ஆராய்ச்சி மைய’த்தைச் (Centre for Public Policy Research) சேர்ந்த ரிஜோ எம்.ஜான் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை புகையிலை கட்டுப்பாடு (Tobacco Control) எனும் சஞ்சிகையில் வெளி வந்துள்ளது.

“பீடி புகைப்பது பொதுநலத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் ஒரு கடுமையான அச்சுறுத்தல்” என்கிறார் ஜான். வரி விதிப்பு நடவடிக்கை, பீடி புகைப்பதை கட்டுப்படுத்தும் பயனுள்ள வழிமுறை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருந்தும் இதுவரையில் இந்தியாவில் பெரிதாக இதை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

பீடிக்கு அதிக வரி போடாமல் இருப்பதற்கு பின்னணியில் அரசியல் காரணிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. “இதற்கு பின்னால் கண்டிப்பாக ஒரு அரசியல் காரணி இருக்கிறது. பீடி அதிகம் புகைப்பதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை தாங்க வேண்டிய நிலை ஏழைகளுக்கு ஏற்படுகிறது.  இதை அனுமதிப்பது அவர்களின் வருமானத்தின் ஒரு பெரிய பங்கை இழப்பதற்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

எனவே ஏற்கனவே உள்ள 22% வரியிலிருந்து உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 75% அளவிற்கு வரியை உயர்த்த வேண்டும் எனக் கூறுகிறார் ரிஜோ.

பீடி புகைப்பதற்கு தரப்படும் விலையை தேசிய மற்றும் சர்வதேசிய புள்ளி விவரங்களை கொண்டு அவர் கணக்கிட்டுள்ளார். இந்த ஆய்வு 2017-ம் ஆண்டில் புகைப்பதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளையும் 30-69 வயதிலேயே ஏற்பட்ட அகால மரணங்களையும் அறுதியிட்டு கணக்கிட்டுள்ளது. நோய்க்கான நேரடி சிகிச்சை செலவுகள், மறைமுக நோய்கள் மற்றும் அகால மரணங்களால் ஏற்படும் செலவுகள் உள்ளிட்டவை ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

படிக்க:
♦ அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
♦ பீடித் தொழில் – ஒரு பார்வை

நோய் கண்டறியும் சோதனைகள், மருந்துகள், மருத்துவர்கள், மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை நேரடி செலவுகளில் அடங்கும். மொத்த செலவில் இவை 20.9% (16,870 கோடி ரூபாய்) பிடித்துக் கொள்கின்றன. மீதமுள்ள ~ 79% – மறைமுக செலவுகள் – உறவினர்கள் மற்றும் கவனிப்பாளர்களுக்கான விடுதி செலவு மற்றும் குடும்ப வருவாய் இழப்பு ஆகியவை இவற்றில் அடங்கும்.

“பீடி புகைப்பதனால் ஏற்படும் மொத்த பொருளாதார செலவு (இழப்பு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் அரை விழுக்காடு ஆகும். அதே நேரத்தில் அதனால் கிடைக்கும் வரி வருவாய் அதன் பொருளாதார இழப்பில் அரை விழுக்காடு மட்டுமே ஆகும்” என்று ஜான் கூறினார். பீடி குடிப்பதனால் ஏற்படும் செலவானது இந்தியாவின் மொத்த சுகாதார செலவில் 2.24 விழுக்காடாக இருக்கிறது.

ஏனெனில் ஏழைகள் மட்டுமே பீடி குடிக்கிறார்கள். இது அவர்களது ஏழ்மையை மேலும் அதிகரிக்கிறது. மொத்த புகையிலை பயன்பாட்டில் பீடி 81 விழுக்காடு என்கிறது அதிகாரப்பூர்வ விவரம் ஒன்று. கிட்டத்தட்ட 15 வயதில் வழக்கமாக பீடி குடிப்பவர்கள் 7.2 கோடி பேர் இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் பீடி- சிகரெட்

“புதிய உலகளாவிய வயது வந்தவர் புகையிலை ஆய்வின் (Global Adult Tobacco Survey) படி பீடி விற்பனையானது 4.3:1 என்ற விகிதத்தில் சிகரெட்டை விட முன்னிலையில் இருக்கிறது” என்று ஜான் கூறுகிறார். “பெரும்பாலான மாநிலங்களில் பீடி குடிப்பது சிகரெட் குடிப்பதை விட அதிகமாக இருக்கிறது. மாறாக கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் சிகரெட் பிடிப்பது அதிகமாக உள்ளது” என்று மேலும் கூறினார்.

சிகரெட்டை விட பீடி அதிகம் தீமை தராது என்று பலர் நினைக்கிறார்கள். பீடி குடிப்பது வாய், குரல்வளை, உணவுக்குழாய் மற்றும் நுரையீரல்களில் புற்றுநோய் ஏற்படுத்தும். மேலும் நாள்பட்ட மூச்சுகுழாய் ஒவ்வாமை, காசநோய் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்களையும் அதிகரிக்கும்.

ஜானுடைய ஆய்வு அதிகம் தெரிந்திராத பின்வரும் சிக்கல்களையும் அழுந்தக்கூறுகிறது,

  • பீடியில் சிகரெட்டை விட புகையிலை குறைவாக இருக்கும். ஆனால் நிக்கோட்டீன் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகம் இருக்கும்.
  • பீடியின் குறைவான புகையால் புகைப்பாளர்களை அது மிக ஆழமாக இழுக்க வைக்கிறது. விளைவாக சிகரெட்டை விட அதிகமான கார்பன் மோனாக்சைடு, நிக்கோட்டீன் மற்றும் ஏனைய புகையிலை மூலக்கூறுகளை சுவாசிக்கிறார்கள்.
  • ஒவ்வொரு நான்கு ஆண்களில் (30-69 வயது) ஒருவர் பீடி புகைப்பதால் இந்த பழக்கம் மொத்த ஆண் தொழிலாளர்களில் ஒரு பங்கினை குறைக்கிறது.
  • இந்தியாவில் ஐந்தில் ஒரு குடும்பம் சுகாதார செலவுகள் காரணமாக பொருளாதார பேரழிவை சந்திக்கின்றன.
  • கூடுதலாக, பீடி புகைப்பதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மக்களை அதிகம் ஏழ்மையில் தள்ளுகின்றன.

விளைவாக, 1.5 கோடி இந்திய மக்கள் புகையிலை மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏழ்மையை சந்திக்கின்றனர். இத்தகைய செலவினங்கள் உணவு மற்றும் கல்விக்காக ஏழை மக்களிடம் உள்ள செலவில் பெருஞ்சுமையை ஏற்றி விடுகின்றன.

படிக்க:
♦ தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்
♦ மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்

கேரளா அரசு போதுமான புகையிலை கட்டுப்பாடு திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? என்றால், COTPA சட்டம் கேரளாவில் போதுமான அளவில் இல்லை தான்.  ஆனால் ஏனைய இந்திய மாநிலங்களை விட கேரளாவில் இதன் நடைமுறை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கிறது என்று என்னால் கூற முடியும்” என்கிறார் ஜான்.

இந்த அதிக வரி விதிப்பு தொடர்பான பேச்சுக்கள், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை மைய அரசு 2017-ம் ஆண்டு ஜூலையில் கொண்டுவந்த பிறகு மாறி விட்டது. தற்போது மாநில அரசுகள் வரிகளை கட்டுப்படுத்துவது கிடையாது. விளைவாக, “தற்போது மாநில மட்டத்திலான புகையிலை கட்டுப்பாட்டு செயல்திட்டங்களை எடுப்பது முடியாத காரியமாகும். அதிக எழுத்தறிவு உள்ளதால் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கேரளாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்

COTPA விதிமுறைகளை செயல்படுத்துவதற்கு மற்ற நடவடிக்கைகளுக்கிடையே விழிப்புணர்வு பிரசாரங்களையும் நடத்தி குடிமை சமூக பணிகளை மாநில அரசுகள் முடுக்கி விட வேண்டும்.

சென்ற மாதத்தில் “புகையிலை கட்டுப்பாடு” சஞ்சிகையில் வேறு ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் 1999-2000 முதல் 2011-12 ஆண்டுகளுக்கிடையே பீடி மற்றும் சிகரெட் பிடிப்பது ஒட்டுமொத்தமாக குறைந்திருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியை (Imperial College London) சேர்ந்த கியாரா சி.எம். சாங் தலைமையிலான இக்குழு 2007-2009 ஆண்டுகளுக்கிடையில் 42 மாவட்டங்களில் பீடி-சிகரெட் பிடிக்கும் குடும்பத்தினரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டது.

NTCP நடைமுறைபடுத்தப்படாத மாவட்டங்களின் விவரங்களை மேற்சொன்ன மாவட்டங்களின் விவரங்களோடு இவர்கள் ஒப்பிட்டு பார்த்தபோது நிலைமைகள் மோசமாகவே இருந்தன. கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களை ஒப்பிடும் போது NTCP மாவட்டங்களில் சிகரெட்-பீடி பழக்கம் கொண்ட குடும்பங்களின் விகிதாச்சாரம் குறைந்திருக்கவில்லை.

அவர்களது ஆய்வில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்கள்.

“முன்னதாக NTCP-யின் செயல்பாடுகள், புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டியிருக்காது. இந்தியாவின் புகையிலை கட்டுப்பாட்டு நோக்கங்களுக்கான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு (Framework Convention for Tobacco Control objectives in India) நேரெதிராக மோசமான செயல்திறனைக் கொண்டிருப்பதையே காட்டியிருக்கிறது என்பதை எங்களின் ஆய்வு சுட்டுகிறது.

இந்தியா இந்த கூட்டமைப்பை 2004-ல் தொடங்கியது. ஆய்வாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது,

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தேசிய மற்றும் சர்வதேச சிறுவர் நலன் மற்றும் நோய் தொற்றில்லா அகால மரணங்களை குறைக்கும் இலக்குகளை அடைவதற்கு புகையிலை கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவது மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் இன்றியமையாமையையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த கண்டுப்பிடிப்புகள் முற்றிலும் புதியன அல்ல. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலுள்ள ஆண் மாணவர்களிடம் புகையிலை பொருட்கள் பயன்பாடு 50.4 – 74.4% வரை இருப்பதாகவும் பெண் மாணவர்களிடம் 32 – 56.4% வரை இருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தை (Indian Council of Medical Research) சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் கூறினர்.

நொய்டாவை சேர்ந்த 7-12 வகுப்புகளை சேர்ந்த 4,786 மாணவர்களில் 537 (11.2%)  மாணவர்களிடம் புகையிலை பழக்கம் இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சஞ்சிகையின் வெளியீடு (Indian Journal of Medical Research) ஒன்றின் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பயங்கரமான உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. எனவே NTCP உண்மையிலேயே எவ்வளவு வேலை செய்கிறது? என்ற கேள்வியை கேட்பது அவசியமாகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் நாம் அடைகிறோமா?

இந்த ஆய்வு கவனிக்கத் தவறும் விடயம் என்ன? பீடி பிடிக்கும் தொழிலாளிகள்தான் இந்தியாவில் ஆகப்பெரும்பான முறைப்படுத்தப்படாத தொழில்களில் பணி புரிகிறார்கள். கடுமையான உழைப்பு, குறைவான கூலி, குறைந்த பட்ச வாழ்க்கைத் தரம் கூட இல்லாமை, குடும்பத்தை நடத்துமளவு பொருளாதாரம் இல்லாமை போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. 8 மணி நேர வேலை, அதற்குரிய கூலி, ஓய்வு நேரம், குடியிருப்பு வசதிகள் என்று எவையும் இவர்களுக்கு இல்லை. பீடியை விடுங்கள், அதிக உழைப்பிற்கும், தொடர்ந்து கண் விழித்து பணியாற்றும் சீசன் நேரங்களின் போதும் இத்தொழிலாளிகள் பான்பராக் இன்னபிற கூடுதல் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறகு இருக்கவே இருக்கிறது, மது. பணியின் போது புகையிலை, பணி முடிந்த பிறகு மது. இப்படித்தான் நமது முறைசாராத் தொழிலாளிகள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பீடிக்கு வரி போடச் சொல்லும் கனவான்கள் இத்தொழிலாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. அதை மாற்றாமல் அது குறித்து ஆயாமல் பீடி மீது மட்டும் குறைபட்டு என்ன பயன்?

கட்டுரையாளர் : கே.எஸ். பார்த்தசாரதி
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க