தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்;
பீகார், ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது : மரு. அமலோற்பநாதன்

சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், இரத்தநாள அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குனராகவும் இருந்தவர் அமலோற்பநாதன் ஜோசப். தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (Transplant Authority of Tamilnadu) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி, அதன் உறுப்பினர்-செயலாளராக இருந்தவர். தி டைம்ஸ் தமிழ்.காம் இவருடன் ஒரு நேர்காணலை நடத்தியது. தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பு பற்றிய பருந்துப் பார்வையை இதன் மூலம் பெற முடியும்.  தூய்மை இந்தியா, யோகா, தன்பாலின உறவு போன்ற கேள்விகளுக்கு எளிய வார்த்தைகளில் கூர்மையான பதிலை சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் தருகிறார்.

கேள்வி: சிசு மரண விகிதம், தடுப்பூசி , மருத்துவமனைகளின் எண்ணிக்கை போன்ற பல சுகாதார அளவீடுகளில் ( Health Indicators) தமிழ்நாடு நன்கு முன்னேறி உள்ளது. இதற்கு காரணம் அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

பதில்: இருவருக்குமே சம பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். புனித ஜார்ஜ் கோட்டை இங்குதான் கட்டப்பட்டது. சாலை வசதி, இருப்புப் பாதை வசதி, விமான நிலையம் போன்றவை இங்கு இருந்தன. இதனால் பெரிய மருத்துவமனைகள் சென்னையில் உருவாயின. 1920 களில் திராவிட கட்சிகள் எழுச்சி பெற்றன; இடைநிலை சாதியினர் அதிகாரம் பெற்றனர்; மகளிர் கல்வி விகிதம் அதிகரித்தது. இதுபோன்ற காரணிகளால் ஏற்கெனவே தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட சிறந்து விளங்கியது. ஆங்கிலேயர்கள் ஒரு நல்ல கட்டமைப்பை விட்டுச் சென்றனர். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரசாக இருந்தாலும், திராவிடக் கட்சிகளாக இருந்தாலும் சுகாதார திட்டங்களை செயல்படுத்தினால் ஓட்டு கிடைக்கும் என்று தெரிந்து கொண்டார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு சிறந்து விளங்க முக்கிய காரணங்களாகும்.

கேள்வி: உங்களுடைய அனுபவத்தில் சிறந்த சுகாதார அமைச்சர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?

பதில்: அப்படி யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

கேள்வி: சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியராக இருந்திருக்கிறீர்கள். உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் தொடர்பான பணியில் முக்கியப் பங்கு வகித்து இருக்கிறீர்கள். இப்போது அது தொடர்பாக புகார் சமீபத்தில் வந்ததே?

பதில்: இப்போதுள்ள விதிகள் நன்றாக உள்ளன. பெரிதாக தவறு நடக்க வாய்ப்பு இல்லை. இது குறித்து திட்டவட்டமான புகார் ஏதும் வரவில்லை. அப்படியே ஏதும் வந்தால் அவை நன்கு விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நேர்மை, Moral Authority யோடு (ஆன்ம பலம்) செயல்பட முடியும்.

கேள்வி: ஆயர்வேதா, சித்தா, யுனானி முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுப்பப்படுகிறதே?

பதில்: மனிதனுக்கு தனது 4000 வருட வாழ்க்கைமுறை குறித்த அறிவு இருக்கிறது. தனது அனுபவத்தில் அசதி,காய்ச்சல், ஆஸ்மா போன்ற நோய்களுக்கு கை மருத்துவம் பயன்படுத்துகிறான். அதில் தவறு இல்லை. நான் கூட தலைவலி என்றால் மிளகுரசம் குடிப்பேன். ஆனால் விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. பல நூறு மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி பல நூறு சோதனைகளைச் செய்கிறோம். பழைய முறை என்பதற்காக யாரும் ஓலைச்சுவடியில் எழுதுவது இல்லை. கணினியை பயன்படுத்துகிறோம்.
இலைகள், வேர்கள் போன்றவைகளில் வேதிப் பொருட்கள் உள்ளன. வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

படிக்க:
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?

கேள்வி: மருத்துவக் கொள்முதல் தொடர்பாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக ஓராண்டுக்கு தேவையான அடிப்படையான மருந்துகள் ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யப்படுகின்றன. அவை மாவட்ட கிட்டங்கிகளுக்கு அனுப்ப படுகின்றன. அங்கிருந்து தாலுகா மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற்றுக்கொள்கின்றன. இதுதான் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கிறது. இது நல்ல முறைதான். பொதுவாக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் ஊழல் குறையும்.

கேள்வி: தமிழ்நாட்டில் இன்னமும் மேம்பாடு செய்ய வேண்டியவை இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?

பதில்: தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களை பலப்படுத்திவிட்டோம். பல முன்னோடி திட்டங்கள் தமிழ்நாட்டில்தான் செயலாக்கப்படுகின்றன. ஆனால்
தமிழ்நாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும். பீகார், ராஜஸ்தானை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான். இது ஒருவிதமான சோம்பேறித்தனத்தை உருவாக்குகிறது. ஆனால், நமது தாலுகா மருத்துவமனைகளை, மாவட்ட மருத்துவமனைகளை இன்னமும் நாம் பலப்படுத்த வில்லை. இதனை அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். நோயாளிகள் சென்னை, மதுரை போன்ற நகரங்களை நாடி வருவது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையானது அனைத்தும் தாலுக்கா, மாவட்ட அளவில் கிடைக்க வேண்டும். சுகாதாரத்திற்கு நாம் ஒரு சதவீத ஜி.டி.பியைத்தான( GDP) ஒதுக்குகிறோம். ஒருசில நாடுகள் 10 சதம்வரை கூட சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன.

உ.பி. அரசு மருத்துவமனையொன்றின் அவலம்.

கேள்வி: தன் பாலின உறவு ஒரு நோயல்ல என்று சுகாதார நிறுவனம் (WHO) ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு ஒரு குற்றம் அல்ல என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் சமூகத்தில் இதனை இன்னமும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இது ஒரு முற்போக்கான தீர்ப்பு. இதனை வரவேற்கிறேன். ஒருவனுடைய படுக்கை அறையில் நுழைந்து பார்க்க யாருக்கும் உரிமையில்லை. பொது ஒழுங்கு சீர்குலையாத வரையில் தனியுரிமையில் யாரும் நுழைய முடியாது. இந்த தீர்ப்புக்கு பிறகு என்ன கேள்வி வரும் என்றால் தன்பாலின உறவு கொண்டவர்கள் தத்து எடுக்க முடியுமா? இதில் யார் தந்தை? யார் தாய்? இருவரும் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்குழந்தையை தத்து கொடுக்க முடியமா? அவர்கள் பிரிந்தால் யார் குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது போன்ற கேள்விகள் எழும். இதற்காக விதிகள் காலப்போக்கில் உருவாகும். இது ஒரு பெரிய விஷயமல்ல.

கேள்வி: மாற்றுப்பாலின (transgender)உரிமை குறித்து?

பதில்: தமிழ்நாட்டில் நல்ல திட்டங்கள் அவர்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை மருத்துவ கல்லூரியில் Sex Change Operation (ஆணைப் பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக மாற்ற அறுவை சிகிச்சை) நடைபெறுகிறது. அதற்கான உளவியல் சோதனை, மற்ற பரிசோதனைகளுக்குப் பிறகு இது நடைபெறுகிறது. தேவை ஏற்பட்டால் இந்த சிகிச்சையை மதுரை, திருநெல்வேலியிலும் விரிவுபடுத்தலாம்.

கேள்வி: நீங்கள் முகநூலை நன்கு பயன்படுத்தி வருகிறீர்கள். அன்றாட முக்கிய நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் முகநூலில் கருத்து சொல்லுகிறீர்கள். நீங்கள் பல இடங்களில் பணியாற்றி இருந்தாலும் முதலில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய படத்தை நீண்ட காலமாக முகப்புப் படமாக (Profile Picture) வைத்து இருக்கிறீர்கள்? ஏதேனும் விசேட காரணம் உண்டா?

பதில்: சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

கேள்வி: டெங்கு காய்ச்சல் சமயத்தில் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை அரசாங்கம் சரியாக சொல்லுவதில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: அது எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கம் எதையும் மக்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை. பூகம்பம் வந்து இறந்தால் அரசு என்ன செய்ய முடியும்? கொள்ளை நோய் பற்றிய விவரத்தை உடனடியாக சொல்ல முடியவில்லை என்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொல்ல வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல்களை மறுக்கக் கூடாது. அரசு தகவல்களை மறைத்தால் தவறான தகவல்களை பரப்புவார்கள். அரசு செய்ய வேண்டியதெல்லாம் நோய் பற்றி முன் கூட்டியே அறிந்து கொண்டதா? அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கை எடுத்ததா? உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்களா? உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதுதான்.

கேள்வி: நில வேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு தரக்கூடாது என்று ஞாநி ஏற்பாடு செய்த பட்டிமன்றத்தில் பேசினீர்கள்?

பதில்: ஆமாம். நில வேம்பு கசாயம் என்பது சிகிச்சை(treatment) அல்ல. அரசு மக்களை ஏமாற்றக்கூடாது. அரசு மருத்துவ மனைகளில், MBBS படித்த மருத்துவர்களை வைத்து இந்த கசாயத்தை கொடுக்கக்கூடாது. தேவையானால் ஆயுர்வேதா, சித்தா மருத்துவர்கள் மூலமாக கொடுக்கட்டும்.

கேள்வி: நீட் தேர்வு குறித்து?

பதில்: நீட் என்பது இப்போது நிஜமாகிவிட்டது. மாநில அரசு முடிந்தவரை எதிர்த்துப் போராடவில்லை. வலிமையான மாநில அரசுகள் உருவானால்தான் இத்தகைய போக்குகளில் மாற்றம் வரும். GST போன்ற வரிவிதிப்பு கூட மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான்.

படிக்க:
நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !
அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ நிறுவனங்கள் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி சொன்னார். ஏறக்குறைய இப்போது எல்லா மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அது காலப்போக்கில் சரியாகிவிடும்.

கேள்வி: தூய்மை இந்தியா திட்டத்தை ( ஸ்வச் பாரத்) இந்திய அரசு அமலாக்கி வருவது பற்றி?

பதில்: இவையெல்லாம் நகராட்சி மட்டத்தில் சிறிய அளவில்( Micro Level) திட்டமிட்டு நடத்த வேண்டியவை. அதற்கான தொழில் நுட்பம், நிதி, வசதி செய்தால் போதும். இதற்காக ஒரு நாட்டின் பிரதம மந்திரி துடைப்பத்தை எடுத்து பெருக்க வேண்டியதில்லை. பெருக்கிய குப்பையை எங்கே போடப்போகிறார்? நம்முடைய குப்பையை ஏன் வேறு ஒருவர் எடுக்க வேண்டும்.
ஒருசில மாற்றங்கள் தனிநபர் அளவில் உருவாக வேண்டும். நான் துணிக்கடைக்குப் போனால் சட்டையை மட்டும்தான் பெற்றுக்கொள்வேன். அந்த அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பை போன்றவற்றை பெற்றுக்கொள்ள மாட்டேன்; கடையிலேயே கொடுத்து விடுவேன். சமையலறை குப்பைகளை காய்கறித் தோட்டத்தில் பயன்படுத்த முடியும். கூடுமான வரை குப்பையை உற்பத்தி (Reduce) செய்யக் கூடாது. மறு பயன்பாட்டிற்கு (Reuse) குப்பையை பயன்படுத்த வேண்டும். நாம் ஒரு எளிய வாழ்க்கை வாழத் தவறிவிட்டோம். ஒவ்வொருவரும் 20 சட்டை, 30 புடவை என்று வைத்து இருக்கிறோம். shopping கலாச்சாரம் வந்துவிட்டது. கங்கையை சுத்தப்படுத்துவதும் இந்த திட்டத்தில் ஒரு பகுதி. பெரிய தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை கங்கையில் கலக்கின்றன. இதை தடுக்காமல் கங்கையை எப்படி சுத்தப்படுத்துவது.

கேள்வி: யோகாவை அரசு முன்னெடுப்பது பற்றி?

பதில்: மனித உடலுக்கு உடற்பயிற்சி (Physical activity) அவசியம். உணவு, நல்ல காற்று, சுத்தமான தண்ணீர் போல உடற்பயிற்சியும் அவசியம் ஆண், பெண் இருவருக்கும் அது அவசியம். அது நீ்ச்சலாக இருக்கலாம், ஓட்டமாக இருக்கலாம். யோகாவும் ஒரு உடற்பயிற்சி அவ்வளவுதான். அது வந்து 300 அல்லது 400 வருடங்கள் இருக்கும். அதனை ஏன் ஒரு தேசிய உடற்பயிற்சியாக (National Exercise) அரசு முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: இறந்த பிறகு உடல் தானம் செய்வது பற்றி?

பதில் : நல்ல விஷயம்தானே. உடல் மண்ணுக்குப் போவதைவிட, எரிப்பதை விட ஆராய்ச்சிக்குப் பயன்படட்டுமே. மருத்துவ கல்லூரிகளில் உடலியல் துறையில் (anatomy) இதற்காக பதிவு செய்து கொள்ளலாம்.

கேள்வி: நீங்கள் கத்தோலிக்க மாணவர் சங்கத்தில் இருந்து இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்களேன்.

பதில்: நான் சென்னையில் படித்த மாணவன். நான் AICUF ல் (அகில இந்திய கத்தோலிக்க மாணவர் சங்கம்) சேர்ந்தது என் வாழ்வில் ஒரு மகத்தான திருப்பம் என்று சொல்லுவதில் எனக்கு தயக்கமே இல்லை. அதில் சேர்ந்த பின்புதான் கிராமங்களுக்குச் சென்றேன். அவர்கள் வாழ்முறையை புரிந்து கொண்டேன். அந்த அமைப்பின் இதழான ‘தேன்மழை’யின் ஆசிரியராகவும் மூன்று ஆண்டுகள் இருந்தேன்.

கேள்வி: உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி?

பதில்: மனைவியும் மருத்துவர். ஒரு மகள், ஒரு மகன்; இருவரும் படிக்கிறார்கள்.

*****

நேர்காணல்: பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். டைம்ஸ் தமிழ் இணையதளத்துக்காக பல்வேறு தரப்பட்ட ஆளுமைகளை நேர்காணல் செய்து எழுதிவருகிறார். சினிமா, புத்தகங்கள் குறித்தும் எழுதுகிறார்.

நன்றி: டைம்ஸ் தமிழ்