Sunday, July 13, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

அரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்கம்!

-

ரசு மருத்துவமனைகளை சீரழிக்கும் மறுகாலனியாக்க கொள்கைகளை மோதி வீழ்த்துவோம் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 27.03.13 அன்று மாலை 6 மணிக்கு மணலி அண்ணாசிலை அருகில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சொ. செல்வகுமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், உலக அளவில் சிறந்த மருத்துவத் துறை என்று பெயரெடுத்துள்ள இந்திய மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலப்படுத்தத் தொடங்கி, மணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாதம் நடந்த பெண் சிசுக் கொலையை போலவே தமிழ்நாடெங்கும், இந்தியாவெங்கும் உழைக்கும் மக்கள் நித்தமும் கொலை செய்யப்படுகின்றனர் என்றும், சென்னை மகப்பேறு மருத்துவமனையில் ஒரு குழந்தையை எலி கடித்ததையும், சரியான பராமரிப்பில்லாததால் விக்னேஷ் என்ற மாணவனை காவு கொண்ட அரசு மருத்துவமனையின் அவலத்தையும், இம்மாதிரியான கொலைகளுக்கு காரணம் அரசின் தனியார் மய கொள்கைகளே. இந்த கொள்கைகள்தான் அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதற்கும், குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று பதிய வைத்தார்.

சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான தோழர் ம.சி.சுதேஷ்குமார், அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தை மாற்றி மாற்றி செயல்படுத்தி வரும் அரசு,  இதன் மூலமாக மக்களை தனியார் மருத்துவமனையை நோக்கி தள்ளுகின்றது. மக்களை ஒடுக்க ராணுவத்துக்கு ரூ 1,60,000 கோடி ஒதுக்கும் அரசு சுகாதாரத் துறைக்கு வெறும் ரூ 24,000 கோடி மட்டும் ஒதுக்குகிறது. கஜானா காலி, பணமில்லாததால்தான் மருத்துவமனையை சீரமைக்க முடியவில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். சேவைத்துறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “காட்” ஒப்பந்தத்தின்படி அனைத்தையும் தனியார்மயப்படுத்த துடிக்கின்றது அரசு. மருத்துவத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த அரசினுடைய கொள்கைகள் உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக உள்ளது. அனைத்து ஓட்டு கட்சிகளும் இந்த கொள்கைகளுக்கு துணை நிற்கின்றன. இதற்கு எதிராக போராடாமல் நமக்கு விடிவில்லை. அது நக்சல்பாரி தலைமையில்தான் சாத்தியம் என்று அறைகூவினார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனியார்மய கொள்கைகளுக்கு சேவை புரியும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அரசு மருத்துவமனைகள் சீரழிக்கப்படுவதற்கான காரணம் அரசின் தனியார்மய கொள்கைகளே என்பதை பகுதி மக்களிடத்தில் பதிய வைக்கும் விதமாக அமைந்தது.

இணைப்பு சங்கத் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக் கூட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் ஆனந்த்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்