நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !

நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?

டந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதாவைக் காவு வாங்கிய நீட் தேர்வு, இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரதீபா கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சிறு வயது முதலே மருத்துவராகவேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த பிரதீபா, பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததால் சேரவில்லை.

வறுமையான வாழ்நிலையையும் தாண்டி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடவேண்டும் என்ற குறிக்கோளில் ஒரு ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்குத் தயாரான பிரதீபாவை ஒட்டுமொத்தமாக முடக்கியது நீட். பிரதீபாவை மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் திட்டமிட்டு முடக்கியது நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான சி.பி.எஸ்.ஈ.

நீட் தேர்வின் முதல் பலி அனிதா !

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தேர்வு மையம் குறித்த குழப்படியில் தொடங்கி, தேர்வுக்கான வினாத்தாளில் சுமார் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது வரை, திட்டமிட்டு கழுத்தறுப்பு வேலைகளில் இறங்கி, தமிழக மாணவர்களை வஞ்சித்தது சி.பி.எஸ்.ஈ.

மொழிபெயர்ப்பில் தவறான பொருள்படும்படியான கேள்விகள், மற்றும் பதிலுக்கான தெரிவுகள் கொடுத்த்தால், மாணவர்களுக்கு ஏற்பட்ட மதிப்பெண் இழப்பிற்கு இழப்பீட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும் என தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார் பிரதீபா.

இந்நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மனமுடைந்த பிரதீபா, எலி மருந்து விசத்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ’நீட்’டின் கொடுங்கரம் வெறுமனே பிரதீபாவோடு மட்டும் நிற்கவில்லை. கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த அருண்பிரசாத் என்ற மாணவரையும் பலி கொண்டுள்ளது நீட்.

கடந்த 2016-17ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் 1150 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த அருண்பிரசாத், இந்த முறை மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் இம்முறையும், கேள்வித்தாள் குளறுபடி காரணமாக அவரால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த அருண்பிரசாத், வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி சமயநல்லூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் , நீட் தேர்வு தோல்வியால் கடந்த 06-06-2018 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  ‘நீட் ’ தற்கொலைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

கூடுதலாக, செஞ்சியை அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா நீட் தேர்வு குளறுபடியின் காரணமாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அவரை மீட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று முடிவுகளைப் பார்க்கச் சென்ற சென்னை  மாணவி கோடீஸ்வரி என்பவர், தாம் தேர்வாகவில்லை என்பதைக் கண்டு மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இரயிலேறி பீகார் சென்றிருக்கிறார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர் அவரது பெற்றோர்.

நீட்-ன் கொலைக்கரம் சில மாணவ மாணவிகளின் உயிர்களைப் பறித்துள்ளது எனக் கடந்து  போக முடியாது. ஏனெனில் தங்களது பெற்றோரையும் உறவினர்களையும் ஆசிரியர்களையும் எதிர்கொள்ள முடியாமல், மன அழுத்தத்தில் புழுங்கி முடங்கியிருக்கும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகம். அதற்கு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி கோடீஸ்வரியே சாட்சி

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சில மாணவர்களால், தவறான 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கைவிரித்து விட்டது மதுரை உயர்நீதிமன்ற அமர்வு.

நீட் தேர்வு பலியான பிரதீபா

இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,602 பேர். அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 45,336  பேர். இந்திய அளவில் நீட் தேர்வில், மொத்த தேர்ச்சி விகிதம் 56%. ஆனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: 39.55 % தான்.

நீட் தேர்வுகளில் இராஜஸ்தான், ஹரியானா போன்ற கல்வியில் பின் தங்கிய  மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் கல்வியில் முன்னேறிய மாநிலமான தமிழ்நாடு 35-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக திட்டமிட்டு நட்த்தப்பட்டு வரும் தாக்குதல்களில் ஒன்று நீட் தேர்வு.  தமிழகத்தின் கல்வி வளத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், கிராமப்புற ஏழை மக்களை, உயர்கல்வியிலிருந்து தள்ளி வைக்கவும் கொண்டுவரப்பட்ட தேர்வு முறைதான் நீட்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14 இலட்சம் பேரில் வெறுமனே 9154 பேர் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். அதிலும் தேர்ச்சியடைந்த மாணவர்கள் 1,337 பேர்தான். சரியாக சொல்வதென்றால் மொத்த தேர்ச்சி விகிதத்தில் 3% பேர்தான் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 97% பேர் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே.

நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் பின் தங்கியதைத் தொடர்ந்து, தமிழக பாடத்திட்ட்த்தின் மீது பழியைப் போடுகின்றனர் சில ’அறிவுஜீவிகள்’. சி.பி.எஸ்.ஈ. பாட்த்திட்ட்த்திற்கு இணையான பாட்த்திட்டம் இங்கு இல்லை என்று லாவணி பாடுகின்றனர். ”திராவிடக் கட்சிகள், பள்ளிக் கல்வியை சீரழித்த்தன் விளைவுதான் தமிழகம் பின் தங்கியதற்குக் காரணம்” என்கிறார் ராமதாஸ்.

நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் மாணவர்களைக் குழப்பும் பல்வகைப் பதில்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்ய மிகத் தீவிரமான பயிற்சி தேவை. அதே கேள்விக்கான விளக்கத்தை சாதாரண மாணவர்கள் சிறப்பாக பதிலளிப்பர். ஆனால் அத்தகைய பல் பதில்களிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது என்பது, அதற்கான் பிரத்யேகப் பயிற்சி பெறப்பட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது.

கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்துக் கூறுகையில், “சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல. இதே போல மேனிலைத் தேர்வு வினாத்தாள்களையும் மதிப்பிட வேண்டும். விளக்கமாக விடை எழுத வேண்டும். நீட் தேர்வில் பல்விடைகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். மாணவரைக் குழப்பும் வகையில் மாற்று விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதே வினாவிற்கு விடை எழுதச் சொன்னால் சரியாக எழுதுவார்கள்” என்கிறார்.

மேலும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளையும், பாடத்திட்டத்தை அமைக்கும் ஆசிரியர்களின் சிந்தனை முறையையும் தோலுறித்திருக்கிறார். ”பாடத்திட்டக் குழுவில் என்னைத் தவிர இரண்டு பள்ளி ஆசிரியர்கள் இருந்தார்கள். ……… . பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள். இந்திய கிராமங்களை அறியாதவர்கள். ஒரு குறிப்பிட்ட பாடம் மாணவர்க்குக் கடினமாக இருக்கும் என்று நான் சொன்ன பொழுது ஒரு பேராசிரியர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் எனது பெண் சுலபமாக விடை கூறுவார் என்று கூறினார். அனைவர்க்கும் உஙகளைப் போன்ற பெற்றோர் கிடையாது. யமுனையின் அக்கரையிலுள்ள காசியாபாத் பள்ளிக்குச் செல்வோம். மேற்சட்டையில்லாது கிழிந்த ட்ரவுசர் போட்ட மாணவர்களுக்குப் புரிய வைக்கத் தயாரா என்று வினாவெழுப்பினேன். சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கானது. இதனை புரிந்து கொள்ளாது பேசுவது சரியல்ல.” என்று கூறியிருக்கிறார்.

நீட் விவகாரத்தில் கீர்த்தனாவின் வெற்றியின் பின்னணியில் உள்ள மருத்துவர் பெற்றோரும், பிரதீபாவின் மரணத்தின் காரணமான ஏழ்மையான சூழலுமே சாட்சி.

தற்போது ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஸ்ணன், தனது முகநூல் பக்கத்தில் ” “நீட்” தேர்வில் நான் நிச்சயம் தோற்றிருப்பேன்; ஆனால் நான் தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதி வென்ற முதல் தமிழன்” என்று நீட் தேர்வு நடந்த கேவலமான முறையைச் சாடுகிறார்.

பணம் உள்ள மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில் இலட்சக்கணக்கில் செலவு செய்து, இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்று விடுகின்றனர். ஆனால், சாதாரண கிராமப்புற ஏழை மாணவர்கள், அத்தகைய உயர்தர பயிற்சிகள் ஏதும் கிடைக்கப்பெறாமல், இந்த போட்டித் தேர்வை சந்திக்கவியலாமல், தமது மருத்துவக் கனவை மாய்த்துக் கொண்டோ அல்லது உயிரை மாய்த்துக் கொண்டோ நீட் தேர்வை கடந்து செல்கின்றனர்.

இந்த ஆண்டு ‘நீட்’டிற்கு இரண்டு உயிர்கள் பலி கொடுக்கப்பட்ட பின்னரும், நீட் தொடரும் என தயக்கமின்றிச் சொல்கிறார் தமிழிசை. எத்தனை பேரைப் பலிகொண்டாலும், மனுநீதியின் புதிய வடிவத்தைக் கைவிட மாட்டோம் என்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் குரலைத்தான் எதிரொலிக்கிறார், தமிழிசை.

இது பார்ப்பன சதிக்கு சமாதி கட்டிய மண் என்பதை காவிக் கும்பலுக்கு நினைவு படுத்துவோம். அதுவே நீட் தேர்வின் கொடுங்கோன்மைக்கு களப்பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

  • வினவு செய்திப்பிரிவு.

சந்தா