வில்லவன்
வில்லவன்
சென்ற மாதத்தில் ஒரு ஞாயிறன்று குடிநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கு அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் (இலவச) சிகிச்சை குறித்து மரு.அரவிந்தன் சிவகுமார் மற்றும் மரு.சிறீராம் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்றின் விளம்பரத்தை முகநூலில் காண நேர்ந்தது. சும்மா கேட்டு வைப்போம் எனும் முடிவோடுதான் அங்கே பயணித்தேன். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தை கண்டறிய அரைமணி நேரமானது. இதில் வினோதம் என்னவென்றால் நிகழ்வு நடக்குமிடத்திற்கு அருகேயும் தேடிக் கொண்டிருந்தேன். கண்டுபிடிக்க இயலாமைக்குக் காரணம், ஒரு குடிசைப் பகுதியின் வாயிலில் இரண்டு பிரபல மனநல மருத்துவர்கள் கலந்துரையாடுவார்கள் என்பதை என் மனம் எதிர்பார்த்திருக்கவில்லை. இதுநாள்வரை கலந்து கொண்ட எந்த உளவியல் / மனநலம் சார்ந்த கூட்டமும் மக்களின் வாழிடங்களில் நிகழ்ந்ததில்லை.

அதிலும் வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மக்களை அவர்கள் வாழுமிடத்திலேயே சந்திக்கும் ஒரு மனநல நிகழ்ச்சியை நானறிந்த எந்த உளவியலாளரும் தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்கள். லயோலா மற்றும் ஸ்டெல்லா மேரீஸ் போன்ற சில கல்லூரிகளில் உள்ள சமூகவியல் / சமூகப் பணி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி இத்தகைய நிகழ்வுகள் யாவும் மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் பவர் பாயிண்ட் படைப்புகளோடு மட்டுமே காணக்கிடைக்கும்.

அதிகபட்சம் 20 பேர் கூடிய அந்த கலந்துரையாடல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது?

ஒரு மனநலத்துறை நிபுணருக்கு (மருத்துவர் மட்டுமல்ல) வார இறுதி என்பது இன்னொரு முரட்டு வருவாய் ஆதாரம். அப்போது நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆயிரங்களில் அவர்கள் பணம் வாங்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு மனநல மருத்துவர் நடத்திய இரண்டு நாள் பயிற்சி வகுப்புக்கு கட்டணம் தலைக்கு இருபதாயிரம். காதல் தோல்வியை கையாள்வது எப்படி என்பது அந்த வகுப்பின் தலைப்பு. கார்ப்பரேட் உலகை இலக்கு வைத்து நீங்கள் மனநலத் துறையில் முதலீடு செய்தால் வார இறுதி என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. மனநல சிகிச்சை மையம் ஒன்றின் நிர்வாகப் பதவிக்காக ஒரு பிரபல உளவியலாளருக்கு பேசப்பட்ட சம்பளம் மாதம் 5 இலட்சம்.

இத்தனை வருவாய் வாய்ப்புள்ள ஒரு சூழலில், இரண்டு உளநல மருத்துவர்கள் தமது ஞாயிறு விடுமுறையை சுகாதாரப் பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் செலவிட முன்வந்தது ஒரு மகத்தான முன்னெடுப்பு. மரு.அரவிந்தனிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு போதைக்கு அடிமையான பெண், வட்டிக்கு கடன் வாங்கி தனியார் ரீஹாப் மையம் ஒன்றில் சிகிச்சை பெற்ற சம்பவத்தை கேட்ட மறுவாரம் அவர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார் (அந்த வறிய நோயாளரின் குடும்பத்துக்கு அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை இலவசமாக கிடைக்கிறது எனும் செய்தி தெரிந்திருக்கவில்லை).

(மாதிரிப் படம்)

வறுமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, பிற மக்கள் காட்டும் அசூயை, அடிப்படை வசதியற்ற வாழிடம் (அவர்கள் வீடுகள் சிலவற்றுக்கு கதவுகளே இல்லை, சுவராக இருப்பவை பழைய ஃபிளக்ஸ் பேனர்கள், வீடுகளில் விறகடுப்புகள்தான் எரிகின்றன) ஆகியவை மனிதர்களை மனரீதியாக கடுமையாக காயப்படுத்தும். ஆகவே அவை பல மனநல பாதிப்புக்களை இழுத்து வரும். மனநலத்துறை எங்கே அதிகம் பணியாற்ற வேண்டுமோ அதுதான் அத்துறையால் அதிகம் புறக்கணிக்கப்படும் இடமாக இருக்கிறது.

கலந்துரையாடல் துவங்கிற்று. தங்களைப் பற்றிய எளிய அறிமுகத்துக்குப் பிறகு “உங்க தெருவுல எவ்வளவு பேரு டெய்லி குடிக்கிறாங்க” என கேட்கிறார் மருத்துவர். அதற்கு நாப்பது பேரு இருப்பாங்க என பதில் வருகிறது.

(இது அங்கு நடந்த உரையாடலின் ஒரு சிறு பகுதி)

கேள்வி : அதில் எத்தனை பேர் காலையிலையே குடிக்கிறாங்க?

அந்த 40 பேருமே காலையில குடிக்கிறவங்கதான், சாயாங்கலாம் குடிக்கிறவங்கன்னா கணக்கு இன்னும் அதிகமாவும் (இதனை அங்கிருந்த இரு பதின்வயது இளைஞர்கள் சொல்கிறார்கள்)

நான்கூட காலையிலையே ரெண்டு குவாட்டர் குடிச்சுட்டுதான் இங்க உக்காந்திருக்கேன். (அவருக்கு 35 வயதிருக்கலாம்).

அங்கே அமர்ந்திருந்த பல ஆண்கள் தாங்கள் குடிப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

கேள்வி : எதுனால குடிக்கிறீங்க / குடிக்கிறாங்க?

குடும்ப கஷ்டம்.

குடும்ப பிரச்சினை, வீட்டுக்கு வந்தாலே நிம்மதியில்லை.

(மாதிரிப் படம்)

வேலை அப்படி சார், நாய் செத்து நாத்தமெடுக்கும். கிட்ட போகவே முடியாது. வெரல் தண்டிக்கு (ஆள்காட்டி விரலை காட்டுகிறார்) புழு இருக்குற குப்பய வாரச்சொல்லுவாங்க. குவாட்டர் அடிச்சாத்தான் அதையெல்லாம் தைரியமா அள்ள முடியும்.

குப்பை வண்டி இழுக்குறேன், உடம்பு வலிக்கு குடிச்சாத்தான் தூங்க முடியும். நான் குடிச்சுட்டு வேலை பார்க்க மாட்டேன். ஒருவேளை காலைலயே குடிச்சிட்டேன்னா வேலைக்குப் போக மாட்டேன்.

இங்க இருக்குற பொம்பளைங்க என்ன வேலை செய்யுறாங்க?

குப்பை அள்ளுற வேலைதான்.

அவங்களும் அதே வேலையைத்தானே செய்யுறாங்க. அவங்க ஏன் குடிக்கிறதில்லை?

சிலருக்கு பதில் தெரியவில்லை, ஒரே ஒருவர் மட்டும் அவங்கள்ள சில பேரும் குடிக்கிறாங்க சார் என்றார்.

அங்கிருந்த பெண் ஒருவர் “13 வயசுலேருந்து இந்த வேலையை பார்க்குறேன். பதினேழு வருசமாச்சு. குடிக்காம இருக்கலாம் சார், எல்லாம் மனசுதான் காரணம்” என்கிறார்.

சரி, குடிக்கிறதுனால உங்களுக்கு என்னென்ன பிரச்சினை வருது?

வூட்டுல சண்டை.

புள்ளைங்களுக்கு நல்லதா எதையும் செய்ய முடியல.

நெறைய பணம் செலவாகுது. வீட்டு செலவுக்கு கொடுக்க முடியல.

கோவம் வருது, இதுவரை மூனு டிவியை ஒடைச்சுட்டேன்.

(இன்னொருவர்) “நான் ரெண்டு பீரோவை ஒடைச்சுட்டேன்”

அதில் ஒருவர் சொன்னது மிக முக்கியமான வார்த்தைகள் “ போதை தெளிஞ்ச பிறகு யோசிக்கையில நான் ஒரு சாத்தானைப் போல தெரியுறேன். மத்தவங்களை பார்க்க, பேச கூச்சமா இருக்கு. நம்மள யாரும் சேர்த்துக்க மாட்டாங்கன்னு தோணுது. சின்ன புள்ளையா இருக்குறப்போ விளையாட்டா கத்துக்கிட்டது, இப்போ விட முடியல. இன்னைக்கு அதைவிட சின்ன வயசுப் பசங்க குடிக்கிறதை பார்க்குறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகுது குடிக்க?

(மாதிரிப் படம்)

முன்னயெல்லாம் ஒரு கோட்டர் அடிச்சாலே போதுமா இருந்தது. இப்போ ரெண்டு கோட்டர் அடிச்சுட்டு உங்களாண்ட பேசிக்கிட்டிருக்கேன். ஒன்னுமே ஏறலை. தினமும் நானூறுலேருந்து ஐந்நூறு ரூபாய் ஆயிரும்”

சரியா தெரியல, சம்பளத்துல பெரிய செலவு இதுதான்.

உத்தேசமாக எல்லோரும் நானூறு ரூபாய்க்கேனும் குடிக்கிறார்கள். அதில் ஒருவர் காசில்லன்னா கிடைக்கிற இரும்பு, பாட்டிலை பொறுக்கிகிட்டு போய் எடைக்குப் போட்டாவது குடிச்சிடுறேன் என்றார்.

பிறகு நடந்த ஒரு உத்தேச கணக்கீட்டில் குடிக்கும் ஒவ்வொருவரும் ஆண்டொன்றுக்கு இரண்டில் இருந்து நான்கு இலட்சம் ரூபாய் வரை செலவிடுவது தெரிந்தது. இந்த செலவு கணக்கு குடியால் அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள், அவர்கள் எடுக்கும் விடுப்பு மற்றும் அவர்கள் சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

இந்த பணம் மிச்சமானால் நீங்க என்னவெல்லாம் செய்யலாம்?

வீட்டுல நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.

புள்ளைங்கள நல்ல எடத்துல படிக்க வைக்கலாம்.

வீட்டுல சண்டை இல்லாம பார்த்துக்கலாம்.

அவசரத்துக்கு தண்டல் வாங்க வேண்டாம்.

சரி நாம மட்டும்தான் குடிக்கிறோமா? இல்ல பணக்காரங்களும் குடிக்கிறாங்களா?

எல்லாரும்தான் குடிக்கிறாங்க.

நமக்கு குடியால வர்ற எல்லா பிரச்சினையும் அவங்களுக்கும் வருதா?

அது தெரியலையே.

அவங்க குடிக்கிற சரக்கு நல்ல சரக்கா இருக்கும்.

அவங்களுக்கு நமக்கு வருமளவுக்கு பிரச்சினைகள் வர்றதில்லை. ஏன்னா நீங்கசொல்ற மாதிரி அவங்க குடிக்கிறது நமக்கு கிடைக்கிறதைவிட நல்ல சாராயம்தான். அதுமட்டுமில்லை. அவங்க சத்தான சாப்பாட்டுக்காக செலவு பண்ண முடியும். உடம்புக்கு சின்னதா பிரச்சினை வரும்போதே வைத்தியம் பண்ணிக்கிறாங்க. அதனால அவங்க உடம்புக்கு பெரிய பிரச்சினையெல்லாம் சீக்கிரம் வர்றது இல்ல. ஆட்டோவோ, காரோ பிடிச்சு வீட்டுக்கு போகலாம். அதனால குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட் ஆகவும் வாய்ப்பில்லை. அதனால குடியினால உருவாகுற பிரச்சினைகள் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்குறதில்லை.

சரி, குடியை நாமளே நிறுத்த முடியுமா?

முடியும்னுதான் நினைக்கிறேன்.

கண்டிப்பா முடியும்.

எப்படி சொல்றீங்க?

நான் மாலை போட்டா குடிக்க மாட்டேன். அப்படீன்னா நம்மால முடியும்தானே..

சரி, அதையே ஏன் வருசம் முழுக்க செஞ்சுடலாமே.. ஏன் அது முடியறதில்லை?

(சிரிக்கிறார்கள்)

குடி முதல்ல ஒரு விளையாட்டு போல ஆரம்பித்து பிறகு ஒரு பழக்கமாகி கடைசியில் ஒரு நோயாக மாறுது. காலையிலயே குடிக்கிறது, குடிக்காம இருக்க முடியாதுங்குற நிலை, எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறலங்குற நிலை மற்றும் அதனால வர்ற உடல் பிரச்சினைகள் (அது குறித்து ஒரு சிறு விளக்கம் தரப்பட்டது) இது எல்லாமே குடி ஒரு நோயாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறி. ஒரு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்குறதுதான் நல்லது. மனசுதான் காரணம்னு சொன்னாலும் அது பலருக்கும் சாத்தியப்படுறதில்லை. குடியை மறக்க சிகிச்சைகள் இருக்கும்போது அதை எடுத்துக்கலாமே, எல்லாருக்கும் குடியை நிறுத்தனும்னு மனசு சொல்லுது. ஆனா அது செய்ய கஷ்டமானதா இருக்கு. அப்படீன்னா சுலபமா கிடைக்குற சிகிச்சையை எடுத்துக்கலாம் இல்லையா?

மனநல மருத்துவர் சிறீராம்.

அரசாங்க மருத்துவமனையில் குடி மீட்பு சிகிச்சைகள் இலவசமா கிடைக்குது. அது தெரியாம பலபேரு ஆயிரக்கணக்குல கடன் வாங்கி தனியார் ரீஹாப் மையங்களுக்கு போறாங்க. அரசு மருத்துவமனைகள்ல குடியை நிறுத்துற வழிகளை சொல்லிக்கொடுத்து அதை நிறுத்தும்போது வரும் உடல் பிரச்சினைகளை சரி செய்ய மருத்துகள் கொடுப்பாங்க. அதை முறையா பின்பற்றினா குடியை நிறுத்த முடியும். அந்த சிகிச்சையை எடுத்துக்க யாராவது தயாரா இருக்கீங்களா?

மூன்று பேர் உடனடியாக் ஒப்புக்கொள்கிறார்கள். இன்னொருவர் வந்து பார்த்துட்டு முடிவு பண்றேன் என அரை மனதோடு ஒப்புக்கொள்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் குடிநோயாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இந்த நான்கு எனும் எண்ணிக்கை மிக அற்பமானது. அந்த நால்வரையும்கூட சிகிச்சை வரை அழைத்துவர முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். ஆனாலும் இத்தகைய உரையாடல்கள் குடியால் கடுமையாக பாதிக்கப்படும் இடங்களில் நிகழ்வது அதி அத்தியாவசியமான முன்முயற்சி. அவர்களிடம் இருந்து உழைப்பை பறித்துக்கொண்டு ஒதுங்கிச்செல்லும் மனிதர்களாவே நாம் இருக்கிறோம். மனநலத்துறை எப்போதும் எளிய மக்களை நாடிசெல்வதில்லை. பெரும்பாலான மனநல பிரச்சினைகளுக்கு சமூக பொருளாதார காரணிகளே அடிப்படையாக இருக்கின்றன.

அரசியல், சமூகத் தளத்தில் இருந்து அவர்களுக்கு பணியாற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு உளவியல் துறையில் இருந்தும் பணியாளர்கள் அவசியம். மனநல பிரச்சினைகள் முதலில் ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் ஒரு இடையூறாக துவங்கி இயலாமையாக மாறி இறுதியில் மனரீதியிலான ஊனமாக மாறக்கூடும். மனநலத்துறை தொடர்ந்து சாமானிய மக்களிடம் செயல்படும்போது மக்களிடம் மனநல இடையூறுகள் உருவாகும்போதே சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கும்.

தற்கொலைகள், குடிநோய், மன அழுத்தம், தீவிர சைக்கோசிஸ் நோய்கள் ஆகியவை ஆரம்ப கட்டத்தில் சற்றே எளிதாக சரிசெய்யக்கூடியவை. தீவிரமான பிறகு அதற்கான செலவுகள் மலைக்க வைக்கும். குடிநோய் மீட்பு மையங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாயை சாதாரணமாக வசூலிக்கின்றன. அதுவும் மாதக்கணக்கில் சிகிச்சை தேவைப்படும். மருத்துவமனைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல்தான் மனநல சிகிச்சையை சிக்கலானதாக மாற்றுகிறது. ஏனைய உடல்நல பிரச்சினைகளைப்போல பெரும்பாலான மனநல பிரச்சினைகளையும் முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அதற்குரிய நடைமுறைக்கு உகந்த பாடங்கள், பயிற்சிகள் மற்றும் களச்செயல்பாடுகள் நம்மிடையே கிட்டத்தட்ட இல்லை.

மனநல மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்.

மனநலத்தை தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையாக கருதி தனிப்பட்ட தீர்வுகளை மட்டுமே நம்பியிருப்பதால் பல தருணங்களில் சிகிச்சைகள் தோல்வியடைகின்றன. அந்த இயலாமை மனநலத்துறை ஆட்களைக்கூட ஜக்கி போன்ற சாமியார்களிடம் சரணடைய வைக்கிறது. இதனால்தான் ஆரா எனர்ஜி, குட் ஸ்பிரிட், பாசிடிவ் எனர்ஜி / வைபிரேஷன், பிரானிக் ஹீலிங் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத குப்பைகளை ஆராதிக்கும் பல உளவியல் “நிபுணர்கள்” உலவுகிறார்கள். உளவியல் பிரச்சினைகளை உருவாக்குகிற மற்றும் அதனை தீவிரமாக்கவல்ல காரணிகள் நோயாளி வாழும் சமூக சூழலில் இருக்கின்றன. பிணியாளர்களோடு உடனிருப்போரது துயரங்கள் என்பது கண்டுகொள்ள ஆளில்லாமல் நிற்கும் இன்னுமொரு அனாதை. இவை குறித்த செயல்பாடின்மை மனநலத்துறையின் பெரும் சாபம்.

நோய்க்கிருமியை கட்டுப்படுத்தத் தெரியாமல், ஒரு மருத்துவர் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு நிகரான நிலை இது. அது கொடுக்கும் விரக்தியும், குற்ற உணர்வும்கூட மனநலத் துறையில் இருக்கும் பலரை போலி அறிவியலை நோக்கி தள்ளக்கூடும். அது இன்னொரு வகையான மனநோய் போன்றதே (யோகா, ஆரா, பிரானிக் ஹீலிங் ஆகியவற்றைப்பற்றி எதிர்மறையாக பேசினால் பாய்ந்து பிராண்டிவிடும் அளவுக்குப் போகிற உளவியல் வல்லுனர்களை சந்தித்திருக்கிறேன்). பெரிய உயரங்களைத் தொடுவார் என எதிர்பார்த்த ஒரு உளவியல் முனைவர் இப்போது ஏதோ பாத சிகிச்சை நடத்துவதாக அனுப்பிய செய்தியின் திகைப்பு எனக்கு இன்னமும் குறையவில்லை.

படிக்க:
மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

மக்களைக் காப்பதெல்லாம் பிறகு, முதலில் உளவியல் / மனநலத்துறை ஆட்கள் தம்மை போலி சிகிச்சை மற்றும் போலி நம்பிக்கைகளில் இருந்து காத்துக்கொள்ளவேனும் மக்களை நோக்கி சென்றாக வேண்டும். வல்லுனர்கள் தயாராக இல்லை என நினைப்பதும் மக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என நினைப்பதும் தவறான நம்பிக்கைகள் என்பதை உணர மேலே விவரித்த நிகழ்வு  ஒன்றே போதுமானது. மூடப்பட்ட அறைகளில் இருந்து மனநலத்துறை வெளியே வரட்டும், அதன் வழியே தமக்கான மனநலத்தை பெற்றுக்கொண்டு பிறரது மனநலத்தையும் பேணட்டும்.

பின்குறிப்பு : குடிநோயின் அரசியல் காரணங்களை விவரிப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. இது மனநலத்துறை எளிய மக்களை சென்றடைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்ட எழுதப்பட்டது. ஆகவே இந்த பதிவில் அதுகுறித்த உரையாடல்கள் சேர்க்கப்படவில்லை.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

2 மறுமொழிகள்

  1. அருமையான கட்டுரை . . !
    உளநல மருத்துவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி . . !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க