சார் எங்கம்மா இறந்துட்டாங்க அதனால என் பொண்ண டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிகிட்டு போவணும். நீங்க அவள டிஸ்சார்ஜ் செய்யுங்க என்றார் அந்த 15 வயது நோயரின் தாய். அப்போது இரவு 7.30 மணியிருக்கும். மதியம் 1.30 மணிக்கு நான் தான் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தேன்.

“சார் ரெண்டு நாளா தூங்க மாட்றா, செத்துடறேன்னு சொல்லி மெரட்ரா, கோபப்பட்டு பொருளை போட்டு உடைக்கிறா…” அடுக்கிக் கொண்டே போனார் பெண்ணின் அம்மா.

அவர் கைகளில் வரிவரியாய் கீறல் தழும்புகள், இதென்னம்மா என்றேன்.

“உடம்பு முழுக்க இப்படி கிழிச்சிக்கிறா சார் கை, கால்கள்… கோபம் வந்தா இப்படி செய்றா…” என்றார் அவர். அழுது சிணிங்கிக் கொண்டே இருந்தார்  அந்த பெண்.

“சார் இவளுக்கு கஞ்சா குடிக்கிற பழக்கம் இருந்தது , மூணு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் வேற பண்ணிகிட்டா…” என்றார் அவர் தாய்.

“நான் இப்ப கஞ்சா குடிக்கிறதில்லை சார் இவங்க பொய் சொல்றாங்க அது ரீஹாப்புக்கு போறதுக்கு முன்னால தான்…” என்றார் அழுதபடி.

ஏம்மா நீங்க எந்த ஏரியா என்றேன் நான்..

ஓட்டேரி பிரிக்கிளின் ரோடு சார்.

ஏம்மா 200 வருஷமா கீழ்பாக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில் போதை பொருள், குடிக்கு டிரீட்ட்மெண்ட் குடுக்குறோமே உங்களுக்கு தெரியாதாமா?

தெரியாது சார் என்றார் அப்பாவித்தனமாக. “சார் எங்க ஏரியாவுல இருக்கிறவங்க……… ஏரியாவுல இருக்கிற ரீஹாப் அட்ரஸ் கொடுத்தாங்க மூணு மாசம் வெச்சிருந்தேன் சார்” என்றார்.

படிக்க :
மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

எவ்வளவு மா செலவு செஞ்சே… மாதம் எவ்வளவு மா கட்டினே…?

மாசம் 10,000 சார் அட்வான்சு 10,000 ரூபா… 60,000-க்கு மேல செலவாயிடுச்சு சார்.

அதுக்கு வட்டி அசல் சேர்த்து ஒரு லட்சம் செலவழிச்சிருக்கியேம்மா. இலவசமா மெண்டல் ஆஸ்பத்திரியிருக்கே என்றேன் முட்டாள்தனமாக ஆதங்கத்தில்…

அந்த தாய்க்கு அ.ம.கா-வில் (அயனாவரம் மனநல காப்பகம்) போதை நீக்கியல் துறை இருக்கிறது தெரியாமல் தான் ரீஹாபுக்கு சென்றார் என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் பேசினேன்.

இவர் யாரும்மா?

இவர் தான் என் பொண்ண கட்டிக்கிட்டவன்.

உனக்கென்ன வயசயசுப்பா?

பத்தொம்பொது சார் என்றான் அவன்.

அம்மா நான் அட்மிஷன் போடறேன் நீங்க யாராவது தங்கணும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இருக்கலாம்.

சார் நான் வேலைக்கு போணாதான் சாப்பாடு என்றார் அந்த தாய், அரை மனசோடு ஒப்புக்கொண்டார் பெண்ணின் கணவர். நேற்றைய இரவு பணியில் முதல் உரையாடல் நிகழ்ந்தது மதியம் 1.30மணி.

இரவு 7.30மணிக்கு அந்த பெண்ணின் தாய் டிஸ்சார்ஜ் கேட்டதும் பெண்ணின் கணவனிடம் “அவங்க அம்மா ஆகவேண்டியத பாக்க போவட்டும. நீ கூட தங்கேம்பா” என்று கேட்டேன்.

“சார் நான் 7.30 மணிக்கு வேலைக்கி போவணும் இல்லைன்னா வேலைய வுட்டு எடுத்துருவான் சார்…” என்றான் அப்பாவித்தனமாக.

”நீ உடனே வேலைக்கு கிளம்பு” என்றேன்.

தான் வேலைக்கு செல்லவேண்டும் என்பதால் தன் தாய் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி டிஷ்சார்ஜ் வாங்கி சென்ற அந்த பெண்ணும் அவர் குடும்பத்தையும் நினைத்து நேற்று இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. பல கேள்விகள் என் மனத்திரையில் மோதிக்கொண்டே இருந்தன.

*****

யனாவரம் மன நல காப்பகத்திலிருந்து 2 கிமீட்டர் தொலைவு கூட இல்லாத செங்கற் சூளை சாலை, ஓட்டேரி பகுதி மக்களுக்கு பொது மருத்துவமனையில் போதை நீக்கியல் துறை இருக்கிறது என்பது அறியாமல் இருக்கின்றனர்.

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் விட்டது யார் தவறு? எங்கோ  இருக்கும் ரீஹாப் மையத்தின் முகவிரி கொடுத்த அக்கம்பக்கத்தினர் ஏன் அ.ம.கா-வின் முகவரியை சொல்லவில்லை?

மாறிவரும் சூழலில் பதின் பருவருத்தினர் மனநலம் என்ற மையக் கருவில் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டதென்று நினைக்கிறேன். மாறிவரும் சூழல் எதை குறிக்கின்றது?

படிக்க :
♦ அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !
♦ பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை !

மிகபெரிய பொருளாதார நெருக்கடியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களை சர்வசாதாரணமாக நீங்க கூட இருந்து தான் ஆகணும் என்று சொல்வது மாறிவரும் இன்றைய சூழலில் சரியான வாதமா?

உலக வங்கியின் கொள்கை முடிவுகளை அதி வேகமாய் தீவிரமாய் நடைமுறைப்படுத்திவரும் நடுவண் அரசின் நவதாராள கொள்கை முடிவுகளால் தூள்தூளாக்கப்படும் பொது சுகாதாரத்துறையும், அதி வேகமாய் வளர்த்துவிடப்படும் தனியார் மையங்களும் இருக்கும் இந்த சூழலில் மாறி வரும் இன்றைய சூழலை ஒரு மருத்துவனாய் எப்படி புரிந்து கொள்ளாமல் மனநலத்தை பேணுவது பற்றி பேசமுடியும் ?

அப்படி பேசினால் யாருடைய பார்வையில் இருந்து பேசுவதாக அமையும்?

அரசு மருத்துவமனையில் உடனாளாரக இருந்தால் இன்றைய பொழுது சம்பளம் போகும். நாளை வேலை போகும். அதற்கு பதிலாக தனியார் மையத்தில் நோயரை சேர்த்தால் வேலைக்கு உத்திரவாதம்.

ஆனால் ரீஹாபுக்கு செலவழிக்க மீட்டர் வட்டிக்கு கடன் வாங்க வேண்டும்.  கடன் கட்ட வேலையாவது இருக்கிறது என்ற நடைமுறை லாஜிக்கில்தான் சாமானிய மக்கள் தனியார் ரீஹாப் மையங்கள் நோக்கி சிக்கிக் கொள்கின்றனர்.

“மாறிவரும் சூழல்” குறித்த பிரக்ஞையே இல்லாமல் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தி, உடனாளர்களை சிறைவைப்பதால் பதின்பருவத்தினர் மனநலம் மட்டுமல்ல உடனாளர் மனநலத்தையும் குலைத்துவிடுகிறோம்.

சிகிச்சைக்காக சட்டைப்பை செலவினத்தால் கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் இன்றைய சூழலில் நோயர்களை தனியே அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.

மனநல மருத்துவர்கள் தாங்களே தங்களை  சிறைவைத்துக் கொண்ட பெல் ஜார்களை விட்டு வெளியே வந்து உலகை கவனிக்கவேண்டும், மக்களை பார்க்க வேண்டும், அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை தெரிந்தால் தானே புரிதலை நோக்கி பயணிக்க முடியும். புரிந்தால் தானே மக்களுக்கு உகந்த கொள்கை முடிவுகளை முன்வைக்க முடியும். அதுவும் மக்களை மையப்படுத்தியதாக இருக்கும்.

2004-ன் முற்பகுதிவரை  நோயாளிகளை உள்ளே காப்பகத்தில் அனுமதித்த இயக்குனர் மரு.முருகப்பன் ஏன் 2004-ன் பிற்பகுதியிலிருது காப்பகத்தில் நோயாளிகளை அனுமதிக்காமல், உடனாளர் இருக்கும் பொது வார்டில் அனுமதித்தார் என்பது அவர் மாறி வந்த அன்றைய சூழலை புரிந்து கொண்டு எப்படி கையாண்டார் என்பது வரலாறு .

என்.ஜி.ஓ ஒன்றின் ஆய்வகமாக ( NGO testing lab) அ.ம.கா மாற்றப்பட்ட 2004 வருடம் 2000 -த்துக்கும் மேல் நோயாளிகள் குவியத்தொடங்கிய போது ( நாளொன்றுக்கு சராசரியாக 5 நோயாளிகள் என்.ஜி.ஓக்கள் அழைத்து வந்த காலம் ) உள் கட்டமைப்பு சிக்கல், ஏற்கெனவே இருந்த நோயர்களின் பராமரிப்பு, மனநலமருத்துவர்கள் 8 பேர் மட்டும் இருந்த நிலையில் மாறி வந்த அச்சூழலில் அந்த முடிவெடுத்தார் டாக்டர் முருகப்பன்.

இன்று முருகப்பன் இருந்திருந்தால் அவர் நிச்சயம் என்ன செய்திருப்பார் என்று நமக்கு தெரியும் அவர் முடிவு நோயர்களை மட்டுமல்ல மக்களை மையப்படுத்தியே இருந்திருக்கும்.

மாறிவரும் சூழல் உழைக்கும் சாமானிய மக்களுக்கு எதிராக உள்ளது. அது அவர்களுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கின்றது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே மக்களின் மனநலத்தை மேம்படுத்தும் வழியை நாம் முன்வைக்கமுடியும்.
இல்லையேல் மாறிவரும் சூழல் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அவர்களையே  வலுசேர்க்கும் வழியில் நம் செயல்பாடு அமைந்து விடும்.

நம்மை மக்களின் எதிர் துருவத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

நன்றி : முகநூலில் மருத்துவர். அரவிந்தன் சிவக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க