Sunday, March 26, 2023
முகப்புசெய்திஇளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !

இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !

-

மிழகத்தின் தலைநகரான சென்னையில் கொடி கட்டி பறக்கிறது கஞ்சா போதை. தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக அதிகரித்துள்ளது. ”போலீஸ் தீவிர வேட்டை! , கஞ்சா விற்பனை பிரமுகர் கைது!“ என்பது போன்ற பத்திரிக்கை செய்திகள் அவ்வப்போது வந்தாலும் கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின்  எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆந்திரா மாநிலத்திலிருந்து ரயில்களிலும், பஸ்களிலும்  பார்சலாக கஞ்சா சென்னைக்கு  அதிகளவில் கொண்டு வரப்படுகிறது என்றும் அங்கு சோதனையில் இருக்கும் போலீசார், கஞ்சா வியாபாரிகளிடம் ஒரு பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கஞ்சாவை கைமாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளது தினகரன் நாளிதழ் . சமீபத்தில் கூட சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கே.கே.நகர், தண்டையார்பேட்டை, பீச் ஸ்டேஷன், புரசைவாக்கம், டி.பி சத்திரம், மெரினா லைட் ஹவுஸ், ஐஸ் அவுஸ் சிவராஜபுரம், சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில், வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் கொருக்குப்பேட்டை உட்பட சென்னையை சுற்றி இருக்கக்கூடிய முக்கிய ரயில் நிலையங்களில் புரோக்கர்கள் மூலமும்,  குடியிருப்புப் பகுதி மற்றும் டாஸ்மாக்  அருகில் சிறுவர்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது என அந்நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது. இவ்வளவு ஏன்? தலைமை செயலகம் எதிரிலேயே அமோகமாக விற்பனை நடக்கிறதாம். ’கிரிமினல்கள்’ அதிகம் உலாவும் இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை!

இங்கு கஞ்சா வாங்குவதற்கு குறியீட்டுச் சொல் உள்ளது. இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள ஆட்டோ டிரைவர்,  பெட்டி கடைகாரர்களிடம் குறிச்சொல்லைக் கூறி கேட்க வேண்டும். பழக்கம் இல்லாத ஆட்கள், பார்ப்பதற்கு  சந்தேகிக்கும் படியாக இருப்பவர்கள் என்றால் சற்று யோசிப்பார்கள், ஒரு சில சிறிய சோதனைகளுக்குப் பிறகு விற்கப்படும் இடத்தையும், புரோக்கரையும் காட்டி விடுவார்கள். இது ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை உங்களுக்கு கொடுக்கலாம். இருப்பினும் இது தான் உண்மை.

நேரு பார்க்கில் உள்ள தபால் நிலையத்தின் பின்புறத்தில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களின் மறைவில் 18 வயதிருக்கும் இளைஞர் ஒருவர் கஞ்சாவைக் கையில் கொட்டி, அதனை சிகரெட்டுக்குள் திணித்துக் கொண்டிருந்தார். அவரிடம் என்னவென்று கேட்டதற்கு, ”கஞ்சாவை சிகரெட்ல போட்டு அடிச்சா ஃபுல் போதை கிடைக்கும். ஒரு நாள் முழுக்க இந்த போதை அப்படியே இருக்கும். மற்ற எதுலயும்  இந்த மாதிரி போதை இருக்காது. வேணும்னா நீங்க ஒரு இழுப்பு இழுத்து பாருங்க… உங்களுக்கே தெரியும்” என்று கூறினார். எங்கே கிடைக்கிறது என்று கேட்டதற்கு, “இங்க எல்லாம் அசால்டா கிடைக்கும். நூறு ரூபா தான்… வாங்க வேணும்னா கூட்டிட்டு போகட்டுமா?” என்று கேட்டுவிட்டு கஞ்சாவின் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

கஞ்சா வியாபாரிகளின் இலக்கும் இவர்களைப் போன்ற இளைஞர்கள், மாணவர்கள் தான். ஒருமுறை இதற்கு பழக்கப்படும் மாணவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாணவர்களின் சிந்தனை சீரழிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். இந்த பாதிப்பு நாளடைவில் வன்முறையாகவும் வளர்கிறது. சமீபகாலமாக  சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கொலைகளுக்கு கஞ்சா  முக்கிய காரணமாக உள்ளது.  பொது இடங்களில் கிடைத்த கஞ்சா, தற்போது ஒருபடி மேலே சென்று கல்வி நிலையங்களிலும் தாராளமாக கிடைப்பதாகக் கூறுகிறது தினகரன் நாளிதழ்.

கஞ்சா போதைக்கு அடிமையாகும் சில மாணவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கஞ்சா வியாபாரிகள், அவர்களுக்கு கமிஷன் கொடுப்பது, சில பாக்கெட்கள் இலவசமாக கொடுப்பது என்று தங்களுடைய வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

”தற்போது பெரும்பாலான கல்லூரி மாணவ, மாணவிகள் டோப் விற்கப்படும் இடத்திற்கு வந்து வாங்கி செல்வதோ அல்லது புரோக்கருக்கு பணம் கொடுத்து வாங்கி கொள்வதோ எளிமையானதாகவும், சகஜமானதாகவும்  மாறியுள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் உயர் நடுத்தர இளம்பெண்கள் அதிகம் போதைக்கு அடிமையாகி சீரழிகின்றனர். ஐ.டி கம்பெனியில் வேலை செய்பவர்கள் வார இறுதி விடுமுறையில் பப், பார் செல்லும் போது அவர்களுக்கு அங்கேயே எளிதில் கஞ்சா கிடைக்கிறது. இவை அனைத்தும் பெரும்பாலும் போலீசின் ஆசியோடு தான் நடக்கிறது” என குறிப்பிடுகிறது தினகரன் நாளிதழ்.

இது போன்று சென்னை முழுவதும், பொது இடங்களில் கஞ்சா புழங்குவதாகப் பலரும் போலீசிடம் கூறியும், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சமிபத்தில் சட்டவிரோதமான குட்கா விற்பனை விவகாரத்தில்இலஞ்சம் வாங்கியதாக  சென்னை கமிஷனர் ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான ஆதாரமும் வெளிவந்தது நினைவிருக்கலாம். அவர்கள் மீது பெயரளவில் கூட சட்டம் பாயவில்லை. எவ்வித நீதி விசாரணையும் நடத்தப்படவில்லை. இத்தகைய சட்டமும் போலீசும் கஞ்சாவை ஒழிக்கும் என நம்ப முடியுமா ?

 

செய்தி ஆதாரம் :
சென்னையில் கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை
கஞ்சா போதையில் விபரீதம்: மயிலாப்பூரில் சிறுவன் கொலை

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க