privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்

பெட்டகம் : ஐ.டி.சி ஊழல் புகையில் கோடிகள் மாயம்

-

ஐ.டி.சி  சிகரெட் கம்பெனி 1997-ம் ஆண்டில் செய்த ஊழல் குறித்த கட்டுரை

ன்றாடம் சிகரெட் பிடிக்கும் வழக்கமுள்ளவர்கள் கட்டாயம் ஐ.டி.சி. (ITC) என்கிற பகாசுரக் கம்பெனிக்கு பணம் கொடுத்தாக வேண்டும். சிகரெட் உற்பத்தியில் ஏகபோகமாய் விளங்கும் இந்த இந்திய புகையிலை நிறுவனம் தற்போது வேறு பல துறைகளிலும் இறங்கி, சர்வதேச அளவிலும் தனது கிளை நிறுவனங்களைத் துவக்கியுள்ளது. அதனுடைய மூலதன மதிப்பு 1997-ம் ஆண்டின் படி ரூ.5,100 கோடி.

சிகரேட்
சிகரேட்

ரூ. 350 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்ததாக இந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வந்துள்ளனர். இதன் முன்னாள் தலைவர்கள் கே.எல். சக் மற்றும் ஜே.என். சாப்ருவும் கைது செய்யப்பட்டு, நீண்ட நாள் கழித்து பிணையில் வெளிவந்தனர்.

இந்திய புகையிலை நிறுவனம் இந்தியாவில் நட்சத்திர விடுதிகளும் உணவு விடுதிகளும் நடத்தத் தொடங்கி வெற்றி பெற்றது. இதனடிப்படையில் 1989-ல் அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் இந்திய உணவு விடுதியைத் தொடங்கியது. அங்கிருந்த இந்திய மருத்துவர்களிடம் நிறைய இலாபப் பங்கு கிடைக்கும் எனக்கூறி பங்கு பத்திரம் மூலம் நிதி திரட்டியது. ஆனால் உணவு விடுதி பெருத்த நட்டமடைந்தது.

நிறுவனம் நட்டமடைந்தது வெளியே தெரிந்தால் கெட்ட பெயர் வரும் என்பதற்காக பத்திரங்களுக்கு இலாபப் பங்கு தர ஐ.டி.சி. திட்டமிட்டது. ஏற்கனவே ஐ.டி.சி.யின் பத்ராசலம் பேப்பர் கம்பெனிக்கு பழைய பேப்பர்களைக் கொடுத்து வந்த நியூ ஜெர்சியிலிருக்கும் சுரேஷ் சித்தா லியா, தேவாங் சித்தாலியா என்பவர்கள் மூலம் முதலீட்டாளர்களுக்கு இலாபப் பங்கு தந்தது. இதற்காக ஐ.டி.சி. இவர்களுக்கு 40 லட்சம் டாலர்களைக் கொடுத்தது. இது முதல் அந்நியச் செலாவணி மோசடி, இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை.

ஐ.டி.சி.யின் முன்னாள் தலைவர்கள் கே.எல்.சக் மற்றும்  ஜே.என். சாப்ரு
ஐ.டி.சி.யின் முன்னாள் தலைவர்கள் கே.எல்.சக் மற்றும் ஜே.என். சாப்ரு

பின் 40 லட்சம் டாலர் எப்படிக் கிடைத்தது? தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு சித்தாலியாக்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு அனுப்புவது. அவர்கள் சர்வதேச விலையில் (அதாவது கூடுதல் விலைக்கு) விற்று, கூடுதல் பணத்தை வைத்துக் கொள்வார்கள். அதேபோல ஐ.டி.சி. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது கூடுதல் விலைக்கு கணக்கெழுதி சித்தாலியா நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்வது. இதில் கிடைக்கும் அதிகப்படி டாலரை சித்தாலியாக்கள் எடுத்துக் கொள்வார்கள். இப்படி ஏற்றுமதி – இறக்கு மதியில் அந்நியச் செலாவணி மோசடி செய்துள்ளனர்.

உணவு விடுதி நட்டத்தை ஈடுகட்ட சித்தாலியாக்களுடன் ஏற்பட்ட உறவு வேறு பல வழிகளிலும் தொடர்ந்தது. புதிய பொருளாதாரக் கொள்கையின் சலுகைகளைப் பெறவும் இந்த அந்நியச் செலாவணி மோசடி தொடர்ந்து நடத்தப்பட்டது. இப்படி நடந்த மோசடியின் விளைவாக சித்தாலியாக்களுக்கும் ஐ.டி.சிக்கும் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. சித்தாலியாக்கள் ஐ.டி.சி.க்கு 1.6 கோடி டாலர் தர வேண்டும் என ஐ.டி.சி. அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. சித்தாலியாக்களோ தாங்கள் பணம் தரவேண்டியதில்லை. ஐ.டி.சி.தான் பணம் தர வேண்டும். தவிர தங்களை இழிவுபடுத்தியதால் மான நஷ்டமும் தர வேண்டும் என சுமார் 5 கோடி டாலர் ஐ.டி.சி. தரவேண்டும் என எதிர் வழக்கு தொடுத்தனர்.

குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழியையும் பறித்த கதையாக சித்தாலியாக்கள் இந்தியாவிலுள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தமக்கு சட்டப் பாதுகாப்பு கேட்டுப்பெற்று. ஐ.டி.சி. நிறுவனத்தின் அந்நியச் செலாவணி மோசடியை ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்து விட்டனர். இதனடிப்படையில் அக்டோபர் 30-ல் தொடங்கி ஐ.டி.சி.யின் உயர் அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதன் முன்னாள் தலைவர்களான சாப்ருவும், சக்கும் தான் இந்த மோசடிகளை நடத்தியவர்கள் என்பதால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுதும் ஐ.டி.சி. நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஐ.டி.சி. நிறுவனம் இதுவரை 800 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வழக்கும் கடந்த ஒரு ஆண்டாக நடந்து வருகிறது.

***

ஷா வாலஸ் பொருட்கள்
ஷா வாலஸ் பொருட்கள்

ஷா வாலஸ் என்கிற சீமைச் சாராய உற்பத்தி செய்யும் ஒரு பகாசுரக் கம்பனியும் அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியுள்ளது. அதன் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மோசடி செய்துள்ள மொத்த மதிப்பு ரூ.150 கோடி.

ஷா வாலஸ் நிறுவனத்திலுள்ள தொழிற்சங்கமே வழக்கு தொடுத்து இந்த மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் மனு சாஃப்ரியா என்கிற வெளிநாட்டு இந்தியர் மோசடியே மூலதனம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு திடீர்ப் பணக்காரராகிய இவர் இன்று இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவராவார்.

ஷா வாலஸ் தொழிற்சங்கத்தினரின் வழக்கே நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான். மோசடிகளால் இந்நிறுவனமே மூடப்படும் அபாயமுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

***

இந்த இரு அந்நியச் செலாவணி மோசடிகளைத் தொடர்ந்து 50 பெரிய தொழில் நிறுவனங்கள் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன.

1991 பட்ஜெட் தாக்கலின் போது மன்மோகன் சிங் மற்றும் 1997 பட்ஜெட் தாக்கலின் போது சிதம்பரம்
1991 பட்ஜெட் தாக்கலின் போது மன்மோகன் சிங் மற்றும் 1997 பட்ஜெட் தாக்கலின் போது சிதம்பரம்

1994-95-ல் இந்திய தொழில் நிறுவனங்கள் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியது ரூ. 663 கோடி என்றிருந்தது. இது 1995-96ல் ரூ.1447 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அதிகாரிகள் தமது அறிக்கையில் இதுவரை நடந்துள்ள வருமான வரி-சுங்கவரி ஏய்ப்பு மட்டும் ரூ.10,000 கோடி இருக்கும் என மதிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. உற்பத்தி முழுவதும் ஏற்றுமதியை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளது. தவிரவும் சர்வதேச அளவில் வியாபாரத்தை நடத்த ஊக்குவிக்கின்றனர்.

இந்நிலையில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைக்குப் பொருந்தாது என எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகளும் கூக்குரலிடுகின்றன. ஏற்கனவே மன்மோகன் சிங் தனது காலத்தில் அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். அது போதாது. இச்சட்டத்தை முற்றாகத் திருத்த வேண்டும் என்கின்றனர் தரகு முதலாளிகள்.

தவிர தற்போது ஐ.டி.சி. மற்றும் ஷா வாலஸ் கம்பனிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்தியாவின் தொழிற்துறையையே சீர்குலைக்கிறது. வெளிநாட்டிலிருந்து ரூ.14000 கோடி ரூபாய் மூலதனம் போட உள்ள அந்நியக் கம்பெனிகள் தயங்குகின்றன. எனவே உடனடியாக அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் தளர்த்தப்பட வேண்டும் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரிந்துகட்டி எழுதுகின்றனர். நமது சிதம்பரமும் அவசர அவசரமாகத் திருத்தி எழுதி வருகிறார்.

பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது.
பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது.

நமது வளத்தை நூற்றாண்டுகளாக ஆங்கிலேயன் சுரண்டிச் செல்கிறான். போலி சுதந்திரம் என்பது அம்பலப்பட்டு நாறத் தொடங்கிய போது, அதை மூடி மறைக்க அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம், ஏகபோகத் தடுப்புச் சட்டம் என மாய்மாலம் செய்தனர். தற்போது மீண்டும் மறுகாலனியாக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு இவை தேவையற்றவை என ஏகோபித்த குரலில் தரகு முதலாளிகள் எதிர்க்கின்றனர்.

எற்கனவே பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் (BAT) இந்திய கிளையாயிருந்த இம்பீரியல் புகையிலை நிறுவனம் 1971க்குப் பின் இந்திய புகையிலை நிறுவனமாக (ஐ.டி.சி.) புது அவதாரமெடுத்தது. தற்போது இங்கிலாந்தின் பிரிட்டிஷ்-அமெரிக்க புகையிலை நிறுவனம் ஐ.டி.சி.யை மீண்டும் கைப்பற்ற முனைந்துள்ளது. அதற்கான நாடகத்தின் ஒரு பகுதி தற்போது அரங்கேறியுள்ளது. அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தை நீக்கி அடுத்த காட்சி அரங்கேறப் போகிறது. தரகு முதலாளிகள் கைதட்டி ஆரவாரிக்கக் காத்திருக்கின்றனர்.

– பாரி

பெட்டிச் செய்தி:

ஐ.டி.சி மோசடியில் அதிகாரிகளின் பங்கு

அந்நியச் செலவாணி மோசடி நடந்துள்ள ஐ.டி.சி நிறுவனத்தில் மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மொத்த மூலதனத்தில் 32 சதவீதப் பங்குகள் வைத்துள்ளன. எனவே நிதி நிறுவன அதிகாரிகள் ஐ.டி.சி நிறுவன நிர்வாகிகளாக உள்ளனர். நிறுவனம் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது இயக்குனர்களுக்கு தெரியாமல், அவர்களது சம்மதமின்றி முடிவெடுக்க இயலாது.

சித்தாலியாக்களுடனான உறவு, அவர்களின் மூலம் ஏற்றுமதி – இறக்குமதி, அதில் மோசடி – இதெல்லாம் இயக்குனர்களாக உள்ள நிதி நிறுவன அதிகாரிகளுக்கு தெரிந்தே, அவர்களது ஆதரவுடனே அரங்கேறியுள்ளன. ஆனால், இன்றைக்கு இந்த அதிகாரிகள் தமக்கு எதுவும் தெரியாது எனக் கைவிரித்து விட்டனர். அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அதிகார வர்க்க முதலாளிகள் எவ்விதச் சிரமுமின்றி கோடிக்கணக்கில் நமது செல்வங்களைச் சூறையாடுகிண்றனர். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் ராஜீவ் பெயர் தான் வெளிவந்தது – சம்பந்தப்பட்ட அதிகார வர்க்க கும்பல்கள் தப்பிவிட்டன. இன்னும் நாட்டை உலுக்கிய பல மோசடிகளிலும் இந்த அதிகார வர்க்க கும்பல்கள் மீது எவ்வித நடவடிக்கையுமில்லை.

– புதிய ஜனநாயகம், 1- 15 ஜனவரி 1997.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க