அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 04

“பழைய பிரெஞ்சுப் பாடலுக்கேற்ப” வகுப்பறையில் நடனமாடும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் ஞானத்தையும் உறவுமுறைகளையும் எப்படி இரண்டறக் கலந்து ஊட்டுவது, இவர்களில் ஒவ்வொருவருடைய மனதிலும் தனிச் செயல் முனைப்பை எப்படி ஊக்குவிப்பது? இந்தப் பாதை எவ்வளவு சிக்கலானது என்று என் ஆசிரியர் அனுபவம் காட்டுகிறது. நான் என் வகுப்புக் குழந்தைகளுடன், இப்பாதையின் ஆரம்பத்தில் நிற்கிறேன். நாங்கள் இப்பாதையில் முதலடிகளை எடுத்து வைக்கின்றோம். நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் இப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்லும்படி கட்டாயப்படுத்தி, அவர்களின் புகார்களைக் கண்டும் காணாமல் இருப்பதா? வேறு பாதை கிடையாது, என்ன நேர்ந்தாலும் எல்லா தடைகளையும் கடக்க வேண்டும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளே, உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா? விளையாட்டுதானே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. மிக்க நன்று. உங்களுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. நாம் என்ன விளையாட்டு விளையாடுவது? நீங்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், நான் உங்கள் ஆசிரியர், பெரியவர். நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள், நான் கணக்குகளைத் தர நீங்கள் அவற்றைப் போடுகின்றீர்கள், நான் கேள்விகளைக் கேட்க, நீங்கள் பதில் சொல்கின்றீர்கள். ஏன் சோர்வடைகின்றீர்கள்? இப்படி விளையாட மாட்டார்களா? இது விளையாட்டில்லையா? ஏன், இதிலென்ன தவறு? இந்த விளையாட்டில் எல்லாமே உண்மை என்பதாலா? அதாவது நான் உண்மையில் ஆசிரியர், நீங்கள் உண்மையில் மாணவர்கள் என்பதாலா? இங்கே கற்பனைக்கும், மாற்றங்களுக்கும் இடம் இல்லை, இங்கே கற்பனைப் பாத்திரங்கள் கிடையாது. அப்படித்தானே? நான் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டேனா? சரி, அப்போது வேறு விதமாகச் செய்வோம். நாமனைவரும் நண்பர்கள்; நீங்கள் என் சக ஊழியர்கள், கருத்தாழமுள்ள, வயது வந்த மனிதர்கள்; நான் கவனக் குறைவான, ஞாபகமறதியுள்ள ஆசிரியனாக இருக்கிறேன், நீங்கள் என்னை விட்டுவிடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் விளையாட்டில் முன்னின்று விளையாடுபவன். இந்தக் கற்பனை நிலையை யதார்த்தமாக்க உங்களுக்கு உதவுகிறேன்; நீங்கள் உண்மையிலேயே வயது வந்த, விளையாட்டுத்தனமற்ற நபர்கள் என்று நீங்கள் நம்ப உதவுகிறேன். இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து நம் பாடங்களைப் “படைப்போம்” வாருங்கள். “தாய் நாடு” எனும் சொல்லில் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எனக்குத் தெரியாது”. ஐந்து எழுத்துகளா? ஏழு எழுத்துகளா? இதில் கடைசி எழுத்திற்கு முந்தைய எழுத்து எது? ‘நா’ எனும் எழுத்தா ‘ய்’ எனும் எழுத்தா?… பத்து மணி நேரமாக கார் நிறுத்தும் ஓரிடத்தில் ஒவ்வொரு மணி நேரமும் எட்டு கார்கள் வந்து, ஏழு கார்கள் வெளியேறின என்றால் அங்கு எவ்வளவு வாகனங்கள் எஞ்சியுள்ளன? இதுவும் எனக்குத் தெரியாது! நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றீர்கள்? என்னால் உங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை!

நீங்கள் பத்து கார்கள் என்கின்றீர்கள், எனக்கோ ஒன்பது கார்கள் என்று படுகிறது!
நீங்கள் மகிழ்ச்சியை விரும்புகின்றீர்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது? சாக்லேட்டா? புதிய விவரங்களைத் தெரிந்து கொள்வதா? நிச்சயமாக இரண்டும் மகிழ்ச்சி தருவதாகும். புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் மகிழ்ச்சியை கல்வி கற்கும் போது தோன்றும் இடர்ப்பாடுகளை அகற்றுவதன் மூலம் அளிப்பதை நான் என் கடமையாகக் கருதுகிறேன். நான் கல்வியை உங்கள் “தலைகளில் புகுத்தும்” வழிகளைத் தேடவில்லை, மாறாக, நீங்கள் என்னிடமிருந்து இவற்றை “எடுத்துக் கொள்ள முயலும்படி” செய்ய, என்னுடன் “அறிவுச் சண்டை” போட்டு இவற்றை கிரகிக்குமாறு செய்ய, இடைவிடாத தேட்டங்களின் மூலம், அயராத வேட்கையின் மூலம் இவற்றைப் பெறுமாறு செய்ய நான் பாடுபடுகிறேன். இவற்றை செயல்படுத்தும் பொருட்டு நான் உங்கள் அறிதல் பாதையில் தடைகளை வைப்பேன், நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்தி இவற்றைக் கடக்க வேண்டும்.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஏற்படும் சண்டைகளினால் உண்டாகும் குழந்தைகளின் சிரிப்பு நம் பாடங்களுக்கு அழகூட்டும். இப்படிப்பட்ட சிரிப்பு இவ்வாறு புதியவற்றைத் தெரிந்து கொள்வதை ஊக்குவிப்பதோடன்றி, புதிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வழிகளில் ஒன்றாயும் இந்நிகழ்ச்சிப் போக்கின் விளைவுகளில் ஒன்றாயும் இருப்பது என் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரியும். சிரிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். தேவையற்று இச்சிரிப்பு பாடவேளைகளிலிருந்து அகற்றப் பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. பல ஆசிரியர்கள், புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் “சண்டைகளை” மூட்டி விட்டு சிரிப்பை வரவழைப்பதற்குப் பதில் இதை விரட்டியடிக்கின்றனர்.

என்னைப் பொறுத்தமட்டில் குழந்தைகளின் சிரிப்பு ஒரு ஆசிரியரின் முக்கியப் பிரச்சினையாகும், என் பாடவேளைகளில் இவர்கள் அடிக்கடி “’கருத்தாழத்தோடு“ சிரிப்பார்கள். நகைச்சுவையான படக்கதைகளைச் சொன்னால் வகுப்பறையில் சிரிப்பு வெடிக்கும். “ஏன் நீங்கள் சிரிக்கின்றீர்கள்? இதில் சிரிப்பதற்கென்ன உள்ளது?” என்று நான் கேட்டதும் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு விஷயத்தை விவரிப்பார்கள், அது ஏன் சிரிப்பிற்கிடமானது என்று விளக்குவார்கள். நாங்கள் சேர்ந்து சிரிப்போம். இதே திருப்தியை, மகிழ்ச்சியை பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளக்குமாறு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்குமாறு நான் கேட்டுக் கொள்வேன். “உங்களால் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிந்தது என்றால், உங்களால் நன்றாக, உள்ளது உள்ளபடி கதை சொல்ல முடியுமென்று பொருள்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன்.

“பிழைகளைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொல்லி நான் வேண்டுமென்றே தப்பாகப் படித்துக் காட்டும் போது குழந்தைகள் சிரிப்பார்கள். அவர்கள் தாம் சொல்வது சரி என்று நிரூபிக்கும் வரை நான் விடாப்பிடியாகத் தீவிரமாக நிற்பேன். பின் அவர்களை எனக்குக் கணக்கு தரச் சொல்லி வேண்டுமென்றே நான் அவற்றை தவறாகப் போடும் போதும் அவர்கள் சிரிப்பார்கள். என் “தவறு” என்ன என்று அவர்கள் சிரிப்புடன் நிரூபிப்பார்கள்.

அனேகமாக சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிப்படுத்தவும் நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும். குழந்தைகளுடனான பணியில் நான் இதை இப்படித்தான் பார்ப்பேன். மகிழ்ச்சிகரமான சிரிப்பை குழந்தைகளிடம் வரவழைப்பதற்காக மட்டும் நான் “தவறு” செய்யப் போவதில்லை. எனது “தவறுகள்” குழந்தையின் சிந்தனையைத் தட்டிவிடும். குழந்தைகள் என்னுடன் விவாதம் செய்யத் துவங்குவார்கள், நான் ஒப்புக் கொள்வேன்; “நீங்கள் சொன்னது சரி… என்னை மன்னிக்கவும்!”

நான் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஆசிரியர் தவறிழைத்து விட்டுப் பின் குழந்தைகள் முன் மன்னிப்பு கேட்கலாம், குழந்தைகள் ஆசிரியருடன் விவாதிக்கலாம் என்பதை ஆசிரியரியல் ஒப்புக் கொள்கிறதா என்ன? இது பற்றி இப்போது என்னால் ஒன்றும் சொல்ல இயலாது. இது புதியவற்றை அறிய உயிர்த்துடிப்புள்ள, சுவாரசியமான பாதையென அனுபவம் எனக்குச் சொல்கிறது. குழந்தைகள் இதை மேம்படுத்த எனக்கு உதவுவார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க