ள்ளலாரின் 200 ஆம் ஆண்டை “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணை என அறிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் அன்னதானங்கள் வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டு முழுவதும் 52 வாரங்களும் அன்னதானங்களும் சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படும் என்றும் திமுக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்போது, வள்ளலார் – தனிப்பெரும் கருணை அதற்காக அன்னதானம் என பேசி முடித்துக் கொண்டனர் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு அதிகாரிகள். தப்பி தவறி கூட வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றியும், சாதி, மதம், சமயங்களை விட்டொழிக்க வேண்டும்; அதுவே மேன்மை அடைய வழி என பேசியும் வாழ்ந்தும் வந்தார் என்பது பற்றியும் எங்கும் பேசவில்லை.

பல்லக்கு தூக்கும் பிரச்சினையிலும், சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையிலும்  இதுபோன்று பலவற்றிலும் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்ட திமுக எப்படி பார்ப்பனிய எதிர்ப்பு மரபினை உயர்த்தி பிடிக்கும்? எப்படி பேச முடியும்?

படிக்க : மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

வள்ளலார் பிறந்து 150 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பேச முடிந்த பார்ப்பனிய எதிர்ப்பை இவர்களால் இன்று பேச முடியவில்லை. காலம் மாறிவிட்டது என எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்றும் கூட இந்து ராஷ்டிரத்தையும் அதில் உள்ள சாதிய வருணாசிரமத்தையும் மீட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதற்கு சி.பி.எஸ்.சி ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உயர்ந்தவன் – பிராமணன், தாழ்ந்தவன் – சூத்திரன் என்று கற்பித்து வருவது ஒரு மிக சிறந்த உதாரணம்.

இதுபோக, வேத கல்வி வாரியம் என வைத்துக்கொண்டு மனுஸ்மிருதி, வேதங்கள், உப நிடதங்கள் மற்றும் சாதிய வர்ணாசிரமத்தை முதன்மை பாடமாக கற்றுக் கொடுத்து அந்த மாணவர்களை இன்று பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இணைக்கப் போகிறார்கள்.

அப்படியானால் இந்த இந்துராஷ்ட்டிர பாசிச பேரபாயத்திற்கு எதிராக வள்ளலாரின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை முன்பை விட அதிகரித்துள்ளது.

வள்ளலார் ராமலிங்கர் 1823-இல் சிதம்பரம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் சைவ மத பற்றாளராக தமிழகம் முழுவதும் வளம் வந்துள்ளார். பின்பு அவரே கூறும் போது “சைவம், வைணவத்தை நம்பாதீர்கள். அது உண்மையை சொல்லாது. ஒரு காலத்தில் நானும் சைவத்தை நம்பினேன். எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால் அப்போது எனக்கு அறிவு கொஞ்சம் தான் இருந்தது” என்றார்.

வைதீக மரபின் முதன்மையான (பிரஸ்தான) மூன்று உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை. இவை அனைத்துமே கொல்வதைத் தர்மமாக கூறியது; சூது சொல்லித் தந்தது  என அம்பலப்படுத்தினார்.

இதற்கு மாறாக, வள்ளலார் கொல்லாதே. உணவு ஊட்டுவதும், உயிர்காப்பதும்தான் கடமை என்கிறார். கொல்வதை தர்மமாக பேசும் பார்ப்பனியத்திற்கு எதிராக உயிர் காக்க வேண்டும், உணவளிக்க வேண்டும் என்று களமாடினார் வள்ளலார். திமுக அரசோ வள்ளலார் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பற்றி எல்லாம் பேசாமல் வள்ளலாரை  உணவு வழங்கும் பிதாவாக மட்டும் கட்டமைக்கும் வேலையை செய்கிறது.

வைதீகத்தை, பார்ப்பனியத்தை ஏந்தி வரும் சமஸ்கிருதம் போன்ற அனைத்து வாகனங்களின் கடையாணிகளையும் பிடுங்கி எறிந்தார். பகவத்கீதைக்கு மாற்றாக திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை முன்வைத்தார்.

உயிரும், உள்ளமும் நோகும் வகையில் ஒற்றை கடுஞ்சொல் கூட பயன்படுத்தாத வள்ளலாரை ஒரு பார்ப்பனர் கூட ஆதரிக்கவில்லை. ஏனென்றால் அவர் பார்ப்பனிய கருத்தியலுக்கு -அமைப்பு முறைக்கு- எதிரான கருத்தியலையும் -அமைப்பு முறையையும்- முன் வைத்தார்.

பார்ப்பன கும்பல் மடத்தை கட்டி வைத்துக்கொண்டு அங்கு பெண்கள் வரக்கூடாது என்றது. வள்ளலார் சங்கத்தை நிறுவி அதில் ஆண் பெண் அனைவரும் சமம்; அனைவரும் பங்கேற்க வேண்டும்; விவாதிக்க வேண்டும் என பார்ப்பனியத்துக்கு எதிரான அமைப்பு முறையை முன் வைத்தார்.

வைதீகம் கேள்வி கேட்காதே நம்பிக்கைகொள் என்கிறது. வைதீக மரபிற்கு நேர் எதிராக வள்ளலார் இருந்தார். பகுத்தறிவு கேள்விகளை அன்றே எழுப்பினார். காது, மூக்கில் எதற்கு பொத்தல் போட்டு அணி கலன் அணிய வேண்டும்? பொத்தல் போடுவது அவசியம் என்றால் 9 ஓட்டைகளை வைத்த கடவுள் காதிலொன்றும், மூக்கிலொன்றும் போட்டிருக்கமாட்டானா? தலையில், கன்னத்தில் முளைக்கும் முடி ஏன் நெற்றியில் முளைப்ப தில்லை? என்று மக்களிடம் கேட்டவர் வள்ளலார். “கேட்டறியாத கேள்விகளை கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே” என்றார்.

வைதீகத்திற்கு எதிராக தோன்றிய தமிழ் சமயம் (எ) சைவ சமயம், ஆகம மரபு மக்களுக்கு என்ன செய்தது? வேதத்திற்கு பதிலாக ஆகமத்தை படிக்கச் சொன்னது. அது மட்டமானது எனது சமயம் உயர்வானது என்று வெறிபிடித்து பேசுகிறது. எனவே, வேதமும், ஆகமும் வேண்டாம். நிறுவனப்பட்ட சமயம் எதுவும் தேவையில்லை. பொதுநெறிக்கு வா என்றார் வள்ளலார்.

உலகில் எல்லோரும் சமம். உலகை பொதுவில் நடத்துகிற நிலை வர வேண்டும் என்றார். மேல்வருணம், தோல்வருணம் கண்டாரில்லை. நான் பேசுவது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றார்.

படிக்க : தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் உறுப்பினராக சேர ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஜீவ ஒழுக்கம் என்றால் ஆண், பெண், சாதி, மத, சமய, ஆசிரம, சூத்திர, கோத்திர, குல, சாஸ்திர, சம்பந்த, தேச, மார்க்க வேறுபாடுக் கூடாது. ஆன்ம ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் தலைவன் ஆண்டவன் அருட்பெரும்ஜோதி. ஜீவன்களுக்குள் வேற்றுமை பார்க்கக்கூடாது. இவை இரண்டையும் கடைப்பிடித்தால் சங்க உறுப்பினராகலாம் என்றார். இப்படியாக சங்கம், சாலை (சோறு போடும் இடம்), சபை (கூடுகிற இடம்) என்ற அமைப்புகளை உருவாக்கினார்.

“சாதிமதம் சமயமெனும் சங்கடம் விட்டறியேன்
சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்…” (3319-வது பாடல்)

என சாதி மத சமயங்களைச் சங்கடமாகவும், சஞ்சலமாகவும் கருதுகின்றார்.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம்முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளைய யாட்டே…” (4174-வது பாடல்)

என பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தியலை முன்வைக்கிறார்.

வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம். வள்ளலார் 200 இந்த அடிப்படையில் மக்களிடம் பறந்து விரிந்த அளவில் கொண்டு சென்று மக்களை அமைப்பாக்க வேண்டியது, காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக நிற்கக்கூடிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரின் கடமையாகும். அதுவே வள்ளலார் கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை அடைய தடைக்கல்லாக இருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை வீழ்த்துவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.


ரவி