காலத்தால் முந்திய தமிழ்நாட்டுச் சமயங்கள் வரிசையில் சைவமும் வைணவமும் இடம்பெறுகின்றன. இவை இரண்டும் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொண்டவை. இதன் அடிப்படையில் இவற்றை வைதீக மரபைச் சார்ந்தவை எனலாம். இவற்றிற்கு மாறான அவைதீக (வைதீகமற்ற) சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், தாந்ரிகம் ஆகிய சமயங்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் அரசின் ஆதரவைப் பெற்றுத் தம்மைப் பலப்படுத்திக் கொண்டன. பிற்காலச் சோழர் காலத்தில் சைவம், அவைதீக சமயங்களை மட்டுமின்றி, வைணவத்தையும் ஓரங்கட்டிவிட்டுத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட அரசு மதம் என்று சொல்லத்தக்க நிலையை அது பெற்றிருந்தது என்றாலும்; வைணவம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றது.

இவ்விரு சமயங்களின் மேல்நிலைக் குழு போன்று விளங்கிய பார்ப்பனர்களைத் தாண்டி பல்வேறு சமூகக் குழுக்களையும் தம்முள் இவை இணைத்துக்கொண்டன.

தமிழ் நாட்டின் சமூக வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய சைவம், வைணவம் தொடர்பான நான்கு கட்டுரைகளும் மேட்டிமையோரின் ஆதிக்கம் இவ்விரு சமயங்களில் தொடர்வதை விளக்கும் ஒரு கட்டுரையும் அடித்தள மக்களின் சமய வாழ்வில் அரசின் துணையுடன் இவை தலையிட்ட நிகழ்வு குறித்த ஒரு கட்டுரையும் இவ்விரு சமயங்களும் போற்றி வளர்க்கும் மரபுக்கெதிரான கலகக் குரலாய் ஒலித்த சித்தர் பாடல்கள் குறித்த கட்டுரையொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முதற்கட்டுரையான ‘சைவம் உறிஞ்சிய நடுகல் வழிபாடு’ … கொலை அல்லது தற்கொலையின் வாயிலாக இறந்தோருக்கு நடுகல் நாட்டி வழிபடுவது பண்டைத் தமிழர் மரபு. போரில் இறந்துவிட்ட வீரர்கள் நடுகல் நட்டு வழிபட்டமை குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளன… தொன்மை வாய்ந்த நடுகல் வழிபாட்டைச் சோழர் ஆட்சியில் ஏற்றம் பெற்றிருந்த சைவம் எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

‘பக்தி இயக்கத்தில் தீண்டப்படாதார்’ என்னும் இரண்டாவது கட்டுரை… வருண வட்டத்திற்கு வெளியே ‘அவருணர்கள்’ (வருண மற்றவர்கள்) என்று முத்திரை குத்தி ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரிவை சைவமும் வைணவமும் சில சூழல்களில் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

மூன்றாவது கட்டுரையான ‘தமிழ் வைணவத்தில் சூத்திரர் நிலை’ … ஏவல் செய்யப் பிறந்தவன் என்று மனுதர்மத்தாலும் பகவத் கீதையாலும் குறிப்பிடப்படும் சூத்திரர்களுக்குத் தமிழ் வைணவத்தில் வழங்கப்பட்ட இடத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

சைவ வைணவக் கோவில்களின் முக்கிய உறுப்பாகக் காட்சிதரும் பிரம்மாண்டமான கோபுரங்களில் ஏறி நின்று, கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டோர் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகளின் துணையுடன் நான்காவது கட்டுரையான ‘கோபுரத் தற்கொலைகள் ‘ ஆராய்கிறது.

வேத கலாச்சாரம்

… அ.தி.மு.க. ஆட்சியின்போது ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டம்’ தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்க எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக் கிளையின் சார்பில் ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல்’ என்னும் தலைப்பில் குறுநூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதுவே இங்கு ஐந்தாவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. நாட்டார் சமயத்தை வைதீகமயமாக்கும் முயற்சியையும் இதற்குள் ஆதிக்க அரசியல் மறைந்திருப்பதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

… கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிட்டாத நிலை இன்றும் உள்ளது. மறுக்கப்பட்ட உரிமையாக அன்றி பறிக்கப்பட்ட உரிமையாகவே இதைக் கொள்ள வேண்டும். ஆனால் ‘பேர் கொண்ட பார்ப்பனர்கள் ‘ தம் தனி உரிமையாகக் கருவறைக்குள் நுழைவதை வைத்துள்ளனர். அரசு உருவாக்கும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இச் செய்திகளை ‘அர்ச்சகரும் சாதியும்’ என்ற ஆறாவது கட்டுரை விளக்குகிறது.

சமய எல்லைக்குள் இருந்துகொண்டே சமயச் சடங்குகள் – சாதி – துறவு ஆகியனவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த சித்தர்கள் குறித்து ‘சித்தர்கள்; மீறலே மரபாய்’ என்ற தலைப்பிலான ஏழாவது கட்டுரை பேசுகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து …)

சித்தர்கள் : மீறலே மரபாய்

எந்தவொரு சமூகமும் தனக்கெனச் சில மரபுகளைப் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும். மரபு என்பதில் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் தகவுகள் (மதிப்புகள்), நடத்தை விதிகள், மரபுசார் சட்டங்கள் (Customery Laws) நெறிமுறைகள் (Norms) ஆகியன அடங்கும். இவையனைத்தும் ஒரு தலை முறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பெரும்பாலும் நினைவுகளின் வாயிலாக வழங்கப்படுகின்றன.

… மரபு என்று கூறும்போது அது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதை முடிவு செய்வதவசியம். ஏனெனில், மரபு என்னும் பெயரில் அனைத்தையும் புனிதமானதாகப் போற்றிப் பாதுகாப்பது சமூக வளர்ச்சிக்குப் பொருந்தாத ஒன்று. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மரபுகள் மாறும் தன்மையன. என்றாலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் தம் ஆதிக்கத்திற்குத் துணைபுரியும் என்றால் பழைய மரபுகள் தொடர்வதையே வலியுறுத்துவர். அதனை மீறவிடாது பார்த்துக்கொள்வர். தம் ஆதிக்கத்திற்கு உதவுமென்றால் மரபுகளில் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக்கொள்வர். எனவே, மரபுகளுக்குப் பின்னால் ஆதிக்க அரசியல் மறைந்துள்ளது. ஆதிக்க அரசியல் எதிர்ப்பு என்பது, மேட்டிமையோர் போற்றிப் பேணும் மரபுகளுக்கு எதிரானதாகவே அமையும். இந்தியச் சமூக வரலாற்றில் மரபு தொடர்பாகப் பின்வரும் மூன்று நிலைகள் இருந்துள்ளன.

(அ) மாற்றுக் கருத்து (Dissent) (ஆ) எதிர்ப்பு (Protest)  (இ) சீர்திருத்தம் (Reform)

இவை மூன்றும் ஒரு சமூகத்தின் மரபுகளை மாற்றியமைப்பதிலும், அழிப்பதிலும் புதிதாக உருவாக்குவதிலும் துணை நின்றுள்ளன. ஒரு சமூகத்தில் நீண்டகாலமாகப் பேணப்படும் மரபுகள் தம் நலனுக்கு எதிரானவை என்று அடித்தள மக்கள் அல்லது அம்மரபுகளினால் பாதிக்கப்படுவோர் கருதத் தொடங்கும்போது மாற்றுக் கருத்து உருவாகிறது. சமூக நிலைமையைப் பொறுத்து மாற்றுக் கருத்து வளர்ச்சியடைந்து எதிர்ப்பாக வெளிப்படும். சாதகமான சூழல் உருப்பெறவில்லை என்றால் மாற்றுக் கருத்தாகவே தொடரும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

மாற்றுக் கருத்து எதிர்ப்பாக வெளிப்படும்போது, எதிர்ப்பாளர்களுடன் சமரசஞ்செய்து கொள்ளும் வழிமுறையாக ஆள்வோரும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மேட்டிமையோரும் சில சீர்திருத்தங்களை, அறிமுகப்படுத்துவர் அல்லது அடக்கு முறையை ஏவுவர். எனவே, ஒரு சமூகத்தில் சமூக மாறுதல்களுக்கான தூண்டுகோலாக மரபு மீறலும் அதையொட்டி நிகழும் மக்கள் எழுச்சியும் காரணமாக அமைகின்றன. மக்கள் எழுச்சியானது அமைப்பு சார்ந்தும் திட்டவட்டமான கோட்பாடுகள் சார்ந்தும் வெளிப்படாவிட்டால் வெறும் கலகமாக மட்டுமே மடிந்துபோகும்.

ஆ. சிவ சுப்பிரமணியன்.

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உடையவர்கள். என்றாலும் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே சமூக வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்த பல மரபுகளுக்கு எதிராக உரக்கக்குரல் எழுப்பியுள்ளனர். சித்தர்களைப் பொறுத்தளவில் செல்லரித்துப்போன மரபுகளை மீறுவதை அல்லது எதிர்ப்பதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர். இச்செயல்தான் ஏனைய சமயவாதிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டுகின்றது. அவர்களது மரபுமீறியச் செயல்களாக;

(அ) சாதிய எதிர்ப்பு (ஆ) சமயச் சடங்குகள் எதிர்ப்பு (இ) வடமொழி எதிர்ப்பு – ஆகியன அமைகின்றன. சித்தர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களல்லர் என்றாலும் பெரும்பாலான சித்தர்களிடம் மேற்கூறிய மரபுமீறல்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

நூல் : கோபுரத் தற்கொலைகள்
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்

வெளியீடு : பரிசல்,
எண் : 176, Q பிளாக், தொல்காப்பியர் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை – 600 106.
தொலைபேசி எண் : 9382853646

பக்கங்கள்: 104
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க