குடியுரிமை பிரச்சினையில் இந்தியாவின் பல பகுதிகளில் திடீரென வெடித்த, திட்டமிடப்படாத சீற்றம் நரேந்திர மோடிக்கு எதிரான முதல் பெரிய போராட்டம் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், தமது கழுத்தை இனவாதம் இறுக்குவதையும்; சர்வாதிகாரத்தையும் பார்த்து மவுனமாக இருந்தது. ஆனால், இப்போது அது தனது குரலை மீட்டெடுத்து முழங்கத் தொடங்கியுள்ளது .
பொது நிறுவனங்களின் தொடர் சரிவு, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை மீது விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றால் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள், காங்கிரசின் நம்பிக்கை இழப்பு, இடதுசாரிகளின் அழிவு மற்றும் கவனம் ஈர்க்காத எதிர்க்கட்சிகளின் அலட்சியம் ஆகியவற்றால் விரக்தியடைந்த மக்கள் திடீரென்று எழுந்திருக்கிறார்கள்! இந்த தன்னிச்சையான கோபத்திற்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆட்சிக்கு சளைக்காமல் இணக்கத்தை உற்பத்தி செய்யும் பல ஊடக நிறுவனங்களுக்கும் இதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் வழிநடத்தப்படுவதால், சமீபத்திய கிளர்ச்சி போதுமான பரந்த அடிப்படையிலானதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்; இது சில நகர்ப்புற மையங்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது; மேலும் இது பெரும்பாலும் ஒரு சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது என விமர்சிக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் டிசம்பர் 15 அன்று ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் இயக்கம் தொடங்கியபோது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், போலீசு நடவடிக்கையின் சமமற்ற மிருகத்தனம் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான முசுலீமல்லாதவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தின் தளத்தை விரிவுபடுத்தியது.
1974-75-ல் இந்தியாவை உலுக்கிய இரண்டு வெகுஜன எழுச்சிகள், ஒன்று குஜராத்தில் நவ் நிர்மன் இயக்கம் மற்றும் இரண்டாவது பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணனின் சம்பூர்ண கிராந்தி ஆகியவை. உண்மையில் மொரார்ஜி தேசாய் மற்றும் ஜே.பி. ஆகியோர் இந்த இயக்கங்களை கையில் எடுக்கும் முன், இளைஞர்களாலேயே இவை வழி நடத்தப்பட்டன. மே 2019 வலுவேற்றப்பட்ட மோடி-ஷா ஆகியோர் யாகம் வளர்த்து உருவாக்கிய வெல்லமுடியாத அஸ்வமேத குதிரையை நிறுத்த கட்சியல்லாத, தலைமையற்ற இளைஞர்களின் தைரியமும் ஆவேசமும் தேவைப்பட்டது.
மோடி 2.0-ன் முதல் ஐந்து மாதங்கள் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை பிந்தைய காலங்களில் முன்னெப்போதையும் விட அதிகமான வீழ்ச்சிகளைக் கண்டன. இந்த ஆண்டு பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகள் ஜனநாயகம் என்கிற கருத்தாக்கத்தை கேலி செய்தன. ஏனெனில் மக்களவையில் ஆட்சியின் மிருகத்தனமான பெரும்பான்மை மற்றும் மாநிலங்களவையில் இருந்த செல்வாக்கு ஆகியவை முத்தலாக் மசோதாவுடன் தொடங்கிய குண்டுவெடிப்பு ஒருபோதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது.
சிவில் உரிமைகளைத் தடுப்பதற்கும், தேசிய புலனாய்வு அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் காரணங்களைக் கூறாமல் தடுப்புக்காவலை மேம்படுத்துவதற்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கும் பாராளுமன்றத்தின் மூலம் திருத்தங்கள் செய்யப்பட்டன. அவசர அவசரமாக பிற சட்டங்கள் மருத்துவ கல்வியின் பிரிவுகள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆபத்தான உட்பிரிவுகளை அறிமுகப்படுத்தின. மேலும். ‘பெரிய அண்ணணின்’ ஆதார் அட்டை சட்டப்பூர்வமாக்கப்பட்டது.
ஆனால், ஆகஸ்ட் தொடக்கத்தில் அரசியலமைப்பின் 370-வது பிரிவு மத்திய அரசாங்கத்தின் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டபோது தெளிவான அதிர்ச்சி அலை தேசத்தை உலுக்கியது. காஷ்மீர் இந்தியாவுக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட இயல்பான தன்மை மற்றும் அப்போது வழங்கப்பட்ட சிறப்பு உத்தரவாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சில சிறப்பு சுயாட்சி தன்மையை வழங்கியது. ஆனால் இது மயக்க மருந்து இல்லாமல் நீக்கப்பட்டு முடமாக்கப்பட்டது. காஷ்மீர் அரசு ‘யூனியன் பிரதேசங்களாக’ வெட்டப்பட்டபோதும், அதன் மதிப்பு குறைக்கப்பட்ட போதும் காஷ்மீரிகளின் எந்தவொரு எதிர்ப்பும் முற்றிலும் அடக்கப்படுவதை உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏராளமான ஆயுதப்படைகள் களத்தில் இறக்கப்பட்டன.
எதிர்க் கட்சிகள் மீதான முடிவில்லாத பழிவாங்கும் வருமான வரி சோதனைகளும் அதற்குப் பிறகான மத்திய புலனாய்வுப் பிரிவினரின் கைது நடவடிக்கைகளும் இந்தியர்களை திகைப்புக்குள்ளாக்கியது.
காஷ்மீரில் பெரும்பாலான சிவில் சுதந்திரங்களை நசுக்கியதிலிருந்து நாடு இன்னமும் மீளாத நிலையில், ஆகஸ்ட் 31 அன்று, அஸ்ஸாமில் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) வெளியிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்துடன் வந்த ஊழல் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து நாம் அமைதியாக இருந்தாலும் இந்தப் பதிவேட்டை தயாரிக்க 50,000 அரசாங்க அதிகாரிகளுக்கு பத்து நீண்ட ஆண்டுகள் பிடித்தன. சுமார் 1,200 கோடி ரூபாய் செலவு பிடித்தது.
படிக்க:
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !
♦ எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?
கடந்த சில ஆண்டுகளில், ஊடுருவல்காரர்களை களைய வழக்கமான கண்காணிக்கும் பணியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் 19 லட்சம் பேர், அவர்களில் பெரும்பாலோர் இந்து வங்காளிகள், பதிவேட்டில் இருந்து விலக்கப்பட்டபோது அனைவரும் வருத்தப்பட்டனர். ‘வங்கதேச முசுலீம்களை’ குறிவைத்தவர்கள் வலையில் சிக்கிய சிறிய எண்ணிக்கையிலான இந்துக்களால் இவர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் பட்டியலில் விடுபட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர் – குறிப்பாக நாஜி வதை முகாம்கள் பாணியில் உருவாக்கப்பட்ட ‘தடுப்பு மையங்கள்’ அவர்களுக்காக தயாராகிவருவதை நினைத்து அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அசாமில் திடீரென ஒரு வெடிப்பு கிளம்பியபோது, அடுத்த கட்ட அமைதியின்மையை அடைவதற்கு முன்னர், ஒரு தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னர் அயோத்தியின் மோசமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் எவ்வாறு விரைவான விசாரணைகள் மற்றும் சமர்ப்பிப்புகளைக் கொண்டிருந்தது என்கிற முரண்பாட்டை நினைவுபடுத்துவோம். அதே நீதிமன்றம் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட அரசியலமைப்பு மீதான தாக்குதல் மற்றும் கடுமையான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து முக்கியமான முடிவுகளை நிறுத்தியது. சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் திறம்பட ஒப்படைத்த நவம்பர் 9-ம் தேதி வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, நிரூபிக்க முடியாத சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் 1992-93 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் இருந்ததைப் போலவே பெரும்பான்மை வன்முறை வெடிக்காமல் இருப்பதை இது உறுதிப்படுத்தியிருக்கலாம். குறிப்பிட்ட கலவரத்தின் குற்றவாளிகள் தங்கள் வாள்களை உயர்த்தி,‘மந்திர் வாகின் பனாய்கே (நாங்கள் அதே இடத்தில் கோவிலைக் கட்டுவோம்)’ என முழங்கியதைப் பார்க்கலாம்.
இயற்கையாகவே, குழப்பமான கிசுகிசுக்களும் எழுந்தன. மேலும் பெரும்பான்மைக்கு முன்னர் அவர்கள் ஒரு சரணடைதல் எனவும் இதை விமர்சித்தனர். எவ்வாறாயினும், கோயிலுக்கும் மசூதிக்கும் நிலத்தை உறுதி செய்வதற்காகவும், கிரிமினல் வழக்குகளின் காலவரையறைக்கு, இழுத்துச் செல்லப்படுவதற்கும், மதிப்பிற்குரிய நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை வழங்கியிருந்தால், நிறைய கோபங்களுக்கு முடிவு கிடைத்திருக்கும். கால் நூற்றாண்டு காலமாக, பாபர் மசூதியை பகிரங்கமாக அழித்தவர்களை தண்டிக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, உச்ச நீதிமன்றம் அதைக் கடுமையாகக் கண்டித்தது, நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதையும்விட சிறந்தது என்னவாக இருக்கும்?
ஆனால், டிசம்பர் நடுப்பகுதியில் 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது குறித்து ஆட்சியாளர்கள் மகிழ்ந்தபோது நாம் ஒரு முக்கிய புள்ளியை நோக்கி நகர்ந்தோம். அன்னை இந்தியாவிடம் அடைக்கலம் தேடிய சிறுபான்மையினரின் கண்ணீரை துடைக்கும் என உணர்ச்சி பெறுக்குடன் பேசப்பட்ட இந்த சட்ட திருத்தம், முசுலீம்களுக்கு எதிரான பாகுப்பாட்டை சட்டபூர்வமாக்கியது. மூன்று முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த இந்து மற்றும் பிற முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்த ஆதரவுக்கு தேர்வு செய்யப்பட்டனர், மேலும் நான்கு அண்டை நாடுகளும் அதிலிருந்து வெளியேறப்பட்டன.
எவ்வாறாயினும், அஸ்ஸாம் வகை கொடூரமான என்.ஆர்.சி கணக்கெடுப்பு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா மீண்டும் மீண்டும் வெளியிட்ட வாக்குறுதியும் அச்சுறுத்தலும் தான், மக்கள் கோபத்தை திடீரென வெடிக்க வழிவகுத்தது. இந்தக் கட்டத்தில், அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் போராட்டங்களுக்கான காரணங்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். NRC ஆல் வெளியேற்றப்பட்ட இந்து வங்காள புலம்பெயர்ந்தோரை ‘முறைப்படுத்த’ முயற்சித்ததற்காக, வங்காளர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக உள்ள அசாமியர்கள், பாஜக மற்றும் அதன் CAA க்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். இன்னும் பல வங்க தேச இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் அஞ்சினர். மேலும் அசாமில் ஆபத்தான வகையில் மக்கள்தொகை சமநிலையை இது பாதிக்கும் எனவும் வருத்தத்துக்கு உள்ளாகினர்.
மறுபுறம், இந்த கிறிஸ்துமஸ் பரிசில் இலங்கை தமிழ் அகதிகளைத் தவிர்ப்பதற்கு எதிராக தமிழர்கள் போராடுகிறார்கள். இருப்பினும் சிலர் மத பாகுபாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் இருப்பதற்கு எதிராகவும் போராடுகின்றனர். அனைத்து சமூக எதிர்ப்புக்களையும் ஒருங்கிணைத்த மேற்கு வங்க ஆளும் கட்சி, சிறுபான்மை சமூகங்களிடையே தனது தளத்தை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகாரத்துவ துன்புறுத்தல், ஊழல் மற்றும் இரக்கமற்ற தன்மை என பெரும்பான்மையை வென்றெடுக்க என்.ஆர்.சி தூண்டும் பயங்கரவாதத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் போரின் குறியீடுகள் சுவாரஸ்யமானவை. உதாரணமாக, வெட்கமின்றி தேசிய கொடியை கையகப்படுத்தி வைத்திருந்த தீவிர தேசியவாதிகளிடமிருந்து கிளர்ச்சியாளர்கள் அதைப் பறித்தனர். வரலாற்று ரீதியாக, இந்த சங்க பரிவாரங்கள் நமது சுதந்திரத்தின் போது இந்திய மூவர்ண கொடியைக் கடுமையாக எதிர்த்தனர். சர்தார் படேல் நாட்டின் கொடியை ஏற்கும்படி கட்டாயப்படுத்தும் வரை அதை தொடர்ந்து அவமதித்துவந்தனர். இந்தியாவுடனான விசுவாசத்தைப் பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் வறுத்தெடுக்கப்பட்டு வந்த முசுலீம்கள், குடியுரிமை போராட்டத்தின் ஒரு பகுதியாக, தங்களுடைய எதிர்வினையாக தேசியக் கொடிகளை இப்போது பெருமையுடன் அசைத்து வருகின்றனர்.
டெல்லி மற்றும் பிற இடங்களில் உள்ள மாணவர்கள் பல காந்திய நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். அதாவது, போலீஸ்காரர்களுக்கு பூக்களை வழங்குவதன் மூலம் அவர்களின் இதயங்களை அடைய முயற்சிக்கிறார்கள். டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடந்த மனிதாபிமானமற்ற தன்மையை கைவிட தேசிய மற்றும் தேசபக்தி பாடல்கள் இப்போது பலவீனமானவர்களின் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், 2012-13-ல் ஜோதி சிங் மீதான கும்பல் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்குப் பின்னர் டெல்லியில் நடந்த போராட்டங்களில் நாம் கண்ட தேசபக்தியின் இதேபோன்ற வெடிப்புகளை இது நமக்கு நினைவூட்டுகிறது. ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே அழைப்புக்கு எண்ணற்ற இளைஞர்களும் பெண்களும் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதையும் தலைநகரம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளை அவர்கள் நிறுத்தி வைத்ததையும் நாம் மறக்க முடியாது. அவர்கள் மறந்துபோன காந்தி தொப்பிகளுக்கு புதிய வாழ்க்கையை வழங்கியிருந்தனர். ஆனால் அவர்களின் கிளர்ச்சி மற்றும் தியாகத்தின் நீடித்த விளைவு என்னவென்றால், ஒரு வஞ்சக அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரத்திற்கு வரவழைக்கப்பட்டதும், ஒரு விளம்பரப் பைத்தியமான கிரண் பேடி துணை ஆளுநராக நாற்காலியில் அமர வைக்கப்படவும் மட்டுமே பயன்பட்டது.
ஆனால் இந்தியாவில் ஒரு தாராளவாத-மதச்சார்பற்ற அரசாங்கத்தைத் தாக்குவது, தற்போதைய இரக்கமற்ற, எவராலும் தடுத்து நிறுத்தமுடியாத மெகாலோனியாக்களை (தன்னைத்தானே உயர்வாக எண்ணிக் கொள்பவர்கள்) தாக்குவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பொதுமக்கள் கோபம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும், மோடி-ஷா இரட்டையர்கள் எவ்வாறு பதிலடி கொடுப்பார்கள் என்பதையும், என்னவிதமான மூர்க்கத்தனமான மற்றும் பழிவாங்கும் தன்மையையும் அவர்கள் ஏவுவார்கள் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. இந்த சூழ்நிலையில் மத கலவரங்கள் வெடிக்காது என்றும் அப்படியொரு சூழ்நிலையை உருவாக்கக்கூட முடியாது என்றும் ஒருவர் கூறுகிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போர் போன்ற தாக்குதல் உள்நாட்டு எதிர்ப்புகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள், ஏனெனில் போர்க்குணம் எப்போதும் தேசபக்தி அட்ரினலைனை அதிகரிக்கச் செய்யக்கூடியது.
இரண்டு மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்களால் பற்ற வைக்கப்பட்ட இந்த எதிர்ப்பு, இந்து தீவிரவாதிகளின் இலக்குகளாக இருந்த முசுலீம்களால் முதலில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் இப்போது நிச்சயமாக ஒரு பொது கிளர்ச்சியாக உருமாறியுள்ளன. இது இப்போது இளைஞர்களின் இயக்கம். நியாயமற்ற, மத பாகுபாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், நிதி குறைப்பு மற்றும் கல்வியில் தலையிடுவதற்கும் எதிரானது இது . பொருளாதார தோல்விகள் மற்றும் அதிகரித்த வேலையின்மை ஆகியவையும் இறுதியாக கருத்து வேறுபாட்டைத் தூண்டுகின்றன.
எவ்வாறாயினும், நமது தாராளவாத மதச்சார்பற்ற சக்திகள் நீதி கோரும் மனுக்களில் கையெழுத்திடுவதிலும், வலுவான கட்டுரைகளை எழுதுவதிலும், தொலைக்காட்சியில் அல்லது பாதுகாப்பான சூழலுக்குள் விவாதங்களை நடத்துவதிலும் திருப்தியடைந்துள்ளன என்பதே உண்மை. மறுபுறம், அண்டை நாடான வங்க தேசத்தில் உள்ள தாராளவாதிகள் மிருகத்தனமான சர்வாதிகாரத்தையும் மத வெறியையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. 1989 முதல், அவர்கள் மதச்சார்பற்ற சக்திகளின் எர்ஷாத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பெரிய அளவிலான மங்கல் ஷோபா-ஜாத்ரா பேரணிகளை ஏற்பாடு செய்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி இஸ்லாமிய தெளிவின்மைக்கு எதிரான அவர்களின் போரின் சான்றாக இந்த மகத்தான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து கொண்டு வருகின்றனர்.
படிக்க:
♦ CAA, NRC, NPR-க்கு எதிராக ஒன்றிணைந்த 100 அமைப்புகள் !
♦ வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !
பிப்ரவரி 2013-ல், பல ஆயிரம் அறிவுஜீவிகள், ஆசிரியர்கள் மற்றும் தெருவுக்கு வர வெட்கப்படும் நடுத்தர வர்க்க வல்லுநர்கள் டாக்காவில் உள்ள ஷாபாக்கில் தன்னிச்சையாக கூடி, பல நாட்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொலை மற்றும் பாலியன் வன்கொடுமை குற்றவாளிகளான இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தூக்கிலிட தங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தினர். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் உறுதியால் மத உரிமை திரும்பப் பெறப்பட்டன. மதச்சார்பற்ற இந்த கூட்டுக்குரலில் தைரியமாக இணைந்துகொண்ட இளைஞர் படைக்கு நன்றி.
தற்போதைய CAA-NRC இயக்கத்தின் முடிவுகள் என்னவாக இருந்தாலும், ஏற்படுத்தப்பட்டது முதல் உண்டான வடுக்களை அவ்வளவு எளிதாக மறைக்க முடியாது. பொய்யான, இனிமையான பேச்சின் தொடர் பொய்களின் மூலம் , நல்ல ஊதியம் பெரும் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மூலமும் உருவாக்கப்பட்ட மோடியின் ஹிப்னாடிக் வசீகரமும் ஊடக வல்லுநர்கள் மற்றும் அறமற்ற கொள்கை வகுப்பாளர்களின் தந்திரமும் இறுதியாக உடைக்கப்பட்டது. இந்தியாவின் இளைஞர்கள் அவரைப் பின்தொடர்வதைக் கண்டு திகைத்துப்போனவர்கள், இறுதியாக அசுவாசமானார்கள்.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இந்தியர்கள் பல்வேறு நோக்கங்கள் வெவ்வேறு மோடிகளுக்கு வாக்களித்தனர் – இந்தியாவின் பல்நோக்கு மீட்பர் அல்லது கல்கி அவதாரம்; சுவிஸ் வங்கிகளிடமிருந்து கறுப்புப் பணத்தை கொண்டு வரும் மிஸ்டர் கிளீன்; மனத்தாழ்மையைக் குறிக்கும் ஏழை தேநீர் கடைக்காரர்; ஒரு எளிமையான சூழலில் வாழ்ந்த உறுதியான வாரிசு அரசியல் எதிர்ப்பாளர்; இந்தியாவின் நிலையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் சிறந்த தேசபக்தர்; பயங்கரவாதத்தை நொறுக்கும் போர்வீரர்; புரட்சிகர தாராளமயமாக்கலுக்கு வழிவகுக்கும் பொருளாதார மிடாஸ்; மில்லியன் கணக்கான வேலைகளை வாரி வழங்கும் சாண்டா கிளாஸ்; இந்து ‘தேசத்தின்’ வீரமிக்க, முசுலீம்களுக்கு தங்களுடைய இடத்தை காட்டும் பழிக்குப் பழிவாங்கும் ஆக்ரோசமான தலைவர் என பல அவதாரங்களுக்காக மக்கள் வாக்களித்தார்கள்.
ஒவ்வொரு முறையும் மோடியைச் சுற்றியுள்ள, இந்தப் பல வேர்களைக் கொண்ட ஆலமரம் போராட்டத்தால் உலுக்கப்படுகிறது. இப்போது வெவ்வேறு சுய-முரண்பாடான கூறுகள் வெளியேற்றப்படுகின்றன. பணம், தொண்டர் படை, பேச்சு மற்றும் செருக்கால் வலுவூட்டப்பட்ட ஒருங்கிணைந்த அதிகாரத்துக்கு எதிராக தங்களை பிரித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
அடக்குமுறை அதிகரிக்கும்போது, துணிந்த இதயங்கள் நொறுங்கும்போது வேறுபட்ட மற்றும் மாறுபட்ட பன்முகத்தன்மை வாய்ந்த குழுக்கள் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட நிர்பந்திக்கப்படுகின்றன. நமது ஜனநாயக பாரம்பரியத்தை வலுப்படுத்த இதுபோன்ற மக்கள் இயக்கங்களின் நீடித்த பங்களிப்பும் அதுவாகத்தான் இருக்கும்.
கட்டுரை: ஜவஹர் சர்கார்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்.