தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) || நா. வானமாமலை – பாகம் – 15
முதல் பாகம் ……………………………………………………………………………………….. முந்தைய பாகம்
நா. வானமாமலை
இராமலிங்கரின் மனிதநேயம்
ராமலிங்க அடிகளாரைப் பாரதி தமிழ் நாட்டின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று அழைக்கிறார். ஆனால், சைவப் பெரியார்கள் அவரைச் சைவ சித்தாந்தி எனச் சித்திரித்துக் காட்டுகின்றனர். ஆறுமுக நாவலர் போன்ற சித்தாந்திகள் நாக்கில் நரம்பின்றி இராமலிங்க அடிகளாரைப் பற்றித் திட்டியதும் அவரது அருட் பாவை மருட்பா வென்றதும் இன்று அவர்களுக்கு மறந்து போய் விட்டது. இன்று வள்ளலார் விழாக்கள் சைவ சமயவாதிகளாலேயே, சைவ சமயத் தத்துவச் சார்போடு கொண்டாடப் படுகிறது.
பாரதி சமூகச் சீர்த்திருத்தவாதி, சமரச ஞானி, மனிதாபிமானி என்று வள்ளலாரைப் போற்றினார். இவையனைத்தையும் மறைத்து சைவ சித்தாந்த சிறைக்குள் அடிகளாரை அடைத்துப் பூட்டிவிடச் சிலர் முயலுகிறார்கள்.
இராமலிங்கரின் உண்மை வரலாறு நமக்குத் தெரியாது. அவரது வாழ்நாளிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அவரது சீடர்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவரது பாடல்களிலிருந்தும், நம்பத் தகுந்த ஆதாரங்களிலிருந்தும் அவர் இளமையில் தமிழறிவு மிக்கவராயிருந்தாரென்று தெரிகிறது. அவரது பாடல்கள் ஆறு திருமுறைகளாகக் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் முதல் ஐந்து அவரது சைவ சமயப் பற்றைக் காட்டுகின்றன. அவை பிற மதங்களின் மீது அவருக்கிருந்த குரோதத்தையும் காட்டுகின்றன. ஆனால் மனித வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்த அடிகளார் மனிதரது துன்ப துயரங்களை உணர்ந்தார். மனமுருகினார். அவற்றைப் போக்க எண்ணினார். முக்கியமாகத் தாது வருஷப் பஞ்சம் அவர் உள்ளத்தை விசாலமாக்கியது. சாவும், துன்பமும் அவரை மனிதாபிமானியாக்கியது. இந்நிலையை ஆறாம் திருமுறை சித்தரிக்கிறது.
படிக்க :
தில்லைக் கோவிலை மீட்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார்
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
உலகில் மனிதனுக்கு வரும் துன்பங்களை எதிர்த்து நிற்க மனிதர் ஒன்றுபட வேண்டுமென இராமலிங்கர் விரும்பினார். அதை விட்டு சமயக் காழ்ப்புகளிலும், சாதி வேறுபாடுகளிலும் உழலும் மனிதர்களைப் பார்த்து அவர் மனம் இரங்கினார். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்று கொள்ளுதலே தலைமையான அறமெனப் போதித்தார். இரக்கம் செயலில் தோன்ற வேண்டுமென உபதேசித்தார்! இதனையே ‘சுத்த சமரச சன்மார்க்க நெறி’யெனப் பெயரிட்டழைத்தார்.
சாதி, சமயம், மொழி வேறுபாடு , தேச வேறுபாடு ஆகிய பிரிவினை யாவும் கடந்த மனித நேசத்தை நிலை நிறுத்த, மனிதர் அனைவரையும் அறைகூவி அழைத்தார். இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் சுத்த சமரச சன்மார்க்க சபை என்று பெயரிட்டார்.
கடவுள் நம்பிக்கையுடையவராதலால் தமது புதிய நெறியைக் கடவுள் கட்டளையால் தோன்றியதெனக் கருதினார். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் சாதி, சமயங்களை அவருக்கு முன்னர் சித்தர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களுடைய பாடல்களில் ஈடுபட்ட வள்ளலாரும், அவர்கள் வழியிலே முன்னேறி, மனிதன் ‘சுக நிலை’ அடைய வழிகாட்டுகிறார்.
‘பேருற்ற உலகிலுறு
சமய மத நெறி யெலாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட் டென
உணர்ந்திடாது மிக்க பல
போருற்றிறந்து வீண்
போயினார் இன்றும் வீண்
போகாதபடி விரைந்தே
புனித முறு சுத்த சன்மார்க்க
நெறி காட்டி
பொழிளினை உணர்த்தி யெல்லாம்
ஒருற்ற சுக நிலை
அடைந்திடப் புரிதி நீ.
‘பன்னெறிச் சமயங்கள்
மதங்கள் என்றிடுமோர்
பவ நெறி இதுவரை
பரவிய தனால்
சென் னெறி யறிந்திலர்
இறந் திறந்துல கோர்
செறி யிருளடைந்தனர்
ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த் தொரு
பொது நெறி எனும் வான்
புத்த முதருள் கின்ற
சுத்த சன்மார்க்க
தன் னெறி செலுத்துக
வென்ற என்னரசே
தனி நடராஜ வென்
சற்குரு மணியே!’
இப்பாடல்கள் எழுந்த காலம் எது? சைவ மடங்கள், நாவலர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய சைவ சமயப் பிரச்சாரகர்கள் மூலம் மதப் பிடிப்பை ஏற்படுத்தித் தத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த காலம். கம்ப இராமாயணத்தை வைணவ சமயச் சார்புடையது என்று படிக்கக் கூடாதென்று கட்டளை பிறப்பித்த காலம். தமிழை வளர்ப்பதாகத் தம்பட்டமடித்துக் கொண்டு, மதப் பூசல்களை விசிறி விட்டகாலம். இப்பூசல்களால் பிரிந்து மோதிக் கொண்டிருந்த மக்கட் பிரிவினரின் மீது நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை சைவ மடங்களும் வைணவ மடங்களும் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்ட காலம். இக்காலத்தில் சமரசத்தையும், ஒற்றுமையையும் மடத்தலைவர்கள் விரும்பவில்லை.
அப்பொழுதுதான் சைவ சித்தாந்தியான வள்ளலார் மனிதாபிமானத்தினால் உந்தப்பட்டு சமரசவாதியனார். சாதி, சமய பிரிவுகளால் பிரிந்து போரிட்ட மனிதரை மனித நேயத்தால் ஒன்றுபட அழைத்தார். சிவனை வழிபடும் சைவ மதத் தலைவர்கள், சிவனை வழிபட உலகினர் அனைவரையும் ஒன்றுபட அழைத்த இராமலிங்கரை வெறுத்தனர். மதச் சழக்குகளைச் சாடி மக்களை ஒன்று பட அழைத்த அடிகளாரை, தயை தாட்சண்ணியமின்றித் தாக்க நாவலர் போன்ற சைவப் பெருந்தலைகளை ஏவி விட்டனர்.
சைவ மதத் தலைவர்கள் சிதம்பரத்தில் நடராஜனை வழி படலாமென்றார்கள். நடராஜ நடனத்துக்கு எவருக்கும் விளங்காத முறையில் சித்தாந்த விளக்கம் கொடுக்க முனைந்தார்கள். அவரை வழிபடுவதே கன்ம மலங்களை ஒழித்து இன்ப நெறி காணும் வழியென்று போதித்தார்கள்.
ஆனால் கடவுள் வழிபாட்டில் மடத் தலைவர் வழியில் இராமலிங்கர் செல்லவில்லை. பேதமின்றி மனிதர் மீது அன்பு செய்கின்றவர்கள் உள்ளமே நடராஜர் ஆடுகின்ற அரங்கம் என்று பாடுகிறார். ‘மனிதனே நடமாடும் கோயில்’ என்ற விவேகானந்தரின் பேச்சோடு இராமலிங்கரின் இப்பாடலை ஒப்பிடலாம்.
‘எத்துணையும் பேத முறாது
எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணியுள்ளே,
ஒத்துரிமை யுரியவராய் உவக்
கின்றார் யாவர் அவருளந்தான்
சித்துருவாய் எம் பெருமான் நடம்
புரியுமிட மென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக் கேவல்
புரித்திட வென் சிந்தை மிக விழைந்த தாலோ’
நாயன்மார்கள், சிவனடியார்கள் என்ற சாதியைச் சார்ந்தவ ராயினும் அவரடிக்கு ஏவல் பூண்டு ஒழுக விழைத்தார்கள்.
‘ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்கள் பாராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகளாரே’
ஆனால் சிவனடியார் என்ற சமய முத்திரை அவருக்கு இருத்தல் வேண்டும். இதுபோன்ற கருத்துடைய பிள்ளைப் பெருமாளையங்கார் பாடல் ஒன்றுள்ளது. அரவணைக் கிடந்தானுடைப் அன்பருக்குத் தாம் அடிமையெனக் கவிஞர் தம்மை யழைத்துக் கொள்கிறார். இவை யிரண்டிலும் சமயத்தில் சாதி மறைவதைக் காண்கிறோம். ஆனால் சமயம் பிரிவினை வலுப்படுத்துவதையும் காண்கிறோம்.
இராமலிங்கரின் மேற்கண்ட பாடலைப் பார்த்தால் மனித நேயத்தை அவர் போற்றுகிறார் என்பது புலனாகும். எவ்வித பேதமும் பாராட்டாமல் உயிர்களைத் தம்முயிர் போல் நேசித்து தம்மோடு சமமான உரிமையளித்து மகிழ்ச்சியடைபவர்களது உள்ளமே நடராஜன் நிருத்தமாகும் அரங்கம் என்று அடிகளார் கூறுகிறார். மேலும் அவர்களை ‘வித்தகர் சிறந்தவர் என்று போற்றுகிறார். அவர்கள் அடிபணிந்து அவர்கள் வழியில் தாமும் செல்ல விழைவதாகக் கூறுகிறார். இப்பாட்டில் அவ்வித்தகருக்கு சமய முத்திரை இல்லை. அவர் கடவுள் வழிபாட்டுக் கொள்கையுடையவராக இருத்தல் அவசியமில்லை.
மனிதர் எல்லோரையும், செல்வம் பற்றியோ, உயர்வு தாழ்வு பாராட்டாமல் நேசிப்பவர்கள் எல்லோருக்கும் சம உரிமைகள் அளிக்க உடன்படுவார்கள். இத்தகைய மனித உறவில் பெருமகிழ்ச்சி யடைவார்கள். அவர்கள் உள்ளத்தில் அறிவுருவமாய் நடராஜப் பெருமான் நடனம் புரிகிறான் எனப் பாடுகிறார். அடிகளாரது மனித நேயத்தின் உச்ச நிலையை இப்பாடல் காட்டுகிறது.
இவ்வாறு மனித நேயமுடையவர்கள் பிறருக்கு இடர் நேர்ந்த போது, அவர்களுடைய உணர்வோடு ஒன்றி எவ்வாறு அவற்றை உணர்வார்கள் என்பதைத் தம்மையே உதாரணமாகக் கொண்டு இராமலிங்கர் சில பாடல்களில் கூறுகிறார்.
‘எளியவரை வலி யாரடித்த போதையோ,
என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நானுரைக்க வல்லவனல் லேன்
திருவுள மறிபுமே எந்தாய்!
களியரைக் கொண்டு பயந்தவென் பயந்தான்
கடலினும் பெரியது கண்டாய்
அளியர் பாற் கொடியர் செய்த வெங்கொடுமை
அறிந்த வெனன்டுக்கா மாற்றிவார்?’
எளியாரை வலியார் வாட்டும் கொடுமையைக் கண்டு இராமலிங்கரது மனம் கலங்கியது. செல்வச் செருக்கினால் பிறரைக் கொடுமைப் படுத்தும் செயல்களைக் கண்டு அவர் பயந்தார், இரக்கப்படத் தக்கவர்களைக் கொடியவர் படுத்தும் பாட்டைக் கண்டு அவர் உள்ளம் நடுங்கினார். இவ்வாறு எளியவரைச் செல்வர் அடக்கியாளும் கொடுமைகளைக் கண்டு அடிகளார் மனம் நொந்தார்.
கொடுமைகளைக் கண்டு மனம் நைந்த இராமலிங்கர் போரில் ஆயிரக் கணக்கான மக்களைச் சாகடிக்கும் பெருங் கொடுமையைச் சகிப்பாரோ? அவ்வாட்சியாரை ஆதரிப்பாரா? போர் வெறி கொண்டு மக்களைக் கொலை புரிந்த செய்தியைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் உள்ளம் நடுங்கியது.
‘மறை முடி வயங்கும் ஒரு தணித் தகைமை
வள்ளலே உலகரசாள் வோர்
உறையுறுவார் கொண்டு ஒருவரை யொருவர்
உயிரறச் செய்தனர் எனவே
தறையுச் சிறியேன் கேட்ட போதெல்லாம்
தளர்ந்து நடுங்கி நின்றயர்ந்தேன்
இறையுமிவ் வுலகில் கொலை யெனில் எந்தாய்
என்னுள் நடுங்கி வதியல்பே’
மனிதருக்குத் துன்பமும் சாவும் நேரும் பொழுதெல்லாம் உள்ளம் கரைவதோடு நின்று விடாமல் துன்பத்தைத் துடைக்க தமக்கு வலிமையளிக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறார்.
‘உண்ணாடி உயிர் களுறும் துயர் தவிர்த்தல் வேண்டும்’
அச்சா நான் வேண்டுதல் கேட்டரள் புரிதல் வேண்டும்’
ஆநந்த நிலைகளெல்லா மறிந்தடைதல் வேண்டும்
எனையடுத்தார் நமக் கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச் சாதி சமய விகற் பங்களெல்லாம் தவிர்த்தே
எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.
தமக்கென்று எதுவும் வேண்டாமல், மனிதருக் கெல்லாம் இன்பம் அருள வேண்டுமென தாம் வழிபடு கடவுளை அடிகளார் வேண்டுகிறார்.
மனிதருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிவதற்கு கொடுமைக்குக் காரணமாக இருக்கும் ஆட்சி ஒழிய வேண்டும். மனித ரெல்லோரும் அன்பால் ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஆதாரமாக அமையும் ஒரு அருள் ஆட்சி வேண்டும் என்று வள்ளலார் விரும்புகிறார். கொடுமை புரிவோர் ஆட்சி பீடத்தில் இருந்த காலத்தில் இதனைப் பாடுகிறார். மனிதருக்கு நல்லவை புரியும் நல்லவர் ஆட்சி வரட்டும் என்று அழைக்கிறார். இது உலக முழுவதிலுமிருந்த பலாத்கார அரசாங்க அமைப்பைக் குறிப்பதாகும். அவையாவும் உலகமெங்கும் மனிதருக்கு நலம் புரியும் ஆட்சி மலர வேண்டும்.
‘கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!
அழிள்நயந்த நன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து”
இது ஓர் கனவு. எளியவர் துயரம் கண்டு உருகிய தலைசிறந்த கவிஞர்களெல்லோரும் இத்தகைய கனவுகள் கண்டனர். அக்கனவுகள் கவிதை வடிவம் பெற்றன. அக்கவிதைகள் துயரப்படும் எளிய மக்களுக்குப் போராடும் உற்சாகத்தையளித்தன.
ஆயினும் அவர்கள் நினைத்ததெல்லாம் பெற நன்மார்க்கர் ஆட்சி தோன்ற வேண்டும் என்றும் அவ்வாட்சியில் மக்கள் இசைந்து எல்லோரும் இன்புற்று வாழ்வர்கள் என்றும் இராமலிங்கர் நம்பினார்.
பாரதி, மனிதன் வருங்காலத்தில் இன்ப நிலை பெறுவான் என்று கூறுமிடத்தில் எல்லாம் இன்ப நிலையை அமர நிலையென்றே கூறுகிறார். இராமலிங்கரும் மனிதர் வானவர் ஆவார்கள் என்று நம்பினார்.
‘மலங் கழித்து உலகவர் வானவாரயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது.
பலம் பெரு மனிதர்கள் பண்புளராயினர்
என்னுளத்து அருட் பெருஞ் சோதியார் எய்தவே.
அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஒங்கின குறை யெலாந் தீர்ந்தன.
பண்டங்கள் பலித்தன பரிந்தென் னுள்ளத்தில்
எண்டரும் அருட் பெருஞ் சோதியார் எய்தவே.
மதித்த சமய வழக் கெல்லா மாய்ந்தது.
வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது.
கொலையும், களவும் மற்றைப் புலையும் அழிந்தது.
இத்தகைய உலகம் தோன்ற வேண்டுமென இராமலிங்கர் கனவு காண்கிறார்.
படிக்க :
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
சாதி சமய சண்டைகள் மலிந்திருந்த காலத்தில் இராமலிங்கர் அவற்றை எதிர்த்துச் சாடி சமரசத்தைப் போதித்தார். ஏழை எளியவருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் குமுறி அவற்றை நீக்கத் தமக்கு வலிமையளிக்க நடராஜனை வேண்டினார். பாரதியின் வல்லமை தாராயோ?’ என்ற வேண்டுகோள் இக்கருத்தினடியாகப் பிறந்த தென்றே தோன்றுகிறது.
போர் ஒழிந்து அமைதி நிலவ வேண்டுமென வள்ளலார் விரும்பினார். மக்கள் துயர் தீர்ந்து இன்பமுற்றுவாழ வேண்டும் என்று விரும்பினார், உலகம் வாழத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களின் உள்ளமே கோயில் என்றும், அவர்கள் வழியைப் பின்பற்றுவதே சன்மார்க்கம் என்றும் நமக்குப் போதித்தார். இதனைக் கண்டு பாரதியார் இராமலிங்கத்தைத் தமது ஆசானாக ஏற்றுக் கொண்டார்.
கருத்துக்களில் மட்டுமின்றி பாட்டு உருவங்களில் கூட பாரதி இராமலிங்கரைப் பின்பற்றினார். இன்றும் மனிதாபிமானத்துக்கும் சமூகச் சீர்த்திருத்தத்திற்கும் இராமலிங்கர் வழிகாட்டியாகத் திகழ்கிறார். சமாதானம், சுதந்திரம், சோஷலிசம் என்னும் கோஷங்களை முழங்கிக்கொண்டு புத்துலகை நோக்கி முன்னேறும் முற்போக்கு மனித குலத்திற்கு இராமலிங்கரது திருமுறைப் பாடல்கள் பல்லாண்டு கூறுகின்றன.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க