தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 21
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
ஆங்கிலேயர் காலத்தில் வரலாற்றுப் பாடல்கள்
தன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.
பூலித்தேவர் கதை
வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795-ல் பூலித்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான். கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.
சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலித்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை . அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளையக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்பு கொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை . ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலித்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.
அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
படிக்க :
திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !
விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்
கான்சாகிபு கதை
இப்போரில் ஆங்கிலப் படையின் தளபதி யூசப் கான் என்பவன், அவன் இந்துவாக இருந்து, ஒரு முஸ்ஸீம் வணிகனால் அபிமான புத்திரனாக வளர்க்கப்பட்டான். அவன் நவாபின் படையில் சிப்பாயாகச் சேர்ந்து தனது வீரத்தாலும், திறமையாலும் தளவாயாக உயர்ந்தான். பரங்கிமலையிலும், சதுரங்கப்பட்டணத்திலும் காலூன்றியிருந்த டச்சுக்காரர்களின் கோட்டைகளைப் பிடிக்க ஆங்கிலேயருக்குத் துணை செய்தான். அவனது போர்த் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டு கம்மந்தானாக (Commander) நியமித்தனர். தென்னாட்டை அடக்க அவனையே அனுப்பி வைத்தார்கள். பல ஆண்டுகள் முயன்று அவன் தென்னாட்டுப் பாளையங்களை அடக்கினான்.
முக்கியமாகப் பூலித் தேவரது வலிமையை ஒடுக்கினான். பல கொடுமைகள் செய்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தென்னாட்டில் நிறுவினான். ஆனால் ஆங்கிலேயர் நவாபின் விருப்பப்படி அவனை நவாபின் படைக்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். இவ்வாறு அவனது செல்வாக்கைக் குறைத்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால் பாளையக்காரர்களின் வீரவுணர்வைக் கண்ட அவன் தென்னாட்டில் சுயேச்சை அரசை நிறுவ எண்ணி மதுரையில் முடிசூட்டிக் கொண்டான்.
நவாபும், ஆங்கிலேயரும் அவனை ஒழித்து விட எண்ணினர். அவன் ஏற்கனவே ஆங்கிலேயரின் கையாளாகத் தென்னாட்டின் பாளையக்காரர்களை விரோதித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்கு இருபுறமும் இடி தோன்றியது. ஏககாலத்தில் சிவகங்கையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்தான். சிவகங்கையின் மன்னன் ஆங்கிலேயர்களோடு சேர்த்து கொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த போரில் கான்சாகிப் தோற்றான். சூழ்ச்சியால் அவன் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். கடைசிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த கான்சாகிப், தனது முற்காலத்துச் செயல்களால் தென்னாட்டுப் பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிரான முன்னணியை உருவாக்க முடியவில்லை. அவனது செயல்களின் விளைவால் அவன் அழிந்தான்.
அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
கட்டபொம்மு
வீரபாண்டிய கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.
இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்து விட்ட பாளையக் காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினர். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும்.
தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும் கொண்டு சிறிய படையோடு, பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும் படையை எதிர்த்துப் போராடினான் கட்டபொம்மன். முதற் போரில் தளபதி காலின்ஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் இறந்தான். முற்றுகை உடைந்தது.
வெள்ளையர் படை, சிதறியது. 1799-ல் மறுபடியும் பெரும் படையோடு மேஜர் பேனர் மேன் கோட்டையைத் தாக்கினான். கோட்டை பிடிபட்டது. ஆனால் வெள்ளையர் படைக்குப் பெருஞ் சேதம் ஏற்பட்டது. ஆயினும் வெள்ளையர் வென்றனர். கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வீர கட்டபொம்மனது தியாகம் சுற்றிலுமுள்ள மக்கள் மனத்தில் வீர உணர்வை எழுப்பியது. மக்கள் படை திரண்டது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்த ஊமைத்துரையும், அவனது உறவினரும் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டனர். ஏழு நாட்களில் கோட்டை மறுபடியும் கட்டப்பட்டது. வெள்ளையர் எதிர்ப்பு அணி சுற்றிலும் பரவியது. தூத்துக்குடி துறைமுகத்தை ஊமையன் படை கைப்பற்றியது. வெள்ளையர் கலங்கினர். பெரும் படையோடு வெள்ளையர் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினான். ஊமையன் தப்பியோடிச் சிவகங்கைக்குச் சென்றான்.
மருது சகோதரர்கள்
சிவகங்கையில் ஆண்ட பெரிய மருது அரச வம்சத்தினன் அல்லன், வெள்ளையரை எதிர்த்து நின்ற சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதன் ஆட்சியை மருதுவிடம் ஒப்படைத்தான். அவனது விதவை வேலு நாச்சியார் அவனை மணந்து கொண்டாள். இவ்வாறு அவன் பாளையக்காரனானான். அரசியல் திறமை மிக்க தனது தம்பி சின்ன மருதுவின் துணையோடும். மக்கள் ஆதரவோடும் அவன் சுயேச்சையாக நாட்டைக் காத்து வந்தான். பலமுறை அவனை வெள்ளையர் பயமுறுத்தி வந்தனர். அவன் பணியவில்லை. வெள்ளையர்களை எதிர்த்து நிற்கும் பாளையங்களுக்கு அவன் உதவியளித்து வந்தான். அவனோடு சேர்ந்து போராடவே ஊமைத்துரை சிவகங்கை சென்றான். அவனைத் தங்களிடம் ஒப்படைத்து விடும்படி வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள்.
கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
வரலாற்றுப் பாடல்களைப் பற்றிய கருத்து
இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன, கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள் : இன்னும் பல பாடல்கள் ஏட்டிலேயே புதைந்து கிடக்கின்றன. அவையாவும் திரட்டி வெளியிடப்படவேண்டும்.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க