தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 19
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை

சமூகக் கதைப் பாடல்கள்

மூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.

முத்துப்பட்டன் கதை

முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.

முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.

படிக்க :

தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.

இத்தகை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

நல்லதங்காள் கதை

நல்லதங்காள் கதை, தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள்.

இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான்.

அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காரி. குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடு படுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி.

தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது என்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.

இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமை யில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமை யற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.

படிக்க :

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

சின்ன நாடான் கதை

சின்ன நாடான் கதை. சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று, அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள்.

குழந்தை மனைவி பெரியவளானவுடன், ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை . கடைசியில் வஞ்சகத்தால்
அவனைக் கொன்றுவிட்டனர்.

சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான் என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.

கௌதலமாடன் கதை

மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கௌதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும். நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.

கௌதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்தி வந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான்.

ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது கௌதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது.

தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கௌதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கௌதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.

இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்பத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கௌதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.

வெங்கல ராசன் கதை

ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து விட்டான்.

வெங்கலராசன் கதையை விளக்கும் கல்வெட்டு

தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.

மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.

அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்ப வில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்று மறியாத குடிமக்களும், மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான்.

பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.

சமூகக் கதைகள் பற்றிய கருத்து

இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.
சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே.

இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப் பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளி யெறிப்பட்டன.

தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.

(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க