தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 20
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
வரலாற்றுக் கதைகள்
ரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.
ஐவர் ராஜாக்கள் கதை
பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், ‘நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள்.
எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை . குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள்.
படிக்க :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
தத்தளிக்கும் டெல்டா : விவசாயிகளுக்கான இழப்பீட்டை குறைக்கும் தமிழக அரசு !
இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை, கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
ராமப்பய்யன் கதை
திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான்.
செஞ்சிக் கோட்டை
தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப் பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.
இரவிக்குட்டிப்பிள்ளை
இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம் முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள்.
படிக்க :
மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை
இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !
இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1637லும், 1639லும் நடைபெற்றவை.
தேசிங்குராஜன் கதை
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்?
இலட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க