தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 17
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
நாட்டுக் கதைப் பாடல்கள் (ஓர் ஆராய்ச்சி)
வ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்துவந்தன.
சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும்போது இணைப்புப்பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன.
நாட்டுப் பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது. கேட்பவர்கள் மனதில், மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தது. நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை.
படிக்க :
♦ கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
♦ நிலவுடமையும் சேர சோழ பாண்டிய மன்னன் வரலாறும்
கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான, பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.
சமூக வரலாறு
நமது கிராம வாழ்க்கையில் பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டு ஜாதிப் பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயமாக இருந்தது என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன.
ஊர்க்கோவில்களுக்கு, ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது அக்கோவிலை நிர்வகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள், மேல் வர்க்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள், இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன.
நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்குக் கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர்வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.
வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும், பல போர்கள் நடப்பதற்கும், அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புத்தான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும். இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.
நெசவு முதலிய தொழில்களும் குடிசைத் தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியில்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத் தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.
மாதிரிப் படம்
ஏழ்மை நிலை பொறுமையின் எல்லையைத் தாண்டியபோது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்குக் குறிப்பிடுவோம்.
நாடார்களது சாதி வரலாற்றை ‘வலங்கையர் கதை’ என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்திரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு ‘வெட்டி’ என்று பெயர் வழங்கப் பெற்று வந்தது.
வெட்டி’ முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள், அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்து விட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடு கடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும் ஒரு போராட்ட நினைவு.
பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல விடங்களில் தங்களது உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ள இயலாமல், கோவிற் சுவற்களை இடித்தும் பாத்திரங்களைத் தீக்கிரையாக்கவும் சுரண்டல் முறைக்கும் எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதிற்சுவர்களில்தான் அவர்களைத் துன்ப நிலையில் வைத்திருந்த நிலமான்ய முறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது. ‘மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டி வந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர் சாசனம் கூறுகிறது.’
அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச் செங்காடு மூன்றாம் ராஜராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியர்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன் அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன.
கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார், இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன்வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்த்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டது முண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது ஆதிக்க அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.
கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கிறது. ‘அரசாங்கம் அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச் சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல இடங்கை வகுப்பார்; அக்காலத்தில் ஏற்க வேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன.
ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு’ அரசன் ஆணைக் கிணங்கக் கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலாச் சோழ மண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து 48000 பூமியும் உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும். அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள நிலப்பகுதி வரி விகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள்.’ இக் கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சியடைந்த காலம் வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறு தொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்தி லிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ்வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்குச் சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர்.
சிற் சில சமயங்களில் இம்மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு
பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த்தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.
படிக்க :
♦ சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !
♦ நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !
தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாமல் போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது, அவ்வாறு கோயில் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர் நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு கிராம நில அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல்நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர் டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளி நாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள், முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க் கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர்.
இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று, கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
(தொடரும்)
 
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க