நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 04

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள்

மிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846-ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.

குலோத்துங்க சோழன்.

கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்ட மெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள், பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.

இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.

சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.

ராஜ ராஜ சோழன்.

இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன.

உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று. அவ்வூர்க் கோவிலையும் – ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான் . ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.

‘ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை, இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு’ (சோழர் வரலாறு, மு. இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காளியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நியந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’

சேரன்மகாதேவி கல்வெட்டு.

இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணி செய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க