தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 18
முதல் பாகம்…………………………………………………………………………………………முந்தைய பாகம்
நா. வானமாமலை
யல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப்பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆர்க்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புதுமுறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தாரி முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச் சொந்தக்காரர்கள் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டி விடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர்.
ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நிலப்பிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசியத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று. பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது.

படிக்க :

பாமக-வின் ஜெய்பீம் எதிர்ப்பு ‘நாடக ’ அரசியல் !

“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?

இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்களையும் நாம் நோக்க வேண்டும்.
நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப் பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
1. இதிகாசத் துணுக்குகள்
2. கிராம தேவதைகளின் கதைகள்
3. சமூகக் கதைகள்
4. வரலாற்றுக் கதைகள்.
இதிகாசங்கள்
இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப் பொருளாகக் கொண்ட பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனனும், பீமனும் மக்களுக்குத் தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்று கிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும் மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.
அல்லியரசாணி
பாரத கதாபாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள், அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள், அல்லி, பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அருச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அருச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன் – சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

பவளக்கொடி மாலை

இக்கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை, அல்லியோடு சிறிது நாள் தங்கியிருந்து விட்டு அருச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான்.
அருச்சுனன் பவளம் தேடி பவளக்கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக் காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். இப்படி ருசிகரமாகக் கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக் காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.

படிக்க :

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

பொன்னுருவி மசக்கை
மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும், கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.
ஏணி ஏற்றம்
நான்காவது கதை, ஏணியேற்றம். இது அஞ்ஞாத வாச காலத்து நிகழ்ச்சியொன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள தனது சகமனைவி அல்லியிடம் சரண்புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள்.
காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ்நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப் போலப் பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன.
அல்லி ஏணியை பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்களைச் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவது போல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்டபொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.
 “இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்
பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்த இது
போது மிவனை இன்னும் என்ன செய்யப்போகின்றீர்”
என்று தருமர் கேட்கிறார்.
இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதிவைத்திருக்க வேண்டும். இக்கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றனர் என்றாலும், கதையின் கருத்துக்கள் பழந்தமிழ்நாட்டில் நிலவியவைதாம்.
இவற்றைப் போன்று பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக்கதா பாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள். எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதாபாத்திரங்களை விட தமிழ் நாட்டுக் கற்பனைக் கதா பாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றன. ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப்பட்டுள்ளன.
(தொடரும்)
« முந்தைய பாகம் ………………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க