“யாரையும் சும்மா விடக்கூடாது
ரித்தாவோட தாத்தா
எலிசா சாருவோட அப்பா
இந்த சார் தே*டியா பு*ட
யாரையும் சும்மா விடக்கூடாது.”
 – கோவை சின்மயா பள்ளி மாணவி மரணத்திற்கு முன் எழுதிய கடிதத்தில் மேற்கண்ட ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. அந்த ஐந்து வரிகளில் அந்த மாணவியின் உள்ளத்தில் பொதிந்திருந்த ஆறாத ரணங்களும் ஆத்திரமும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இந்தச் சமூகத்தின் இழிநிலையை தோலுறித்துத் தொங்கவிட்டிருக்கிறது.
கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியனாக பணியாற்றிய மிதுன் சக்கரவர்த்தி எனும் கிரிமினல் தன்னிடம் கல்வி கற்றுவந்த 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கிறான். அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து, மிதுன் சக்கரவர்த்தி மீது அவனது மனைவியிடமும் தலைமை ஆசிரியையிடமும் அந்த மாணவியும் அவரது நண்பனும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன், பாதிக்கப்பட்ட மாணவியை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்துவிட்டு, வீட்டில் இது பற்றி சொல்ல வேண்டாம் எனவும், பேருந்தில் யாரேனும் இடித்தால் அமைதியாக வந்துவிடுவது போல இதனையும் கடந்து போகும்படியும் “வழிகாட்டுதல்” கொடுத்துள்ளார்.
தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி
அதுமட்டுமல்லாமல், மிதுன் சக்கரவர்த்தியை பணியிலிருந்து நீக்காமல் இழுத்தடித்துள்ளது, பள்ளி நிர்வாகம். இதனைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து வெளியேறி மற்றொரு பள்ளியில் சேர்ந்துள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி.
அதன் பின்னரும் அந்தக் கிரிமினலின் பாலியல் தொல்லை அலைபேசி மூலமாக தொடர்ந்துள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அந்த மாணவி. தனது தாயார் வெளியூருக்குச் சென்ற நாளில் தனது தந்தை வீட்டில் இல்லாத சமயத்தில் தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படிக்க :
பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !
பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம போராடணும் | மக்கள் கருத்து !
மாணவியின் மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை, மிதுன் சக்கரவர்த்தி, அந்தப் பள்ளி நிர்வாகம் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அந்த புகாரின் மீது போலீசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துத் தெரிந்ததும் களத்திற்கு வந்த முற்போக்கு ஜனநாயக சக்திகள் மிதுன் சக்கரவர்த்தியையும் பள்ளியின் தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் உள்ளிட்ட நிர்வாகத்தாரையும் கைது செய்யுமாறு தொடர்ந்து போராடியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகு மிதுன் சக்கரவர்த்தியைக் கைது செய்தது தமிழ்நாடு போலீசு. மாணவி புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பாலியல் வன்முறை குறித்து வீட்டிற்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் தடுத்த பள்ளி தலைமைஅ ஆசிரியை மீதும் போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் குடும்பத்தினரும், அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராடின.
போலீசு பள்ளி நிர்வாகத்தின் மீதும், தலைமை ஆசிரியை மீதும் வழக்கு பதிய மறுத்ததோடு, மாணவியின் குடும்பத்தினரை ‘மென்மையாக’ மிரட்டவும் செய்தது. அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் போலீசின் இந்த யோக்கியதை அம்பலப்பட்டு திமுக-வின் ‘சமூக நீதி’ ஆட்சி கேள்விக்குள்ளாக்கப்பட்டவுடன் கடந்த 14-11-2021 அன்று ‘தப்பியோடிய’ மீரா ஜாக்சனை கைது செய்திருக்கிறது போலீசு.
000
கோவை மாணவியின் (தற்)கொலைக்குப் பின்னர் ஊடகங்களில் அந்த மாணவியின் நண்பனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் பல ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின. அந்த மாணவி எழுதிய கடிதத்தின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவின.
அந்தக் கடிதத்தில் அவர் தனது மனதை தொடர்ந்து ரணப்படுத்தியவர்களை அம்பலப்படுத்தி அந்த ஓநாய்கள் “யாரையும் சும்மா விடக்கூடாது” என்று இந்தச் சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கோவை சின்மயா வித்தியாலயா பள்ளியின் ஆசிரியன் மிதுன் சக்கரவர்த்தியை அந்தக் கடிதத்தில் குறிப்பிடுவதோடு, தனது தோழியர்களின் தந்தை, தாத்தா ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த மாணவியின் நண்பன் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் மறைந்த தனது தோழி, ஆண்களைக் கண்டாலே தமக்கு வெறுப்பு ஏற்படுவதாகக்  கூறியதை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் மாணவியின் கடிதத்தையும் வைத்துப் பார்க்கும் போது, அந்த இளம் மாணவி சிறுவயதிலிருந்து தாம் அனுபவித்துவந்த பாலியல் சீண்டல்களை எல்லாம் எண்ணி மனம் வெதும்பி, பாதிக்கப்பட்டு அந்த விரக்தியின் முடிவில்தான் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளும், பாலியல் சீண்டல்களும் அவர்கள் தெளிவுறும் வயதுக்காக காத்திருப்பதில்லை. இந்தியாவில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்களில் கணிசமானவை குழந்தை வயதில் இருந்தே நடத்தப்படுகின்றன. நெருங்கிய குடும்ப உறவுகள், குடும்ப நண்பர்கள், அருகாமை வீட்டினர் என பல ரூபங்களில் பாலியல் குற்றவாளிகளின் சீண்டல்களுக்குக் குழந்தைப் பருவம் முதல் ஒரு பெண் ஆளாகிறாள்.
அப்படி ஆளாகும் பெண் குழந்தைகளை அது உடல்ரீதியாக மட்டும் பாதிப்பது இல்லை. அதன் உள்ளரீதியான தாக்குதல் மிகவும் கொடூரமானது என்பதையும் மிகவும் ஆழமானது என்பதையும் உயிரிழந்த கோவை சின்மயா பள்ளி மாணவியின் கடிதமும் அம்மாணவி எடுத்த முடிவும் எடுத்துக் காட்டியுள்ளது.
அந்தக் கிரிமினல் மிதுன் சக்கரவர்த்தி மீது தலைமை ஆசிரியையிடம் மாணவி புகாரளித்த போது, “பேருந்தில் செல்லும்போது ஆண்கள் உரசுவதைக் கடந்து செல்வதைப் போன்று இவ்விவகாரத்தையும் மறந்து விடு” என்று ‘கீதோபதேசம்’ செய்திருக்கிறார் தலைமையாசிரியை மீரா ஜாக்சன்.
கேட்க அருவெறுக்கத்தக்க வசனமாக இருந்தாலும், இன்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெரும்பாலான பெண்கள் அதுகுறித்து தனது வீட்டிலோ, நண்பர்களிடமோ முறையிடும்போது மீரா ஜாக்சனின் வசனம்தான் வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு வண்ணத்தில் பதிலாக அப்பெண்களுக்கு அளிக்கப்படுகிறது.
பார்ப்பனிய சாதியப் படிநிலையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடம் மற்றும் தமது பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் இச்சமூகத்தால் தமக்கு மறுக்கப்பட்ட கவுரவத்தையும், மானத்தையும் தனது குடும்பத்துப் பெண்களின் உடலின் மீது கட்டமைத்துப் பெருமை கொள்ள நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது, பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை நிறைந்த இந்தச் சமூகம்.
அந்தக் கவுரவத்தை பெண்ணின் உடல் மீது கட்டமைப்பதன் மூலம் இந்த சாதியக் கட்டுமானத்தைக் கட்டிக் காப்பாற்றுவதே பார்ப்பனியத்தின் முதன்மை நோக்கம். இவையே ஆணவப் படுகொலைகளாக, தற்கொலைகளாக, வெளிப்படுகின்றன. அடுத்ததாக, ஆண்களின் வாழ்நாள் அடிமையாக, மோகப் பொருளாக பெண்களை இருத்தி வைத்திருப்பதே இரண்டாவது நோக்கம். வெளிநாடுகளில் இரண்டாவது நோக்கமே பிரதானமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் தனிச்சிறப்பாக பார்ப்பனியம், பெண்ணின் மீதான ஆணின் ஆதிக்கத்தை உறுதி செய்வதன் மூலம் சாதியக் கட்டுமானத்தை இறுகச் செய்கிறது.
பெண்களின் உடலின் மீது தனி நபரின் கவுரவத்தையோ, ஒரு குடும்பத்தின் கவுரவத்தையே அது கட்டமைப்பது இல்லை. ஒரு சாதியின் கவுரவத்தை அங்கு வைக்கிறது இந்த பார்ப்பனிய சமூகம். பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் மேல் எழுந்த ஒடுக்கப்பட்ட சாதியை இழிவுபடுத்த ஆதிக்கச்சாதி கிரிமினல் கும்பல்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இன்றளவும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைதான். இதற்கு ஹத்ராஸ் பாலியல் வன்கொலையே சான்று.
படிக்க :
ராபியா சைஃபி பாலியல் வன்கொலை : பார்ப்பனிய ஆணாதிக்க அதிகார வர்க்கத்தின் வெறியாட்டம் !
PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
சமூகத்தில் ஊற வைக்கப்பட்டிருக்கும் இந்த மனநிலைதான், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்கள், தங்களது குடும்பத்தில் கூட தான் சந்தித்த பிரச்சினையை பகிர்ந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை தனது குடும்பத்திற்கான அவமானமாகவும், தனது தவறாகவும் கருதச் செய்து துவண்டு போகச் செய்கிறது. தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.
கோவை சின்மயா பள்ளி மாணவி மரணத்திலும், அந்த மாணவி தனது குடும்பத்தாரிடம் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. தனது நண்பனிடம் மட்டும் மனங்குமுறி கூறியிருக்கிறாள். இவ்விவகாரம் தமது தாய் தந்தையருக்குத் தெரிந்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம் என தாம் அஞ்சுவதாக தமது நண்பனிடம் தெரிவித்திருக்கிறாள்.
ஒரு இளம் குருத்து தூக்கில் தொங்கி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதற்கு சின்மயா வித்தியாலயாவும் மிதுன் சக்கரவர்த்தியும், ரித்தாவின் தாத்தாவும், எலிசா சாருவின் அப்பாவும் முதன்மைக் காரணம் என்றால், அந்த மாணவிக்கு விரக்தியை தவிர்த்து நம்பிக்கை தரும் சூழலை ஏற்படுத்தத் தவறிய நாம் அனைவரும் ஒரு சமூகமாக இரண்டாவது காரணமாக இருக்கிறோம்.
இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பாதிப்பை வெளியே சொல்லக் கூட முடியாத சூழ்நிலை அடிமைச் சமூகத்தில் கூட கிடையாது. ஆனால் இங்கு ஜனநாயகம் கோலோச்சுவதாகச் சொல்லப்படும் முதலாளித்துவச் சமூகத்தில் இந்த அவலம் தொடர்கிறது. இந்த நிலைதான் மிதுன் சக்கரவர்த்திகளை ஒவ்வொரு நொடியும் உருவாக்குகிறது; அவர்களுக்கு தைரியமூட்டுகிறது.
000
கோவை சின்மயா பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு ஒரு பக்கம் சமூகச் செயற்பாட்டாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, மறுபக்கத்தில் மரணித்த அந்த மாணவியின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் வேலையைச் செய்து வருகிறது சங்க பரிவாரக் கும்பல். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்குவதற்கு ஆளும், அதிகார வர்க்கங்களுக்கும், பார்ப்பனியக் கும்பலுக்கும் இருக்கும் ஒரே ஆயுதம் “ஒழுங்கு” தான்.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களோ, ஒடுக்கப்பட்ட வர்க்கமோ தனது உரிமைக்காகப் போராடினால் “பொது ஒழுங்கு” கெட்டதாகத்தான் அதிகாரவர்க்கம் ஊளையிடும். அந்த “ஒழுங்கு கெட்டவர்களுக்கு” பாடம் புகட்ட லத்தியையும், துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தும்
சனாதன தர்மத்தினைக் கட்டிக்காக்கும் தமது பார்ப்பனிய ஆணாதிக்க “இயல்பு நிலை” உலுக்கப்படும்போது பார்ப்பனியம் தமது கையிலெடுக்கும் ஆயுதம், “ஒழுங்கு”தான். அது அந்தப் பெண்ணின் “ஒழுங்கு”. அந்தப் பெண்ணிற்கான நியாயத்தை மறுப்பதற்காக கூச்சமின்றி அந்தப் பெண்ணை “ஒழுங்கு கெட்டவளாக” சித்தரிப்பதுதான் காலங்காலமாக பயன்படுத்தப்படும் ஆயுதம்.
சின்மயா பள்ளி மாணவி தனது கடிதத்தில், மிதுன் சக்கரவர்த்தியை, “தேவ*யா புண்*” என்ற வார்த்தையால் சாடியிருப்பதை சுட்டிக் காட்டி “ இந்தக்காலத்தில் எட்டாம் வகுப்பிலேயே போர்ன் படங்களை பெண்கள் பார்க்கிறார்கள். கெட்டவார்த்தைகள் பேசுகிறார்கள்” என்று ஒழுக்க சிகாமணிகள் சமூக வலைத்தளங்களில் அங்கலாய்க்கிறார்கள்.
அந்த 17 வயது மாணவியும் மிதுன் சக்கரவர்த்தியும் பேசியதாகக் கூறி ஒரு ஆடியோவை மிதுன் சக்கரவர்த்தி – சின்மயா பள்ளி நிர்வாகத் தரப்பு உலாவிட்டுள்ளது. அதில் பேசப்படும் விசயங்களை முன் வைத்து, அந்த மாணவியின் சம்மதத்தோடுதான் மிதுன் சக்கரவர்த்தி அவரை பாலியல்ரீதியாக அணுகியதாகக் காட்டுகிறது. இதன் மூலம், அந்த மாணவியின் ஒழுக்கத்தை இழிவுபடுத்தி, இந்தக் கிரிமினல் கும்பலின் கடுங்குற்றத்தில் நியாயம் இருப்பதாகவும், அந்த மாணவியின் மரணத்திற்கு வேறு காரணம் இருப்பதாகவும் பரப்புகிறது சங்க பரிவார, வலதுசாரிக் கும்பல்.
அந்த சின்மயா பள்ளி மாணவி தனது நண்பனிடம் மனங்குமுறி தெரிவித்த விசயங்களில் முக்கியமானது, மிதுன் சக்கரவர்த்தியைப் பார்க்கும்போதெல்லாம் தாம் அவமானமாக உணர்வதாகக் கூறியதுதான்.
ஒரு மனிதன் தனது விருப்பமின்றி அதிகாரத்தாலோ, கும்பலின் வன்முறையாலோ ஒரு வேலையைச் செய்ய நிர்பந்திக்கப்படும் போதுதான் அவன் அவமான உணர்வை அடைவான். அந்தக் கையறு நிலைதான் அவனை அவமானத்தின் உச்சத்திற்கும் விரக்தியின் விளிம்பிற்கும் இட்டுச் செல்லும்.
அந்த விரக்தியின் விளிம்பில் இருந்து தப்பி வர ஒரு வடிகால் இல்லையெனில், அது தற்கொலையாக முடிகிறது. இங்கும் அந்த அவமானம் தான் தற்கொலையை நோக்கி அந்த மாணவியைத் தள்ளியிருக்கிறது. அதனால் தான் அத்தகைய அவமானங்களை தனக்கு அளித்த பிற இரண்டு கிரிமினல்களையும் மிதுன் சக்கரவர்த்தியோடு சேர்த்து அம்பலப்படுத்தியிருக்கிறார்.
சட்டப்படி அந்த மாணவி 18 வயதுக்குக் குறைவாக இருப்பதனால் தான் இந்த வலதுசாரி ஓநாய்க்கூட்டம் அடக்கி வாசிக்கிறது. அதிகாரவர்க்கமும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஒருவேளை இந்த மாணவியின் வயது 18-ஐக் கடந்திருந்தால், அந்த மாணவியை “ஒழுக்கங்கெட்டவளாக” சித்தரித்து இந்த வழக்கை இழுத்து மூடியிருக்கும் இந்தக் கும்பல்.
000
ஒரு பச்சைப் படுகொலையை மிதுன் சக்கரவர்த்தி எனும் கிரிமினலோடு இணைந்து சின்மயா வித்யாலயா பள்ளி மேற்கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் பள்ளிக் கூடங்களை தங்களது குழந்தைகளுக்குக் கல்வி அறிவூட்டும் இடமாக நம்பித் தான் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் கல்வி நிறுவனங்களோ பாலியல் கிரிமினல் கும்பல்களின் கூடாரமாக விளங்குகின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணங்கள், கோவை சின்மயா மிஷன் ட்ரஸ்டுக்கு சொந்தமான சின்மயா வித்யாலயா, சென்னை ஒய்.ஜி.பீ. குடும்பத்திற்குச் சொந்தமான பி.எஸ்.பி.பி. பள்ளி, சென்னை சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில் ஹரி பள்ளி ஆகியவை ஆகும். இவையெல்லாம் சமீபத்திய உதாரணங்கள் ஆகும். பாதிக்கப்படும் மாணவர்களை மிரட்டி அமைதிப்படுத்துவதன் மூலமாக, தங்களது பள்ளியின் யோக்கியப் பிம்பத்தை நிலைநாட்டி, பெற்றோர்களிடமிருந்து குறைவில்லாமல் கல்விக் கட்டணத்தைக் கல்லா கட்டி வருகின்றன இத்தகையப் பள்ளிகள்.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் செய்த தவறுக்காக பள்ளிகள் குற்றவாளியாக்கப்படுவதாகவும், குறிப்பான சமூகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்கள் மட்டும் குறிவைத்துத் தாக்கப்படுவதாகவும் இந்துத்துவைக் கும்பல்கள் கூவி வருகின்றன. இவர்கள் மறைமுகமாக, பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிவருடிகளும் சங்க பரிவாரக் கும்பலைச் சேர்ந்தவர்களும் நடத்தும் பள்ளிகள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றன.
நமக்கும் இதே கேள்வி எழுகிறது – ஏன் இந்தப் பள்ளிகள் மட்டும் இத்தகைய பூதாகரமான பிரச்சினைகளில் மக்கள் மத்தியில் மாட்டுகின்றன. அதுவும் பார்ப்பனப் பின்னணி கொண்ட பள்ளிகளாகவே ஏன் அவை அமைகின்றன ?
படிக்க :
பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா
லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
அதிகார மட்டங்களின் உயர்நிலைகளில் இருக்கும் ‘அவாள்களின்’ ஆதரவு இருக்கின்ற தைரியத்தில், சட்டத்தை எந்த அளவிற்கேனும் வளைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை இருக்கும் தைரியத்தில், பார்ப்பனிய ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் நீக்கமற நிரம்பியிருக்கும் தைரியத்தில் தான் இந்த பார்ப்பனக் கல்விக் கொள்ளைக் கூடாரங்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்களின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையை மறைத்து, தங்களது நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன.
‘சமூக நீதி’ ஆட்சி – பெண்கள் பாதுகாப்பு எனப் பேசும் திமுகவின் ஆட்சியில் கூட தவறிழைத்த ஆசிரியனுக்கு துணை நின்ற பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்வதற்கே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் இருப்பதே இதற்கு எடுப்பான ஒரு உதாரணம்.
பார்ப்பனியத்தின் பிடியில் இருந்து இந்தியச் சமூகத்தை விடுவித்து, மக்களிடையே நாம் உண்மையான ஜனநாயக உணர்வை வளர்க்கத் தவறும் ஒவ்வொரு நொடியும் சில நூறு மிதுன் சக்கரவர்த்திகளும் மீரா ஜாக்சன்களும் நம்மிடையே தோன்றி செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறோம் ?
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்ற குரல் சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல !  நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ? களமிறங்குவோம் !
சரண்

7 மறுமொழிகள்

  1. பெண்களை சாதியும் மதமும் அடிமையாக, நுகர் பொருளாக பார்க்கிறது.
    பெண்களுக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள கட்டமைப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தே வேண்டும்.
    ஆண்கள் மிருக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு மிகுந்த எச்சரிக்கை, கண்காணிப்பு தேவை.

  2. வருத்தமாக உள்ளது உங்கள் கருத்துகள் மார்க்சியமில்லாமை
    போராட்ட களமானது நேரடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் போலிசின் அரஜமாக உள்ளது.
    சமூகத்தை யார் கட்டிக் காக்கின்றனர் ஒரு சிலரா? அல்லது இந்த அரசு இயந்திரமா?
    புரியவில்லை புரட்சியாளர்களே உங்களின் பஞ்சர் டைலாக்.

    இந்த சமூக அமைப்பே எல்லா ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் எதிரானது, அதாவது பெண்கள் ஒடுகப் பட்ட மக்கள் என்னும் இந்த தொடர் அட்டூழியங்கள் சாதியால் அல்ல அதிகாரம் படைத்தோரின் அரஜகமே. அதில் நீங்கள் சுருக்கி பேசும் பார்ப்பனியமானது உண்மையில் ஒடுக்கும் கூட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகளை காப்பாற்றும் உத்தியே வேறோன்றும் இல்லை.

    இது போன்ற குற்றங்களை ஒழித்துக் கட்ட இச் சமூக அமைப்பில் சாத்தியமே இல்லை புரட்சியாளர்களே இதை தூக்கி எறிய அறை கூவல் விடுங்கள் அதை விடுத்து அவாளை மற்றும் குற்றம் சொல்லி உங்கள் தார்மீக கடமையிலிருந்து விலகி ஓடாதீர் புரட்சியாளர்களே!!!!

    • வணக்கம் சிபி,

      அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணமான சின்மயா பள்ளியின் நிர்வாகத்தை கைது செய்யாத அரசும் அதிகாரவர்க்கமும் மக்கள் போராட்டங்களுக்குப் பின்னர் தான் கைது செய்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

      ஆளும் இந்த அரசுக் கட்டமைப்புதான் இத்தகைய சமூக இழிவுகள் அமைவதற்குக் காரணம் என்பதிலும், இந்த அரசுக் கட்டமைப்பை தகர்க்காமல் இதிலிருந்து பூரண விடுதலை இல்லை என்பதிலும் வினவுக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

      இப்பிரச்சினையில் அம்மாணவியின் தற்கொலை முடிவுக்குக் காரணமான சமூகத்தின் பொது மனநிலையையும் அதன் பின்னர் பொதிந்துள்ள பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பும் அம்பலப்படுத்தப்பட்டு தகர்க்கப்பட வேண்டியவையே !

      இன்றைய காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில், மக்களின் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பார்ப்பனியச் சமூக கட்டமைப்பைத் தான் பாசிஸ்ட்டுகள் தங்களது அடித்தளமாக எடுத்துச் செயல்பட்டுவருகின்றனர். பாசிச கும்பலின் இந்துராஷ்டிர ஆட்சி அபாயம் தடுக்கப்பட வேண்டுமானால், சமூகத்தில் உள்ள இந்த பிற்போக்கு மனநிலை தகர்க்கபப்ட வேண்டும்.

      அந்த அடிப்படையில்தான் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. மற்றபடி ஒரு சில பார்ப்பனர்கள் தான் எதிரிகள் என்ற கருத்து வினவுக்கு கிடையாது. அப்படி ஒரு தொனி இந்தக்கட்டுரையில் வெளிப்படவில்லை என்றே கருதுகிறோம்.

      பின்னூட்டத்திற்கும் கருத்து விவாதங்களை துவங்கியமைக்கும் நன்றி !

      • நன்றி முதற்கண் என்னுடைய கேள்விக்கு செவி மடுத்தமைக்கு தோழமையே, மீராவின் பெயரை சுருக்கி உள்ளது போலவே தங்களின் அதே பெரியார் பாணிய “அவாள்” மீதான காழ்ப்பு ஆளும் வர்க்கத்தின் மீது இல்லை நீண்ட கருத்து போராட்டம் உங்களுடன் செய்ய வேண்டும் பின் வருகிறேன் உங்கள் கருத்தறிந்து தோழமையே!!!

  3. நல்லதொரு கட்டுரை. பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிப்பது இம்மாதிரியான பாலியல் சீண்டல்களை குறைக்கும் என்று நம்புகிறேன்.

    பி.கு: அது என்ன மீரா சாக்சன் என்ற பெயரைச் சுருக்கி மீரா என்றே எழுதியுள்ளீர்கள்?

    • தங்கள் கருத்துக்கு நன்றி பெஞ்சமின்! தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. சரி செய்து விடுகிறோம்.

  4. கட்டுரை அருமை.

    பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கச் சிந்தனையையும் துடைத்தெறிய வேண்டுமானால், இந்தியச் சமூகத்தைப் பிண்ணிப் பிணைந்திருக்கும் பார்ப்பனிய இந்துமதத்தை வேரோடு கெல்லியெறிந்தே ஆகவேண்டும். அப்போதுதான், இத்தகைய சமூக அவலங்களைத் துடைத்தொழிக்க முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க