ம் சமூகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைகள் நம்மைக் கடந்து செல்கின்றன. அதில் பெண் சார்ந்த பாலியல் வன்முறைகள் கடக்க முடியாத ஒன்றாகின்றன. பெண் என்ற ஒரே காரணத்தாலேயே அவள் மேல் விழும் தாக்குதல்கள் இச்சமுகத்தின் தற்போதைய சீழ்பிடித்த நிலையை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைய சூழலில் போலீசு, ஊடகம் என அனைத்தும் பெண்ணின் உடலை சந்தைப் பொருளாக்கி தமது இறையாக்கியிருக்கின்றன.

நான்  எனது பள்ளிக் கல்வி முதல் முதுகலைப்பட்டம் வரை மகளிர் கல்வி நிறுவனங்களில்தான் படித்து முடித்தேன். கல்லூரி முடித்து விட்டு இச்சமுகத்தை எதிர் கொள்வதில் பெரும் தயக்கமும், பயமும் எப்போதும் என்னில் உண்டு; அது இன்றுவரையிலும் தொடர்கிறது. ஆண் என்பவன் வேற்றுக்கிரகவாசி போன்று பலமுறை தோன்றியதுண்டு. இது வாழ்க்கையில் எனது விருப்பத்தை நான் தேர்வு செய்ய முடியாதவாறு என்னை முடக்கியது. கல்லூரியில் கூட எனக்கு பிடித்த துறையை எடுக்காமல் ஏதோ ஒரு துறையை எடுத்து படித்து ஆசிரியர் ஆகிவிட்டேன்.

ஆனால், இப்போதும் நினைப்பது உண்டு. என்னுடைய வாழ்க்கையில் ஆண் சகாக்கள் என்பதையே சமூக இயக்கங்கள்தான் அறிமுகம் செய்தன. ஆனால், அப்போதும் கூட இடைவெளி தேவை என கருதும் சாதாரணப் பெண்ணாகவே இருந்தேன். ஆண், பெண் என இருபாலருமின்றி அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகம் சமமானதுதான். ஆனால் இச்சமூகம் அப்படி கட்டமைக்கப்படவில்லை. இச்சமுகத்தின் நான் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளில் எப்போதுமே எனது அண்ணன் அல்லது அப்பாவைச் சார்ந்தே கடந்து செல்கிறேன். இப்படி எல்லா நேரங்களிலும் பிறரை சார்ந்து பயணிப்பது மிகவும் கடினமானது.

அதாவது, “உன்னை போன்றுதான் நானும் ஆனால், நான் ஒரு பெண் என்பதால் என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றுதான் கற்பிக்கப்படுகிறது. இந்த கற்பிதங்கள் பெண்களுக்கு மட்டுமே. ஆணின் நுகர்வு பொருளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்கப் பழகிக் கொடுத்த இச்சமூகம் இப்படித்தான் இயங்கும். பெண்ணின் உடலை ஒரு பொருளாய் உணரும் யாரும் மனித, மிருக இனத்தில் சேர்ந்தவர் இல்லை.

ஒருமுறை டில்லி சென்று இருந்தேன். வேலை முடிந்து ரயில் ஏற டில்லி ஸ்டேஷனில் இரவு 11.30 மணிக்கு தனி பெண்ணாய் நின்று கொண்டிருந்தேன். இப்போதும் நினைக்கையில் அவ்வளவு பயம். முதல்முறை தனியாக செய்த பயணம் அது. என்னைச் சுற்றிலும் குடும்பத்துடன் யாரும் தென்படவில்லை. தனிமையில் நிற்கையில் ஒருவன் இடையூறு செய்தவாரே நின்று கொண்டிருந்தான். அப்போது ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதம் என குறுஞ்செய்தி. கையில் பெரிய கனத்துடன் பையை வைத்துக்கொண்டு பயணிகள் ஓய்வறைக்குச் செல்ல சுமை தூக்குபவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன்.  யாரும் தென்படவில்லை. போலீசும் இல்லை.

நேரம் செல்லச் செல்ல பயம் அதிகரித்தது. என்ன செய்ய என்றும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்துவிடக்கூடாது; அழக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டேயிருந்தேன். பேசக்கூட வாயில் வார்த்தைகள் இல்லை. அருகில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக படுத்துக் கொண்டிருந்தனர். இரவு மணி 1.30 இருக்கும். அந்த என்.எஸ்.எஸ். மாணவர்களை எழுப்பி விட்டு இந்தியில் பிரச்சினையை சொன்னேன். அவர்கள் இடையூறு செய்த நபரை தட்டிக் கேட்டு அங்கிருந்து விரட்டி விட்டனர். இதை ஏன் சொல்கிறேனெனில், ”ஒரு பெண்ணாக தனியே செல்லக்கூடாது” என என்னையே மிரட்டுகிறது என் உடல். அது ஆண்களின் ஆயுதங்களாக மாறி எங்களையே கொலை செய்கிறது. இங்கு தவறு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு பெண்ணாய் பல கேள்விகள் என்னை நோக்கியே பாய்ந்திருக்கும்.

இங்கு ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனக்கு தெரிந்த சகாக்கள் பலர் பெண்ணை புரிதலுடன் பார்க்கத் தெரிந்தவர்கள். டில்லி இரயில்வே ஸ்டேஷனில் முன் பின் தெரியாத அந்த உறவுகள் உதவி செய்து என்னை நெகிழ வைத்தன. இங்கு ஆண் பெண் குறித்த புரிதலுடன் பிள்ளைகளை வளர்க்க மறந்து விட்டோம். ஆணை நெடிலாகவும், பெண்களை குறிலாக வளர்த்து வரும் சமூகம்தான், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்களின் மீதான தாக்குதலுக்கான அடிப்படை. இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணை சாடும் சமூகம் அதற்கான காரணத்தை அறிய முயல்வதில்லை. இப்போதுதான் கிராமத்துப் பெண்கள் வெளியே வருகின்றனர். அதற்குள் இப்படிப்பட்ட விசயங்கள் பெண்களை பாதுகாப்பு என்ற பெயரில் இருளுக்குள் வைத்திடும்.

பெண் என்பவள் அன்பு, நம்பிக்கை, பாசம் இவற்றை எதிர்பார்த்து காதல் கொள்கிறாள். ஒரு பெண் ஒருவனுடன் செல்ல அவன் அதை பயன்படுத்தி வல்லுணர்வு செய்வான் எனில் அவனைத்தான் சமூகம் தூற்ற வேண்டும். ஆனால் இங்கு பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். அதனை வைத்து ஊடகங்களும் பணம் சம்பாதிக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள்தான் கலாச்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் AIDS-ல் முதலிடம் வகிக்கிறது.

படிக்க:
பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

இந்தியாவில் பெண்கள்  மற்றும்  பெண் குழந்தைகள் பாலியல் வன்முறையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டுதான் ஆசிபா என்ற 12 வயது சிறுமியின் மீதான  பாலியல் வன்முறை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Record Bureau) வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த  2017-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் மீதான தாக்குதல் 82 சதவிதம் அதிகரித்துள்ளது என்கிறது. இதில் 95% தெரிந்தவர்கள் மூலமே நடக்கிறது என்கிறது ஆய்வு. ஒரு பக்கம் பெண்கள் தெய்வம் என்ற போலித்தனத்தைக் கற்பித்துக் கொண்டே மறுபுறம் பெண்கள் மீது பாலியல் வன்முறையைச் செலுத்துகிறது இச்சமூகம். நாம் இன்று இதை சரி செய்ய வேண்டிய தருவாயில் நின்று கொண்டிருக்கிறோம். இதை சரி செய்ய கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. மாறாக சமூகத்தில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை. சரி செய்ய பயணிப்போம் மாற்றங்களை நோக்கி …

சிந்துஜா சமூக ஆர்வலர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க