காலனிய எதிர்ப்பு விடுதலைப் போர் என்றாலே காந்தி, நேரு, காங்கிரசு என்று ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து வகை கல்வி நிறுவனங்களாலும் கூறப்படும் பொய்யான வரலாறே இங்கே உண்மையென நம்பப்படுகிறது. ஆயினும் வரலாற்றின் வீரஞ்செறிந்த அந்த பக்கங்கள் இதை மறுக்கின்றன. கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாக வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்து மறைந்த்து போயிருக்கும் அந்த வரலாற்று மாந்தர்களையும், காலகட்டத்தையும் புதிய கலாச்சாரத்தின் இந்த சிறப்பிதழ் மீட்டு கொண்டு வருகிறது.
ஊழலும், காரியவாதமும், நம்பிக்கையின்மையும் கோலேச்சும் இந்தச் சூழலில் இந்த வரலாற்றை நினைவு கூர்வது என்பது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போரை நாம் நடத்த வேண்டிய கடமையை கற்றுத் தேர்வதோடு அதில் பங்கேற்பதும் ஆகும். புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்றின் வெளியீடாக வரும் இந்த கட்டுரைகளை இங்கே அறிமுகம் செய்கிறோம். வரும் வாரம் முழுவதும் இந்த தொடர் வெளியிடப்படும்.
– வினவு
_______________________________________________________
1800 – 1801 இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர், 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.
சத்தியாக்கிரகம் எனும் போராட்ட வடிவத்தை தென் ஆப்பிரிக்காவில் காந்தி அறிமுகப்படுத்தியதற்கும், ‘வந்தே மாதரம்…’ என்ற இந்து தேசியப்பாடல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் கூட இது நூற்றாண்டுதான். தேதிகள் பொருந்தி வருவதனால் தியாகமும் துரோகமும் ஒன்றாகி விடுவதில்லை. எனினும் நம் விடுதலைப் போராட்டத்தின் ஒளிவீசும் மரபுகள் அனைத்தையும் இந்து தேசியவாத, அகிம்சாவாத ஜோதிக்குள் அமிழ்த்துகின்றன ஆளும்வர்க்கங்கள். நம் விடுதலைப் போராட்ட மரபு, காந்தியின் வருகைக்குப் பின்னர்தான் திசையறிந்த ஒரு மக்கள்திரள் இயக்கமாக உருப்பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை அதிகாரபூர்வ வரலாறு நம் சிந்தனையில் பதித்து வைத்திருக்கிறது.
பெருமிதம் கொள்ளத்தக்க விடுதலைப் போராட்டத்தின் வீர மரபை நம் வரலாற்றுப் பிரக்ஞையிலிருந்தே துடைத்தொழிப்பதற்கான இந்தச் சதி மிகவும் தந்திரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. வன்முறைக்குப் பதிலாக அகிம்சை என்ற வாதத்திற்குள் காந்திகாங்கிரசின் ஏகாதிபத்திய அடிவருடித்தனமும் துரோகமும் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ஒரு தபால் தலை வெளியீடு மற்றும் அரசு விழாவின் மூலம் கட்டபொம்மன் முதல் பகத்சிங் வரையிலான போராளிகள் அனைவரும் துக்கடாக்களாக நிறுவனமயமாக்கப்படுகிறார்கள்.
இந்த வரலாற்றுப் புரட்டிற்கு இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. 1857 எழுச்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்கிறது வரலாறு. ஆனால், வெள்ளையர்களுக்கு எதிராக திப்பு நடத்திய போர்களும் இந்துஸ்தானத்திலிருந்தே ஆங்கிலேயரை விரட்ட திப்பு மேற்கொண்ட முயற்சிகளும் விடுதலைப் போராட்டத்தின் துவக்கப்புள்ளியாகக் கூட அங்கீகரிக்கப்படுவதில்லை. கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம். இந்த உண்மையைக் கூறுவது, 1857 சுதந்திரப் போரின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது ஆகாது.
இந்தச் சிறப்பிதழில் தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அதன் நாயகர்களின் வழியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். எனினும் இது பத்திரிக்கை எனும் வடிவ வரம்புக்குட்பட்ட ஒரு பறவைப் பார்வை மட்டுமே. திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.
துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர.
______________________________________________
புதிய கலாச்சாரம் – தலையங்கம் – நவம்பர் 2006
______________________________________________
வினவுடன் இணையுங்கள்:
விடுதலைப் போரின் வீர மரபு…
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் வரலாற்றை அறிமுகம் செய்கிறோம். திப்பு, மருது முதல் வ.உ.சி, பகத்சிங் வரையில் இந்த மண்ணின் அரிய புதல்வர்ககளை அடையாளம் காட்டுகிறோம்…
வாரே வாவ்…
இந்த ‘புதிய கலாச்சாரம்’ இதழ் வந்தபோதே அவ்வளவு விரும்பி, மன எழுச்சியுடன் வாசித்தேன். போற்றப்பட வேண்டிய உழைப்பு மட்டுமல்ல. பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமும் கூட.
நான் அறிந்து சமீபகாலத்தில் வெளியான ஒரு இதழ் மீண்டும் அதே மாதத்தில் ரீ பிரிண்ட் ஆனது இந்த சிறப்பிதழில்தான்.
இப்போது மீண்டும் இணையத்தில் வாசிக்கவும், புத்தகமாக வாங்கவும் காத்திருக்கிறோம்.
தோழமையுடன் கூடிய ஒரு வேண்டுகோள்: முடிந்தால் ‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’ நூலையும் மறு பதிப்பு கொண்டு வாருங்கள். அந்த நூல் வெளியான ஒரே மாதத்தில் இரண்டாம் பதிப்பை கண்டது. ஆனால், இப்போது விற்பனைக்கு இல்லை. ஆனால், அதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இன்றும் பொருந்தக் கூடியது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
The real history and struggle started with Mahatma Jothirao Phule,
please work on Phule and write on Phule,,,,
thanks rr srinivasan
[…] This post was mentioned on Twitter by வினவு and ஏழர, ஏழர. ஏழர said: " விடுதலைப் போரின் வீர மரபு'' Most Awaited Series Begins http://j.mp/ik2ynu #MustRead #Retweet #Vinavu […]
Nalla Arimugam !! Valthukal 🙂
//தோழமையுடன் கூடிய ஒரு வேண்டுகோள்: முடிந்தால் ‘கண்ணை மறைக்கும் காவிப் புழுதி’ நூலையும் மறு பதிப்பு கொண்டு வாருங்கள். அந்த நூல் வெளியான ஒரே மாதத்தில் இரண்டாம் பதிப்பை கண்டது. ஆனால், இப்போது விற்பனைக்கு இல்லை. ஆனால், அதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் இன்றும் பொருந்தக் கூடியது.//
கட்டாயம் வெளியிடுங்கள். அயோத்தி தீர்ப்புக்கு பிறகான இந்த நச்சு சூழலில் அந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரைகளும் பொட்டில் அறைந்தாற்போல் உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும். ஆகவே கட்டாயம் இந்த புத்தக கண்காட்சியிலேயே வெளியிட கோருகிறோம்
//கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணிறந்த முன்னணியாளர்கள் இணைந்து தீபகற்பக் கூட்டணி என்றொரு கூட்டணியை அமைத்திருந்ததையும், அந்தக் காலனியாதிக்க எதிர்ப்பு முன்னணி மகாராட்டிரத்தின் தென்பகுதி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை ஊடுருவிச் சென்றதையும், பல்லாயிரம் விவசாயிகளின் பங்கேற்புடன் நடந்த அந்த மக்கள் போர் 1799 முதல் 1806 வேலூர் புரட்சி வரை தொடர்ந்ததையும் அதிகாரபூர்வ வரலாறு பதிவு செய்வதில்லை. இந்த மாபெரும் மக்கள் போரை முதல் சுதந்திரப் போராகவும் அங்கீகரிப்பதில்லை. தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களைப் புறக்கணிப்பது என்ற இந்து தேசியவாதக் கண்ணோட்டமே இந்த இருட்டடிப்புக்குக் காரணம்//
நல்ல பதிவு… அந்த சிறப்பிதழை நானும் படித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாய் தஞ்சாவூரில் நடந்த தமிழ் மக்கள் இசை விழாவிற்கும் வந்திருந்தேன். ஆனால் தற்கொலைப்படை தளபதி சுந்தரலிங்கனார் -ஐ பற்றி தென்னிந்திய வரலாற்றில் இரண்டு வரிகளுக்குத்தான் உங்களாலும் எழுத முடிகிறது என்பது குறித்து மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை…
WOW, A gud and refreshing effort Vinavu.
Congress has been consistently campaigning that they fought for freedom,…
It is the congress and Nehru which put the word Hey Ram in dead Gandhi’s mouth.
Gandhi never said Hey Ram while being shot At….
India can flourish only when it is ridden off Congress…
காலனியாதிக்க எதிர்ப்பு வரலாற்றின் தியாகப்பூர்வ பங்களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்வதன் மூலம் காலனியாதிக்க எதிர்ப்புக்கும், மறுகாலனியாதிக்க எதிர்ப்புக்கும் இடையேயுள்ள தொப்புள் கொடி உறவை அறுக்க நினைக்கும் ஆளும் வர்க்க சூழ்ச்சியை உடைப்பதன் மூலம் மீண்டும் அந்த உறவை இணைக்கும் அரிய பங்கினை “புதிய கலாச்சாரத்தின்” இக்கட்டுரைகள் செய்துகாட்டும் என்றால் அது மிகையல்ல. தியாகப்பண்பை உணரமுடியாத அவலமும், மோசடியையே திறமையாகப் பார்க்கும் பிழைப்புவாதமும் சூழ்ந்திருக்கும் இன்றைய ஏகாதிபத்திய பண்பாட்டு நெரிசலில் “விடுதலைப் போரின் வீர மரபு” மீண்டும் மீண்டும் ஒலிப்பது தேவையாக உள்ளது. இன்றைக்கும் ‘விடுதலை’ என்ற சொல் அவ்வப்போது நமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் உள்ளன. ஆனால் மறுகாலனியாதிக்கத்தை ஒலிக்காத ‘விடுதலைக்’ குரல்கள். துரோகங்களோ புதுப் புது வடிவங்களில் அவதாரம் எடுக்கும் காலமிது. எதிர்ப்பை நிறுவனமயமாக்க அன்று ஒரே ஒரு காந்தி. இன்று பல காந்திகள். அதிலும் இடது, வலதுகளிடம் அன்றைய காந்தியே பிச்சையெடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மறுகாலனியாதிக்க தாசகர்களான மன்மோகன், ப.சிதம்பரம்…..கும்பல்களே தேசத் தலைவர்கள். இப்படி ஒரு பனி மூட்ட மங்கலில் இருத்தப்பட்டிருக்கும் இன்றைய சமூகத்தை மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்பது என்ற ஒரு தெளிந்த திசைவழியில் இட்டுச்செல்வதற்கு இந்த விடுதலைப் போரின் வீர மரபு நிச்சயம் அடையாளம் காட்டும்.