திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

குடிக்கும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்துகிறேன் என்று இப்போது தண்ணீரை நோக்கி பாய்ந்துள்ளது நெல்லை மாநகராட்சி. சுகாதாரமான குடிநீர் தருகிறேன் என பின்னாலயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரப்போகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள்.

வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி ஓடும் நிலத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றால் இது யார் செய்த பிழை?

ஒரு நாளைய நெல்லை மக்களின் தண்ணீர் தேவை 70.51 மில்லியன் லிட்டர். ஆனால் நெல்லை மாநகராட்சி வினியோகம் செய்வதோ 48 மில்லியன் லிட்டர் மட்டும் தான்! பல ஆண்டுகளாக இந்த தண்ணீர் தட்டுப்பாடு நிலவினாலும் இதை மாநகராட்சி சரி செய்யாதது மாநகராட்சியின் தவறு. இதுபோக கோக் நிறுவனத்திற்கு தாமிரபரணியிலிருந்து அளவின்றி தண்ணீர் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மறைத்து தற்போது 24 மணிநேரம் தண்ணீர் வினியோகம் செய்யப் போவதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அப்படி வினியோகம் செய்யப்போகும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மீட்டர் பொருத்தி அதன்படி மக்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்போகிறது நெல்லை மாநகராட்சி. மீட்டர் பொருத்தும் பணியும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

படிக்க : மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?

மின்சாரம் இயற்கையாக உருவாவதல்ல. அது செயற்கையாக உருவாக்கப்பட்டு அரசால் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் பயன்படுத்தும் அளவின்படி அதற்கு பணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும்  மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பது தனிக்கதை. ஆனால், நீரை யாரும் தயாரிப்பதில்லை. அது இயற்கையின் கொடை. அதை முறையாக, சுகாதாரமாக வினியோகம் செய்ய மாநகராட்சிக்கு என்ன கேடு?

மக்கள் தவறாது வரி செலுத்துகிறார்கள். அதுபோக, 6 மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் தீர்வை என்கிற பெயரில் மக்களிடம் குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படுகிறது. இதை முறையாக கையாண்டாலே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி அனைவருக்கும் 24 மணிநேரமும், சுத்தமான தண்ணீரை மாநகராட்சியே வழங்க முடியும்.

ஆனால், நெல்லை மாநகராட்சி தற்போது கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்தின் பின்னால் சதி ஒளிந்திருக்கிறது. அது தண்ணீரை தனியார்மயமாக்கும் சதி!

அக்குவாஃபினா, கின்லே, பிஸ்லெரி போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு, இந்த அரசும் துணை நிற்கிறது. நெல்லை மாநகராட்சியின் இந்த திட்டம் மேற்கூறிய நிறுவனங்களுக்கு இன்னும் தேன் வார்த்ததைப் போல இருக்கப்போகிறது. குப்பை அள்ளுவது முதல் விமானம் தயாரிப்பு வரை அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய, மாநில அரசுகள் தண்ணீரையும் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.

பல்வேறு பெயர்களைக் கொண்ட குழுக்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை ஒரே ஒப்பந்த நிறுவனத்திற்கு தள்ளி அவர்களது கொஞ்ச, நஞ்ச உரிமைகளையும் துடைத்தழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது நெல்லை மாநகராட்சி. தூய்மைப் பணியாளர்களின் அஞ்சாத போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குடிக்கும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்துகிறேன் என்று இப்போது தண்ணீரை நோக்கி பாய்ந்துள்ளது நெல்லை மாநகராட்சி. சுகாதாரமான குடிநீர் தருகிறேன் என பின்னாலயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரப்போகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். தனியார்மய ஒப்பந்தத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளும், நீதிமன்றமும் இதை தடுத்து நிறுத்தாது. மக்கள் தான் இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

படிக்க : மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

இந்த திட்டம் கொண்டு வருகிறோம் என்று மக்களிடம் மாநகராட்சி சார்பில் கருத்து கேட்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களிடம் கேட்கப்பட்டதா? கவுன்சிலர்களுக்கு இது சம்மதமா? மக்கள் இதை கேள்வி கேட்க வேண்டும். ஓட்டுப்போட்ட கவுன்சிலரையும் அழைத்துக் கொண்டு மாநகராட்சியை முற்றுகையிட வேண்டும். வீட்டிற்கு மீட்டர் பொருத்த அனுமதிக்கக் கூடாது. களத்தில் இறங்கிப் போராட வேண்டும். அப்படி போராடாமல் ஒதுங்கிப் போனால் நாளைய தலைமுறை கையில் பணமின்றி குடிக்க நீரின்றி அல்லாடும் நிலைக்கு தள்ளப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதும், துணை நிற்பதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமை!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க