பெட்ரோல், டீசல் எரிப்பொருட்களின் விலையை தீர்மானிப்பது யார்?

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதனால் தான் பெட்ரோல் – டீசல் விலை ஏறுகிறது என்று மோடி அரசு கூறிவந்த நிலையில், தற்போது குறிப்பாக ஜூலை மாத இறுதியில் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 110 டாலர்க்கு வர்த்தகமான கச்சா எண்ணெய், செப்டம்பர் மாத தொடக்கத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்க்கு கீழ் குறைந்துள்ளது.

இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத சரிவாகும். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது மோடி அரசு.

கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்துள்ள போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை பற்றி பேசாமல், கிட்டத்தட்ட 85 சதவிகிதம் எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு இது ஒரு பெரிய நிம்மதி என்றும், கச்சா எண்ணெய் விலை குறைவதால் பணவீக்கத்தின் ஒரு பகுதியை குறைக்க முடியும் என்றும் கூறிவருகின்றனர் ஆளும் வர்க்க பொருளாதார நிபுணர்கள்.

இதற்கு மேல் ஒருபடி சென்று, கச்சா எண்ணெய் விலை குறைவது அனைத்து பங்குதாரர்கள், அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய நிவாரணம் என்று கூறுகின்றனர். ஆனால் உழைக்கும் மக்களுக்கு இந்த விலை குறைவு எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர்.

படிக்க : பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?

மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அதன் மீது விதிக்கப்படும் வரியும் முக்கிய காரணமாக உள்ளது.

பெட்ரோல் – டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் 69 சதவீதம் வரி விதிக்கிறது. உலகிலேயே பெட்ரோல் – டீசல் மீது அதிக வரிவிதிக்கும் நாடாக இந்தியா இருப்பதே விலையேற்றத்திற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக கலால் வரியை அதிகரித்து கல்லா கட்டும் வேலையை செய்து வந்த மோடி அரசு, தற்போது பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) மீதான செஸ் வரியையும் உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையை தீர்மானம் செய்யும் உரிமையை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியது. இதன் பிறகுதான் இந்தியாவில் எரிப்பொருட்களின் விலை அன்றாடம் மாறுபடும் ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலும் எரிப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் இங்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதில்லை.

படிக்க : 5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

மக்கள் மத்தியில் உருவாகும் கொந்தளிப்பை சமாளிக்க எப்போதாவது ஒன்று இரண்டு ரூபாய் குறைப்பார்கள். உதாரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் காலகட்டத்தில் தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்காக மட்டும் 137 நாள்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் மோடி அரசு கட்டுக்குள் வைத்திருந்தது.

தற்போது இந்திய ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருட்களை கொள்முதல் செய்து வருகிறது. இதனுடைய பலனும் உழைக்கும் மக்களுக்கு கிடைப்பதில்லை. தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.


ஜீவா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க