தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 13
முந்தைய பாகம்………………………………………………………………………………..முதல் பாகம்
முதன் முதலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களது கருத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் சொல்வது போல பாரத ராமாயணத் தலைவர்களுக்குச் சமமாகப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கூறுவது தமிழ்ப் புலவர்களது மரபுதான். ஆனால் மோரியர்களைப் பற்றி வரும் குறிப்புக்களில் அவர்கள் பழங்காலத்து மன்னர்கள் என்ற கருத்து காணப்படவில்லை. புறநானூற்றுப் பாடலில் ஆதனுங்கனது அறத்துறை, மோரியர் ஆட்சி நிலைபெற்று விளங்குகின்ற இடங்களில் நிலைபெற்ற அறத்துறை போன்றது என்று சொல்லப்படுகிறது. ஆதனுங்கன் காலமும், மோரியர் காலமும், நிகழ் காலத்தில் பேசப்படுகின்றன. எனவே இது மோரியர் காலத்தையே குறிக்கிறதென்பது வெளிப்படை.
இதே செய்யுள் தேர்ப்படை மிகுதியுடைய மோரியரது வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. எக்காலத்திலோ நடைபெற்ற போர்களில் கிடைத்த வெற்றிகளைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டியது இல்லை. இவ்வெற்றிகளெல்லாம் சமீப காலத்தில் கிடைத்த வெற்றிகளையே குறிக்கின்றன.
மேலும் மோரியர் பரம்பரை அழிந்த பிற்பாடு கலிங்கத்தில் காரவேலர் போன்ற பேரரசர்களும் வட இந்தியாவில் கங்கர் பரம்பரையும் தோன்றிவிட்டன. பிள்ளை அவர்கள் கூறுவதுபோல கி.பி. முதல் நூற்றாண்டில் இப்பாடல்கள் எழுதப்பட்டிருந்தால் அக்காலத்தில் மௌரிய சாம்ராஜ்யம் மறைந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதி கிரேக்கர்களின் ஆட்சியிலும் வடகீழ்ப்பகுதி இரண்டு, மூன்று சக்கரவர்த்திகளின் கீழும் சென்று விட்டன.
ஆகவே முன்னூறு வருஷங்களுக்கு முன் அழிந்து விட்ட பரம்பரையைக் குறித்து புலவர் நிகழ் காலத்தில் கூறியிருக்க மாட்டார்.
படிக்க :
♦ தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
♦ மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !
தவிரவும், வம்பமோரியர் என்ற சொற்றொடர் புதியவர்களான மோரியர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வம்ப மாகள், வம்பலர், என்ற சொற்கள் ஊருக்கோ நாட்டுக்கோ புதியவர்கள் என்ற பொருளில் பண்டைப் புலவர்களால் கையாளப்பட்டது. வம்பன் என்பதற்குத் தற்காலத்தில் இருக்கும் பொருளை அகநானூறு, புறநானூற்றில் வரும் இடங்களில் கொள்ளக் கூடாது. வம்பர் என்பது தற்காலத்திலுள்ள பொருளைத்தான் ‘இந்தியாவில் புராதன சரித்திரம்’ என்ற நூலில் ஆசிரியர் upstarts என்று விளக்கம் கொடுத்தார்.
புதியவர் என்றால் செய்யுள் எழுதப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாவது அவர்கள் தமிழ் நாட்டினருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தார்களென்பது அகநானூறு, 281-ம் செய்யுள்ளால் விளங்கும். இதுவும் ஒரு சமீப கால நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இவையனைத்தையும், ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது, மோரியர் காலத்திலேயே இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் எழுந்தன என்று உறுதியாகக் கருதலாம்.
இச்சான்றுகளைக் கொண்டு சுமார் கி.மு. 321-க்கும் கி.மு.156-க்கும் இடையில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று முடிவு செய்யலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து வேறொரு வழியாலும் அப்பாடலின் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.
ஆணைச் சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக்கி தர்மமே ஆணைக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டுமென்று அசோகன் பறை சாற்றினான். அவனுக்கு முன்பிருந்த சந்திரகுப்தனும், சாணக்கியனும் ராஜா ரீதியில் தண்டத்தையே முதன்மைப் படுத்தினார்கள். ஆக்ஞா சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக இணைக்க முற்பட்டவன் அசோகன். அவன் தனது கலிங்கப்போருக்கு முன் தண்டத்தையே நம்பியிருந்தான்.
கலிங்கப் போருக்குப் பின் அவன் புத்த தர்மத்தை மேற்கொண்டு தர்மச்சக்கரமே ஆக்ஞா சக்கரம் என்று பாறைகளிலும் கற்களிலும் எழுதி வைத்தான். இப்பாடலிலும் மோரியர் திகிரி என்பது மோரியர் ஆணைச் சக்கரத்தைக் குறிக்கிறது. கதிர்த்திகிரி என்பது அவர்கள் ஆட்சியின் சிறப்பைக் குறிக்கிறது. அவர்கள் நாட்டு அறத்துறை போன்றது. ஆதனுங்கனது அறத்துறை இங்கே அவர்கள் ஆணைச்சக்கரம் பரவிய இடங்களில் தர்மச்சக்கரம் பரவியிருந்தது என்ற கருத்தை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். அப்படியாயின் இக்கருத்து அசோகன் காலத்தில் கலிங்கப் போருக்குப் பின் அவனுக்குத் தோன்றிய கருத்தாகும்.
அசோகனது முதல் பிரகடனம் கி.மு. 259. அசோகனது மரணம் கி.மு. 237. இக்காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவின. எனவே இக்காலத்திலேயே மோரியர் பற்றிய இச்செய்யுள்கள் தோன்றியிருக்கலாம். புறநானூற்றில் சில செய்யுள்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தனவாக இருக்க வேண்டும். எனவே வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அடுத்து டி.டி.. கோஸாம்பியின் கருத்துகளை ஆராய்வோம். கோஸாம்பி, மௌரியர் காலத்தைக் தமிழ் நாட்டில் புதுக் கற்கால நாகரிகம் நிலவிய காலம் என்று கூறுகிறார். அப்படியானால் தமிழ் நாட்டில் உழவுத்தொழில் முன்னேறியிருக்கவில்லை. நாடும் நகரமும் தோன்றியிருக்கவில்லை. உலோகங்கள் உபயோகத்திற்கு வரவில்லை. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. வாணிபம் சிறிதளவும் தோன்றவில்லை என்பதே இதன் பொருள். அவருடைய ஆதாரம் எல்லாம் வையாபுரிப் பிள்ளையின் தமிழிலக்கிய வரலாறு ஒன்றுதான். அவருடைய கருத்துக்களை நாம் முன்னரே பரிசீலித்தோம். பிள்ளையவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேதான் இம்முடிவுக்கு கோஸாம்பி வருகிறார். அக்காலத்திலிருந்த தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையை அறிந்து கொள்ள சான்றுகள் அகப்படவில்லையென்று அவர் கூறுகிறார்.
கி.மு.வில் தமிழ் நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வலுவான சான்றுகள் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இருக்கிற சான்றுகளைப் புறக்கணித்துவிட்டு முடிவுக்கு வருவதும் தவறாகும். டாக்டர் கோஸாம்பியின் சரித்திரக் கண்ணோட்டமும் கொள்கையும் எனக்கு உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிடைக்கும் அளவு சான்றுகளைக் சேகரித்துத் தமது திறமையையும் அறிவையும், கண்ணோட்டத்தையும் பயன்படுத்தி பண்டைத் தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியைப் பற்றி ஒரு சிறு குறிப்பாவது அவர் எழுத வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.
மோரியர் காலத்தில் தமிழ் மக்கள் கற்காலத்தை விட்டு முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டக் கீழ்வரும் சான்றுகள் உதவும்.
1. மேலே காணப்பட்ட அகநானூறு, புறநானூறு செய்யுட்கள்.
2. ஆனைமலையிலும், பிற இடங்களிலும் கிடைக்கும் பிராமி எழுத்துச் சாசனங்கள். இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
3. கிரேக்கர் எழுதிய நூல்களில் தொண்டி, முசிறி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாணிபம், கற்கால மனிதர்களின் சிருஷ்டி அல்ல. உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் அதனைத் தோற்றுவிக்க முடியும்.
4. சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம். கற்கால மனிதர்களின் குழுக்களுக்கு அரசனும், ஆட்சியமைப்பும் இருந்திருக்க முடியாது. ‘வேதங்களின் தமிழ் சொற்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் வேதங்களின் தமிழ் மூலத்திலிருந்து, தோன்றிய சொற்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன என்று டாக்டர் கமில் சுவலபில் அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.
படிக்க :
♦ பணமாக்கல் திட்டத்திற்கு முட்டுக் கொடுக்கும் இந்து தமிழ் தலையங்கம் !
♦ சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
மோரியர் காலத்திற்கும், வேத காலம் 2000 ஆண்டுகள் முற்பட்டது. புதிய கற்கால மனிதர்கள் வளர்ச்சியுற்ற ஒரு மொழியைப் பேசியிருக்க முடியாது. எழுதியிருக்கவும் முடியாது. தமிழ்ச் சொற்கள் வேதத்தில் உள்ளன என்றால் வேதகாலத்திலேயே தமிழர்கள் கற்காலத்தைக் கடந்த நாகரிகத்தை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். அதற்கு 2000 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் சமூக முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியுற்றிருப்பார்களே தவிர பின்னோக்கிச் சென்றிருக்க முடியாது.
மேற்கூறிய சான்றுகளால் மோரியர் காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் பழைய கற்கால மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. கிடைக்கிற ஆதாரங்களிலிருந்து சிறு இன முறைக்குழுக்கள் ஒன்று சேர்ந்து முடியரசுகள் வளர்ச்சியடைகிற ஆரம்ப நிலவுடைமைக் கட்டத்தில் நமது நாகரிகம் இருந்தது என்று கூறலாம்.
சமீபத்தில் அகப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய நாணயங்களும் அயல் நாட்டு நாணயங்களும் தென் தமிழ் நாட்டில் அகப்படுவதால் ஆரம்ப வியாபாரம் அக்காலத்திலேயே தோன்றியிருந்தது என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மறைந்தும், புதைந்தும் கிடக்கும் ஆதாரங்களை வெளி கொணர வேண்டியது தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினர் கடமையாகும்.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………….. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்