நா. வானமாமலை
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 12
முதல் பாகம்
தமிழ் இலக்கியத்தில் மோரியர்
கநானூறிலும், புறநானூறிலும், மோரியரைப் பற்றி ஐந்து பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகளைக் கொண்டு பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சியாளரிடையே நடைபெற்று வருகின்றன. அவ்வாராய்ச்சிக்குப் பொருளாக அமைந்துள்ள வினாக்கள் வருமாறு :
* தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் மோரியர் யாவர்?
*இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வகையில் அறிமுகமாயினர்?
* மோரியரைக் குறிப்பிடும் பாடல்கள் மோரியர் காலத்திலேயே தோன்றினவா?
* இக்குறிப்புகளைக் கொண்டு புறநானூற்று அகநானூற்றுக் காலங்களைக் கணிக்க முடியுமா?
இவ்விவாதங்களுக்குப் பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளார்கள். அவர்களுள் சிலர், வையாபுரிப் பிள்ளை , டாக்டர் எஸ்.கே.சட்டர்ஜி, ஆர்.ஜே.மஜும்தார், டாக்டர் டி.டி. கோஸாம்பி, எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் முதலியோர்.
மௌரியர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பரம்பரையின் ஸ்தாபகர் சந்திரகுப்தர். சந்திரகுப்தன், சாணக்கியன் ஆகிய இருவரது கதைகளை சுருக்கமாகவேனும் அறியாதவர் இல்லை. சந்திரகுப்த மௌரியனுடைய காலத்திலிருந்து தான் தொடர்ச்சியான சரித்திரம் தொடங்குகிறதென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்ணிடத்து அரசனுக்குப் பிறந்த மகன் சந்திரகுப்தனென்று சில புராணக் கதைகள் கூறுகின்றன. அவன் தாயின் பெயர் மூரா என்றும் அதனாலே அவனுக்கு அப்பெயர் அமைந்தது என்றும் சில மொழியாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேறு சிலர் புத்தருடைய வம்சமான சாக்கிய வம்சத்தில் சந்திரகுப்தன் தோன்றியதாகக் கூறுவர். இவ்விரண்டில் எது உண்மையாயினும் சந்திரகுப்தன் முந்திய அரசபரம்பரையின் நேர்வாரிசு அல்ல, என்பது தெளிவு.
அவன் நந்த மன்னர்களிடம் படைத்தலைவராக இருந்து அரசனது அதிருப்திக்குள்ளானான். இதுபோன்ற அதிருப்திக்குள்ளான விஷ்ணுகுப்தன் என்னும் சாணக்கியனோடு சேர்ந்து மன்னனை எதிர்த்து ஓர் மறைவான இயக்கத்தைத் தோற்றுவித்தான். இறுதியில் நந்தர் பரம்பரை வீழ்ந்தது. சந்திரகுப்தன் முதல் மௌரியனாக முடி சூடிக் கொண்டான்.
படிக்க :
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
சுமார் கி.மு. 32-ல் மௌரிய பரம்பரை தோன்றிற்று. சந்திர குப்தன் காலத்திலேயே வட இந்தியாவிலுள்ள பல்வேறு சிற்றரசர்களையும், வனத்தில் வாழும் உறவுமுறைக் கூட்டத்தாரையும் வென்று அடிமைப்படுத்தி, மௌரிய சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தான். அவனுடைய காலத்திற்குப்பின் மௌரிய சக்கரவர்த்திகளில் பெயர் பெற்றவன் அசோகன்.
அசோகன் அறவாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்னால் வட இந்தியாவில் தற்போது காஷ்மீரம் என்று வழங்கும் காம்போஜத்திலும், தெற்கே கலிங்கத்திலும் மெளரிய ஆட்சியைப் பரப்பினான். அவனுடைய ஆட்சிக்காலத்தைப்பற்றி சாசனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அகப்படுகின்றன. மௌரிய பரம்பரையின் ஆட்சிக்காலம் கி.மு. 321லிருந்து கி.மு.156 வரை என்று கொள்ளலாம்.
இதே காலத்தில் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்களும், நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். இந்தியாவிலேயே வலிமைமிக்க மௌரியர்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கக் காரணங்களுண்டு. தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து வாணிபப் பொருள்கள் கலிங்கத்துக்கும், வட நாட்டு நகரங்களுக்கும் சென்றன. தமிழ் நாட்டு வணிகர்கள் சிறு சிறு கூட்டங்களாக வடநாட்டில் பல பகுதிகளிலும் குடியேறி வாணிபம் செய்து வந்தார்கள்.
தக்ஷசீலத்திலும், பாடலிபுத்திரத்திலுமுள்ள புத்த பிக்குகள் நாகார்ஜுன் கொண்டாவுக்கும், தென்பாடலிக்கும், காஞ்சீபுரத்திற்கும் கற்பதற்கும், கற்பிப்பதற்குமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக மௌரிய சாம்ராஜ்யத்தைப்பற்றித் தமிழ் மன்னர்களும் தமிழ்ப்புலவர்களும் அறிந்திருக்கக் கூடும் என்பது சரியானதோர் முடிவே.
மௌரியர்களோடு, போர்கள் மூலமும் திருமணத்தொடர்பு மூலமும், வாணிபத் தொடர்பு மூலமும் உறவுகொண்டிருந்த கிரேக்கர்கள் அவர்களைத் தங்களுடைய மொழியில், மேரீஸ், என்று அழைத்தார்கள்; வடமொழியில் மௌரியஎன்ற சொல் மோரியர் என்று திரிந்து வழங்கியது. பௌத்தமத அறநூல்களும் அசோகனது கல்வெட்டுக்களும், புத்த ஜாதகக் கதைகளும், ராஜதரங்கிணி, தாரநாதம் முதலிய புத்தமத வரலாறுகளும் பாலி மொழியிலேயே உள்ளன. கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள அறக்கல்லூரிகளில் பாலி மொழியிலே புத்த தருமம் போதிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் மௌரியர் என்ற சொல் மோரியர்என்று வழங்கப்பட்டது.
புலவர்கள், தங்களுக்குப் பரிசில் அளிப்பவர்களை மிகையாகப் புகழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். ஆயினும் புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடும் போது கடல் சூழ்ந்த புவிக்கெல்லாம் தலைவன்என்றே பாடுவார்கள். அவன் செய்யும் அறச்செயல்களை உலகத்திலேயே சிறந்த பேரரசனது அறச்செயல்களுக்கு ஒப்பிடுவார்கள்.
பிற்காலத்து சாசனங்கள் கூட கொங்குநாட்டில் 200 சதுரமைல் பரப்புள்ள ஒரு சிறுபகுதி மன்னனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கிறது. இதேபோல் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனை சகல புவனச் சக்கரவர்த்தி என்று சாசனம் அழைக்கிறது. எனவே குறுநிலத்தை மோரியர் சாம்ராஜ்யத்தோடு ஒப்பிட்டும் குறுநிலமன்னனை மோரியச் சக்கரவர்த்திகளோடு ஒப்பிட்டும் கூறுவது புலவர்களது உயர்வு நவிற்சியுக்தியாகும். மேற்சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு அகநானூறில், வரும் மோரியர் பற்றிய குறிப்புக்களை ஆராய்வோம்.
…………… வென்வேல்
விண்ணுறு நெடுங்குடைக் குடைத்தேர் மோரியர்
திண் கதிர் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி மறைவாய் நிலை இய
மலர்வாய், மண்டிலத்தன்ன நாடும்
பலர்புற விதிர்ந்த அறத்துறை யன்னே
(புறநானூறு 175 ஆதனுங்கனை ஆதிரையானார் பாடியது)
(புலவர் தன்னை ஆதரிக்கும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். உனது அறத்துறை மோரியரது ஆட்சியின் கீழுள்ள பரந்த நிலப்பரப்பில் நிலைபெற்ற அறத்துறை போன்றது.)
விண் பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைந்த அறை
(அகநானூறு 69)
(வானத்தளவு உயர்ந்த நெடிய குடையையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடைய மோரியர்களது ஆணைச்சக்கரத்தால் குறைப்பட்ட இடங்கள் )
வம்ப மோரியர் புனைத்தேர் நேமி உருளிய குறைத்த
விலங்கு வெள் அறிவிய அறை
(அகநானூறு 251)
(புதியவர்களான மோரியரது அணி செய்யப்பட்ட தேர்களின் சக்கரங்கள் உருண்டதால் பள்ளம் விழுந்து நீர் அருவியாகப்பாயும் இடங்கள்)
மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு,
விண்ணுற ஒங்கியபனி இருங்குறை
ஒண்கதிர்த் திகிரி உருளியர் குறைந்த அறை
(அகநானூறு 281)
(மோரியர் தென்திசை நோக்கி வரும்பொழுது வானளாவ வளர்ந்த பனி மூடிய குன்றங்கள் மீது தேர்ச்சக்கரங்கள் பதிந்து குன்றங்கள் தேய்ந்து தாழ்ந்தன.)
மேலே காட்டிய மேற்கோள்களைக் குறித்து வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்து வருமாறு :
மோரியர் என்பது மௌரியர்களைக் குறித்ததாகலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட செய்யுள்கள் மோரியரது ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமல்ல. தான் புகழ நினைக்கும் தலைவனது பெருமையை பழங்காலப் புராணத் தலைவர்களது பெருமையோடு ஒப்பிடுவதும் உண்டு. மகாபாரதத்தில் போரிட்ட இருதரப்புப் படையினருக்கும், பெருஞ்சோற்றுதியன் என்னும் சேரமன்னன் விருந்தளித்தான், என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இது வரலாற்று உண்மையாக இருக்க முடியாது.
படிக்க :
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
தமிழ் கண்டதோர் வையை, பொருநை || வி. இ. குகநாதன்
பாரதக் கதையோடு தமது மன்னனைத் தொடர்புபடுத்துவதாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியே அது. அது போலவே மோரியரைப் பற்றிய பழஞ் செய்யுள்களிலும், புலவர்கள் தங்களது மன்னர்களைப் பெருமைப் படுத்துவதற்காக, முற்காலத்தில் வாழ்ந்த மோரியர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் புறநானூறு செய்யுள்களில் பழமையானவை எழுதப்பட்ட காலம், கி.பி. முதல் நூற்றாண்டே. எனவே மோரியரைப் பற்றிய குறிப்புகளெல்லாம் பழைய சங்கச் செய்யுள்கள் எழுதப்பட்ட காலத்துக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதுவே பிள்ளையவர்களது கருத்தாகும்.
டி.டி. கோஸாம்பி அவர்கள் புராதன இந்திய சரித்திர அறிமுகம்என்ற நூலில் மோரியர் பற்றிய இலக்கியச் சான்றுகள் பற்றி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மோரியர் காலத்தில் தமிழிலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும், இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தைத் தாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, என்று அவர் கூறுகிறார்.
பாரதீய வித்தியா பவனம் வெளியிட்டிருக்கும், ‘புராதன இந்திய சரித்திரம்என்னும் நூலில் வம்ப மோரியர் என்ற சொற்றொடருக்கு upstart mauryas என்ற பொருள் கொடுத்து மோரியர் காலத்திலேயே தமிழ் நாட்டுப் புலவர்கள், மௌரிய சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மௌரியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் மௌரியப் பரம்பரை ஆட்சிக் காலத்தில், மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றிருந்ததை இவ்வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோரியர்களைப் பற்றிய குறிப்புகளுள்ள, பாடல்களைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கு அந்நூலில் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை.
இக் கருத்துகளைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன்.
(தொடரும்)
 
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க