மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையமானது நிலத்தடி நீர் பயன்படுத்தும் அனைவரையும் ரூ.10 ஆயிரம் பதிவுக்கட்டணம் செலுத்தி தன்னிடம் அனுமதி பெற்றுக்கொள்ள சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்புகள், இண்டஸ்ட்ரீயல், மொத்த தண்ணீர் சப்ளையர்கள், நகர்ப்புறப் பகுதியில் அரசு தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைட்டிகள், குடியிருப்பு அப்பார்ட்மெண்ட்களுக்கான குடிநீர் & வீட்டுப் பயன்பாடு உட்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள் அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையில் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் மேற்கண்ட அறிவிப்பானது தமிழகத்திற்கு பொருந்தாதது என்றும், அவ்வறிப்பானது மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கானது, தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்துக் கொள்ளுகின்றன என தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
படிக்க : குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !
மத்திய நிலத்தடி ஆணையத்தின் மேற்கண்ட அறிவிப்பானது உண்மையா? தமிழக அரசு மவுனம் காப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு தனது நிலை குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் அறிவிப்பானது தமிழக அரசைக் கட்டுப்படுத்துமா இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, வீட்டுப் பயன்பாடு உட்பட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்களும் கட்டனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் இடம்பெற்றுள்ள வார்த்தையானது, பெரும்பாண்மை நடுத்தர, உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் நிலத்தடி நீருக்கும் புதியதாக கட்டணம் கட்ட வேண்டுமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
***
பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பானது தற்போது புதியதாக கூறப்பட்ட ஒன்றல்ல.
இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட போதே, இந்தியவின் மொத்த நீர்வளத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கும் தேசிய நீர்க் கொள்கை உருவாக்கப்பட்டது. அக்கொள்கையானது திருத்தப்பட்டு மீண்டும் 2012-ம் ஆண்டில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் போராட்டத்தால் தேசிய நீர்க் கொள்கையானது அமல்படுத்தப்படவில்லை.
தண்ணீர் விநியோகத்திலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோக உரிமையை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். தொழிற்சாலை உற்பத்திக்குப் போக மீதமிருக்கும் நிலத்தடி நீருக்கு (விவசாயம் உட்பட) கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய நீர்க் கொள்கை 2012-ல் கூறப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய நீர்க் கொள்கையை தான் மத்திய அரசானது தற்போது நடைமுறைப்படுத்துகிறது.
மத்திய அரசின் திட்டங்களான ஜி.எஸ்.டி, நீட், தொழிலாளர் சட்டங்கள் போன்ற அனைத்து சட்டங்களும் ஒரே நாடு என்ற அடிப்படையில் மாநில உரிமைகளை எல்லாம் பறித்து அமல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசின் செயல்பாடானது இவ்வாறு இருக்கையில், நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று நாராயணன் திருப்பதி போன்றவர்கள் கூறுவது கேட்கிறவன் கேனையாக இருந்தால் கேப்பையில் நெய் வடிகிறது என்ற கதையாகதான் உள்ளது.
எனவே, மத்திய அரசின் இத்திட்டமானது தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகமில்லை.
***
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி அதிகரிப்பு, மக்களுக்கான மானியங்களை தொடர்ச்சியாக வெட்டுவது என உழைக்கும் மக்களின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் மோடி அரசானது, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளான நிலத்தடி நீரின் மீது கைவைத்துள்ளது.
படிக்க : ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நாட்டின் நீராதாரங்களை தாரை வார்க்கும் மோடி அரசானது, மக்களுக்கோ நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டணம் விதித்துள்ளது.
எல்லாவற்றையும் விற்பனைப் பண்டமாக்குவது என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை விதி. அதற்கேற்ப மக்களின் அத்தியாவசிய தேவையான நிலத்தடி நீரும் விற்பனைப் பண்டமாக்கப்படுகிறது. கொஞ்ச காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனைப் பண்டமாக்கி விடுவார்கள் போல. அந்தளவுக்கு முதலாளித்துவ இலாபவெறியானது கூரை மீது ஏறி கொக்கரிக்கிறது.
பொலிவியா நாட்டில் உள்ள கொச்சம்பா நகரில், மக்கள் இலவசமாகப் பெற்றுக்கொண்டிருந்த தண்ணீரை, தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்தது அந்நாட்டு அரசு. ஆறு ஆண்டுகள் தங்களின் விடாப்பிடியான போராட்டத்தால் தண்ணீர் மீதான உரிமையை மீட்டெடுத்தார்கள் மக்கள்.
நாம் என்ன செய்யப் போகிறோம்? நம் உரிமையை விட்டுக்கொடுக்கப் போகிறோமா! அல்லது போராடி நம் உரிமையை நிலைநாட்டப் போகிறோமா!
பிரவீன்