Friday, August 19, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் ராஜஸ்தான்: கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்

ராஜஸ்தான்: கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்

-

ராஜஸ்தான் மாநிலம் கலதீரா கிராமம் ஜெய்ப்பூரிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஓரளவுக்கு மண்வளமிக்க பகுதி. அங்கு விவசாயத்தை சார்ந்து 5,000 குடும்பங்கள், அதாவது 12,000 முதல் 13,000 மக்கள் ( 2004 கணக்கின்படி) வாழ்ந்து வருகின்றனர். ஜாட் மற்றும் யாதவா சாதியினரை நிலவுடைமையாளர்களாகவும் தலித்துகளை கூலிகளாகவும் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலக்கடலை, கோதுமை, முந்திரி முதலியவை அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.

தண்ணீர் வற்றிய கிணறு
நிலத்தடி நீர் மட்ட வீழ்ச்சியினால் பாழாகிப் போன கிணறு.

இந்தப் பகுதியில் அணைக்கட்டுகளோ, கால்வாய்களோ இல்லாத நிலையில் இருக்கிற ஒரு ஆறான பங்கோ ஆறும் வறண்டு விட்டதால் நிலத்தடி நீரையும், மழையையும் நம்பிதான் விவசாயமும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் நிறைவேறி வருகிறது. அனேகமாக ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருக்கிறது. அதைக் கொண்டு தான் தங்கள் தேவையை பூர்த்தி செய்கின்றனர். 90 களின் இறுதி  வரை நிலைமை அவ்வளவு மோசமில்லை, கோக் சாத்தான் இங்கு நுழையும் வரை.

பன்சி ஆஹீரை பொறுத்தவரை அப்போதெல்லாம் அவரின் கிணற்றில் 40  அடியிலேயே தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்தது. அஹீர் மட்டுமல்ல ராஜஸ்தான் மாநில நிலத்தடி நீர் துறையின் அறிக்கை கூட 2000-மாவது ஆண்டில் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 42 அடியாக இருந்ததாக கூறுகிறது.

இந்நிலையில் 90 களில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, 1977   முதல் இந்தியாவில் Foreign Exchange Regulation Act (FERA) படி தடை செய்யப்பட்டிருந்த கோகோ கோலா நிறுவனம் 1993-ல் மீண்டும் சட்டபூர்வமாக இந்தியாவுக்குள் நுழைந்தது. ராஜஸ்தான் மாநில அரசு, அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது என்ற பெயரில் கலதீரா பகுதிக்கு அருகாமையிலுள்ள RIICO தொழிசாலை பகுதியில் கோகோ கோலா நிறுவனத்தின் பாட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவ அனுமதித்தது. இந்த ஆலையிலிருந்து கோக், ஃபாண்டா உள்ளிட்ட குளிர்பானங்களும், கின்லே தண்ணீரும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த பகுதியின் நிலத்தடி நீரிலிருந்து, தன் கணக்குப் படியே ஆண்டுக்கு 8.94 கோடி  லிட்டர் எடுப்பதாக கோகோ கோலா நிறுவனம் கூறுகிறது, ஆனால் ஆண்டுக்கு 17.43 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சியிருப்பதை ஆர்வலர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.  இந்த தண்ணீருக்கு என கோகோ கோலா நிறுவனம் நிலத்தடி நீர் வாரியத்துக்கு 2002-ல் ரூ 5,000 கட்டணம் கட்டியுள்ளதாக 2004-ல் இந்து பத்திரிகையின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அதாவது 8.94 கோடி லிட்டர் தண்ணீரை ரூ 5000-த்திற்கு அரசு தாரை வார்த்து இருக்கிறது. இப்படி முதலாளிகளுக்கு தண்ணீர் முதல் அலைக்கற்றை, சுரங்கம என அனைத்தையும் சகாய விலையில் கொடுக்கும் அரசின் குடியரசுத் தலைவர் தான் மக்களை நோக்கி சொல்கிறார் ‘அரசு என்பது தொண்டு நிறுவனம் அல்ல’ என்று.

பன்சி ஆஹிரும் சக விவசாயிகளும்
பன்சி ஆஹீரும் சக விவசாயிகளும்

மழை குறைவு, தானிய உற்பத்தியிலிருந்து பணப்பயிர் உற்பத்திக்கு மாறியது, விவசாயத்தை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு ஆகிய காரணங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த விவசாயம், 2000-ஆண்டில்  செயல்பட ஆரம்பித்த இந்த கோகோ கோலா ஆலையினால் மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள்  மிக சக்தி வாய்ந்த மோட்டார்களை கொண்டு 24 மணி நேரமும் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்ததால், மக்களும்  தங்கள் கிணற்றை மேலும் ஆழமாக தோண்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

2003-க்குள் கிட்டத்தட்ட அனைத்து விவசாயிகளுமே போர்வெல் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். முதலில் 120-140 அடியில் கிடைத்த தண்ணீர் கோக்கோ கோலா உறிஞ்ச உறிஞ்ச 200 அடியை தாண்டி செல்ல ஆரம்பித்தது. இப்போது அதுவும் கிடைப்பதில்லை.  ராஜஸ்தான் மாநில நிலத்தடி நீர் துறையின் கணக்குப்படி,  2000-த்தில் 42 அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் 2011-ல் 131 அடியாக குறைந்தது. அதாவது கோக் ஆலை செயல்பட ஆரம்பித்த பிறகு வருடத்திற்கு 8.9 அடி வீதம் நீர்  மட்டம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கோகோ கோலா ஆலை திறக்கப்படுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் நீர்மட்டம் குறையும் வீதம் வருடத்திற்கு 1.81 அடியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

இந்த வீழ்ச்சிக்குக் காரணம் விவசாயிகள் தான் என்று குற்றம் சொல்கிறார்கள் மெத்த படித்த அதிகாரிகள். “விவசாயத்தால் தான் நீலத்தடி நீர்மட்டம் குறைகிறது, தொழிற்துறையால் அல்ல” என்று  திமிராக கூறுகிறார் மத்திய நிலத்தடிநீர்  வாரியத்தின் பகுதி தலைவர் பர்சூரி.  கோகோ கோலாவை ஏதோ அத்தியாவசிய தொழிற்துறைபோலவும்,  கோகோ கோலாவால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இவர் கூறுவது பச்சை பொய் என்பதை இதே மத்திய நிலத்தடி நீர் வாரியம் 2004-ல் கோகோ கோலா ஆலையில் செய்த விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அப்போதைய மத்திய நீர்வள அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி,  ஆலையில் ஆய்வு செய்து கோகோ கோலா நிலத்தடி நீரை  சூறையாடுவதாக கண்டறிந்தது.

துறை சார்ந்த அந்த நிபுணர்களின் கணக்குப்படி கோகோ கோலா பயன்படுத்தும் அதே அளவு நீரைக் கொண்டு 6,250 ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்தலாம்; அதன் மூலம் 5,000 குடும்பங்கள் பயனடையும்; கோகோ கோலா ஆலையினால் அந்தப் பகுதியின் நீர்வளம் குறைந்து ,மண் வளம் குன்றி விட்டது. ஆனால் இப்பொழுது அதிகாரிகள் ஏன்  மாற்றி பேசுகிறார்கள்? மறுகாலனியாக்கத்தின் எச்சில் பணம் சகல மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது என்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்கமுடியாது.

கலதீராவில் உள்ள கோக்க கோலா ஆலை
கலதீராவில் உள்ள கோகோ கோலா ஆலை

இன்று நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து விவசாயமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைக்குக் கூட தண்ணீர் கிடைப்பது சிரமமாகி இருக்கிறது. “நாங்கள் இந்த நாட்டிற்கு உணவளிக்கிறோம். கோகோ கோலா எதை உற்பத்தி செய்கிறது? அது  உணவைவிட முக்கியமானதா?” என மக்களை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது இந்த நிலைமை.

இந்த நாட்டுக்காகவும் , தங்கள வாழ்வாதாரத்திற்காகவும் அந்த மக்கள் கோகோ கோலாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  பிப்.2003-ல் 22 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூடி தங்கள் போராட்ட கமிட்டியை அமைத்த நாள் முதற்கொண்டு அவர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2004-ல் அந்த வட்டாரத்தை சேர்ந்த 32 கிராமப் பஞ்சாயத்துக்கள் கோகோ கோலா ஆலையை  மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மறுகணமே அரசு போலீசு படையை குவித்து அந்த வட்டாரம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பிததது. கூடங்குளத்தை நினைவுபடுத்தும் இந்த செயல் மூலம், இவர்கள் சொல்லிக் கொள்ளும் ஜனநாயகம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு மட்டும் தான் என்பதை நிரூபித்தார்கள். மனுகொடுத்தல், ஊர்வலம் போதல் என மக்கள் இன்று வரை தங்கள் எதிர்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கோகோ கோலா எதிர்ப்பு என்ற பெயரில் அதை மட்டும் பேசி, மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஊடுருவி போர்க்குணத்தை மழுங்கடிக்கும் தன்னார்வ நிறுவனங்கள் இங்கும் ஊடுருவி இருப்பது மக்களுக்கு ஒரு பின்னடைவு தான்.

அரசின் ஆணவம், தன்னார்வ குழுக்களின் துரோகம் இரண்டையும் மக்கள் உணர்ந்து, போர்க் குணமிக்க வழிகளில் போராடி கோக்கை வீழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. பெப்சி-கோக் பாட்டில்கள் ஒவ்வொன்றிலும் இந்திய மக்களின் இரத்தம் கலந்திருக்கிறது. நமது மண்ணையும், மக்களையும் சூறையாடும் கோக் இந்தியா அடிமைப்படுவதின் ஒரு சின்னம். அடிமைகளாக தொடர்வோமா, விடுதலைக்காக போராடுவோமா?

ரவி

மேலும் படிக்க

  1. கோகோ கோலா தந்திரமாக பயன்படுத்தும் ‘வாட்டர் நியூ ற்றாலிட்டி ‘ பற்றி விவரமாக ஒரு கட்டுரை வந்தால் இன்னும் இதன் பாதிப்பு மேலும் கூடுவதை அறியலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க