கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் 30.3.2022 அன்று நடைபெற்றது. மேயர் கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடரும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் “தற்போது 76-வது வார்டு ஜெயராம் நகர் என்கிற பகுதியில் 1240 வீட்டு இணைப்புகளுக்கு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2025-ம் வருடம் முழுமையினைப் பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு 3000 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வழங்க ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என கோவை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது.
படிக்க :
ஸ்மார்ட் சிட்டி மதுரை : தண்ணீர் தனியார்மயமாகிறது !
தண்ணீர் குடித்தது குற்றம் : உ. பி.யில் தொடரும் முசுலீம்கள் மீதான தாக்குதல்கள் !
தற்போது தன் தேர்தல் வாக்குறுதியை எல்லா ஓட்டுக் கட்சிகளும் செய்வதைப்போல காற்றில் பறக்கவிட்டு, மக்கள் பிரச்சினையாவது மண்ணாங்கட்டியாவது என்று சூயஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது. முதலில் சூயஸ் திட்டம் என்றால் என்ன? மக்கள் ஏன் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.
000
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் சூயஸ் திட்டமானது மக்களுக்கு சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வீடுகளுக்கு இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் திட்டமாகும். 2018 தரவுகளின்படி மத்திய அரசு 33 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும், தனியார் 20 சதவீதம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 156 கோடி பங்களிப்பு செய்கிறது.
இத்திட்டத்தின்படி, பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 125 எம்.எல்.டி மற்றும் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து 75 எம்.எல்.டி என மொத்தம் 200 எம்.எல்.டி மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2019 தரவுகளின்படி சூயஸ் திட்டக்குழு தலைவர் கோபாலக் கிருஷ்ணன் பிபிசி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகம் செய்யாது. 24 மணி நேரமும் தடையில்லாமல் தண்ணீர் வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை விரிவாக்க வேண்டியதுதான் சூயஸ் நிறுவனத்தின் பணி. தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சிதான் நிர்ணயம் செய்யும். அதை வசூல் செய்வது மட்டும்தான் சூயஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய புள்ளிவிவரங்களிலிருந்து பார்க்கும்போது, கோவை மாநகராட்சியானது ஏற்கெனவே பில்லூர் மற்றும் சிறுவாணி எனும் இரண்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பது தெரிகிறது. அத்திட்டங்களை முறையாக பராமரித்து மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீரை வழங்க வேண்டும் என்பது பற்றி யோசிக்காமல், மக்களுக்கு குடிநீர் வழங்குதலையே தனியாருக்கு தூக்கி தாரை வார்க்கிறது.
மாநகராட்சியானது மக்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கும்போது தண்ணீருக்கான கட்டணத்தை மக்களிடம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வசூல் செய்யும். அதேபோல் சூயஸ் நிறுவனமும் மக்களிடம் குடிநீர் கட்டணத்தை வசூலிப்பதை, இரண்டும் ஒரே மாதிரியான நடைமுறை கிடையாது. முக்கியமான வேறுபாடு இதில் உள்ளது. சூயஸ் நிறுவனம் மக்கள் பயன்படுத்தும் நீரை அளவிட ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் மீட்டரை பொறுத்தும்.
இவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தி உள்ளோம், அதற்கு இவ்வளவு கட்டணம் என்பதைப்போல, குடிநீரும் இவ்வளவு லிட்டர் நீங்கள் பயன்படுத்தி உள்ளீர்கள், அதற்கு இவ்வளவு கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்படும்.
மின்சார கட்டணம் கட்டாத வீட்டிற்கு மின்சாரம் தடை செய்யப்படுவதைப்போல, குடிநீர் கட்டணம் கட்டாத வீட்டிற்கு, குடிநீர் தடை செய்யப்படும். மின்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் அத்தியாவசிய தேவையான குடிநீர் இல்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது. இதுதான் இத்திட்டத்தில் உள்ள பேரபாயம்.
அதுமட்டுமில்லாமல் குடிநீருக்கான கட்டணம் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனம் அவனுடைய நாட்டில் இருந்து குடிநீரை இறக்குமதி செய்து கோவை மக்களுக்கு கொடுக்கவில்லை. நம் நாட்டில் உள்ள ஏரியின் அணையிலிருந்து தான் குடிநீரை எடுக்கிறான். குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் அரசாங்கத்திடமிருந்து பணம் வாங்குகிறான்.
ஆனால், நாம் ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கும் சூயஸ் நிறுவனத்துக்கு பணம் கட்ட வேண்டுமாம். அடிமை சேவகம் பண்ணுவதில் எட்டப்பனையே மிஞ்சி விட்டார்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் !
மற்றபடி இத்திட்டமானது உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி குடிநீரையும் விற்பனைப் பண்டமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் சுவாசிக்கும் காற்றையும் விற்பனை பண்டமாக மாற்றும் அளவிற்கு முதலாளித்துவ இலாபவெறி கூரை மேல் ஏறி கொக்கரிக்கிறது.
படிக்க :
உ.பி : மாட்டுக்கு லட்டு ! மாணவர்களுக்கு பால் தண்ணீர் ! கருத்துப்படம்
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !
இவ்வளவு அபாயகரமான விளைவுகளை கொண்டுள்ளதால் தான் கோவை நகர மக்கள் சூயஸ் திட்டத்தை எதிர்க்கின்றனர். மக்களின் இம்மனநிலையை புரிந்துக்கொண்டு தான் திமுகவானது இத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்தது. 6.7.2018, 19.6.2019, 27.8.2019, 10.10.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தேதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தியது. தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் சூயஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது.
கூட்டணிக் கட்சிகளில் மக்களுக்கு தொண்டுழியம் செய்யும் சில நேர்மையான கட்சிகள் கூட இருக்கலாம். அவைகள் உண்மையிலேயே நேர்மையான கட்சிகள் என்றால், தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தாயே தற்போது ஏன் அமல்படுத்துகிறாய் என்று திமுக தலைவர்களின் கேட்க வேண்டும்.
அதேபோல் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள நேர்மையான தொண்டர்கள், உண்மையிலே நேர்மையானவர்கள் என்றால், தேர்தலின்போது சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ஏன் அமல்படுத்துகிறீர்கள் என்று அவரவர் கட்சியில் உள்ள தலைவர்களை கேட்க வேண்டும்.
அமீர்

1 மறுமொழி

  1. 10 வருடம் காத்திருந்தால் காஞ்ச மாடு கம்பில் பூந்தது போல ஊழலை நோக்கி ஓடுகிறார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க