தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !

அன்பார்ந்த மக்களே!

ல்துலக்கும் போது, குளிக்கும் போது, துவைக்கும் போது, கக்கூசு போகும்போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று மக்களுக்கு ஆலோசனை சொல்லும் அரசுதான், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு முதல் காரணம்.

மழைநீரை பஞ்சுப்பொதி போல தேக்கிவைக்கும் ஆற்று மணலை சூறையாடியது, நீர்வழித்தடங்கள், நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை முறையாக பராமரித்து பாதுகாப்பதற்கு பதில் மண்ணைப் போட்டு மூடி ரியல் எஸ்டேட்டிற்கு பிளாட் போட்டு விற்றது என, மொத்த நீர் ஆதாரங்களையும் தெரிந்தே திட்டமிட்டு அழித்து நாசமாக்கி நம்மை தண்ணீர் பஞ்சத்தில் தள்ளியது இந்த அரசுதான்.

நம்மை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல; திட்டமிட்டு அரசால் உருவாக்கப்பட்டது. கடல் போல காட்சியளிக்கும் சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரி பராமரிக்காமல் கழிவு நீர் குட்டையாக மாறிப் போனதற்கு பொறுப்பேற்க வேண்டிய பொதுப்பணித்துறை, இன்று மக்கள் முன்வந்து சுத்தம் செய்வதை தடுப்பதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?

நீர் நிலைகளை பராமரித்து பாதுகாக்க மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுப்பணித்துறை என்ற அரசு நிறுவனம்தான், ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ நீர் நிலைகள் அனைத்தையும் அழித்தது.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல்தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது. இந்த கிரிமினல் குற்றக் கும்பலை எந்த சட்டமும் தண்டிக்காது. மக்கள் மட்டுமே தண்டிக்க முடியும்.

படிக்க:
நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலமோ, நதி நீர் இணைப்பு என்ற நிறைவேற்ற முடியாத கனவின் மூலமோ தண்ணீர் பிரச்சினை தீராது. குளம், குட்டை, ஏரி என அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை மீட்டெடுத்து தூர்வாரி பராமரித்து மழை நீரை தேக்குவதன் மூலம் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க முடியும்.

தண்ணீரை கார்ப்பரேட் வணிகமாக மாற்றும் நோக்கில் வேலை செய்துவரும் அரசு இதைச் செய்யாது. ஜப்பான் முதலாளிகளின் விருப்பத்திற்கு 15 ஆயிரம் கோடி செலவு செய்து மெட்ரோ ரயில் விடும் அரசு, மக்கள் தேவையை எப்படி நிறைவேற்றும்?

பொதுப்பணித்துறை உட்பட அரசின் ஒவ்வொரு துறையும் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதைச் செய்யாமல் அதற்கு நேரெதிராக செயல்படுகின்றது. இதன் விளைவாக மொத்த அரசு கட்டமைப்பும் மக்களை ஆளும் தகுதியை இழந்து நெருக்கடியில் சிக்கி தோற்றுப் போய்விட்டது. எனவே, மக்கள் பிரச்சினை எதையும் இந்த அரசுக் கட்டமைப்பு தீர்க்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனியும் அரசை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்துதான் ஏரியை சுத்தம் செய்ய களமிறங்கினார்கள் சிட்லபாக்கம் மக்கள். இதன் வளர்ச்சியாக “எங்கள் ஏரியை சொந்தம் கொண்டாட நீ யார்? பொதுப்பணித்துறையே வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைத்து நீர் நிலைகள் அனைத்தும் மக்கள் கட்டுப்பாட்டின் கீழ், கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். இந்த அதிகாரம் நிலை நிறுத்தப்படுவதுதான் மக்கள் அதிகாரம்.

இப்படி கிராமம்தோறும், நகரம்தோறும் தோற்றுப்போய் மக்களின் எதிரியாக மாறிப்போன அரசின் தலையீட்டை நிராகரிப்பதும், மக்களின் தேவைகளை மக்களே முடிவு செய்வதும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நிறைவேற்றுவதும்தான் மக்கள் அதிகாரம். இதன் வளர்ச்சிப் போக்கில்தான் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை,
தொடர்புக்கு : 91768 01656
மின்னஞ்சல் : ppchennaimu@gmail.com
முகநூல் பக்கம் : fb.com/ppchennaimu


இதையும் பாருங்கள்…

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க