ந்திய ஒன்றியத்தின் தண்ணீர்க் கொள்கையில் இருக்கும் தனியார்மயப்படுத்தல் மற்றும் தண்ணீருக்கு விலை நிர்ணயித்தல் குறித்தும் அதனால் குடிமக்கள் பாதிக்கப்படுவது குறித்தான நூல் இது.

உலகவங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் கட்டளைகளை தனக்கான சாசனமாக வரித்துக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. மக்களை குடிமக்களாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையான தண்ணீரையும் தனியார்மயமாக்கி கட்டணம் செலுத்தி வாங்க செய்யும் ”தண்ணீர் கொள்கை” மக்கள் விரோத கொள்கை என உரத்து சொல்கிறது இந்த நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தேசிய தண்ணீர்க் கொள்கை மூலம் நீர் வளங்களை தனியார்மயப்படுத்தி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் விலை நிர்ணயம் செய்யவிருக்கிறது, இந்திய ஒன்றிய அரசு. இதன்படி, இதுவரை இயற்கையாய் இருந்த தண்ணீர் மீதான மனிதனின் அடிப்படை உரிமையை மறுத்து, தண்ணீரை ஒரு வியாபாரப் பொருளாக (சரக்காக) மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

ஐநா – வின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Economic, Social and Cultural Rights), “தண்ணீ ர் பொதுச் சொத்து, அது வாழ்வுக்கும் சுகாதாரத்துக்கும் அடிப்படை. கண்ணியமான மனித வாழ்வுக்கு நீரின் மீதான மனித உரிமை தவிர்க்க முடியாது. மேலும், தண்ணீர் மற்ற மனித உரிமைகளைவிட முதன்மையானது என்பதை ஒத்துக்கொள்கிறது. இந்தியா இதில் கையெழுத்திட்டிருக்கிறது. மேலும் ஐநா பொதுச் சபையின் ‘தண்ணீர் அடிப்படை உரிமை’ எனும் Right to Water தீர்மானத்திற்கு ஆதரவாக 2010-இல் இந்தியா வாக்களித்துள்ளது.

1987 இல் நீர் ஆதாரங்களுக்கான மத்திய, மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை வகுப்பதற்காக ‘தேசிய தண்ணீர்க் கொள்கையை நீர்வளத்துறை அமைச்சகம் முதன் முதலில் இயற்றி ஏற்றுக்கொண்டது. இதில் தண்ணீர் பற்றாக்குறையைப் பயனீட்டாளர்களுக்கு உணர்த்தவும், நீர் பயன்பாட்டில் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்கவும் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது. அதாவது, தண்ணீர் இயற்கையாக அமைந்த மனிதனுக்கான அடிப்படை உரிமை என்பதை மறுத்து, குடிமக்களைத் தண்ணீர் பயன்படுத்தும் நுகர்வோர்களாகப் பார்க்கிறது . இதனடிப்படையில் தண்ணீர் சார்ந்த தொழில்களை உருவாக்கி, நீரை வணிகமயப்படுத்தி, அதன் மீதான பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கச் சொல்கிறது. மேலும், இந்த விலை நிர்ணயித்தலை விவசாயப் பாசனத்துக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

தண்ணீர்க் கொள்கை 2002 மற்றும் 2012 என இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. 2002இல் திருத்தியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையில், வெளிப்படையாக தனியார்மயப்படுத்துவது வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பயன்பாட்டுக்கான நீர்வளத் திட்டங்களின் ‘திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்’ போன்றவற்றில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக நிதிச் சுமைகள் குறையும், புதுமையான திட்ட வடிவமைப்புகள் கிடைக்கும், பயனீட்டாளர்களுக்கு திறன்வாய்ந்த, வெளிப்படையான சேவையைத் தர முடியும்’ என்பனவற்றைக் கூறு கின் றது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் சமூக  செயல்பாட்டாளர்களிடமிருந்து வந்தாலும் , தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான சட்டிஸ்கர் சியோநாத் நதிக்கரை மக்களின் போராட்டம், கோக்கோகோலா ஆலைகளுக்கு எதிரான வைத்ரானா ஆற்று குடூஸ் மக்கள் போராட்டம் மற்றும் கேரளா பிளச்சிமடா போராட்டம் போன்றவற்றினாலும் 2012 இல் இக்கொள்கைத் திருத்தப்பட்டபோது, தனியார் பங்களிப்பு என்பதை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) என மாற்றப்பட்ட து. இது நீர் மேலாண்மையில், உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் (WB -IMF) பரிந்துரைத்த கொள்கையோடு ஒத்துப்போகும் வகையில் அரசு தனியார் கூட்டு என மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரசின் பங்கு வெறும் கண்காணிப்பது மட்டுமே; குடிமக்களுக்கு சேவை வழங்குவது அல்ல. இது தனியார் மயப்படுத்துதலின் வேறு வடிவம். (நூலிலிருந்து பக்.7-8)

தண்ணீர் வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் தனது வலைத்தளத்தில் கோவை நகரத்தின் (60 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை பிப்ரவரி மாதம், 2018 ஆம் ஆண்டு பெற்றிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 400 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ. 3,200 கோடி). பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை வணிக அடிப்படையில் செய்து வரும் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையில் கிடைத்திருக்கும் ஒப்பந்தம்தான் இந்தியளவில் மிகப் பெரிய ஒப்பந்தமாகும்.

24 மணி நேரமும் தங்குதடையற்ற குடிநீர் விநியோகத்திற்காகவே சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு துளி குடிநீரையும் கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதே ஆகும். தண்ணீர்க் குழாய்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொட்டுக் குடிநீரும் கணக்கிடப்படும். பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டியது சூயஸ் நிறுவனத்தின் பொறுப்பு.

இத்திட்டம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை நகராட்சி நிர்வாக இயக்குனர், ”இத்திட்டத்தின் முன் வைப்பு கட்டணமாக பயனாளிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்படலாம்” என கூறினார். மிகக் குறிப்பாக தற்போது பயன்பாட்டிலுள்ள குடிநீர் பொதுக்குழாய்கள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உரிமையுடைய, அனைவரும் அணுகும் விதத்திலிருக்கக் கூடிய, பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தின் பல நகரங்கள் இருக்க, கோவையில் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட அடிப்படைக் காரணம் இந்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகும். இந்திய நகரங்களை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் நகரத்தின் நவீன கட்டமைப்பு உருவாக்கத்தை தனியாருக்கான வணிகமாக ஒப்பந்தம் எழுதித் தருவதே “ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் குடிநீர் விநியோகத்திற்கான நவீன கட்டமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்துவதும், குடிநீர் விநியோகம் செய்வதும் ஒரு அங்கமாகும். (நூலிலிருந்து பக்.23-24)

நூல்:தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
ஆசிரியர்கள்: மயில்வாகனன், வீரைய்யன்

வெளியீடு: நிமிர் பதிப்பகம்,
புது எண்: 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061.
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல் : nimirpublications@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: nimir | commonfolks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க