மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது.

25.11.2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது
கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக !

பத்திரிகை செய்தி

மின்முறைகேடுகளை தடுப்பதற்கான வழிமுறை என்று கூறிக்கொண்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. 100 யூனிட் மின்சாரம் மானியமாக இதுவரை வழங்கப்பட்டுக்கொண்டு வருகிறது. மானியம் தேவை இல்லாதவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்ற வழிகாட்டுதல் அரசால் முதலில் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி இணைப்புகள் உள்ளன. அவற்றை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு மிகக்குறுகிய நாட்கள் காலாவகாசம் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது? இந்த அவசரகதியிலான நடவடிக்கை உழைக்கும் மக்களை கண்டிப்பாக பெரும் இடரில் தள்ளி இருக்கிறது. மானியம் வேண்டாம் என்பவர்கள்  ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்ற அறிவிப்பையும்  அரசு தெரிவித்து இருக்கிறது. ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் இனி கிடைக்காது.  இதே போலத்தான் எரிவாயு உருளைக்கான மானியம் படிப்படியாக நீக்கப்பட்டு, அதன் விலையோ உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

படிக்க : கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடிகளை வரிச்சலுகையாகவும் கடன் தள்ளுபடியாகவும் அறிவிக்கும் அரசு, மக்களுக்கு 100 யூனிட் மானியம் அளிப்பதற்கு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்காகத் தான் உற்பத்தி, பராமரிப்பு, விநியோகம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அனல் மின்நிலையங்களும், நீர் மின் நிலையங்களும் படிப்படியாக தனியாருக்கு அக்குவேறு ஆணிவேறாக ஒப்பந்த முறையில் விற்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

திட்டமிட்டே அரசு மின் உற்பத்தி நிறுவனங்களை ஒழித்துக்கட்டி, தனியார் மின் நிறுவனங்களிடம் மிக அதிக விலைக்கு வாங்கி தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைவான விலைக்கு விற்பது, நிலக்கரியை தரம் குறைந்ததாக வாங்குவதும் அதில் ஊழல்கள் புரிவது என்பதுமே மின்வாரியம் பெருந்த நட்டத்தில் இயங்குவதற்கும் மின்வாரிய முறைகேடுகளுக்கும் முக்கியக் காரணமாகும்.

மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மானிய விலையின் மின்சாரம் வழங்கப்பட்டும் வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்காமல் ஆதார் எண்ணை இணைத்தால் மின் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்பது ஏமாற்றுக் காரியமே. மின் முறைகேடுகள் அனைத்தும் மின்வாரியத்தின் உதவியா நடக்கிறதே ஒழிய மக்களால் அல்ல.

ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டு மக்களின் தலையில் இடியாய் விழுந்திருக்கும் நிலையில் மின் முறைகேடுகளை தடுப்பது என்ற பெயரில் ஆதார் எண் இணைக்க சொல்வது பெட்ரோல் – டீசல் – எரிபொருள் போல மின்சாரத்தையும் தினமும் விலையேற்றுவதற்கான முன்னேற்பாடாகவே இருக்கிறது.

படிக்க : ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது. மாறாக மின்சாரத்தை தரவேண்டியது அரசின் கடமை என்ற நிலையிலிருந்து 100 யூனிட் மானிய மின்சாரத்தை ஒழித்து, காசிருந்தால் மின்சாரம் என்ற நிலைக்கே தள்ளும்.

ஆகவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க