11.11.2022

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை!

தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

பத்திரிகை செய்தி!

இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன், கோவை குண்டுவெடிப்பு வழக்கு என்ற பெயரில் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறிதும் குற்றமற்ற இஸ்லாமிய கைதிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

வழக்கம்போல ஆறு தமிழர்கள் விடுதலையை தமிழின விரோத காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதையெல்லாம் பொருட்டாக கருத வேண்டியது இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே குற்றவாளியாக்கப்பட்டது. இதை காரணமாக வைத்துக் கொண்டு அன்றைய காங்கிரஸ் அரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து கொண்டு திமுகவை ஒழித்துக் கட்டுவதற்கு எல்லா விதமான வன்முறையையும் சதி செயலையும் செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் உள்ளிட்ட தமிழின ஆதரவாளர்கள், கம்யூனிஸ்டுகள் என பலரும் கைது செய்யப்பட்டார்கள்,
தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஏழு தமிழர்களும் விடுதலை ஆக வேண்டியது என்பது அரசியல் உரிமையே தவிர கருணையின் பாற்பட்டதல்ல.

படிக்க : பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?

இதனை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடியும் வந்திருக்கின்றன.

மேலும் ஈழத்தில் அமைதியை உண்டாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இந்திய அமைதிப்படையை அனுப்பியதற்கு எதிராகவே ராஜீவ் காந்தி கொலை நடந்தது என்பதை எமது தோழமை அமைப்புகள் மற்றும் புதிய ஜனநாயகம் இதழ் அக்காலக்கட்டத்திலேயே பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பெரியாரிய அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், தமிழின அமைப்புகள் என அனைவருமே ஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஏழு தமிழரின் விடுதலைக்காக துணை நின்றார்கள் என்பதே உண்மை.

ஏழு தமிழர்கள் விடுதலைக்காக, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி தன் உயிரை ஈந்தார். அதற்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எழுச்சியே அவர்களின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதற்கிடையில் பலமுறை பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற பொழுதும் அவர்களின் விடுதலை மறுக்கப்பட்டே வந்தது. எனினும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டுமுறை ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தான் தமிழர்களுக்கு எதிரானவர்தான் என்பதை ஆர்.என்.ரவி மீண்டும் நிரூபித்தார்.

படிக்க : பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்

குறிப்பாக பேரறிவாளன் வழக்கில் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குட்டு வைத்த போதும் திருந்தாத ஜென்மமாக நடந்து கொண்டதுடன் தமிழ் இனத்துக்கும் தமிழர்களுக்கும் எதிரான எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் ஆளுநர்.

ஆகவே தற்போது தமிழர் அறுவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அநியாயமாக தமிழர் எழுவரும் சிறையில் இருப்பதற்கு ஆளுநரும் முக்கியமான காரணமாகிறார். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கக் கூடிய வரவேற்கக் கூடிய இந்த எழுவரின் விடுதலையை ஆளுநர் எதிர்க்கிறார் என்றால் அவருக்கு எதற்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு உல்லாச வாழ்க்கை?

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்? இனியும் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ரவி நீடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் அது தொடர்பாக மக்கள் மன்றத்தில் பரந்துபட்ட பிரச்சாரத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு செல்ல வேண்டும். நாகலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டது போல தமிழ்நாட்டு மக்களால் இந்த ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரம் இல்லை என்பது மட்டும் உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க