18.05.2022
பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட
அனைவரையும் விடுதலை செய்!
றுதியாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதில் சிறையிலடைக்கப்பட்ட அவர் முப்பது ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்துள்ளார். ராஜீவ் கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று எவ்வித சான்றும் இல்லாமல் இந்திய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கழுவிலேற்றப்பட்டவர்களில் அவரும் ஒருவர். அவரை மிரட்டி பொய்யாகத்தான் வாக்குமூலம் வாங்கினோம். இது சோடிக்கப்பட்ட வழக்கே என்று இவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளும் தெரிவித்தனர்.
பேரறிவாளனின் விடுதலையை கேட்ட உடன் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனையெத்தனை? காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி எழுவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த தன்னுயிரையே தீக்குளித்து மாய்த்து கொண்டார்.
எழுவரின் விடுதலை அரசியல் ரீதியில் சரியானது என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அதில் எழுவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை (அது தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ள நாளில்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படிக்க :
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !
கல்குவாரி அமைப்பதை எதிர்த்து திருநெல்வேலி விவசாயிகள் போராட்டம் !
தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள், தமிழ் அமைப்புகள் என அனைத்து அமைப்புக்களுமே எழுவர் விடுதலைக்காக தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக எழுவரின் விடுதலை இருந்தது. குறிப்பாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் தன் மகனின் விடுதலைக்காக தன்னுடையை வாழ்வையே அர்ப்பணித்து இருந்தார். எழுவரின் விடுதலைக்கு எதிராக காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சியினர் செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களால் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவால் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் எழுவரையும் விடுவிக்க வேண்டுமென்று தீர்மானம் போடப்பட்டது. இத்தீர்மானங்களை ஆளுனரும் ஒன்றிய அரசும் சல்லிப் பைசாவுக்கு கூட மதிக்கவில்லை. இறுதியில் அரசியலைமைப்புச் சட்டம் 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை தற்போது 2022-ல் விடுவித்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அநீதியாக பல ஆண்டுகள் சிறைபடுத்தப்பட்டுள்ளதை அநீதி என்பதை தவிர்க்க இயலாமல் உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் மக்களின் போராட்டங்கள், சட்ட மன்றத் தீர்மானங்கள், செங்கொடியின் தியாகம் எனை அனைத்தையும் ஏளனப்படுத்திய ஆளுனர் மற்றும் ஒன்றிய அரசு ஆகியோர் குற்றவாளிகளே. குறிப்பாக தமிழ்நாட்டு சட்ட மன்றத் தீர்மானத்தை மதிக்காத ஆளுனர் பதவி ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், அம்மாநில அரசால் விடுவிக்கப்படும் போது தமிழ்நாட்டு அரசால் ஏன் எழுவரை விடுவிக்க முடியவில்லை. ஏழு தமிழரின் விடுதலைக்கு எதிராக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் தடுத்தே வந்திருக்கின்றன. நான், நீ என மாநில, ஒன்றிய அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு பேரறிவாளனின் விடுதலையை தாமதப்படுத்தியே இழுத்தடித்து இருக்கின்றன என்பதே உண்மை.
ஆகவே, பேரறிவாளன் விடுதலை தொடக்கமாக இருக்கட்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க