17.05.2022
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் !
இந்த வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது !
பத்திரிகை செய்தி
ஈரோடு, திருப்பூர், கரூர், சேலத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், நூல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கண்டியின் (356 கிலோ பஞ்சு) விலை ரூ.76,000-ஆக இருந்தது தற்போது ரூ.1,05,000 அதிகரித்துள்ளது. இதேபோல் நூலின் விலையும் ஏறியுள்ளது.
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றதால் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 36 சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. இதனால் 8,000-த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன.
மேலும் ஆதரவு தெரிவித்து பல்லடம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 2.5 லட்சம் விசைத்தறிகள், 20,000 காடா இல்லாத தறிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம், ஆண்டிபட்டி, கரூர் போன்ற மாவட்டங்களிலும் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
படிக்க :
சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !
பின்னி ஆலைத் தொழிலாளர் போராட்டம் : வரலாறு கற்பிக்கும் பாடம் !
பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை ஊகவணிகத்திலிருந்து நீக்கி அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மே 16,17 ஆகிய தேதிகளில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை ஜவுளி  மற்றும் பின்னலாடை துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் இலட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
நூல், விலை மற்றும் பஞ்சு விலை உயர்வை கண்டித்து ஜவுளி நிறுவனங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம்  ஆதரிக்கின்றது.
ஒன்றிய அரசு உடனே நூல், பஞ்சு போன்ற பொருட்களை பதுக்கி செயற்கையான விலையேற்றத்தை தடுக்க வேண்டும். இந்திய பருத்தி கழகமானது பருத்தி பஞ்சு வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே அரிசி, பருப்பு, எண்ணெய், தக்காளி, வெங்காயம் மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளாமல் இருக்கிறது. அதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை அழிக்கின்ற வேலையை மோடி அரசு பதவியேற்ற 2014-யிலிருந்தே செய்து வருகிறது. இன்று பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள். தமிழக மக்களும் இந்த கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
அமிர்தா
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.