ராஜீவ் காந்தி கொலையில் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கிற்காக கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு கடந்த மே 18 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளனின் விடுதலை “சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி 142 அடிப்படையில் திராவிட மாடல் சாதித்துக் காட்டிவிட்டது” என்றும் இந்தப் போலி ஜனநாயக சட்ட மாயையை நம்பும் அறிவுஜீவிகளும், தி.மு.க-வினரும், திராவிட மாடலுக்கு காவடி தூக்கும் கழக முத்துமணிகளும் சிலாகித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், பேரறிவாளன் விடுதலை என்பது நீண்ட களப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதை மறைத்துவிட்டு தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன. இந்த துரோகத்திற்கு முதலாளித்துவ வேசி ஊடகங்களும் காவடி எடுக்கின்றன.
படிக்க :
♦ பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !
♦ ராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு !
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லும் இதே நாட்டில்தான் 31 ஆண்டுகளாக ஒரு நிரபராதி சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். அவருடன் கைதானவர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் சிறையில் அடைக்கபட்டிருப்பவர்களில் 69.05 சதவிகிதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல்தான் பல ஆண்டுகளாக சிறையில் சித்திரவதை அனுபவித்து வருகின்றனர்.
தாமதமாக வழங்கப்படும் ஒவ்வொரு நீதியும் அநீதி என்பார்கள். அப்படி பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உணர்த்த வருவது “சட்டத்தின் ஆட்சி” வெங்காயத்தைதான். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவர்களின் சட்டத்தின் ஆட்சியை பார்ப்பதற்கு பேரறிவாளன் வழக்கை பார்த்தாலே போதும். அப்படி பார்த்தாலே தெரியும், இந்த விடுதலை சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா? இல்லை புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நடத்திய நீண்ட நெடிய களப் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தால் கிடைத்த வெற்றியா? என்று.
000
